Monday, October 11, 2010


காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி வெற்றியடைந்தால் வருத்தமடைவேன் என்று மணிசங்கர் ஐயர் தொடங்கி வைத்த கூற்று ஒரு பெரும்புயலாக மாறி, காமன் வெல்த் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள், குளறுபடிகள், மனித உரிமை மீறல்கள் என்று பலவற்றையும் வெளிக் கொண்டு வந்தது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த ஊடகங்களும் சேர்ந்து இந்திய அரசையும், விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களையும் சாட்டையால் அடிக்காத குறைதான். ஆனால் எந்த ஊடகத்தின் பார்வையும் காமன் வெல்த் போட்டிகளை சாக்காக வைத்து நடத்தப்படும் ஒரு பேரவலத்தின் மீது விழவில்லை. ஏனென்றால், இந்த அவலத்திற்கு ஆட்படுபவர்கள் மற்ற எல்லோரையும் பொறுத்தவரை, அவர்களுக்கான ஒரு நுகர் பொருள், கேளிக்கைக்கான கருவி, அவ்வளவு தான்.


எல்லோரும் நாய் அழுக்காக்கிய மெத்தைகளையும், எச்சில் துப்பிய அறை மூலைகளையும், உடைந்து விழுந்த நடைபாலத்தையும் மட்டுமே மையப்படுத்தினர். ஆணாதிக்க சமூகத்தின் முடை நாற்றத்தையும், 70,000 கோடி பளபளப்பிற்கும் முலாம் பூச்சிற்கும் உள்ளே அழுகி புழுத்துக் கொண்டு இருக்கும் நம் சமூகத்தின் பல்வேறு அவயவங்களையெல்லாம் யார் தான் வெளிக்காண்பிப்பார்கள்? ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் இவற்றை எல்லாம் யார்தான் கவனத்தில் கொள்ளப் போகிறார்கள்?


இக்கட்டுரை, வாசகர்களின் கைகளில் இருக்கும் போது, இந்த விளையாட்டு போட்டிகள், வெற்றியா அல்லது தோல்வியா என்பது தெரிந்திருக்கக்கூடும். ஆனால், இக்கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கும் இந்த நிமிடம், வினை தீர்க்கும் விநாயகரின் கிருபையினால், ஏசுவின் கருணையினால், இன்ஷா அல்லா இரக்கத்தினால்  இப் போட்டிகள் தோல்வியடைந்து, இந்தியாவிற்கு பெருத்த அவமானம் தேடித்தர வேண்டும். அந்த அவமானத்தில் இருந்தாவது, ஒரு புதிய யுகம் பிறக்க வாய்ப்புண்டோ என்று வேண்டிக் கொண்டே தான் தொடருகிறேன்.


மணிசங்கர் ஐயரும், என்னைப் போன்றவர்களும் மட்டுமல்ல, இந்த விளையாட்டுப் போட்டிகளை சாக்காகக் வைத்து ஒரு பேரவலத்திற்குள் தள்ளப்பட்டவர்களும், காமன்வெல்த் போட்டிகள் மிகப் பெரிய தோல்வி அடைய வேண்டும் என்று கண்களை இறுக்க மூடியபடி ஆழந்த உறக்கத்தில் இருக்கும் தத்தம் கடவுள்களை வேண்டிக் கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது.


கடந்த மாத பாடம் இதழில் வெளி வந்த நேர்காணலில் “விளையாட்டு மட்டும் தான் மாணவ மாணவிகளை, இளைஞர்களை நல்ல ஒழுக்கமான முறையில் வளர்க்கும்” என்று முன்னாள் ஒலிம்பிக் வீரர் பாஸ்கரன் குறிப்பிட்டிருந்தார்.


விளையாடுவது, ஒழுக்கத்தை வளர்க்கிறதோ என்னவோ, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், ஒழுக்கமின்மையையும், சமூகச் சீர்கேடுகளையும் விலையாகக் கேட்கின்றன என்பது தான் துரதிருஷ்டம்.


பாலியல் தொழில் உலகின் மிகப் பழமையான தொழில் என்று கூறப்படுவது உண்டு. ஆனால், வெங்காயம் முதல் பன்றிக் காய்ச்சல் வரை, எப்படி இன்றைய உலகமயமாக்கலில், உலகம் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தில் அங்கமாகி விட்டனவோ, அது போல், பாலியல் தொழிலும் இன்று உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருள் அல்லது சேவையாகி விட்டது. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் விளைவாக பாலியல் தொழில் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இன்று உருவாகி வருகின்றன.


உச்சக்கட்ட ஏழ்மையில் வாழும், தின வாழ்க்கையே போராட்டமாக உள்ள, ஹெயித்தி போன்ற ஆஃப்ரிக்க நாடுகளில், பாலியல் தொழில் என்பது மிக முக்கிய தொழில்களில் ஒன்றாகும். அங்கு முற்றிலும் விவசாயம் அழிக்கப்பட்டு விட்டதனால், உடலுழைப்பு மூலம் பிழைக்க வழியில்லை. அங்கு பல குடும்பங்களில் குழந்தை ஆணாக இல்லாமல், பெண்ணாகப் பிறந்தால் ஆறுதலடைவார்கள் என்று படித்த ஞாபகம். பாலியல் தொழில் செய்தாவது பிழைத்துக் கொள்வாள் என்று ஆறுதல் பெண்ணை பெற்றவர்களுக்கு. வறுமை தான், ஆஃப்ரிக்க நாடுகளில் எயிட்ஸ் நோய் அதிகரிப்பிற்கு முதன்மைக் காரணம்.


அதே போன்று இந்தியாவில், வறுமையினால், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்கள் கணக்கில் அடங்காதவர்கள். இன்றைய இந்தியாவில் ஒரு சாரார் கண்டு வரும் பொருளாதார வளர்ச்சி, பாலியல் தொழிலுக்கான நுகர்வை அதிகரித்து, மேலும் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது என்றால் மிகையில்லை.


உலகத் தொழில்கள் எல்லாம் சென்னையைச் சுற்றி அமைந்து, நிலத்தின் மதிப்பு உச்சத்தை அடைந்து, எவ்வாறு அது நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கும், ரியல் எஸ்டேட்காரர்களுக்கும், ஆயிரக்கணக்கான பொறியாளர்களுக்கும், லட்சக்கணக்கான கட்டடத் தொழிலாளர்களுக்கும் மட்டுமல்லாது, ஏகப்பட்ட குண்டர்களுக்கும், கூலிப்படைகளுக்கும், கட்டப்பஞ்சாயத்து கும்பல்களுக்கும் நிலையான வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோ, அதைப் போன்றதொரு வளர்ச்சி இந்த பாலியல் தொழிலுக்கும்  இந்தியாவின் பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ளது.


இப்பொழுது டில்லி காமன்வெல்த் ஊழல் விளையாட்டுக் கொண்டாட்டங்களுக்கு வருவோம். டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதின் விளைவாக, கட்டிடக்கலை வல்லுனர்கள், ஹோட்டல்கள், அங்காடிகள், சுற்றுலாத்துறையினர், விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பாலியல் நிறுவனங்கள், பிம்புகள், ப்ரோக்கர்கள், ரெட்லைட் ஏரியாவாசிகள் போன்றவர்களுக்கும் ஒரு ஜாக்பாட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, கடந்த ஒரிரு வருடங்களாகவே அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.


இந்த விளையாட்டுப் போட்டிகளை காண வருபவர்களுக்கு தீனி போடுவதற்காகவே இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது. வயதுக்கு வந்த சிறுமிகளுக்கு, “ஆக்ஸிடாசின்” ஹார்மேன் ஊசி போடப்பட்டு, அவர்களின் உடல்கள் பாலியல் தொழிலக்கு தயார் செய்யப்பட்டன என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சக்தி பாகினி எனும் தொண்டு நிறுவனம், ஒடிஸா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார் மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 13 முதல் 17 வயது வரை உள்ள பல சிறுமிகளை மீட்டுள்ளது.


கர்நாடகா, தமிழகம் உட்பட பல மாநிலப் பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர். கடத்திவரப்பட்ட பெண்களுக்கு சிறுசிறு ஆங்கில வாக்கியங்கள் பேசவும், குறிப்பாக “ஆணுறை பயன் படுத்துங்கள்” என்று ஆங்கிலத்தில் வாடிக்கையாளரிடம் சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தவும் பயிற்சி கொடுக்கப்பட்டதாக கோலின் தோதந்தர் எனும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.


டில்லியில் உள்ள ரெட் லைட் ஏரியாக்கள் புதுப்பிக்கப்பட்டு, டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.ஸி போன்றவை விடுதிகளில் பொருத்தப்பட்டன. அயல்நாட்டவருடன் பெண்களை அனுப்புவதற்காக எஸ்கார்ட் நிறுவனங்கள் பல (அதாவது பாலியல் சுற்றுலா)  முளைத்துள்ளன. காமன் வெல்த் டி ஷர்ட், தொப்பி, மிட்டாய், விஸ்கி, காபி போன்று, பெண்களும் இங்கு ஒரு சந்தைப் பொருள் அல்லது சேவைப்பொருள்.


