Saturday, July 10, 2010

நாட்டில் எவ்வளவோ நல்லவர்கள் வாழ்வது, நன்மையான நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மறுப்பதற்கு இல்லை. இதோ, இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நானும், படித்துக் கொண்டிருக்கிற நீங்களும் நல்ல நோக்கம், செயல்பாடுகள் உள்ளவர்கள் தானே. நாம் தினமும் சந்திக்கிற பெரும்பாலானவர்கள், பண்பானவர்களாகவும், நேர்மையாளர்களாகவும் தானே தெரிகின்றனர்.
ஆனாலும், ஏனோ, மனம் சுற்றி நடக்கும் நல்ல நிகழ்வுகளைப் பார்க்காமல், சிந்திக்காமல், வெள்ளைச் சட்டையில் தெளித்து விட்ட சிறு அழுக்கையே பெரிதுபடுத்திப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதோ என்று கூட அவ்வப்போது ஐயம் எழுகிறது. ஆகாய விமானத்திலிருந்து பார்க்கும் போது, நகரம் அழகாகவே தெரியும். நகரத்தின் இயக்கங்கள் பார்ப்பதற்கு ரம்யமாய் இருக்கும். இறங்கி ஊருக்குள் செல்லும் போதுதான் மாசும், அழுக்கும், ஒழுங்கீனமும், அலட்சியமும் குறிப்பாக துரோகங்களும், அநாகரீகங்களும் தெரிய வந்து, மனது சஞ்சலப்படும்.
வன்முறைகள், வெறும் பத்திரிக்கை செய்திகளாக வரும் போது, ஐயோ பாவம் அல்லது நாடு கெட்டுப் போச்சு என்று மட்டுமே பெரும்பாலானோருக்கு தோன்றுகிறது. இதழின், ஒரு பக்கத்தில் சாமியாரின் ஆன்மீக வியாக்கியானம், அடுத்த பக்கத்தில் ஈழத்தமிழர்களின் முள் வேலி முகாம், அதற்கு எதிர்த்த பக்கத்திலேயே சிக்கென்ற உடையில் மும்பை அழகியைப் பற்றிய கலர் கலரான வருணனை இப்படியே சராசரி மனிதனாக படித்துவிட்டுப் போக மனம் ஒப்ப மறுக்கிறது.
வேலூர் அரசு மருத்துவமனையில், பிரசவ வலியையும் மீறி, சனியன் மூன்றாவதும் பெண்ணாய் பிறந்து தொலைந்து விடக் கூடாதே என்ற கவலையோடு டாக்டருக்காக காத்துக் கொண்டிருக்கும் தாயாக நம்மை உருவகப்படுத்திக் கொண்டால்......,
இரண்டு நாளாகியும், பேதி நிற்காமல், பழந்துணி போல துவண்டு விட்ட கைக்குழந்தையைக் கொண்டு வந்து வேலூர் அரசு மருத்துவமனையின் வார்டு ஒன்றில் படுக்கை இல்லாததால் ஓரமாக தரையில் படுக்க வைத்துவிட்டு, தண்ணீர் தட்டுப்பாட்டால் கக்கூசிலிருந்து வீசும் துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு கலங்கிய இதயத்துடன் டாக்டருக்காக காத்துக் கொண்டிருக்கும் மற்றொரு தாயாக நம்மை உருவகப்படுத்திக் கொண்டால்.......,
புதிய அப்பலோ மருத்துவமனையை திறந்து வைக்கும் 
துணை முதல்வர்
வாணியம்பாடிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடித்ததால், சிக்குன்குனியாவோ அல்லது வேறோரு மர்மக் காய்ச்சலோ, குடும்பத்தில் உள்ள எல்லோருடைய கால்களும் வீங்கிப் போய் வலியாய் வலிக்க, கடவுளைக் காண வருவது போல, வேலூர் அரசு மருத்துவமனையின் ஓ.பி. வார்டில் டாக்டருக்காகக் காத்துக் கிடக்கும் குடும்பங்களில் ஒருவராக நம்மை உருவகப்படுத்திக் கொண்டால்..... பத்திரிக்கை செய்திகள், பொழுதுபோக்கு செய்திகளாக மட்டுமே நமக்குத் தெரியாது. தினமும் காலையில் சென்னையில் இருந்து ரயில் பிடித்து வந்து வேலூர் மருத்துவமனையின் வருகைப் பதிவேட்டில் காலை 10 மணிக்கு கையெழுத்து இட்டு விட்டு காத்துக் கொண்டிருக்கும் நோய் பீடித்த சனங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், ஒரு மணி நேரத்துக்கு உள்ளாக அடுத்த ரயில் ஏறி சென்னைக்கு மீண்டும் வந்து தனியார் மருத்துவமனைகளில் தங்கள் தொழிலைத் தொடரும், ஆனால் கூசாமல் மக்களின் வேர்வையை, இரத்தத்தை சம்பளமாகப் பெற்றுக் கொள்ளும் அரசு டாக்டர்களின் துரோகம், நமக்கு வெறும் பத்திரிக்கைச் செய்தியாகத் தெரியாது. வறுமையினாலோ, கடத்தி வரப்பட்டோ, பாலியல் பாழுங்கிணற்றுக்குள் தள்ளப்பட்ட ஒரு பெண்ணை நிமிர்ந்து கூட பார்க்காமல், ஒரு கேசாகப் பாவித்து, அபராதம் விதித்து, ரிமாண்டும் செய்யச் சொல்லி கையெழுத்து இடுகிறார்கள் நீதிபதிகள்.
