Tuesday, February 14, 2012

FEB'12

                                               சிதம்பர ரகசியம்தான் என்ன?

தோழர்களே,
நமது நாடு, சமீபத்தில், 63வது குடியரசு தினத்தைக் கொண்டாடி நிறைவுசெய்துள்ள நிலையில், சில சிதம்பர ரகசியங்களை வெளிப்படையாகப் பேசித்தான் தீர்வு காண வேண்டியுள்ளது.

வழக்கமாக வழங்கப்படும் குடியரசு தின செய்தியாக, நமது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில், சிவில் சமூகத்திற்கு ஒரு அறிவுரை கூறினார். மரத்திலுள்ள ஒரு சில அழுகிய பழங்களை அப்புறப்படுத்துவதற்காக உலுக்கி உலுக்கி, மரத்தையே சாய்த்து விடாதீர்கள் என்றார். அதாவது, ஊழல்வாதிகள் சிலரை எதிர்க்கும் போர்வையில், இந்திய இறையாண்மையை அழித்துவிட வேண்டாம் என்பது அவரது செய்தி.

ஆனால், அவர் தவறாக, சிவில் சமூகத்தைப் பார்த்து அம்பை ஏவுகிறார். உண்மையில், அவர், மன்மோகன் சிங், சிதம்பரம் உட்பட இன்றைய தலைவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் தார்மீகமற்ற, பேராசை பிடித்த முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டு மக்களையே விற்கத் துணிந்து விட்டீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். ஏன், உங்கள் பராமரிப்பில் உள்ள மரத்திலுள்ள பெரும்பாலான பழங்கள் வெதும்பியோ, அழுகியோ விளைகின்றன என்று அவர்களைப் பார்த்துத்தான் கேட்டிருக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 26, கணிதமேதை ராமானுஜத்தின் 125வது பிறந்த நாள். ஆனால், அன்றைக்கு, தமிழகம் அதனைக் கொண்டாடிய விதமோ, இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்து மிகுந்த வருத்தத்தையும், மன அழுத்தத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ராமானுஜம் பிறந்தநாள் விழாவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் பேசியபோது, முதல் இரண்டு வரிசையில்தான், அதுவும் கிட்டத்தட்ட 200 பார்வையாளர்கள் மட்டுமே இருந்தனர். பார்வையாளர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக இருந்தவர்கள் பாதுகாவலர்கள்.

தேர்தலின் மூலம் மக்களை சந்திக்காத ஒருவர், ஓட்டுப் போடக்கூட போகாத ஒருவர், இப்படி மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கும் ஒருவர், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து இருந்து வருகிறார் என்பது எப்படிப்பட்ட முரண்பாடு என்று வியப்பு மேலிடுகிறது. அதைவிட, இவர்களெல்லாம், மக்களை வழி நடத்த வந்தவர்களா அல்லது வட்டித்தொழில் நடத்துபவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நிரந்தர ஏஜெண்ட்களா எனும் சந்தேகம்தான் இப்பொழுது வலுத்துள்ளது.

சென்னை நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பாரதப்பிரதமரும், அவரது உள்துறை அமைச்சரான சிதம்பரமும், உடனடியாக அரசு சிறப்பு விமானத்தில், காரைக்குடியில் வட்டிக்கு கடன் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்களின் வசதிக்காக கட்டப்பட்ட வாசன் தனியார் கண் மருத்துவமனையையும், அப்பொல்லோ தனியார்  மருத்துவமனையையும், துவக்கி வைக்கப் பறந்தனர். கூடவே, அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டது அதற்கான ஒரு சாக்கு, அப்பட்டமான இடைச்செருகல்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும், அந்த மருத்துவ வியாபார நிறுவனங்களையும் புகழ்த்து தள்ளிய பிரதமர், அரசு சலுகைகளைப் பெறும் இந்த கார்ப்பொரேட் மருத்துவமனைகள், ஏழைகளுக்குத் தரமான இலவச சேவை அளிக்க வேண்டும் என்று சற்றும் வெட்கமில்லாமல் பொன்மொழி உதிர்த்தார். அதற்கு பதில், ஈயத்தை நன்கு காய்ச்சி, ஏழை மக்களின் காதுகளில் வலுக்கட்டாயமாக ஊற்றியிருக்கலாம் பிரதமர்.