டில்லி அரசோ, சாலைகளைத் தோண்டி புதுப்பிப்பது, சிவப்புக் கம்பளம் விரிப்பது, ஆங்காங்கே அலங்காரங்கள் செய்வது, ஆயிரக்கணக்கான பூத்தொட்டிகள் வைப்பது போன்று எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து டில்லி முழுவதும் நூற்றுக்கணக்கான ஆணுறை விநியோகிக்கும் இயந்திரங்களைப் பொறுத்தியுள்ளது. அதாவது பெண்களும், சிறுமிகளும் கடத்தப்படுவதை ஒன்றும் செய்ய முடியாது, அவர்கள் சித்திரவதைப்படுத்தப்படுவதை தடுக்க முடியாது, ஆனால் எயிட்ஸ் தொற்றுவதையாவது தடுக்க முயல வேண்டும் என்பது மட்டுமே அரசின் குறிக்கோளாக முடிந்து விடுகிறது.


“நமக்கு நாமே” எனும் பெண்களின் பாதுகாப்புக்கான நிறுவனம், ஜனாதிபதி முதல் பல்வேறு அரசுத் தலைவர்களிடமும் இந்தக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி முறையிட்டும் எந்த பலனும் இல்லை. மத்திய அரசு, போட்டிகளை எப்பாடுபட்டாவது தோல்வியிலிருந்து மீட்பதிலேயே குறியாக இருந்ததால், ஒரு சில நடத்தை விதிகளை மட்டும் வெளியிட்டு முடித்துக் கொண்டு விட்டது.


பெண்களும், சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட செய்யப்பட, டூரிஸ்ட் நிறுவனங்களும், விடுதி முதலாளிகளும், புரோக்கர்களும், போலிஸ்காரர்களும் நல்ல வருமானம் பார்ப்பார்கள். சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து ப்ராத்தல்கள் ஏற்கனவே விலையை ஏற்றியிருந்தனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றி, பாதுகாப்பு, விருந்தோம்பல் இவற்றிலேயே அரசுத்துறைகளின் கவனம் இருக்கும், ஆதலால், பாலியல் தொழில் தடையில்லாமல் கொழிக்கும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தியப் பெண்கள் மட்டும் அல்ல, இங்கிலாந்து, ஸ்பெயின், லத்தீன், துருக்கி, தெற்கு ஆசிய நாடுகள் என்று உலகின் பல பகுதிகளில் இருந்தும் பாலியலுக்காக பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா படேல், எதிர்கட்சித் தலைவர்  சுஷ்மா சுவராஜ், முதல்வர் ஷீலா தீக்ஷித் என்று ஆட்சி செய்யும் உயர் அதிகாரத்தில் பெண்கள் இருந்தும், டில்லி காமன்வெல்த் போட்டியின் போது நூற்றுக்கணக்கான பெண்கள், பாலியல் படுகுழியில் தள்ளப்படுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார் மற்றொரு கட்டுரையாளர் N. விஜி.


காமன்வெல்த் நடக்கும் இருவாரங்களுக்கும், வெளிநாட்டு பெண் என்றால், ரூபாய் 2 லட்சம் முதல் 7 லட்சம் வரை ஒரு வாடிக்கையாளர் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவில் விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டப் போகிறதோ இல்லையோ, பாலியல் தொழிலை உலகத்தரத்துக்கு(?) கொண்டு சென்று, இந்தியாவெங்கும் இத்தொழிலுக்கு புத்துணர்ச்சி(?) ஏற்படுத்தப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. அத்தாடு, ரஷ்யா, உக்ரெயின், கஜகஸ்தான், ஜியார்ஜியா போன்ற பழைய கம்யூனிஸ்ட் நாடுகளில் இருந்தும் பாலியல் தொழிலாளர்கள் படையெடுப்பதாக இருந்தது.


காமன்வெல்த் மட்டுமல்ல, 2008ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போதும், அதற்கு முன்பு ஏதென்ஸ் நகரில் நடந்த போதும் அங்கு பாலியல் தொழில் கொடிகட்டிப் பறந்தது. அப்போதும் லட்சக்கணக்கான ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டன. ஒலிம்பிக், உலகக் கோப்பைகள் போன்ற விளையாட்டு நிகழ்வுகளேடு, பாலியல் தொழில் வளர்ச்சி, கடந்த 10,15 வருடங்களாகத் தான் வேகமாக அதிகரித்துள்ளது.
இப்பொழுதே, இங்கிலாந்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பிற்கான பல தன்னார்வ நிறுவனங்கள் பயப்படத் தொடங்கிவிட்டன. ஏனென்றால், இங்கிலாந்து நாட்டில் 2012ம் வருடம் லண்டன் ஒலிம்பிக்ஸூம், 2014ம் வருடம் காமன்வெல்த் போட்டிகளும் நடக்கவிருக்கின்றன.


பொதுவாக விளையாட்டு போட்டிகள் என்பது சிகரெட், மது நிறுவனங்கள் மற்றும் பாலியல் சந்தையோடு பின்னிப் பிணைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சிகரெட் மற்றும் மது நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த, இளைஞர்களைத் தங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக்க, மூளைச் சலவை செய்ய, இசை நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை ஸ்பான்ஸர் செய்து நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட வரலாறு உள்ளது. நேரடி விளம்பரம் தடை செய்யப்பட்ட பின்பும், மறைமுக விளம்பரம் மூலம், தங்கள் ஆக்டோபஸ் பிடியை அவர்களால் இறுக்க முடிகிறது.


ஜென்டில்மென்களின் விளையாட்டு என்று கூறப்பட்ட வெள்ளையுடை கிரிக்கெட்டை, ஐ.பி.எல். கிரிக்கெட் எனும் இழிவு மூலம் அலங்கோலமாக்கியது இந்த சந்தை வியாபாரிகள் தான். சூதாட்டம், சியர் லீடர்ஸ், மதுக் கலாச்சாரம், ஹவாலா பணம், எஸ்கார்ட் (பாலியல்) தொழில் ஆகிய அவலங்களை கிரிக்கெட் மூலம் விரிவு படுத்தி நூற்றுக்கணக்கான கோடி களை புரட்டிக் கொண்டிருக்கும் கும்பல்கள் இன்று பெரிய மனிதர்களாக, தொழிலதிபர்களாக, சினிமா துறையினராக வளைய வந்து கொண்டு உள்ளனர். இளைஞர்களின், நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு வெறியைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் இமாலய வெற்றி பெற்றுள்ள இவர்களை, உச்சநீதி மன்றம் முதல் பார்லிமென்ட் வரை எந்த அதிகார அமைப்பும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியின் போதும், வெளிப்படையாக அரங்கங்களிலேயே மது விநியோகிக்கப்படுகிறது. போட்டி முடிந்த பின்னரும், மது விருந்துகள், போதைப் பார்ட்டிகள், டிஸ்கோ என்று அமர்க்களப்படுகிறது. வெளித்தோற்றத்திற்கு கவர்ச்சி கரமாகவும், பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் இவ்வகைக் கொண்டாட்டங்கள், பல பெண்களை இருட்டறைக்கு மட்டுமே கொண்டு செல்லும் ஒரு வழிப்பாதையில் விட்டு விடுகிறது என்பது யார் கண்களுக்கும் புலப்படுவதில்லை.


உலக வரலாறு முழுவதும் விளையாட்டு இருந்திருக்கிறது. மதுக்கலாச்சாரம் என்பதும் இனங்களின் கலாச்சாரமாக அமைந்து இருக்கிறது. பாலியல் தொழிலும் சரித்திரத்தின் எல்லா காலங்களிலும் பதிவாகி இருக்கிறது. ஆனால், இந்த மூன்றையும் வெற்றிகரமாக, லாபகரமாக இணைத்து இன்றைய உலகப் பொருளாதாரமயம் பெண்ணின் உடல் மீது அவிழ்த்து விடும் திட்டமிட்ட வன்முறை, வேறெந்த காலத்தையும் விட பலமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்றே கூறத் தோன்றுகிறது. இந்த வன்முறையைத் தடுப்பதற்கான எந்த சக்தியும் இல்லை என்பதோடு, இளம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான நேரடி மற்றும் மறைமுக பாலியல் பலாத்காரம் இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளது என்றும் தோன்றுகிறது.


வீட்டு வரவேற்பறையில் உள்ள வண்ணத்தொலைக்காட்சி பெட்டி, சிறுவர்கள் மூச்சிறைக்க ஓடி வந்து வாசலில் விசிறியடிக்கும் நாளிதழ், உடலின் ஒரு புதிய உறுப்பாகி விட்ட செல்போன், கணினி மூலம் பின்னப்படும் வலைதளம் எல்லாமுமே இந்த பொருளாதார வெற்றிக்கான வெறி கொண்ட நாய்களின் கோரப் பற்களாகி விட்டன. நுகரு, நுகரு என்று விளம்பரங்கள் மூலம் இவை ஓயாமல் குரைத்துத் தீர்க்கின்றன.