ஆனால், திட்டமிட்டு மாதக்கணக்காக, தங்களை கடவுளாக பாவிக்கும் ஏழை நோயாளிகளுக்கு துரோகம் செய்யும் அரசு மருத்துவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்து விசாரணைக்கு மட்டும் ஆணையிடுகிறது அரசு. ஒரு சில மாதங்களுக்குப் பின் செய்ய வேண்டியதை செய்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து வேறோரு இடத்திற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு, பழக்கிக் கொண்டு விட்ட தங்கள் துரோகங்களைத் தொடர்ந்தாலும் தொடருவார்கள் இந்த மருத்துவர்கள்.
இந்த துரோகங்கள் வேலூரில் மட்டும் நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட ஒன்றா? நினைத்துப் பார்த்தால், இல்லை என்கிறது உள்மனம். இந்த ஊழல்கள்தான், விஷக்காய்ச்சல் போல் நாட்டின் எல்லா செயல்பாடுகளிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன என்று பதிலளிக்கிறது உள்மனம்.
ஜனநாயகக் காற்றை நச்சுக் காற்றாய் மாற்றிக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள், வீங்கிப் பெருத்து விட்ட அரசு நிர்வாகம், ஐந்தாவது, ஆறாவது சம்பளக் கமிஷன் என்று அரசு வருவாயை கிட்டத்தட்ட அப்படியே எடுத்துக் கொள்ளும் ஊழியர் அமைப்புகள், கடமையைப் புரிந்து கொள்ளாத அல்லது அலட்சியப்படுத்தும் நடுத்தர வர்க்கம், தங்கள் மேல் தினமும் தெளிக்கப்படும் வன்முறைகளைப் புரிந்து கொள்ளாமல், அறியாமையால், விட்டில் பூச்சிகள் போல் வீழ்ந்து கிடக்கும் ஏழை சனங்கள்.....
இந்தியாவின் ஜனநாயகம் ஒரு போலி ஜன நாயகம் என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறும் போது, அந்தக் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று என்னால் மறுத்துச் சொல்ல இயலவில்லை. ராணுவத்திற்கு 1,50,000 கோடிகளையும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு 60,000 கோடி களையும் வழங்கிவிட்டு, இந்தியாவின் மிகப் பெரிய எதிரிகள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தான் என்று பிரதமர் மன்மோகன் சிங்கோ, உள்துறை அமைச்சர் சிதம்பரமோ கூறும் போது, ஆமாம், அந்தக் கூற்று உண்மைதான் என்றும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்களின் திட்டமிட்ட துரோகத்தை வெறும் ஒழுங்கீனம்தான், வன்முறை இல்லை, தீவிரவாதம் இல்லை என்று அரசு கருதுவதையும் என்னால் ஆமோதிக்க முடியவில்லை. ஏன் இப்படி நடக்கிறது? இப்படித்தான் மனிதர்கள், படித்தவர்கள் செயல்படுவார் களா? உலகம் முழுவதும் இப்படித்தான் நடக்கிறதா? விலங்குகள் ஒன்றுக்கொன்று இப்படி ஏமாற்றுவது இல்லையே! துரோகம் இழைப்பதில்லையே! இது என்ன நாகரீக வளர்ச்சி? அந்தமான் காடுகளில் உள்ள ஆதிவாசிகள் தங்களுக்குள் இப்படித்தான் துரோகம் செய்து கொள்வார்களா? அட்டைப்பூச்சி கூட விலங்குகளின் ரத்தத்தை ஓரளவு உறிஞ்சிய பின்னர், போதும் என்று கீழே விழுந்து விடும். மனிதர்களில் சிலர் ஏன் இப்படி? அதிலும் மருத்துவர்கள்?