ஏனென்றால், அரசிடமிருந்து உச்சகட்ட சலுகைகளையும், மானியங்களையும், தாராளமாக நிலத்தையும் பெற்றுவிட்டு, ஏழை மக்களை ஏமாற்றியதில் முன்னணி வகிப்பது, இந்தியா முழுவதும் புகழ் பெற்ற அப்பொல்லோ மருத்துவ நிறுவனம்தான்.

டில்லியின் மிக பிரும்மாண்டமான தனியார் மருத்துவமனையான இந்திரப் பிரஸ்தா அப்பொல்லோ  மீது, டில்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வழக்கு போட்டது. அரசையும், ஏழைமக்களையும் ஏமாற்றியதற்காக, டில்லி உயர்நீதிமன்றம், அதன் மீது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, அப்பொல்லோ மருத்துவமனையின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு குழுவையும் நியமித்து ஆணையிட்டது. (அக்கினிக் குஞ்சொன்று வேண்டும் எனும் கட்டுரையையும் படிக்கவும்). இன்றைக்கு பொது மருத்துவச்சேவை பெருமளவில் நலிவடைந்து போனதற்கும், மருத்துவம் முழுக்க முழுக்க வணிக மயமானதற்கும், அதிகாரத்தில் இருப்பவர்களும், அப்பொல்லோ போன்ற வியாபாரிகளும் மருத்துவத் தொழிலில் பங்குதாரர்களானதுதான் முதன்மைக் காரணம்.

7.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் துவக்கப்பட்ட ஒரே ஒரு கண் மருத்துவமனையும், ஒரே ஒரு பல் மருத்துவமனையும், ஒரே ஒரு மனநோய் மருத்துவமனையும்தான் உள்ளது.  அதுவும் தலைநகரான சென்னையில் மட்டும்தான். அரசு மருத்துவக்கல்லூரிகள் திறப்பதைப்பற்றியோ பேசவே வேண்டாம். ஆனால், கண்களுக்கு, பற்களுக்கு, குடலுக்கு, சிறுநீரகத்திற்கு என்று தனித்தனியாக கார்ப்பொரேட் மருத்துவமனைகளை, நாளுக்கு ஒன்றாக தமிழகம் முழுவதும் ரிப்பன் வெட்டித் திறப்பதே, சிதம்பரம் மட்டுமல்லாது, எல்லா மத்திய மாநில அமைச்சர்கள் பலரின் முழுமுதற்கடமையாக உள்ளது.

1992ம் ஆண்டு, பங்குப்பத்திர ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட ஃபேர்குரோத் எனும் நிறுவனத்தில், அப்பொழுதும் அமைச்சராக இருந்த சிதம்பரம் முதலீடு செய்ததாகப் புகார் எழுந்தபோது, அவர் பொறுப்பேற்று பதவி விலகினார். என்னைப் போன்றவர்கள் மனதில், சிதம்பரம் மீதான மதிப்பு உயர்ந்தது, சிறந்த அறிவும், வாதத்திறமையும் கொண்ட சிதம்பரம் போன்றவர்கள், உயர் பதவியைப் பெற்றால், ஏன் பிற்காலத்தில் பிரதமரானால் கூட, இந்திய அரசியல் மேம்படும் என்று என்னைப் போன்றவர்கள் அப்பொழுது நம்பிக்கை பெற்றார்கள்.