இன்று வீதிகளிலும், வீடுகளிலும், விடுதிகளிலும் முழுவதுமாக வியாபித்துள்ள இந்த “நுகர்வு வன்முறை”, பேயாட்டம் ஆடிவிட்டுத் தான் ஓயும் போல் தோன்றுகிறது.
அதுவரை, நுகர்வுக்கான பிரம்மாண்டமான சந்தையின் ஒரு பகுதியில் இன்னும், இன்னும் பல பெண்களின், சிறுமிகளின் உடல்கள் பலி கேட்கப்படும்.

Saturday, October 9, 2010


ஏழ்மை நிறைய கேட்கும், ஆனால் 
பேராசை எல்லாவற்றையும் கேட்கும்
                                               
                                                    - ரோமானிய பழமொழிசுவிஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட இந்தியப்பணத்தை மீட்க முடியுமா?

முதலாளித்துவத்தின் அழுக்குப்பணத்தில் இருந்து சந்தையை எப்படி விடுவிப்பது என்பதைப் பற்றிய புத்தகம் எழுதியவர் “உலக நாட்டுக் கொள்கைகளுக்கான மையத்தின்” இயக்குனர் ரேமான்ட் பேக்கர் எனும் அறிஞர். உலகின் ஒட்டுமொத்த வளங்களில் 57 விழுக்காட்டிற்கும் மேல், உலகின் 1 விழுக்காடு மக்களிடம் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்கிறார் அவர்.  மேலும் பல நாடுகளில் உள்ள ரகசிய வங்கிக் கணக்குகளில் பாதுகாக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணக்காரர்களின் நிதி 10 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு இருக்கும் என்றும் கணித்துக் கூறுகிறார் பேக்கர்.

இவ்வாறு ஒளித்து வைக்கப்பட்டுள்ள நிதியில், 50% அளவிற்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள திருட்டுப்பணம் என்று உலக நிதி அமைப்பு கூறுகிறது.  லஞ்சம், ஊழல், கிரிமினல்களின் பணம்,   கொள்ளையடிக்கப் பட்ட நாடுகளின் வளங்கள், வரி ஏய்ப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.    ஜவஹர்லால் நேரு காலம் முதல் 2006  ஆம் ஆண்டு வரை, இந்திய பெருச்சாளிகள் அயல்நாடு வங்கிகளில் ஒளித்து வைத்தவை 1.4 டிரில்லியன் டாலர்கள் என்று ஊகிக்கப்படுகிறது. (அதாவது இன்றைய மதிப்புப்படி ரூபாய் 71 லட்சம் கோடிகள்).

உலக வங்கி உட்பட அயல்நாடுகளிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள அயல்நாட்டுக் கடன்களை விட இத்தொகை 12 மடங்கு அதிகம்.  பழைய கணக்குகளான போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் போன்றவற்றைத் தாண்டி, சத்யம் ஊழல், ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், இந்தியா முழுவதும் சுரண்டப்படும் கனிமங்கள் போன்ற சமீபத்திய கணக்குகளை எடுத்துக் கொண்டால், மேற்படி ட்ரில்லியன் புள்ளி விவரத்தை இன்னும் மேல்திசை நோக்கி அதிகரிக்க வேண்டும்.

2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையுள்ள 5 வருடங்களில் மட்டும், இந்தியாவில் இருந்து 136.5 பில்லியன் டாலர்கள் (அதாவது 7 லட்சம் கோடிகள்) முறைகேடாக பறந்து சென்றிருக்கும் என்று கருதுகிறார் பெங்களுரு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்) நிதிப் பேராசிரியர் ஆர். வைத்தியநாதன். மேற்கூறிய புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவையா என்ற சந்தேகம் எழலாம். எப்படி இருப்பினும், உலகில் உள்ள ரகசிய வங்கிக்கணக்குகளில் அதிகமாக உழல் பணம் பதுக்கி வைத்துள்ள நாட்டவர்களில் இந்தியர்களே முதல் இட தங்கப்பதக்கத்தை அணிந்துள்ளனர் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. முன்னாள் கம்யூனிஸ்ட் நாடான ரஷியாவிற்கு இதில் வெள்ளிப்பதக்கம் என்பது கொசுறுச் செய்தி.

ஜார் கொடுங்கோலாட்சியைத் தூக்கியெறிந்து, பொதுவுடமை பொருளாதாரத்தை கட்டமைத்த சோவியத் யூனியனில் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்ட அதிகாரிகள் தான், 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருடர்கள் எனலாம். இன்றைக்கு, ரஷ்யா மட்டுமல்லாது, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளிலும், பொது சமூகத்தில் ஊழல் ஆழமாக புரையோடிப் போயிருக்கிறது என்பதில் வியப்பில்லை.

எட்டாவது நூற்றாண்டு முதலே இந்தியா மீது பல நாட்டு மன்னர்களும் படையெடுத்து இங்குள்ள வளங்களை கைப்பற்றிய வரலாறு உண்டு.  உச்சக்கட்டமாக, வெள்ளையர்கள் நம்மைப்பிழிந்து, சக்கையாக சுரண்டினர் என்பதும் தெரிந்ததே. ஆனால், அரசியல் விடுதலை பெற்று 63 வருடங்கள்   ஆகிய நிலையில், இந்தியாவைச் சோ்ந்தவர்களாலேயே இந்திய மக்கள் சுரண்டப்படுவது உக்கிரமடைந்துள்ளது.
  


யார் இந்த பதுக்கல் பெருச்சாளிகள்?  நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழலில் ஊதிப்பெருத்து வரும் அரசியல் வாதிகள்,  ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.பி.எஸ்., என்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருபவர்கள், மிக அதிக அளவிலான ராணுவ பேர இடைத் தரகர்கள், பல்வேறு வகையான புரோக்கர்கள், போதைப்பொருள் மன்னர்கள், நல்ல நேரத்திற்கான விஸ்கி ராஜாக்கள், சினிமா நட்சத்திரங்களில் சிலர், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் என்று பட்டியல் நீள்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்களின் பணத்தை (FII) இந்தியாவிற்குள் திருப்பிவிடும் முயற்சியாக “பிராமிசரி நோட்டுகள்” என்ற புழக்கடை வழி திட்டத்தை இந்திய அரசு 18 வருடங்கள் முன்பு அறிவித்தது.  இந்த புழக்கடை மூலம் யார் வேண்டுமானாலும் வெளிநாடுகளில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் மறைமுக முதலீடு செய்யலாம். வெளி நாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தையோ, ஹவாலா மூலம் கொண்டு சென்ற பணத்தையோ, பிராமிசரி நோட்டுகள் மூலம் பங்குச் சந்தையில் மூதலீடு செய்து கொள்ள முடியும். பிரச்சனையென்றால் வெளியில் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த “பிராமிசரி நோட்டுகள்”  என்பது தடயமே இல்லாத  ஆபத்தான ஒரு வழிமுறை என்றே எல்லோராலும் கருதப்படுகிறது. பங்குச்சந்தை மட்டும் அல்லாது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் போர்வையில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பெருமுதலைகளால் சுவாகா செய்யப்படுவதற்கும் ஹவாலா வழி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஆயினும், உலகளவில் இப்பொழுது பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கிய பின், இப்படி பிராமிசரி நோட்டுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட நிதி இந்தியாவிற்குள் மீண்டும் வருவது குறைந்து விட்டது என்று புள்ளி விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சுவிட்சர்லாண்டு உட்பட கிட்டத் தட்ட 40 நாடுகளில் உள்ள வங்கிகளில் யார் வேண்டுமானாலும் வரிகட்டாமலோ அல்லது மிக மிகக்குறைந்த வரியோ கட்டிவிட்டு,  ரகசிய கணக்கு திறந்து வங்கிகளில் பணத்தைப் பாதுகாக்கலாம். எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது.  மிக ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். சுவிட்சர்லாண்டு தவிர,  பெரும்பாலானவை இங்கிலாந்து, நெதர்லாண்டு போன்ற காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த அல்லது இருக்கும் குட்டித் தீவுகள்.  உலகின் மூன்றில் ஒரு பங்கு நிதி சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள ஒவ்வொரு முனிசிபாலிட்டியைச் சேர்ந்த வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன.

சுவிஸ் வங்கிகளுக்கும் இந்திய பணப்பெருச்சாளிகளுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அதோடு, சிங்கப்பூர் மற்றும் மொரிசியஸ் வங்கிகளில், இந்தியர்கள் பொதுவாக அதிகமாக ரகசிய டெபாசிட்கள் செய்வது வழக்கம். அதுவும் மொரிசியஸ் நாடு, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் திருட்டுப்பணத்தை பாது காப்பாக வைப்பதற்கும், மீண்டும் ஹவாலா மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும் நடை முறையில் மிகவும் வசதியான நாடாக இருக்கிறது.  இப்பொழுது நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ள நிறுவனங்களில் சில, மொரிசியஸ் வழியில் ஹவாலா பணத்தைப் பயன்படுத்திக்கொண்டதாக பேசப்படுகிறது. அது மட்டுமல்ல, காமன்வெல்த் ஊழல்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீண்டும் இந்த ரகசிய வங்கிப் பொந்துகளில் போய் பாதுகாப்பாக சேர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.  இந்த மொரிசியஸ் ஹவாலா வழி முறையைத்தான்,  ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் மற்றும் 20-20 கிரிக்கெட் சூதாட்டத்திற்கும்  பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சாற்றப்பட்டது.