இந்தியாவில் மருத்துவம் என்பது ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை ஒத்து பரிணாம வளர்ச்சியில் பின்னிறங்கி விட்டது என்றால் மிகையில்லை. உலகளவில், பல முன்னேறிய நாடுகளில், மருத்துவம், சுகாதாரம் என்பது அரசின் கடமையாக உள்ளது. அரசின் முதலீடுதான் அங்கெல்லாம் அதிகம். ஏனென்றால், மக்களிடமிருந்து வரிகள் மூலம் வருமானத்தைப் பெறுவதே நாட்டு மக்கள் எல்லோருக்கும், தரமான கல்வியையும், சுகாதாரத்தையும், மருத்துவ வசதிகளையும் கொடுப்பதற்காகத்தான் என்று அங்குள்ள அரசுகள் தங்கள் கடமையை உணர்ந்துள்ளனர். மேலும், தரமான கல்விக்கும், மருத்துவத்திற்கும் அரசு செய்யும் செலவு, ஒரு செலவே அல்ல. நாட்டில் மனிதவள மேம்பாட்டிற்கான, நாட்டின் நாளைய வளர்ச்சிக்கான இன்றைய முதலீடு என்ற ஆரோக்கியமான கண்ணோட்டமே காரணம். ஆனால், இந்தியாவில் மருத்துவத்தை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து பல வருடங்கள் ஆகி விட்டது. என்றைக்கு உடல நலக் குறைவு என்று ஆட்சியில் இருந்தவர்களும், அதிகாரிகளும் அரசு மருத்துவ மனையைத் தவிர்த்து விட்டு, தனியார் மருத்துவ மனைகளில் தஞ்சம் புகுந்தார்களோ, அன்றிலிருந்தே சுகாதாரம் அரசின் கடமையல்ல, தனியாரின் லாபம் என்று திருத்தி அமைக்கப்பட்டு விட்டது. அன்றிலிருந்து பொது மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதும், தனியார் மருத்துவமனைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுவதுமாக மக்களின் சுகாதாரம் பலி இடப்படுவது தொடங்கி விட்டது.
சமீபத்தில் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவர் Dr. பிரதாப் சி. ரெட்டிக்கு பத்ம விபூஷன் கொடுக்கப்பட்ட நிகழ்வும், அதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் அவர் மருத்துவத்தில் ஒரு புரட்சியே கொண்டு வந்தவர் என்று தமிழக முதல்வர் புகழாரம் சூட்டி யதும் ஜீரணிக்க முடியாத நிகழ்வுகள். 120 கோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் எத்தனை கோடி மக்களுக்கான மருத்துவப் புரட்சியைக் கொண்டு வந்தார்கள் இந்த பிரதாப் ரெட்டிகள். அரசு மானியமாகக் கொடுத்த நிலத்தையும், மற்ற மானியங்களையும் பயன்படுத்திக் கொண்டு இந்திர பிரஸ்தா அப்பல்லோ போன்ற மாளிகைகளைக் கட்டி மருத்துவத்துறை மூலம் கோடிகளைப் புரட்டும் வியாபாரிகள் மட்டுமே இவர்கள். (இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, மருத்துவத்துறையில் சிறந்த பங்களித்ததற்காக 17 மருத்துவர்களுக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்தார் இந்திய ஜனாதிபதி. இதில் பங்கருவைச் சேர்ந்த இதய நோய் நிபுணரும், மிகச் சிறந்த சமூக மருத்துவருமான Dr.ரமணா ராவ் அவர்களுக்கு பத்ம விருது வழங்கப்பட்டது. இவர் மனிதாபிமான முறையில் இலவசமாக செய்து வரும் பல வகைப்பட்ட பணிகளை தனியாக ஒரு கட்டுரை மூலம் பின்னர் பதிவு செய்வதே நன்று)