ஆனால், இரட்டை அலைக்கற்றை ஊழல், வாசன் கண் மருத்துவமனையின் வளர்ச்சியில் அவரது அதீத அக்கறை, பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றின் மக்கள் விரோத செயல்பாடுகளில், அவர்கள் மீதான அவரது சார்பு நிலை உட்பட சிதம்பரத்தின் மீது சந்தேகத்தின் நிழல் அழிக்க முடியாதவாறு சூழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளிலேயே, மளமளவென்று தமிழகத்திலும், மற்ற இந்திய நகரங்களிலும் 100 கடைகள் வரை தொடங்கப்பட்ட வாசன் தனியார் கண்மருத்துவ மனைகளில் பலவற்றை, தொடர்ந்து மத்திய அமைச்சரவையில், மிக முக்கிய பதவிகளை வகித்துவரும் சிதம்பரம் தான் திறந்து வைத்துள்ளார். ஆனால், அவரது தொகுதிக்கோ, இந்தியாவின் மற்ற கிராமப்புரப் பகுதிகளிலோ, ஒரு பொது மருத்துவமனையைக் கூட இவர் திறந்து வைத்ததாகச் செய்தியில்லை.

2005ம் ஆண்டு, ஃபிப்ரவரியில், நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை, ரூ8,420 கோடியிலிருந்து, ரூ10,280 கோடியாக உயர்த்தினார், அப்பொழுது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். யுபிஏ-1 அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியாக, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை GDP யில் 0.9% லிருந்து, GDP யில் 3% ஆக படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சிதம்பரம், மன்மோகன் சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றவர்கள் வாயால் பந்தல்போட்டார்கள்.

 யுபிஏ-1 முடிந்து, இரண்டாவது முறை மீண்டும் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், கடந்த ஆண்டு, சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்தது, ரூ26,760 கோடி தான். 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, இது ஒரு சோளப்பொறி. ஆனால், ராணுவத்திற்கான பட்ஜெட், ரூ83,000 கோடியிலிருந்து, படிப்படியாக அதிகரித்து, இப்போழுது, ஆண்டுக்கு ரூ1,64,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரவேற்பறையிலேயே இதையெல்லாம் பேசத்தான் வேண்டுமா, தனிமனித செயல்பாடுகள் பற்றிய விமர்சனம் அவசியமா என்று தவறாகக் கருதவேண்டாம். நமது நாட்டையே மூழ்கடித்து விடக் கூடிய ‘தானே’வை விட பலமடங்கு வீரியம் கொண்ட புயல் சின்ன அறிக்கை இது. மன்மோகன் சிங், சிதம்பரம் போன்ற அதிகாரத்தில் உள்ள தலைவர்களின், அப்பொல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை போன்ற தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனம் இல்லை இது.

குன்றா வளர்ச்சி தொடர்பானது இது. இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன் தொடர்பானது. சமூகத்தில் ஏற்பட வேண்டிய சமத்துவமும், மகிழ்ச்சியும் தொடர்பானது.  மக்களுக்காக சந்தையா?, சந்தைக்காக மக்களா? - இந்த சித்தாந்தம் தொடர்பானது. இந்த சித்தாந்தப் போரில், கூறை மேல் ஏறி, உரக்கக்கூவி, ஆபத்தை அம்பலப்படுத்தப்பட வேண்டிய சமூகக் கடமை இது.

நாட்டின் குழந்தைகளில் 42 விழுக்காட்டினர், எடை குறைந்து இருப்பது, ஒரு தேசிய அவமானம் என்று பிரதமர் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். இந்த தேசிய அவமானத்திற்கான காரணம், அரசின் சிறப்பு விமானத்தில், டில்லியிலிருந்து, தமிழகத்தின் மாவட்டத் தலைநகருக்குப் பறந்து வந்து, பரம்பரைப் பணக்காரர்களின் நலனுக்காக, தனியார் மருத்துவமனைக் கடைகளைத் திறந்து வைத்து சொற்பொழிவாற்றும் அவரைப் போன்றவர்களது அவமானகரமான செயல்பாடுகள்தான் என்று யாராவது அவரிடம் கூறினால் நல்லது. இப்படிப்பட்ட இழிநிலை வேரெந்த நாடுகளிலும் இல்லை.

கரும்பலகையைத் துடைத்துவிட்டு, மீண்டும் எழுதுவது போல, முழுமையான மக்கள் புரட்சிதான் இந்த இழிநிலைக்கான ஒரே மாற்று. அதற்கு அக்கினிக் குஞ்சொன்று வேண்டும். அது மக்கள் மனதில் அணையாத தீயாக கொழுந்து விட்டு எரியவேண்டும். அதற்கு, முதலில் தரமான கல்வி வேண்டும்.