சமீபத்திய காலங்களில், சிங்கப்பூர் மற்றும் மொரிசியஸ் நாடுகள் தொடர்புடைய பரிவர்த்தனைகளில் மத்திய வருமானத்துறை உயர் அதிகாரிகள் சிறிது கவனம் செலுத்தத் தொடங்கியதால், இந்நாடுகளுக்கு பதில், பிரிட்டிஷ் விர்ஜின் மற்றும் சேனல் தீவுகளில் உள்ள வங்கிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.    பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சேனல் தீவுகள் போன்ற குட்டித்தீவுகளில் உள்ள வங்கிகளில், இந்தியாவில் இருந்து வெளியேறும் அழுக்குப்பணம் முதலீடு செய்வது கடந்த இரு வருடங்களாக பல மடங்கு அதிகரித்து வருகிறது என்று “பிசினஸ் லைன்” பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தக் குட்டித்தீவுகளில், ஒரு விலாசம் மட்டும் இருந்து விட்டால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது.

அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பின்னர், ரகசிய வங்கிக் கணக்குகள் முலம் தீவிரவாதிகளுக்கு நிதி கிடைக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது.  அதோடு, வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, அந்நாடுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், உலகின்  வளர்ந்த நாடுகளின் கவனம் இப்படிப்பட்ட  திருட்டுப்பண  வங்கிகளின் பக்கம் முதன் முதலாகத் திரும்பியது.

அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா, சுவிஸ் நாட்டு வங்கிகளைக் கடுமையாக சாடினார். அவர் தலைமையிலான அரசு இப்பொழுது வேகமாக நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் வைத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி இரு சுவிஸ் வங்கி அதிகாரிகளைக் கைது செய்தது. முதல் தவணையாக 300 முக்கிய அமெரிக்க பணக்காரர் களின் கணக்குகளை சுவிஸ் வங்கிகளிடமிருந்து பெற்றுள்ளது. அதில் உள்ள பணக்காரர்களின் பெயர்களை வெளியிட்டு, இது வரை 17 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளது. மேலும், 52,000 அமெரிக்கர்களின் கணக்கு விபரங்களை சுவிஸ் நாட்டிடம் கேட்டு நெருக்குதல் கொடுத்து வருகிறது.

வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளுக்கு எதிராக, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கி விட்டன. ஜெர்மனி நாட்டின் ஒற்றர் படையான “BSD”, சுவிஸ் வங்கியான LTB வங்கியின் 1,400 ரகசிய வாடிக்கையாளர்களின் விபரங்களை, “போட்டுக்கொடுக்கும்” முன்னாள் ஊழியரிடமிருந்து விலைக்கு வாங்கியது.  இதில் 600 கணக்குகள் ஜெர்மனியைச் சேர்ந்தவை.  இந்தியா உட்பட மற்ற நாட்டு அரசுகள் கேட்டல் கொடுக்கத்தயார் என்று ஜெர்மனி அறிவித்தது. LTB வங்கியின் கணக்குகளில் இருந்து இந்தியப் பணக்காரர்களின் ரகசியங்களை, இந்திய அரசுக்கு ஜெர்மனி அரசு அளித்ததாகக் கேள்வி. ஆனால், நம் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போன்று, நைஜீரியா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல், பிரான்ஸ் போன்ற நாடுகள் சுவிஸ் வங்கி உட்பட பல நாட்டுக்கணக்குகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டன.

“2009ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நடந்த G-20 நிதித்துறைத் தலைவர்களின் மாநாட்டின் போது, பல நாட்டுத் தலைவர்களும், “வங்கி வெளிப்படைத் தன்மை” குறித்தும், ரகசிய கணக்குகளில் புதைந்துள்ள நிதியை வெளிக்கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்திப் பேசினர், ஆனால், இந்தியா இதைப் பற்றி பேசவே இல்லை, ஏனென்றால், இந்திய அதிகாரத்தில் உள்ள பெருச்சாளிகள் இதனை அனுமதிக்கமாட்டார்கள்” என்கிறார் பேராசிரியர் வைத்தியநாதன்.

வரும் நவம்பர் மாதம் கொரியாவில் நடக்க இருக்கிற மாநாட்டின் போதும், இது பற்றி உலகத்தலைவர்கள் பேச இருக்கிறர்கள். ஆதலால், உலக அளவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அழுத்தம் காரணமாக, ரகசியக்கணக்குகள் என்பது இனி பழைய சரித்திரமாகக் கூடும். எனினும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாசகர்கள் முணு முணுப்பீர்கள் என்பதை யூகிக்க முடிகிறது.இந்தியாவில் இப்பொழுது 69 பில்லியனர்களும் 1,26,700 மில்லியனர் களும் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இதே இந்தியாவில் தான் உலகில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் உள்ளனர்.  நிலம், நீர், இருப்பிடம், உணவு, கல்வி, வாழ்வாதாரம் என்று எல்லாவற்றிலும் மிக அகலமான, ஆழமான சமத்துவமற்ற நிலை நிலவுகிறது. உலகளவில் முதலாளித்துவத்தின் ஆதிக்கம் வியாபித்திருந்தாலும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளைப் பொருத்த வரை, அங்கு ஓரளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகம் இருப்பதாகக் கொள்ளலாம்.

உதாரணமாக, பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபராக இருந்தாலும், அவர் தனது சொந்தக்காரர்கள், பிள்ளைகள் எல்லோரையும் அவரது தொழிலுக்குள் இழுத்து வந்து, தனது சொத்து, தன் குடும்ப உறவுகளைத் தாண்டி போகக்கூடாது என்றெல்லாம் திட்டமிடமாட்டார். அதனால் தான், அவரும் சரி, பல அமெரிக்க பணக்காரர்களும் கூட தங்கள் சொத்துக்களை எல்லாம் மீண்டும் பொது வேலைகளுக்கு கொடுத்து விட முன் வருகிறார்கள்.

இந்திய முதலாளிகளில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ தலைவர் அசிஸ் பிரேம்ஜி போன்ற வெகு சிலர் மட்டுமே மிகப் பெரிய வெற்றி கண்ட தொழிலதிபர்களாக இருந்தாலும், குடும்பத்திற்காக சொத்து சேர்க்கும் வேலைகளில் இறங்கவில்லை. மிக எளிமையானவர்கள். ஆகப் பெரும்பாலான இந்தியப் பணக்காரர்களும், தான், தனது குடும்பம், பினாமி சொத்துக்கள், தனது சாதிக்காரர்கள் என்ற கடுகிலும் கடுகான மனம் கொண்ட, சாதிய முதலாளிகள். ஆங்கிலத்தில் இவர்கள் Crony Capitalist என்று கேலியாக அழைக்கப்படுகிறார்கள். ஒரு சில நல்ல விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான இந்திய சாதிய பணக்காரர்களின் பணம், நாய் கொண்ட பண்டத்திற்கு ஒப்பாகும், அவர்கள் சேர்த்த பணத்தால் யார்க்கும் பலனில்லை என்பது தான், இன்று வரையிலான சோக வரலாறு.

2017ற்குள் உலகில் மிக அதிகமான பில்லியனர்களை உருவாக்க முயன்று வரும் இந்திய அரசின் பொருளாதார வளர்ச்சித்தத்துவம் தான், மிக அதிகமான இந்தியர்களை நித்தமும் உச்சக் கட்ட பசிப்பிணியுடன் இரவு கண் அயரச் சொல்கிறது.  வளைகள் பலவற்றினுள் கைநுழைத்து, எலிகள் சேகரித்து வைத்துள்ள நெல்மணி களை திரட்டிச் சென்று கஞ்சி வடிக்க முனைபவர்களும் இந்திய கடைக்கோடி கிராமங்களில் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்நிலையில், இந்திய ஏழைகளிடமிருந்து சுரண்டி வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ஊழல் பணத்தில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டு வந்தால் கூட, பிரமிக்கத் தக்க மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, எல்.கே.அத்வானி,  இந்த சுவிஸ் வங்கி பண விஷயத்தை அரசியல் பிரச்சனையாக்கி, அதைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார்.  மார்ச் மாத பார்லிமெண்ட் தொடரின் போது, உலகில் உள்ள 20 நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பணத்தைத் திருப்பிக்கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அத்வானியின் கேள்விக்கு பதில் அளித்துப் பேசினார் பிரதமர்.  சுவிஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் இரட்டை வரி (தவிர்ப்பு) ஒப்பந்தம் இப்பொழுது கையெழுத்தாகி உள்ளது, ஆயினும், கடந்த கால ரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டுப்பெற இயலாது என்று இப்பொழுது நடந்து முடிந்த பார்லிமெண்ட் தொடரின் கடைசி நாளன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
  
போஃபோர்ஸ் முதல் சமீபத்திய உச்சக்கட்ட வெளிப் படையான, கேவலமான ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் வரை,  நம் தலைவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்துள்ள நமக்கு, இவர்களின் வாக்குறுதி சிறிதும் நம்பிக்கை அளிக்கவில்லை.  ஏனென்றால், பி.ஜே.பி. தலைவர்களாய் இருக்கட்டும், காங்கிரஸ்காரர்களாய் இருக்கட்டும், விஞ்ஞான ஊழல் செய்து வரும் பல்வேறு மாநிலக் கட்சிகளாய் இருக்கட்டும், தங்களது முகமூடியைக் கழற்றி, தங்களது கோரமான முகத்தை தாங்களே நாட்டு மக்களுக்குக் காட்ட முன் வருவார்களா?

