Monday, July 12, 2010



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற பேரவை உறுப்பினருமான து.ரவிக்குமார், ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார்.


குடிசையில்லாத  தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தேன், எனது முயற்சி வீண்போகவில்லைதமிழக அரசு 6  ஆண்டுகளில் இலவசமாக  21 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது, எனது முயற்சிக்கு   உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி என்று எழுதியிருந்தார்.




பதிலுக்கு பாராட்டுத் தெரிவித்து விட்டு, ஆகஸ்ட் மாத பாடம் இதழின் கட்டுரையை மேற்கோள்காட்டி ஒரு நீண்ட, ஆனால் அடிப்படைக் கேள்வியைக் கேட்டிருந்தேன்.
டாஸ்மாக் என்ற அரசு நிறுவனம் தமிழகமெங்கும் எட்டாயிரம் ஆக்டோபஸ் கிளைகளைப் பரப்பி எல்லாப்பிரிவு மக்களின் இரத்தத்தையும், பொருளாதாரத்தையும் உறிஞ்சி, ராட்சஸ மரமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதன் நிழலில் இலவசங்கள், நலத்திட்டங்கள் என்ற உரங்களின் உதவியுடன் சமத்துவமான சமூகப்பயிர்கள் வளரும் என்று தமிழக அரசு கூறுவது, பொது அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் உண்மையான நாட்டுப்பற்றுக்கும் விடப்பட்ட சவால் என்பதே உரைகல்லில் உரசிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் உண்மையாக இருக்க முடியும் என்பதே என் கூற்று.