கோழியா?, முட்டையா? எது முதலில் எனும் கேள்வி இது. 

புரட்சிக்கான நம்பிக்கையுடன்
அ.நாராயணன்


Monday, February 13, 2012

JAN'12

                          2011ம் ஆண்டின் இந்திய சூப்பர் ஸ்டார்    - ஐஸ்வர்யா ராய்
                                                                                                                                      

தோழர்களே!   

மற்றொரு ஆங்கிலப் புத்தாண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், தொடர்ந்து உங்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து வருவது பற்றி, உள்ளபடியே மகிழ்வடைகிறேன். கடந்த ஆண்டு, உலகின் பல இடங்களில் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரண்டனர். சில புரட்சிகளும் கைகூடின. சில பல நன்மைகளும் தீமைகளும் ஏற்பட்டன. குறிப்பாக, உலகளவில் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் சிலர் வீழ்ந்து, ஜனநாயகம் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.

தமிழகத்தைப் பொருத்தவரை, ஒரு சமூக விரோத ஆட்சி மக்களின் ஓட்டுப்புரட்சியின் மூலம் அகற்றப்பட்டு, மக்கள் மீள்வதற்கான வாய்ப்பு கிட்டியது, அதை மக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். “என்ன நடக்கிறது தமிழகத்தில்?’’ என்று தொடங்கி, “எதுவும் நடக்கலாம் தமிழகத்தில்’’ என்று சற்று விரக்தியுடன் கடந்த மாத வரவேற்பறையை முடித்திருந்தேன். நான் அவ்வாறு எழுதிய நேரமோ என்னவோ, உடனடியாகவே முதலமைச்சரின் அதிகார மையத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவினால் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்திருந்தாலும், நாற்காலியில் உட்கார்ந்தது முதல் அடுத்தடுத்து மக்களின் நலவாழ்வை பாதிக்கக்கூடிய பல தவறுகளை செய்யத் தொடங்கினார் ஜெயலலிதா. குறிப்பாக,  ஆக்டோபஸ் போன்று அவரைச் சூழ்ந்து கொண்டிருந்த சிலர், மீண்டும் சுரண்டலைத் தொடங்கியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

இப்பொழுது, இந்த ஆக்டோபஸ்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு, நல்ல செய்தியை மக்களுக்கு அளித்திருக்கிறார் முதல்வர்.  தெளிவான முடிவை அவர் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இத்தெளிவு தொடர வேண்டுமே என்பதுதான், 2012ம் ஆண்டில் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும். மேலும், மக்களும் சமூக அக்கறை கொண்டோரும் எளிதில் அணுக முடியுமாறு அவர் தன்னை மாற்றிக் கொண்டால், ஒரு நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பதில் தடையேதும் இருக்காது.

சுதந்திரமாக முடிவெடுக்கும் வாய்ப்பு, இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக்கொண்டால், தமிழக அரசின் டாஸ்மாக் சாராயக் கொள்கையில் சிறிதாவது நல்ல மாற்றம் கொண்டு வர, வெளியில் உள்ளவர்கள் ஆக்கபூர்வமான சில முயற்சிகள் எடுத்தால் பலன் கிட்டும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அமைச்சர்கள் பெரிய அளவில், வெளிப்படையாக ஊழல் செய்வதற்கு பயப்படும் நிலையும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆனால், சுயமாக முடிவெடுப்பதற்கும், திறமையான நிர்வாகத்தை அளிப்பதற்கும் அவர்களால் முடியாமா  என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

நிற்க. 2011ம் ஆண்டு, உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பல தீமைகளையும் சில நன்மைகளையும் கொண்டுள்ளது. தடையில்லா முதலாளித்துவமும், உற்பத்திப் பொருளாதாரமும் உன்னதமானது எனும் சித்தாந்தத்திற்கு பலமான அடி விழுந்துள்ளது. இது ஒரு விதத்தில் நல்ல செய்தி.  இந்த அடியிலிருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தப்பித்து வருவதற்கும், தங்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளவும் மிகவும் போராட வேண்டி வரும்.