ஒரு முக்கிய உண்மையை மட்டும் இக்கட்டுரையின் மூலம் புரிய வைக்க வேண்டிய கடமை உள்ளது. இன்றைக்கு இந்திய அரசு சில நாடுகளுடன் வெளிப்படையான வங்கிப் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்ய முன் வந்திருப்பது கூட ஏதோ மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் எடுத்த தன்னிச்சை முயற்சியல்ல. அடுத்தடுத்த G-20 மாநாடுகளுக்கு பின்னர், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட வளர்ந்த நாடுகள் வலியுறுத்தி வரும் உலக அளவிலான சீரமைப்புத் திட்டங்களின் ஒரு அம்சமாகவே வேறு வழி இல்லாமல் இந்த ஒப்பந்தங்கள் இந்திய அரசால் போடப்பட்டு வருகின்றன.

ஆக, ஒரு வேளை,  எதிர்காலத்தில் சுவிஸ் வங்கிகள் உட்பட பலநாட்டு வங்கிகளில் உழைக்கும் மக்களிடமிருந்து,  ஏழைகளிடமிருந்து திருடி ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணம் கொஞ்சமாவது இந்தியாவிற்கு தப்பித்தவறி வந்தால், (வந்தால் தான்) நாம் நன்றி சொல்ல வேண்டியது, நம் தலைவர்களுக்கு அல்ல, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலைநாட்டுத் தலைவர்களுக்குத்தான்.

Saturday, August 14, 2010

அன்புள்ள துணை முதல்வர்


                                                        எந்நாடும் போற்றுகின்ற
                                                        தமிழ்நாடு நன்றே ஆனால்
                                                        இருட்டறையில் தமிழ் மக்கள்
                                                        இருப்பதுவும் தீதே


                                                                                          - பாரதிதாசன்அன்புள்ள துணை முதல்வர் ஸ்டாலின்  அவர்களே,
வணக்கத்தையும், 63வது சுதந்திர தின வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன். உறுப்பு தானம் போன்ற புனித மான காரியங்களில் ஈடுபட ஆர்வம் காட்டும் இளைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் உங்களுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்.


இன்றைக்குத்தான் ஏதோ காலம் கெட்டு விட்டது என்ற ரீதியில் சிலர் பேசுகிறார்கள். தான், தனது  கல்விதனது மகிழ்ச்சி, தனது வாழ்க்கை தனது நுகர்வு என்று  தங்களைப் பற்றி மட்டுமே  இன்றைய இளைஞர்கள் சிந்திக்கிறார்கள், சமுதாயத்தைப் பற்றியோ, சக மனிதர் களைப் பற்றியோசமுதாயத்திலும் அரசியலிலும் நடக்கும் வரலாறு காணாத அட்டூழியங் களைப் பற்றியோ, சிறிதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், இது அவர்களது எதிர்காலத்தையும், வாழ்க்கைத் தரத்தையும், அவர்களது சந்ததியினரையும் தானே மிகவும் பாதிக்கும்! கல்லூரி பருவத்தில் இருக்கும் ஒரு இளைஞன் தானே நல்ல செயல்பாடுகளுக்கு முன்வருவான்? அதே போல அவன் தானே, சமுதாயத்தில் அநியாயங்கள் நடக்கும் போது உடனடியாகத் தட்டி கேட்பான்? அவசியமான விஷயங்களில் இன்றைக்கு அவனிடம்  ரௌத்திரம் இல்லையே? - இப்படி இவர்கள் புலம்புவது வழக்கமாகி விட்டது.அமிதாப்பச்சன், ரஜினிகாந்த்   போன்றவர்கள் அன்று நடிக்கும் போது சித்தரிப்பார்களே!  Angry Young Man  அதாவது அநியாயத்தைக் கண்டு வெகுண்டு எழும் இளைஞன், இன்றைக்கு இப்படி  ஒருவன் கூட இல்லையே, எல்லா இளைஞர்களும் நிஜத்தில், இந்த ஊழல் கடலில் கலந்து விடுகிறார்களே! என்று இந்த அவ நம்பிக்கை பேர்வழிகள்  நினைக் கிறார்கள்.

உலகின் புரட்சிக் கருத்துக்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் அக்கினிக்குஞ்சுகளாய்ப் பொறிந்து, சமுதாயப்புரட்சிக்கு அடிகோலிய வரலாறுகள்  உள்ளனவே என்பது இவர்களின் ஆதங்கம்.


எல்.கே.ஜியில்  நுழைந்து, படிப்படியாக வளர்ந்து, கல்லூரிக்குள் நுழையும் தருவாயில், இன்றைய இளைஞன் பாடங்களைக் கற்றுத் தேறியிருக்கிறானோ, இல்லையோ? தனது முதுகெலும்பை முற்றுமாக இழந்து விடுகிறான், நெஞ்சில் உரமும்நேர்கொண்ட பார்வையும் தமிழக இளைஞனிடம் இல்லை என்று இவர்கள் கேலி பேசுகிறார்கள்.

கல்விக்கடன் மூலமாகவோ, பற்றாக் குறைக்கு தங்களது பெற்றோரின் நிலபுலன்களையும் விற்றோ, கஷ்டப்பட்டு பொறியியல் சீட்டுகளை வாங்கிய பின், தாங்கள் சேர்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து என்று அரசு அறிவித்ததும் கொதித்து எழுந்தார்கள் இளைஞர்கள். உடனடியாக கல்லூரிகளின் மேசை நாற்காலிகளை அடித்து உடைத்தார்கள், “தாங்கள்  சேர்ந்த கல்லூரிகளில்  எந்த குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லை, லேப் வசதிகள்  இல்லை, சீனியர்கள்  தான் விரிவுரையாளர்களாக பாடம் எடுக்கிறார்கள், கல்வி தரமற்று  உள்ளது. கல்விக்கான சூழலே இல்லைஎன்று டி.வி. கேமரா முன் கோபமும் அழுகையுமாக பேட்டி கொடுத்தார்கள். ஆனால் இந்தக் கோபம் 24 மணி நேரம் கூட தாங்கவில்லை, நிகர் நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது, மாணவர்களின் சர்டிபிகேட்கள் செல்லுபடியாகும் என்று மத்திய அமைச்சர் சமாதான செய்தி அனுப்பியவுடன், இளைஞர்களின் தார்மீகக் கோபம் புஸ்வாணம் ஆகிவிட்டதே? அதே தரமற்றக் கல்லூரிகளில் தானேஅடுத்த நாளிலிருந்து போய் வரத் தொடங்கினார்கள்? ஆக தங்கள் சர்டிபிகேட் செல்லுபடி  ஆகாமல் போவிடுமோ என்ற பயம் மட்டும் தானே இந்த இளைஞர்களுக்கும்அவர்கள் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டது? தரமற்ற கல்வி பற்றி கவலைப் படாமல், சகித்துக் கொண்டு 4 வருடங்கள் படித்து (?) வெளிவரத் தானே தங்கள் மன நிலையைத் தயார் செய்து கொள்கிறார்கள்?
அண்ணா பல்கலைப் பொறியியல்  கவுன்சிலிங்கின் போது பிடிபட்ட போலி மதிப்பெண் சான்றிதழ்கள் போன்று, இந்த இளைஞர்களிடம் இருந்து வெளிப்பட்டவையும் போலிக் கோபங்கள்  தானேகுற்றங்களைத் தட்டிக் கேட்காமல் குற்றங்களுடன் ஐக்கியம் ஆகிவிடுகிறார்களே - இப்படி  இன்றைய இளைஞர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் இந்த சந்தேகப்பிராணிகள்.

இப்படி எல்லோரையும் குறை கூறுவது தான் இந்த அவநம்பிக்கையாளர்களின் பொழுது போக்கு என்கிறார்கள் இன்னொரு அணியினர்.