இந்தியாவைப் பொறுத்தவரை, மருத்துவர்கள் என்றாலே, நகர்புறங்களை சார்ந்தவர்கள் என்பதே நியதி. அங்கொன்றும் இங்கொன்றுமாக, உண்மையாகவே, சேவை மனப்பான்மையுடன் கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. சுகாதாரத் துறை என்றாலே, ஸ்கேன், எக்ஸ்ரே அறுவை சிகிச்சை, மருந்துப்புட்டிகள், மாத்திரைகள் மீண்டும் ஸ்கேன் என்றே ஆகிவிட்டது. இன்றைய நிலையில் மருத்துவமனைகள் என்றாலே, மக்களின் உடல்நல மேம்பாடு காண்பது என்று இல்லாமல், நோய்வாய்ப்படுதலை முதலீடாக வைத்து, மக்களின் 

  மூளை, இதயம், வயிறு என்று ஸ்கேன் செய்வதற்கு வைக்கப்பட்டுள்ள விலை பட்டியல்

பொருளாதாரத்தையே போர்வெல் வைத்து, உறிஞ்சி எடுக்கும் ஒரு வித்தை என்றே ஆகிவிட்டது. தனி மனித அடிப்படை ஆரோக்கிய குறைவை முன்னிருத்திச் செய்யும் ஒரு கோரத்தாண்டவமாக பல மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை என்பது, மருத்துவ அறிவியல்துறை அறிஞர்கள் பலரின் அயராத உழைப்பினால் மேம்படுத்தப் பட்டு, இன்று உலக அளவில் வளர்ச்சியடைந்து, மக்களின் மறுவாழ்விற்கு கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, அதிகபட்ச  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாறி, மனித உடல் கூறுகளை வெட்டுவதையும், வெட்டி ஒட்டுவதையும், பெரிய அளவில் கள்ளப்பணம் புரளும் ஒரு தொழிலாக மாற்றி விட்டனர். கடத்தல் மாஃபியா, கள்ள நோட்டு மாஃபியா என்று கூறுவோம். அது போன்று இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இன்று எந்த வித சட்டதிட்டங்களுக்கும் உட்படாமல் பிரபலமாகி உள்ள ஒன்று கருக்கலைப்பு  அபார்ஷன் மாஃபியா.  
சென்னையில், நண்பர் ஒருவர் நீரிழிவு நோய் அறுவைசிகிச்சை மருத்துவராக தொடர்ந்து பல வருடங்களாக பிராக்டீஸ் செய்து வருகிறார். தினமும், ஏதாவது அறுவை சிகிச்சை மற்றும் கால் வெட்டியெடுத்தல் செய்து வருவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக அடிக்கடி கூறுகிறார். மறுபடியும், Preventive Medicine என்று கூறப்படும் நோய்த் தடுப்பு மருத்துவத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சில வருடங்களாகக் கூறி வந்தாலும் கணிசமான வருமான இழப்பு ஏற்படுமே என்பதால், அறுவை சிகிச்சையையே தொடர்கிறார்.
மருத்துவமனைகள், உபகரணங்கள், மருந்துக் கம்பெனிகள், தெருவிற்கு இரண்டு மருந்துக் கடைகள், காப்பீடுகள் என்று மிகப் பெரிய வர்த்தகப்பரிணாமங்கள் கொண்ட அமெரிக்காவை விட மோசமான, தனியார்துறை இயந்திரமாக இந்திய மருத்துவத்துறை ஆகிவிட்டது. போதிய எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதலீடுகளைச் செய்யாமல், தனியார் துறை மூலமே துவங்கப்படுவதால், மருத்துவப்படிப்பு என்பது, பரம்பரைப் பணக்காரர்களுக்கும் அல்லது வரி ஏய்ப்பு செய்த பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற விஷயம் என்றாகிவிட்டது.