ஒசாமா பின்லாடன் போன்ற மத பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல கடந்த ஆண்டு ஏற்பட்ட மரணம்.  வடஅமெரிக்கா மிகப்பேரிய அளவில் தொடங்கி வைக்க, ஐரோப்பியாவை எட்டி, ஜப்பான், சீனா போன்ற கிழக்கு நாடுகளில் கடை பரப்பி, துபய் உட்பட பல மேற்காசிய கனவுப் பிரதேசங்களில் மூளைச்சலவை செய்யப்பட்டு,  இந்தியாவிலும் காலூன்றி பரவியுள்ள வரைமுறையற்ற ‘நுகர்வு தீவிரவாதமும்’ இன்றைக்கு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்தையும், வால்மார்ட் போன்ற அன்னிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதையும் இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

ஆயினும், முதலாளித்துவ நாடுகளுக்கு உண்டாகியுள்ள நிதி நெருக்கடியாலும், அடுத்தடுத்த இந்திய அரசுகளின் குளறுபடிகளாலும், இந்தியாவில் மிக மோசமான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு, பணவீக்கத்தை விலையாகக் கொடுத்துள்ளோம். (இம்மாத “இந்திய பொருளாதாரம் - 2020?’’ தலைப்பிலான சற்றுக் கடினமான கட்டுரையைப் படிக்கவும்). இந்திய ரூபாய், வரலாறு காணாத வகையில் மதிப்பிழந்து கிடக்கிறது. 


தங்கத்தின் விலை உச்சாணிக்கொம்பின் மீது ஏறி, இப்பொழுது வீழும் நிலையில் உள்ளது. இந்திய அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறைந்து, திட்டமிட்டதை விட அதிகக்கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ் வொரு இந்தியனின் மீதான கடன்சுமை ஏறிக் கொண்டே போகிறது.  அது மட்டுமல்ல, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி தரமான நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சற்று ஆழமானது என்பதால், 2012ம் ஆண்டு, இந்தியாவில் பரவலான வேலையிழப்பு ஏற்படும் உண்மையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேவை தொடர்பான வேலைகளும், உற்பத்தி தொடர்பான வேலைகளும் குறையலாம் அல்லது மந்தநிலையை எட்டலாம். வேளாண்துறை வலுப்பெற்றால் மட்டுமே, உணவு உற்பத்தியும் அதிகரித்து, விவசாயம் தொடர்பான வேலை வாய்ப்புகள் பெருகி, மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்.

மற்றபடி, ஆடம்பரத்தைத் தவிர்த்து, தின வாழ்க்கையை அதிக சிக்கலுக்கு ஆளாக்கிக் கொள்ளாமல் இருந்தால், தனி மனிதர்கள் தப்பித்துக்கொள்ளவும், வெற்றி அடையவும் முடியும். வேறு வழியில் கூற வேண்டுமானால், கடந்த ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்ட ஆடம்பரங்கள் சிலவற்றை, போகிப் பண்டிகை அன்று போட்டுப் பொசுக்கிவிட்டு, வாழ்க்கையை நேர் வழியில் அமைத்துக்கொண்டு, உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணிக்காப்பதற்கு, 2012ம் ஆண்டில் அதிகரிக்கக் கூடிய பொருளாதார நெருக்கடி, ஒரு வாய்ப்பாக  அமைகின்றது..

நம்பிக்கையுடன் முயன்றால் முடியும் என்பதற்கு, கடந்த ஆண்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யாராய் நமக்கு ஒரு “முன்னுதாரணத்தை’’ அளித்துள்ளார். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை விட்டால் வேறு வழியில்லை என்ற எண்ணம் கடந்த பல ஆண்டுகளாகவே மருத்துவர்களால் மக்களின் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ள நிலையில், 38 வயதிலும் பிரசவ வலியையும் ஆபத்துக்கான வாய்ப்பையும் மன உறுதியுடன் எதிர் கொண்டு, இயற்கையான முறையில் கத்தி வைக்காமல் ஆரோக்கியமான பெண் குழந்தையை கடந்த ஆண்டு பெற்றெடுத்த ஐஸ்வர்யாராய், ஒரு விதத்தில், 2011ம் ஆண்டின் “முன் மாதிரி பிரபலம்” என்றால் மிகையில்லை. 