பெற்றோரும், சமூகமும்அரசின் கையாலாகாத்தனமும்ஓசோன்  படலம் போல நாடு முழுவதும் வியாபித்துள்ள ஊழலும் சேர்ந்து உருவாக்கியுள்ள  ஆரோக்கியமற்ற  சூழ்நிலையின் கைதிகள் தான் இன்றைய இளைஞர்கள், அவர்கள் மீது பச்சாதாபப்பட வேண்டுமே தவிர, அவர்களை சுயநலக்காரர்களாகவும், கோழைகளாகவும் சித்தரிப்பது, மற்ற அணியினரின் குறைகூறும் மனநிலையையே காட்டுகிறது. இளைஞர்களுக்கு முது கெலும்பு இல்லை, வீரம் இல்லை என்கிறார்களே, இவர்கள் இளைஞர்களாய் இருக்கும்போது கோபப்பட்டு இருந்தால், தட்டி கேட்டிருந்தால், இந்த நிலை வந்திருக்குமா என்று இன்றைய இளைஞர்களின்  நிலைமையை புரிந்து கொண்டவர்கள் போல் வாதாடுகிறார்கள் இந்த அணியினர்.

குழந்தைகளின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வரவிடாமல்தங்கள் பேராசைகளைத் திணித்து, இளைஞர்களாய் வளரும்போது, அவர்களது ஆளுமையை முடக்கிப் போட்டது பெற்றோரின் குற்றம். பெற்றோரின் தவறான  ஆசைகளுக்கு தீனிபோடுவது   இந்த பள்ளிகளும், கல்லூரிகளும். அதனால், இளைஞர்கள் கேள்வி கேட்காதவர்களாக, கேள்வி கேட்கத் தெரியாதவர்களாக, கேள்வி எது என்றே புரியாதவர்களாக, கல்லூரிப் படிப்புகளை முடித்து வந்து, சமூகத்தளத்தில்  பொத்தென்று விழுகிறார்கள், கேள்வி ஞானமே  இல்லாமல் இளைஞர்கள் வலம் வரும் வரையில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏதும் வராது.

ஓடும் மேகங்கள் போன்று புரட்சி வருவது போல் தோன்றினாலும், அப்படியே  கலைந்து போய் விடும். ஆளும் கட்சியும்எதிர்கட்சியும் எதிர் பாட்டு பாடியபடி ஆட்சி கட்டிலை பகிர்ந்து கொள்ளலாம், அதனால், மாணவர்களின், இளைஞர்களின் நிலைமையில் அடிப்படை மாற்றம் கொண்டு வர இன்றைய தரமற்ற ஆட்சியாளர்கள் பெரிதாக ஒன்றும் செய்து விட மாட்டார்கள். இதற்கு இசைவான வழியில்பள்ளிகளும் கல்லூரிகளும், ஃபேக்டரிகளாக மருவி, மாணவர்களை உற்பத்திப் பொருளாக்கி விட்டன என்று  நீளமாகப் பரிதாபப்படுகிறார்கள் இந்த மாற்று அணியினர்.

பிராய்லர்   கோழிப்பண்ணைகளில்  எப்படி கோழிகளுக்கு சுதந்திரமே இல்லாமல், 24 மணி நேரமும் தீனியை உண்டு, உண்டு, உண்டு, எடை கூடி குண்டாக  வேண்டுமோ, அது போல நமது தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில்  மாணவர்கள் சுதந்திரமாகவும், சுயசிந்தனையோடும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. பிராய்லர் கோழி எப்படி நாளுக்கு நாள் வேகமாக எடை கூடுமோ, அந்த அளவிற்கு அதற்கு சந்தையில் விலை கிடைக்கும். அது போல, மாணவர்கள் எவ்வளவு வேகமாக மனப்பாடம்  செய்கிறார்களோ, எவ்வளவு தேர்வுகள் எழுதுகிறார்களோஎவ்வளவு பாட(ர)ங்களை கபளீகரம் செய்கிறார்களோ (அஜீரணம் ஆனாலும்) அந்த அளவிற்கு அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்”.  போட்டி   மிகுந்த சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும். இப்படிப்பட்ட "கோழிப் பண்ணை  போன்ற கல்விச் சூழ்நிலையில்" சமூகம் பற்றியும், பொது வாழ்வு பற்றியும், உரிமைகள், கடமைகள்  பற்றியும் அவர்கள் சிந்திக்க வாய்ப்பே இல்லை என்று இன்றைய இளைஞர்களுக்காக உச்சுச் கொட்டுகிறார்கள் இந்த எதிர் அணிக்காரர்கள்.

இந்த பொழுது போக்கற்ற நாற்காலி விமர்சகர்களை விட்டுத்தள்ளுங்கள்துணை முதல்வரே! உப்புச் சப்பற்ற வியாக்கியானங்களைக் கேட்க, வேகமாக முன்னேற்றம் அடைந்துவிட்ட தமிழகத்தின் துணை முதல்வருக்கு நேரமேது? சொல்ல வந்ததை விட்டு விட்டு இந்த அவதூறுகளை நான் எழுதி இருக்கக்கூடாது.

நம் இளைஞர்கள் நல்ல துடிப்பானவர்கள், மேதகு அப்துல்கலாம் போன்றவர்களால் உந்தப்பட்டு, அக்கினிச் சிறகுகள்  முளைக்கப் பெற்று  ஆகாயத்தில் உயர உயரப் பறக்க உழைப்பவர்கள். சரியான தலைமை வழிகாட்டினால், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவர்கள். நீங்கள் கூட ஒரு இளைஞரணித் தலைவர்தானே! நல்ல தலைமைப் பண்பிற்கு ஏற்ப ஆயிரக்கணக்கான கல்லூரி இளைஞர்கள் உங்கள் தலைமையில் உறுப்பு தானம் செய்வோம் என்று உறுதிப்படிவத்தில் கையெழுத்திட்டு  அசத்துகிறார்கள். இரத்ததானம், கண்தானம் போன்ற சமூக செயல்பாடுகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபடுவது தெரிந்ததே. இளைஞர்கள் பல்வேறு வழிகளில்  சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறதுஎன்று பெருமைப் பட்டுள்ளார் பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.

இப்படிக் கிளம்பும் இளைஞர்கள்தான், பின்னர் சமூகத்தின் பால் காதலும் அக்கறையும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள் எனும் நம்பிக்கை அதிகரித்துள்ளது இல்லையா?

கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசு உறுப்புதானம் விஷயத்தில்  அதிக அக்கறை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உறுப்பு தானம் பற்றியும், விபத்துக்களில் மூளைச் சாவுகள் ஏற்பட்டால் எப்படி விரைவாக  தானம் செய்தவரின் உறுப்புகளை அறுவடை செய்து, பாதுகாப்பாக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பிப் பொருத்துவது போன்ற வற்றில் தமிழக அரசு  மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தியாவிற்கே தமிழகம் இந்த விஷயத்தில் முன் மாதிரியாகத் திகழ்கிறது.

தமிழக அரசின் உற்சாகத்திற்கு கைமேல் பலன் கிடைத்தும் வருகிறது, துணை முதலமைச்சர் அவர்களே!

ஆமாம்!  இன்று இந்தியாவிலேயே, மிக அதிகமாக உறுப்பு தானம்  செய்யும் விதமாக மூளைச் சாவுகளில் அகப்பட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. தமிழகத்தில் இருப்பவை சாலைகளா? நரபலி பீடங்களா? என்று பலமுறை கேட்டாகிவிட்டது.

துணை முதல்வர் அவர்களே! உங்களுக்கு சில புள்ளி விவரங்களை உள்துறை அதிகாரிகள் அளித்துள்ளார்களா என்று தெரியாது.

2005 ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு நாளுக்கு 25 பேர் சாலை விபத்துக்களில் இறந்து  வந்தார்கள். இன்றோ, ஐந்தே வருடங்கள் கடந்த நிலையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 பேருக்கும் மேல் தமிழகத்தில் சாலை விபத்துக்களில் சாகிறார்கள். கடந்த 4 வருடங்களில், சாலை விபத்து சாவுகள் (13,746) 70 அளவிற்கு உயர்ந்து இந்தியாவிலேயே முதலிடத்தை  தக்க வைத்துக் கொண்டு இருப்பது தமிழகத்தின் மற்றோரு சாதனையா? உங்கள் அரசின் 5 வருட ஆட்சி முடியும் தருவாயில், சாலை விபத்துச் சாவுகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இவர்களில் மூளைச்சாவு என்று விதிக்கப்பட்டவர்களும் அதிகமாக  இருப்பார்கள் இல்லையா? ஆக, உறுப்பு தானங்களுக்கு தமிழகத்தில் இப்போதைக்கு பஞ்சமிருக்காது என்று தான் தோன்றுகிறது. உறுப்பு தானத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதற்கு இணங்க, சாலை விபத்துக்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இறப்பவர்களும் இளைஞர்களே!

உங்கள் அரசோ, உலக வங்கிகளிடம் கடன் மேல் கடனாக வாங்கி (அரசிடம் தான் காசே கிடையாதே, பற்றாக்குறை பட்ஜெட் தானே) சாலைகளை மேம்படுத்திக் கொண்டே வருகிறீர்கள். அதே வேகத்தில் கடைகளையும், பார்களையும், அதிகரித்துக் கொண்டே வருகிறீர்கள். (கட்சிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்) இந்த பார்களில்  குடித்துவிட்டு ஓட்டி   விபத்துக்கள் அதிகரிப்பதால், தமிழக மருத்துவ மனைகளின் உறுப்பு தானப் பிரிவுகள்” ரொம்ப  பிசியாகிக் கொண்டு இருக்கின்றன. சரிதானே!