இதற்கு பதில் அளிக்கிறேன் என்று ரவிக்குமார் கூறியிருந்தாலும் இதுவரை பதில் இல்லை. ஆம்! அறிவு ஜீவிகளின், எதிர்க்கட்சிகளின், தோழமைக் கட்சிகளின் மவுனம்தான், ஆட்சியிலிருப்போர் தவறுமேல் தவறு செய்து, அரசு நிர்வாகம் முற்றிலும் கெட்டுப்போவதற்கு காரணியாக அமைந்து விடுகிறது.
தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் தங்களது ஜனநாயக் கடமையை சரிவரவும், தொய்வில்லாமலும் செய்யாத நிலையில், தோழமைக் கட்சிகளின் பொறுப்பு அதிகமாகிறது. ஆனால், அவர்களும்  அரசிடம் கோரிக்கைகளும், சிபாரிசுகளும் வைக்கிறார்களே தவிர, மனசாட்சிப்படியும் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டும் அரசின் தவறுகளை நட்புடனே கூட சுட்டிக் காட்ட முயல்வது இல்லை. இது ஒரு இமாலயத்தவறு.
கடந்த நான்கைந்து வருடங்களில், கவர்ச்சித்திட்டங்களை மட்டும் நம்பி, வளர்ச்சிக்கான  வாப்புகளைத் தமிழகம் தொடர்ந்து தவற விட்டதனால், மிகுந்த பின்னடைவை சந்தித்து  உள்ளோம் என்று தான் கூற வேண்டியுள்ளது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், நிதிப்பற்றாக் குறை 3% த்திற்குள் இருக்கும் என்று நிதியமைச்சர் அன்பழகன் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்த போது கூறியிருந்தார். ஆகஸ்ட் மாத பாடம் இதழில் நிதியமைச்சரின் கூற்று சரியல்ல என்றும் அரசின் தவறான நிதி விரையக் கொள்கையினாலும், பொருளாதார மந்த நிலையினாலும் 2009-10ம் வருடக் கடைசியில் அரசின் பற்றாக்குறை அதிகரிப்பதற்கும்,   அரசுக்கு புதிய செலவினகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று எழுதியிருந்தோம். மாநில அரசின் சொந்த வருவாயான 38,000 கோடியில் 30% அளவிற்கு டாஸ்மாக் சாராய வருவாய் மூலமாக ஈடுகட்ட முயற்சிக்கும் என்றும் தெளிவாக எழுதியிருந்தோம்.
நமது இரு கணிப்புகளும் உண்மையாகியுள்ளன என்பதை ஜனவரி மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன. நிதிப்பற்றாக்குறை அதிகமாகி உள்ளது. அதே போல, தமிழக அரசின் இவ்வருட சாராய வருவாய் ரூ.12,500/-  கோடியையும் தாண்டுகிறது. இது அரசின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 50% ஆகும். 2003-04ம் வருடம், வருடத்திற்கு 2.43 கோடி பெட்டிகள் விற்றுக் கொண்டிருந்த டாஸ்மாக், இந்த வருடம் கிட்டத்தட்ட 7.5 கோடி பெட்டிகள் விற்றுத் தீர்க்கிறது. இது உண்மையிலேயே ஒரு அசுர வளர்ச்சிதான். இப்பொழுதெல்லாம், மாதத்திற்கு 15 கோடி சாராய பாட்டில்களை தமிழக இளைஞர்களிடம், ஏன், பள்ளிச் சிறுவர்களிடம் கூட விற்றுத் தீர்க்கிறது தமிழக அரசு.
இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனை மட்டுமல்ல. இப்படியே போனால், வருடா வருடம், தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள கின்னஸ் சாதனையை அதுவே தான் முறியடிக்கும் நிலை ஏற்படும். ஆனால் இந்த சாதனை, தமிழக இளைஞர்களின் மனித வளத்திற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும், வருங்கால சந்ததியினரின் தரமான வாழ்விற்கும் ஈடுகட்ட முடியாத வேதனை.
இப்பொழுது, இலவச கான்கிரீட் வீடுகள் திட்டத்தின் முதல் கட்டமாக, வரும் நிதியாண்டில் 3 லட்சம் நிரந்தர வீடுகள் கட்ட ரூ.1,800 கோடிகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது தமிழக அரசு.  இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் முழுமையாகிவிடும், அந்த வகையில் மிச்சமாகும் பணம் இலவச கான்கிரீட் வீடுகள் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்கிற ரீதியில் அரசு விளக்கம் அளித்துள்ளது. இது எந்த அளவிற்கு இயலும் என்பது கேள்விக்குறி. ஏனென்றால் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், புதிய வரி விதிப்புகள் இருக்காது. பொருளாதார மந்த நிலை ஓரளவுக்கு சரியானாலும், வரிகள் மூலம் அரசின் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்வதே பெரிய விஷயம். ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை இருக்கும் போது, இத்திட்டத்திற்கு வேண்டிய நிதி ஆதாரத்திற்காக, அரசு டாஸ்மாக் விற்பனைக்கு இன்னும் அதிக இலக்கு வைப்பதற்கான வாப்பே அதிகம்.
செம்மொழி மாநாடு, புதிய சட்டசபை வளாகத்திற்கான அதிகரிக்கப்பட்ட நிதி ஆகியவை திட்டமிடாமல் கொண்டு வரப்பட்டுள்ள செலவினங்கள். இந்திய தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள 2007-08ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, கிராமப்புர கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் தேவையான நிதியாதாரத்தை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றிற்கு அரசு செலவழித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், முதலமைச்சரோ, அப்படி இல்லை என்ற ரீதியில் பதில் அளிக்கிறார்.