நாட்டில் உள்ள ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதிகளும் போதுமான மருத்துவர்களும் கொடுக்க இயலாத நிலையில் அயல்நாட்டவர்களை தமி்ழ்நாட்டில் மருத்துவம் செய்து கொள்ள அரசே வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் மோசமான விளம்பரம்
என்றும் இல்லாத வண்ணம், இன்று உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் சமுதாயத்தின் அனுமதி இல்லாமல், மருத்துவ ஆராய்ச்சி (“Clinical Research”) என்ற பெயரில் இந்தியாவின் எல்லா மக்களையும், பொருளாதாரம், பால், இனம், வயது என்று வரையறுத்து, ஆராய்ச்சிக்கான எலிகளாக மாற்றி விட்டார்கள் என்பது தான் யதார்த்த நிலை. மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான வரிப்பணம் ஈட்டியும், இன்று வரை, வெள்ளை யானையாக உள்ள அரசு இயந்திரம் ஓடுவதற்கும், இலவசம் மற்றும் மானிய அரசியலுக்கும், எல்லா மட்டத்திலும் வியாபித்திருக்கிற ஊழலுக்குமே, அரசு நிதியின் பெரும்பங்கு ஊதாரித்தனமாக செலவிடப்படுகிறது. அடுத்தடுத்து வந்த அரசுகள், மக்களின் மருத்துவத்திற்கு செய்திருக்கிற முதலீடுகள் ரொட்டித்துண்டு அளவே. அதிலும், இந்திய அளவில், மன ஆராக்கியத்திற்கு, வெறும் ரொட்டித் துகள்கள் அளவே முதலீடுகள். அடிப்படை மற்றும் கட்டமைப்பு மருத்துவ முதலீடுகளில், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது, மிகப்பெரிய அதல பாதாளத்தில் இருக்கிறது இந்தியா. அடிப்படை ஆரோக்கியக் குறைவினால் ஏற்படும் தொற்று மற்றும் பல்வேறு தொற்றாத நோய்களோடு, கடந்த நூற்றாண்டில் இல்லாத வாழ்க்கை முறை நோய்கள் இன்று அதிக அளவில் மக்களை பயமுறுத்தி வருவது, மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அரசு-தனியார் பார்ட்னர்ஷிப் என்ற போர்வையில் அரசு அதன் மிக முக்கிய கடமையை தட்டிக் கழிப்பது, குறுகிய காலத்தில் நன்மையளிப்பதாகத் தோன்றினாலும், தொலைவு நோக்கு இல்லாத விஷயமாகும். 

மேலோட்டமாக பார்க்கும்பொழுது, நல்ல திட்டமாகவும், உடனடி நிவாரணமாகவும் தோன்றினாலும், காப்பீடு பணத்தை தனியார் துறைக்கு வாரி வழங்குவதற்கும், மேலும் நோய்களில், விபத்துகளில் பாதிக்கப்படுவோர் கார்பொரேட் நிறுவனங்களின் பேராசையால், பொருளாதார hPதியில் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாவதற்குமே இத்திட்டம் காரணமாகிக் கொண்டுள்ளது. அதே போல், அரசாங்க மருத்துவமனைகளில் இன்று கட்டண வார்டுகள் என்ற பெயரில், கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டுமே தொங்கும் தாய்மார்களுடைய உரிமையான இலவச மருத்துவமனை படுக்கைகளை குறைத்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம் : உலக சுகாதார நிறுவனம்
"NRHM" எனப்படுகிற மத்திய கிராமப்புற சுகாதாரத் திட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆயினும், தரமான மின்வசதி, குறைந்த பட்ச சாலை வசதி, போதிய மருத்துவர்கள், உபகரணங்களை இயக்க மற்றும் பாதுகாக்கக்கூடிய பொறியாளர்கள் போன்ற இதர வசதிகள் இல்லாமல், பல இடங்களில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்படுவது கண்களில் இரத்தத்தை வரவழைப்பதாக உள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளாகிய சீனா மற்றும் பிரேசில் ஆகியவற்றை ஒப்பிடும்போது கூட இந்தியா மிகக் கேவலமான நிலையில் இருப்பதையே எல்லாவகைப் புள்ளி விபரங்களும் காட்டுகின்றன. தேய்ந்து விடக்கூடாத மக்களின், குறிப்பாக, பெண்களின், குழந்தைகளின் அடிப்படை