இம்மாதிரி நிகழ்வினை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரிந்த செய்தியாக்கி இருக்க வேண்டும். ஏனோ, பெரும்பாலான ஊடகங்களும் அரசின் சுகாதாரத் துறையும் கூட, இந்த ஆரோக்கியமான முன்மாதிரி செய்தியை ஊதிப் பெரிய விஷயமாக்காமல் இருந்து விட்டனரே என்பதுதான், 2011ம் ஆண்டின் நமது ஆதங்கங்களில் ஒன்று. ஊடகம் என்று பேசும்போது, 2011ம் ஆண்டு துவக்கப்பட்ட “புதிய தலைமுறை” தொலைக்காட்சி சேனல் பற்றி பதிவு செய்ய வேண்டிய கடமை உள்ளது. சினிமா, பிற்போக்குத் தனமான பொழுதுபோக்கு நிகழ்வுகள், மனஅழுத்தம் தரக்கூடிய விதமான செயற்கையான நாடகங்கள், அப்பட்டமான அரசியல் சார்புநிலை, இவையே தமிழக சின்னத்திரையை ஆக்கிரமித்து வைத்திருந்தன.  

சொல்லப்போனால், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்து வந்தன. வாசிப்பு பொதுவாகக் குறைந்து வரும் நிலையில் இந்த தொலைக்காட்சிச் சேனல்கள், சமூக சீரழிவை சிறப்பாக செய்து, மக்களை கேளிக்கை விரும்பும் மேலோட்ட சமூகமாக மாற்றி வந்தன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சியும், 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியும், அரசியல், சாதிய பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், தமிழக காட்சி ஊடகச்சூழலுக்கு ஒரு ஆரோக்கியத் தன்மையை அளித்து வருகின்றன. 

இவை 2012ம் ஆண்டில் மென்மேலும் வளர்ந்து தமிழக காட்சி ஊடகச் சூழலில் சிறப்பான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று, எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் வாழ்த்துவோமாக. 

பாடம் குழுவினர் சார்பாக, வாசகர்களுக்கு, ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களையும், உழவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்புடன்
அ. நாராயணன்


Sunday, February 12, 2012

DEC'11

                                      என்னதான் நடக்கிறது, தமிழகத்தில்?

அன்புத் தோழர்களே!
வணக்கம். என்னதான் நடக்கிறது, தமிழகத்தில்? அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா?... இதுதான் உச்சநீதிமன்றம் சமீபத்தில் கேட்ட கேள்வி. ஒப்பந்த அடிப்படையில், கடந்த திமுக அரசு வேலைக்கு அமர்த்திய 12,000 மக்கள் நலப்பணியாளர்களை அதிரடியாக நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிய வழக்கில் மேல் முறையீட்டின் போதுதான் உச்சநீதி மன்றம் இவ்வாறு கேட்டுள்ளது.

மக்களின் பேராதரவோடு ஆட்சியில் அமர்ந்த அடுத்த நொடியே, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ரத்து செய்து, பின்னர் உயர்நீதி மன்றத் திலும், உச்சநீதி மன்றத்திலும் குட்டுப்பட்டு, அறைகுறையாக நடைமுறைப்படுத்த முன் வந்தது அதிமுக அரசு. ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையில், சில விஷயங்களைத் தவிர்த்து, அதிமுகவின் ஆட்சியில் நிர்வாகம் போகும் போக்கு குழப்பமாகத்தான் இருக்கிறது.

பெரும்பாலான முடிவுகளில் தெளிவற்ற பார்வை, குழப்பமான, அதிரடியான செயல்பாடுகள், யாரிடமும் நம்பிக்கையின்மை, வெளிப்படைத் தன்மை யின்மை,  மக்களிடம் தொடர்பே இல்லாமை, ஜனநாயகம் அற்ற சூழல் ஆகியவை முதல்வரிடம் இருந்து வெளிப்படுவது போன்ற ஒரு தோற்றம்.
  