தமிழகமே கோவையில் செம்மொழி மாநாட்டை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது, தர்மபுரியில் ஒரு திருமண வீடு, மிகப் பெரிய இழவு வீடான சோகம் ஞாபகத்தில் இருந்து மறைய மறுக்கிறது, தலைவர் அவர்களே! டிரைவர் குமரவேல், பாலக்கோடு டாஸ்மாக் பாரில் குடித்து விட்டு, மினிலாரியை ஓட்டிய போது, திருமண கோஷ்டியில் 18 பேர் கொத்தாக இறந்ததோடு, 34 பேர் காயம் அடைந்தார்களே!

குடித்துவிட்டு ஓட்டும் ஒருவர் மனித வெடிகுண்டு போல என்று நீதிபதி ஒருவர் கூறினார். நீங்கள் கடைகளையும் பார்களையும் அனுமதித்துவிட்டு, மாத இலக்கு விற்பனையை எட்ட வேண்டும் என்பதால், வரைமுறையில்லாமல் எல்லோரும் குடித்துவிட்டு ஓட்ட அனுமதிக்கிறீர்களே! எப்படி இதைச் செய்ய முடிகிறது இளைஞரணித் தலைவரே!
இலக்கு வைத்து அரசு சாராய விற்பனை.
தகவல் கேட்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது.
2004 ஆண்டு அன்றைய முதல்வர் திடீரென்று சாராய விற்பனையை அரசு மூலம் எடுத்துக் கொண்டு, அதிரடியாக, கடைகளை 3000த்திலிருந்து 7000ஆக உயர்த்தினார். அப்பொழுது உங்களது சகா, அன்புக்குரிய இன்றைய அமைச்சர் பொன்முடி அவர்கள், “ஜெயலலிதா அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுக்கொள்கை 47ற்கு எதிராக நடந்து கொள்கிறார், அரசே சாராய விற்பனையை கையில் எடுத்து முடுக்கி விடுவது மக்கள் விரோதமானது” என்று கண்டனம்  தெரிவித்தது இன்றும் நன்கு நினைவில்  இருக்கிறது.  நீங்களோஊழியர் சம்பளம் ஆனாலும் செம்மொழி மாநாட்டுச் செலவானாலும்அவை எல்லாவற்றிற்கும் சாராயக் கடைகளை மட்டுமே அட்சயபாத்திரமாக கருதத்தொடங்கி விட்டீர்கள்.

2004-05ல் 3500 கோடியாக இருந்த வருமானம் தற்போது 14,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே? அதற்கேற்ப, உங்கள்  ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் 3 லட்சம் மக்களுக்கும் மேல் சாலை விபத்துக்களில் காயம் அடைந்துள்ளனரே! இவர்களில் எத்தனை பேருக்கு கைகால் சிதைந்தனவோ? இப்படி சிதைந்தவர்களுக்கு ஏற்ற உறுப்புகள் தானமாக கிடைக்காதே? முடிந்தால் செயற்கை கால்கள், முடியாவிட்டால் இருண்டு போன எதிர்காலம்.

ஒன்று தெரியுமா? உறுப்புகளிலேயே மிக முக்கியமான ஒன்றாகிய கல்லீரலை டாஸ்மாக் சாராயத்திற்கு பலி கொடுத்துவிட்டு, மூளைச்சாவு மூலம் யாராவது கல்லீரல் உறுப்பு தானம் செய்யமாட்டார்களா என்று தவம் இருப்பவர்கள் தமிழகத்தில்  நாளுக்கு நாள்  அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி கல்லீரல்களை குடிமூலம் தொலைத்துவிட்டுமாற்றுக் கல்லீரல்களுக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் இளைஞர்களே!
ஆரோக்கியமான கல்லீரல்
மதுவினால் பாதிக்கப்பட்ட கல்லீரல்கள்
உறுப்பு தானத்திற்கு இளைஞர்களை உறுதிமொழி எடுத்துக் கொள்ளச் சொல்வது இருக்கட்டும். குடிக்காமல் இருப்பதற்கும், குடித்துவிட்டு ஓட்டாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள இளைஞர்களை வழி நடத்தத் தயாராகுங்கள், இளைஞரணித் தலைவரே!


குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களில் உறுப்புகளை இழப்பதற்கும், விபத்துக்களில் மூளைச் சாவு ஏற்பட்டு உறுப்புதானம் செய்ய நேர்வதற்கும், குடித்துக் குடித்து உறுப்புகளை கெடுத்து விட்டு உறுப்பு தானம் வேண்டியபடி நோயாளி இளைஞர்கள் மருத்துவமனை படுக்கைகளில் உடல்வற்றிக் கிடப்பதற்கும், அடுத்தடுத்த தமிழக அரசுகளின் சாராயக் கொள்கையே நேரடிக் காரணமாவது உச்சக் கட்ட அவலம் இல்லையா?

ஆங்கிலேயர் நமக்கு விடுதலை கொடுத்து  63 வருடங்களாகி விட்ட நிலையில், உள்நாட்டில் உற்பத்தி ஆகும் அயல்நாட்டு சரக்கு  என்றீர்கள். அவற்றை  முச்சந்திகள்  தோரும்  கடைச்சரக்காக்கி, இளைஞர்களை மந்தை மந்தையாக அவற்றிற்கு அடிமை யாக்குவதையும், அதனால் பல்வேறு நோய்கள் வந்து அவர்கள் சாவதையும்  மிக முக்கிய முழுநேர வேலையாக்கி விட்டது நமது அரசு.

இந்நிலையில், உறுப்புதானப்பிரச்சாரத்தை இளைஞர்களிடம் முடுக்கி விடுவதற்கு உங்களுக்கு   என்ன தார்மீக தகுதி இருக்கிறதுதுணை முதல்வர் எனும் அதிகாரம் கொடுக்கும் சக்தியைத் தவிர? சிந்தியுங்கள்  துணை முதல்வரே! இளைஞனையும் சிந்திக்க விடுங்கள்!

சாராய விஷ வாயுவினால்
       மூச்சடைத்துக் கிடக்கிறான் இளைஞன்
அவன் கண்கள் சொருகுகின்றன
       நரம்பு மண்டலம் புடைக்கிறது.
பாவம் அவன்! அரசே செய்யும் பாவம் இது!
       சாராய விஷவாயுத் தொட்டியை மூடுங்கள்!
அவன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவுங்கள்
       தயவு செய்து!
                                          மிகுந்த வருத்தத்துடன்
                                               சமூகன்
Thursday, July 15, 2010


விடுதலை வாங்கி அறுபது ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மக்களால், மக்களுக்காக,   மக்களைக் கொண்டு மாறிமாறி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த கட்சிகளைச் சேர்ந்த அரசுகளாய் இருந்தாலும் அவை வருடம் தவறாமல் புதிய நலத் திட்டங்களை வெளியிட்டும் பல பழையத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்துள்ளன.

அந்த வகையில், 2009-10ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையின்படி வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள சமூகங்கள், நல வாரிய உறுப்பினர்களின் குடும் பங்கள், அரசு அலுவலர்கள் என்று எல்லாவகை மக்களுக் கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், வேளாண் கடன் வட்டி ரத்து, பயிர்க்காப்பீட்டுத்திட்டம், புதிய கல்லூரிகள், மருத்துவ முகாம்கள், தொழிலாளர்களுக்குத் தங்கும் இடங்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பல புதிய திட்டங் கள், ஒரு இலட்சம் சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, நல வாரியங்கள், பல பொருட்களுக்கு வரிவிலக்கு, அதிக எண்ணிக்கையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், மேலும், பலப்பல இலவசங்கள் என்று இன்றைய அரசின் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற மாநில அரசுகளை முந்திக்கொண்டு மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையின்படி, மிகப்பெரிய சம்பள உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பண நெருக்கடியையும் பொருட்படுத்தாது அளிக்க தமிழக அரசு முன் வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான நிலமற்ற ஏழைகளுக்கு நிலமும், வேளாண் மக்களுக்கு பலவகை உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. ஆனால் சிறு விவசாயிகள், உழவர் சந்தைகளில் விளை பொருட்களை விற்று வந்த பணத்தையும், விவசாயக் கூலிகள் உழைத்துக் கிடைத்த பணத்தையும் உழவர் சந்தைகளுக்கு அருகில் உள்ள அரசு மதுக்கடைகள் மூலம் அரசுக்கே தாரை வார்த்து  விடுகின்றனர். விதை நெல்லைக்கூட விற்றுக் குடித்து விட்டு நடைப்பிணமாக வீட்டிற்குத் திரும்புவது வாடிக்கையாகி விட்டது.