சுகாதாரத்தைவிட, தேய்ந்து விடக் கூடிய இராணுவத் தளவாடங்களுக்கும், ஜிகினாத் திட்டங்களுக்கும்தான் அரசாங்கம் அதிக முதலீடு செய்கிறது. மருத்துவர்கள், மருத்துவமனைப்படுக்கைகள், செவிலியர்கள் போன்ற எல்லா விஷயங்களிலும் உலக நாடுகளின் கடைக் கோடியில் இருந்து கொண்டு, 36 சதவிகித மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் வைத்துக் கொண்டு, மருத்துவச் சுற்றுலா? (Medical Tourism) என்ற பெயரில், அரசின் அனுமதி மற்றும் மானியத்துடன் கூத்தடித்துக் கொண்டு இருப்பது, நாட்டுப்பற்று உள்ளவர்களால் சகித்துக் கொள்ள முடியாத விஷயம். அதுவும் அரசு பொது மருத்துவ மனைகளில் கூட, மருத்துவச் சுற்றுலா வார்டுகளை, பணக்கார நோயாளிகளின் வசதிக்காக தொடங்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு கூறியது வெட்கங்கெட்ட அறிக்கை. 

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் போன்றவை மூலம் ஏழை மக்களின் உடல் நலம் பேணப்படுகிறது போன்ற மாயை திட்டமிட்டு அரசால் விளம்பரப்படுத்தப்படுகிறது. திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளை செயலிழக்கச் செய்து விட்டு, அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவ மனைகளை மக்கள் அண்டி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டு விட்டது. அறுவை சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும், திடீர் என்று வரும் உடல் நலக் குறைகளுக்கு ஏழை மக்கள் செலவு செய்ய வேண்டி வருவதுதான் மிக அதிகம். அதோடு தரமற்ற சிகிச்சைக்கும், ஏமாற்றுதலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். 

ESI, PF, பென்சன், ஆறாவது சம்பளக் கமிஷன் என்று எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அடங்கிய 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தரமான அரசு மருத்துவ உதவி என்பது எட்டாக் கனியாகி வருகிறது. அவர்கள், மிகக் குறைந்த அளவில் அரசு மருத்துவமனைகளையும், அதிக அளவில் தனியார் துறையை அண்டியோ அல்லது மருத்துவ உதவியே இல்லாமலோ உழல்கிறார்கள்.
இன்னும் சில வருடங்களில் உலகின் ஐந்து மனிதர் களில் ஒருவர் இந்தியராக இருக்கப்போகிறார். உலகளவில்மிக அதிகமான ஏழைகள் இந்தியர்களாக இருக்கப் போகின்றனர். இவர்களின் கதி காப்பீட்டுத் திட்டங்களில் தான் என்று முடிவு கட்டுவது, சொல் லொணாத் துயரங்களை வருங்கால சந்ததி யினர் சந்திக்க உள்ளனர் என்று கட்டியம் கூறுவதாகவே உள்ளது.

இன்றைய நிலையில் பெரிய அளவில் பயமுறுத்தி வரும் உணவுப்பஞ்சம், விலை வாசி உயர்வு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவிலான குடி பெயர்ப்பு (Migration) ஆகியவை, ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் மற்றும் கிராமப்புற சுகாதாரத்திட்டம் ஆகியவற்றின் நன்மை களை முறியடித்து விடுவதோடு, அடிப் படைக்கல்வி மற்றும் அடிப்படை சுகாதாரத் திற்கான குறிக்கோள்களை (Millinium Goals) அடைய முடியாமல் போய்விடும் அபாயமும் சூழ்ந்துள்ளது. நீர், நிலம், ஆகாயம் ஆகிய சுற்றுச்சூழல் மிக விரைவாக மாசுபட்டு வருவதும், மக்களின் அடிப்படை சுகாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும் அகழிகளே. இப்படிப்பட்ட கால கட்டத்தில்  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-என்று ஏ.ஆர். ரகுமான் இசையில் செம்மொழி மாநாட்டில் பாடப்படும் போது, காதால் கேட்க மட்டும் ரம்யமாக இருக்கும்.

No comments:

Post a Comment