எந்த ஒரு அமைச்சரும் தன்னிச்சையாக தெளிவாகச் செயல்படுவதாகத் தெரிய வில்லை. இப்பொழுதெல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளின் கல்வித் தகுதி, சமூகப் பங்களிப்பு, நாட்டு மக்களின் உண்மையான தேவைகள் குறித்தப் புரிதல் ஆகிய எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆதலால், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களாலும், அமைச்சர்களாலும் எந்த ஒரு பெரிய நன்மையும் விளையப் போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.
    
ஏன், முதல்வருக்கே கூட, அவரது அமைச்சரவை சகாக்கள் மீது நல்ல ஒரு அபிப்பிராயம் இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. ஜாடிக்கேத்த மூடி என்பது போல், அம்மாப்புகழ் பாடுவது மட்டுமே இன்றைய அமைச்சர்களின் முதல் வேலையாகவும், அம்மா காதுக்கு எட்டாமல், “ஏதாவது” செய்து கொள்ள முடியுமா என்பது அவர்களில் பெரும்பாலானவர்களின் இரண்டாவதும் கடைசியுமான வேலையாக இருக்கலாம். இதே நிலைதான் தேர்ந்தெடுக்கப் பட்ட பெரும்பாலான மேயர்களுக்கும் நகராட்சித் தலைவர்களுக்கும். சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.

சமச்சீர் கல்வியில் அணுகுமுறை, அண்ணா நூலக மாற்றம் பற்றிய அறிவிப்பு, பரமகுடியில் மறியலில் ஈடுபட்ட தலித்துகள் மீதான துப்பாக்கிச்சூடு, அதன் பின் எடுத்த / எடுக்காத குறைந்த பட்ச நடவடிக்கைகள், வாச்சாத்தி வழக்கின் முதற்கட்ட தீர்ப்பு வந்த பின் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்காத மவுனம், தற்போது நான்கு இருளர் பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய பாலியல் பயங்கரம் எல்லா வற்றிலும் ஒரு நஷ்டஈடு மட்டும் அறிவித்துவிட்டு அமைதியாவது, பட்ஜெட் அறிவிப்பில் ஆதிதிராவிட மக்கள் நலனுக்கான உட்கூறு பற்றி ஏதும் தெரிவிக் காதது, நலவாரியங்கள் உட்பட முந்தைய ஆட்சியின் பல திட்டங்கள் முடக்கப் படுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவருவது பற்றி அறிவித்து விட்டு இப்பொழுது மவுனம், சில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள், பல அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள், விரிவுரையாளர்கள் போன்றோர் இன்னும் நியமிக்கப்படாத நிலை, எதிர்க் கட்சியினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் தவிர, பொதுவாக ஊழலைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாமை, முந்தைய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் ரத்து,  சொகுசு பார்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் சாராயக் கடைகள் திறப்பு, இப்படி  அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குறைந்தபட்சமான எக்ஸ்ரே எடுப் பதற்குகூட திண்டாட்டமாகிவிட்டது என்றால் அவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை எப்படியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.
    
பெரும்பாலான அமைச்சர்களின் முகங்கள் கூட யாருக்கும் பரிச்சயமாக வில்லை. அவர்கள் எத்தனை நாட்கள் பதவியில் இருப்பார்கள் என்பது கூட சந்தேகம். இதே நிலைதான், ஐ ஏ எஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கும். மாவட்ட ஆட்சியர்களாக இருக்கட்டும், துறைச் செயலர்களாக இருக்கட்டும், ஒரு நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது.
                    
வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் தீட்டப்படுவதாகத் தெரிய வில்லை. பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டுள்ளதால், இளைஞர்களி டையே வேலை இழப்பு ஏற்பட்டு, சமூக அமைதி குறையும் அபாயம் ஏற்பட்டுள் ளது.
                             
இரண்டாவது பசுமைப்புரட்சி பற்றிய தேர்தல் அறிவிப்பிற்குப் பின் அதன் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் தெரியவில்லை. சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. இப்பிரச்சினை குறித்து முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முயலவில்லை. தமிழகம் முழுவதும் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவையே தினசரி செய்தி களாகி விட்டன.
                           