தீவிரவாதத்தைக் காவல் துறை மூலம் அடக்கி வைத்திருப்பதாகவும், காவல்துறையின் நலன் காக்க மூன்றாவது போலீஸ் கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறுகிறது தமிழக அரசு. ஆனால் என்றும் இல்லாவண்ணம் அதிக அளவில் பல காவலர்கள் இரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றாலும், சிலர் எச்.ஐ.வி. நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வந்துள்ளன.இந்நிலைக்கு, அவர்களது  வேலையின் தன்மையால் பெரு மளவில் மாறிவிட்ட வாழ்க்கை முறையும், டாஸ்மாக் மூலம் அதிகரித்துவிட்ட - தீவிரவாதத்தை விட கொடூரமான - குடிப்பழக்கமுமே இந்நிலைக்குக் காரணம்.

மூத்த தமிழ்மொழி, கலை, பண்பாடு, கலாச் சாரம் ஆகியவற்றை அரசு கண்ணெனப் போற்றிக் காப்பதாக நிதிநிலை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல இளை ஞர்கள் மற்றும் விடலைகள், டாஸ்மாக்  செலவிற்காக,  தமிழகத்தின் நகர வீதி களில், மொபைல், தாலிப் பறிப்புகள் மட்டு மின்றி, பல்வேறு சிறிய, பெரிய குற்றங் களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது       “சட்டம் ஒழுங்கு” என்கிற குறுகிய பார்வை யைத் தாண்டி, அரசின் தவறான கொள்கை யால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் “பண்பாட்டு, சமூகச் சீரழிவின் ஒரு சிறிய பகுதி” என் கருத வேண்டும்.

வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை, கணிசமாக, அரசு மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசிடம் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

வரலாறு காணாத அளவில் நடுவண் அரசிடம் அதிக நிதி பெற்று “அனைவரு க்கும் கல்வி” “தேசிய இடை நிலைக் கல்வித் திட்டம்” எனப் பள்ளிக் கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள தமிழக அரசு பாராட்டுக்குறியது. ஆயினும், “21 வயது நிரம்பியவர் மட்டுமே மது வாங்கலாம்”  என்று சட்டம் ஏற்படுத்திவிட்டு, நடைமுறையில் சீருடை அணிந்த, அணியாத பள்ளிச் சிறுவர்கள்கூட டாஸ்மாக் கடைகளில் இரண்டறக் கலப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது முறையல்லவே!

குழந்தைத் தொழிலாளர்கள், முச்சந்தி தோறும் குழந்தைப் பிச்சைக்காரர்கள், ஆங்காங்கே தொடங்கப்படுகிற ஆதரவற்றோர் இல்லங்கள்ஆகியவை பெருகுவதற்கும் மாநில அரசு டாஸ்மாக் மூலம் எதிர்பார்க்கும் ரூ. 12,000 கோடிக்கும் மேற்பட்ட வருவாய்க்கும் உள்ள தொடர்பு -ஆராய்ச்சி செய்தால் இன்னும் உறுதிப்படலாம்.

நோய்களைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற உதவும் முன்னோடித் திட்டமான “வருமுன் காப்போம் திட்டம்” மூலம் கடந்த வருடமும் இந்த வருடமுமாகச் சேர்த்து 13,500 முகாம்கள் நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் கூறுகிறார்.

ஆனால், முதல், இரண்டாவது மற்றும் தீவிரமான மூன்றாவது கட்டம் என்று பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலட்சக் கணக்கானோர் குடிநோயில் சிக்கித் தவித்தாலும், மதுப்புழக்கத்தை மற்ற நோகளுக்கான முதன்மைக் காரணியாகப் பார்க்காமல், வருமுன் காக்காமல், வருமானமாகவே அரசு பார்ப்பது மிகவும் விசித்திரமாகவும் வேதனையாகவும் உள்ளது.

2005-06ஆம்ஆண்டில்,  ரூ. 1,487 கோடியாக இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான ஒதுக்கீடு 2009-10 ஆம் ஆண்டு ரூ. 3,391 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 125 மருத்துவ மனைகள் அவசரச் சிகிச்சை மையங்களாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

ஆயினும், பெருகிவரும் மது விற்பனையால், பல்வேறு வகை நோய்கள், மிகப் பெரிய அளவில்   சாலை விபத்துக்கள், தற்கொலைகள், மனநோய்கள் ஆகியவற்றை சமாளிக்கவே மருத்துவத் துறையின் அவசரச் சிகிச்சை நிபுணர்களின் பெரும்பாலான சக்தி விரயமாகி வருகிறது என்பது ஏன் அரசுக்கு புரிந்தும் புரியாமல் உள்ளது?

எல்லாவகை அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்காவும் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அரசு கூறுகிறது.  ஆயினும்,  கட்டடத் தொழிலாளர்கள் பணியின் போது அடிக்கடி விபத்துக்குள்ளாவதற்கும், மீனவர்கள் நீர் நிலைகளில் மூழ்கி இறப்பதற்கும் குடிவெறி ஒரு முக்கிய காரணியாகி வருகிறதே! இந்நிலையை மாற்றுவது அரசின் கடமை யாகும்.கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறுகால உதவித்திட்டம்,மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்,குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம் போன்றவற்றிற்காக அதிக நிதி அறிவித்தாலும்,  இத்திட்டங்களின் தாக்கம் ஓரளவுக்குத்தான் இருக்கும்.  கர்ப்பிணிப் பெண்களின் கருக் கலைப்பிற்கும்,இரத்தசோகைக்கும், எடை குறைந்து குழந்தைகள் பிறப்பதற்கும்,பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் நோய்நொடிகளால் பீடிக்கப்படுவதற்கும் முக்கிய காரணம், கணவரின் சொற்ப வரு மானம் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கரைவதனால் அல்ல என்று அரசு விளக்கம் அளிக்க முடியுமா?

தமிழகம் முழுவதும் 104,42,500 குடும்பங்களுக்கு மும்முரமாக, நான்கு கட்டங்களில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தமிழகஅரசு விநியோகித்து வருகிறது. ஒரு வேளை, வீட்டு ஆண்மகன்கள், குடும்ப மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் டாஸ்மாக் விடுதிகளில் தொலைத்து விட்டு வருவதால் எழும் நிஜவுலகத்துக்கத்தை, வண்ணத் தொலைக்காட்சியின் கனவுலகம் மூலம் மறக்கடிக்க, மழுங்கடிக்க குடும்பப் பெண்களுக்கு உதவும் திட்டம் இது என்று ஓருக்கால் அரசு நினைத்துவிட்டதோ என்னவோ?

உலக வங்கி, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஜெர்மனி நாட்டு நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியுடன், தமிழக நகராட்சிகளில் விரைவாக பாதாளச் சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால்,இவ்வகைப் பாதாளச் சாக்கடைகளில் முத்துக் குளிப்பது, ஊராட்சிகளில் செத்த கால்நடைகளை அப்புறப்படுத்து வது, பிணவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக் காகவே ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, “தூய்மைப்பணி புரிவோர்” என்று அழகு தமிழில் கூப்பிட்டுக் கொண்டே, அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவே நிலைநிறுத்தி வேலை வாங்குவதற்கு, அரசுத் துறை அலுவலர்கள் மூலமே, மது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களைக் கட்டி சாதியை ஒழித்து விட நினைக்கிறது அரசு. சாதி, மதம், ஏன் - வயது வித்தியாசம்கூட இல்லாமல் எல்லா ஆண்களும் சங்கமம் ஆவது அதிகரித்து வருவதால், மதுவிடுதிகளையும் சமத்துவ புரங்களாக கருதுகிறதோ அரசு?

“மதுத் தீர்வை மூலம் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவது” என்றே டாஸ்மாக் நிறுவனம் கொள்கை விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசு வருவாயில் கிட்டத்தட்ட 30         சதவீத அளவிற்குக் கிடைக்கும் சாராய வருவாயானது, ஈ.எஸ்.ஐ, பி.எஃப், ஓய்வூதியம், ஆறாவது சம்பளக் கமிஷன் என்று எதுவுமே இல்லாத அமைப்பு சாராகூலித் தொழிலாளர்களும், மீனவர்களும், நெசவாளர்களும், இளைஞர்களும் கொடுத்ததே.

எனவே, “டாஸ்மாக்” என்கிற அரசு நிறுவனமானது, பன்னாட்டு, உள்நாட்டுச்சாராய அதிபர்களின் துணையோடு, தமிழகமெங்கும் எட்டாயிரத்திற்கும் அதிகமான ஆக்டோபஸ்கிளைகளைப் பரப்பி, எல்லாப் பிரிவு மக்களின் இரத்தத்தையும், பொருளாதாரத்தையும் உறிஞ்சி, ராட்சஸ மரமாக விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதன் நிழலில் இலவசங்கள், நலத்திட்டங்கள் என்கிற உரங்களின் உதவியுடன், சமத்துவமான சமூகப் பயிர்கள் வளரும் என்று தமிழக அரசு கூறுவது, பொதுஅறிவுக்கும், பகுத் தறிவுக்கும், உண்மையான நாட்டுப் பற்றுக்கும் விடப்பட்ட சவால் என்பதே உரைகல்லில் உரசிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் உண்மையாக இருக்க முடியும்.