வளர்ச்சி நிதிமையம் எனும் சுற்றுச் சூழல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, தமிழகத்தில் உற்பத்தியாகும் சாக்கடைக் கழிவு  நீரளவில் 85% அளவிற்கு சுத்திகரிப்பு செயப்படாமல் நீர் நிலைகளில் விடப்படுகிறது என்று கூறியுள்ளது. முன்னேறிய மாநிலம் என்று கூறிக்கொண்டாலும், தமிழகத்தில்  இலட்சக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் இல்லை. அதனால், பரம ஏழைகள் கூட கணிசமான  தொகையை குடி தண்ணீருக்காக செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், கிட்டத்தட்ட தனியார் துறையின் வியாபாரப் பொருளாகிவிட்டது.
ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றிற்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகள்  செய்து கொடுக்கப்படவில்லை என்றும் 2007ம்  ஆண்டு இந்திய தணிக்கைத்துறையின் மற்ற்றோரு அறிக்கை தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே மாநில சராசரியை விடவும், மிகவும் பின் தங்கிய நிலையில் தமிழக ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிலை உள்ளது என்று அவ்வறிக்கை வெளிப்படுத்தியது. அதாவது, மாநில சராசரிக்கும், தலித்துகளின் கல்வி நிலைக்கும் கிட்டத்தட்ட 32 வித்தியாசம் உள்ளது. இந்நிலையில் இன்றளவும் சிறிதும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் தொழில் கல்வி மையங்கள் (ITI) போதிய ஆசிரியர்கள் இன்றியும் உபகரணங்கள் இன்றியும் பாழடைந்து உள்ளன. தொழிற்கல்வி முழுக்க, முழுக்க, தனியார்களின் வியாபாரமாகி விட்டது. இந்நிலையில், அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படித்து வரும் கலை, அறிவியல் கல்லூரிச் சூழலும் நலிந்து வரும் வகையிலேயே உள்ளது. தகுதி வாய்ந்த, ஆசிரியர்கள் போதிய அளவில் இவ்வகைக் கல்லூரிகளில் இல்லை. இக்கல்லூரிகளில் கட்டமைப்பு மற்றும் நூலக வசதிகளிலும் வேண்டிய முன்னேற்றம் இல்லை. தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் மூலம் நடத்தப்படும் பல பட்டப்படிப்புகள் தரமற்றதாகவும், நிர்வாகக் குளறுபடி நிறைந்ததாகவும்  இருக்கின்றன.
கிட்டத்தட்ட எல்லா சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் சாலைகள் மிக மோசமாக பழுதடைந்து உள்ளன. அவற்றை சீர் செய்ய இயலாத நிலையில் கடுமையான நிதிப் பற்றாக்குறை உள்ளது. உள்ளாட்சிகள் சீருடன் நடக்கத்தேவையான அதிகாரங்கள், நிதி ஆகியவை பகிர்ந்து கொடுக்கப்படாத நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களினால் கிடைக்கப்பெற்ற வேலை வாப்புகள், பொருளாதார  நன்மைகள், சாதக பாதங்கள் ஆகியவற்றை திறனாவு செய்ய வேண்டியுள்ளது. வேளாண்மையை முன்னெடுக்கவும், அதனை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இலாபகரமாக மாற்ற எந்தவித திட்டமும் தமிழக அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இவ்வாறு மேற்கூறிய பிரச்சனைகள் எல்லாம் சில உதாரணங்களே. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற தோழமைக் கட்சியினரோ, இப்படிப்பட்ட வளர்ச்சிக்குத் தொடர்புடைய எந்த ஒரு பிரச்சனை பற்றியும் அரசிடம் விவாதிப்பதாகவும், எடுத்துப் பேசுவதாகவும், இடித்துக் கூறுவதாகவும், எந்த செய்தியும் கேள்விப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சியைப் பற்றி கருத்து கூற ஒன்றுமே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கும், போனஸ் பிரச்சனைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியாவது பொதுக் கல்வியின் தரம், தலித் பள்ளி, விடுதிகளின் மேம்பாடு, அரசே  ஊக்குவிக்கும் மதுப்புழக்கம் போன்றவற்றைப் பற்றி சிறு சலனம் கூட ஏற்படுத்துவது இல்லை. அவர்களைப் பொறுத்த வரை தொழிலாளர்களுக்கு போனஸ் பெற்றுக் கொடுப்பதுதான் முக்கியமாகத் தெரிகிறது. போனஸ், குழந்தைகளின் நலனுக்குப் போனாலும் டாஸ்மாக் மூலம் மறுபடி அரசுக்கே திரும்பினாலும் கவலை கொள்வதில்லை. அரசியல் செய்ய அவர்களுக்கு ஒரு இடம் வேண்டும் அவ்வளவுதான்.
இந்த பெரிய உலகத்தில், இருக்க ஒரு இடம் ஒவ்வொருவரின் உரிமை. தமிழக அரசு, ஒவ்வொரு நலிந்த குடும்பமும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக, கட்டுமானப் பொருட்களை இலவசமாக கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது பின்தங்கிய மக்கள் பாதுகாப்பான கூரையின் கீழ் வாழ வழிவகுக்கும் புரட்சிகரமான திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆயினும், வெண்மைப்புரட்சி, பசுமைப்புரட்சி போன்று சாராயப்புரட்சி செய்து வருகிறது அரசு. இந்நிலையில், இந்த கான்கிரீட் வீடுகளுக்குள் அதிகமாக வசிக்கப் போவது என்னவோ, விதவைகளும், மனநோயாளிகளும், கணவரால் கைவிடப்பட்டவர்களும், உச்சியிலிருந்து பாதம் வரை பல வகைகளில் குடிநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களும், வாழ்க்கையை வேகமாகத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களும் தான்.