முந்தைய அரசின் மிகக்கேவலமான நிர்வாகத்தால், இன்றைக்கு தமிழகம் முழுவதும், சாலைகள், நடைபாதைகள், பேருந்து நிழற்குடைகள், பேருந்து நிலையங்கள் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை. இந் நிலையை மாற்றும் வகையில், புதிய அரசும், அதிகாரிகளும் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. பல திட்டங்கள், அறிவிப்பு நிலையிலேயே உள்ளன. 

சமையல் எரிவாயு மட்டுமல்ல, ரேஷன் மூலம் மண்ணெண்ணை கிடைப்பதில் கூட சாதாரண மக்களுக்கு போராட்டமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள் ளாட்சிப் பிரதிநிதிகள், அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் சும்மா இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழகம் முழுவதும் குப்பைக் கூடங்களாகக் காட்சியளிக்கின்றன. சென்னையை, ஹெலிக் காப்டரில் முதல்வர் மேலிருந்து பார்த்ததோடு சரி, அதன் பின், நீடித்த பயன் தரும் விதத் திலான திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக எந்தவித அறிவிப்போ நடவடிக் கைகளோ இல்லை.

 இந்த ஆட்சியிலும் மணல் கொள்ளை என்பது தமிழகத்தில் எழுதாத சட்டமாகி விட்டது என்பதுதான் எல்லா மாவட்டங்களில் இருந்து கசிகின்ற விஷயம். தவறு செய்துள்ள முந்தைய ஆட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைவாக விசாரணை நடைபெற்று தண்டனை பெற்றுத்தர வேண்டியது முக்கியம் தான். ஆனால், கைது நடவடிக்கை, திமுக ஆட்சியின் திட்டங்களை முடக்குதல் எனும் இரட்டை அம்ச நடவடிக்கை மட்டுமே இன்றைய ஆட்சியர்களுக்கு அழகல்ல.

அதிரடியாக பால்விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை ஒரேடியாக உயர்த்தி யுள்ள அரசைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. இலவசங்களுக்கெல்லாம் தலையாட்டும் மக்கள் இருக்கும் வரை, இலவசங் களுக்கு வேறு வகையில் கப்பம் கட்ட வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த விலையேற்றம் என்பது பல வருடங்களாக அடுத்தடுத்த அரசுகளின் நிர்வாகக் குளறுபடிகளின் ஒட்டுமொத்த விலை இப்பொழுது மக்கள் மீது இடியாக விழுந்துள்ளது.
                            
உலகில் இலவசங்கள் என்றும், மானியங்கள் என்றும் எதுவும் இல்லை என்பதைப் பற்றி மிகப் பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய நிலைமை சீர்பட வாய்ப்பில்லை. வலது பாக்கெட்டில் இருந்து எடுத்து, இடது பாக்கெட்டில் போட்டுக்கொள்வது எப்படி இலவசமாக இருக்க முடியும்?
                 
இலவசம் என்பது எவ்வளவு பெரிய மோசடியோ, அந்த அளவு பொய், திமுக விற்கு மாற்று அதிமுக என்பதும். அது மட்டுமல்ல, இன்றைக்கு இருக்கும் மற்ற கட்சித்தலைமைகளும் மக்களை மேம்படுத்தப்போவதில்லை. ஏனென்றால், இன்றைக்குப் பொதுவாழ்வில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தலை வர்கள் அல்ல, தரகர்கள்!
                 
ஆக, மாற்றுச் சிந்தனையாளர்களை வரவேற்கவும், காதுகொடுத்துக் கேட்க வும், தங்களது மூன்றாவது தலைமுறையின் மீது அக்கறை கொள்ளவும் மக்கள் தயாராக வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்டோரும் மக்களை மாற்றத்திற்கு தயார் செய்ய வேண்டும். அதுவரை, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்கு எதுவும் நடக்கும் என்பதுதான் பதிலாகும். 

மாற்றுச் சிந்தனைக்கான
நம்பிக்கையுடன்
                                                                                                                                     
                                                             

  
அ.நாராயணன்