ஆக, அரசின் இவ்வகை நலத்திட்டங்கள் அதிக அளவு நஞ்சில் சிறிது பால் கலப்பதற்கு ஒப்பாகும். சாராய வருவாய் குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணைக்குச் சமானம் என்றார் அறிஞர் அண்ணா. ஆதரவு தர வேண்டிய தொழுநோயாளியைப் பற்றி பொது புத்தியுடன் இவ்வாறு அறிஞர் சொல்லியிருக்க வேண்டாம். ஆயினும் மது வருமானத்தைப் பற்றிய அவரது தீவிரமான எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அண்ணா மட்டுமல்ல, ராஜாஜி, பெரியார், காந்தி, அம்பேத்கார் என்று எல்லா பெரியவர்களுமே, மது விற்பனைக்கு எதிரான ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர்.
      தமிழக இளைஞன்                        தமிழக அரசு



நெல்லையில் குரங்கு பிடிப்பவர்கள் ஒரு கூண்டுக்குள் சோற்றை போட்டு வைப்பார்கள். குரங்குகள் கையை நுழைக்கும் அளவிற்கு சிறு ஓட்டை இருக்கும். ஓட்டைக்குள்  கை நுழைத்து  சோற்றை பற்றிக் கொள்ளும் குரங்கு, அப்படியே கையை வெளியில் எடுக்க முயற்சிக்கும். கைவிரல்கள் மடங்கி இருப்பதால், முஷ்டி இப்பொழுது அகலமாகி கையை வெளியே எடுக்க முடியாது. ஆயினும், இரவு முழுவதும் சோற்றை உதறாமல், கையை இழுக்க முயற்சித்து இடித்து இடித்து, கை உடைந்து, ரத்த விளாராகி, தோலுரிந்து, சோர்ந்து விடும். குற்றுயிராக் கிடக்கும் குரங்கை, குரங்காட்டி வந்து காலையில் விடுவித்து பிடித்து போவான்.
இப்படித்தான் டாஸ்மாக் வருவாயில் கை வைத்தபடி தமிழக அரசும், டாஸ்மாக் சாராயத்தில் கை வைத்தபடி தமிழக இளைஞர்களும், தாங்களும் நலிவடைந்து, தமிழ் சமுதாயத்தையும் பாரம் சுமக்கும் நிலையில் வைத்துள்ளனர். அரசின் கைகளையும், இளைஞர்களின் கைகளையும் கூண்டிலிருந்து விடுவிக்க முயலாமல், மற்ற கட்சித்தலைவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். யாராவது நல்ல குரங்காட்டி வந்து இவ்விருவர்களையும் விடுவித்து தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்பிக்கை கொள்வோம்!

No comments:

Post a Comment