Monday, July 12, 2010


சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு புத்தகங்களை பதிப்பித்த உயிர்மை பதிப்பகம் நடத்திய வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆடிட்டோரியத்தில் நடந்தது. புத்தக வெளியீட்டு விழா, உலகத் திரைப்பட விழா, பாராட்டு விழா, கருத்தரங்கம் என்று தினந்தோரும் பல நிகழ்ச்சிகள் நடக்கும் மிகப்பிரபலமான அரங்கம். நிகழ்ச்சி முடிவில், மிக அழகாக இதயத்திலிருந்து சிந்தித்து பேசினார் எஸ்.ராமகிருஷ்ணன். இயற்கை அழைத்துக் கொண்டே இருந்தாலும், பொறுமையாகப் பல்லைக் கடித்தபடி ஆனால், மகிழ்ச்சியுடன் எல்லோருடைய பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, பேச்சு முடிந்த அடுத்த நொடி பாத்ரூமிற்கு ஓடினேன். சிறுநீர் கழித்து முடித்த பின், கிடைத்த மகிழ்ச்சிக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்திருப்பேன். ஜிப்பைப் போட்டுக் கொண்டே அந்தப் பக்கமும், இந்தப்பக்கமும் பார்த்தேன். பொட்டில் அறைந்தது.
உயிர்மைப் பதிப்பகத்தின் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன், போலியோவால் தாக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வளைய வருபவர் ஆயிற்றே! அரங்கத்திற்கு இன்னொரு பார்வையாளரும் கூட சக்கர நாற்காலியில் வந்திருந்தாரே! இவர்களும் தானே குளிரூட்டப்பட்ட (A.C.) அரங்கத்தில் மூன்று மணி நேரம் இருந்தார்கள்! இவர்கள் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால், இவ்வளவு புகழ்பெற்ற அரங்கத்தில் இவர்களைப் போன்றவர்களுக்கு ஏதுவான பாத்ரூம் வசதி இல்லையே! வீடு போய்ச் சேருவதற்குள் எப்படித் தவிப்பார்களோ?
வெளியில் வரும்போது இரண்டொரு படிகளில் இறங்கினேன். ஓ! படிகள் கட்டியவர்கள், குறைந்த பட்சம் ஒரு சருக்குப்படி (RAMP) அமைப்பதைப் பற்றி இவ்வளவு வருடங்களில் யோசிக்கவே இல்லையே? மனுஷ்ய புத்திரன் மேடையேற வேண்டிய போது கூட, சர்க்கஸ் மாதிரி நான்கைந்து பேர், சக்கர நாற்காலியுடன் சேர்த்து தூக்கிக் கொண்டே, படிகளில் ஏறி கொண்டு விட்டனர் (இறக்கினர்). பார்த்தபோது, என்னை, என் சமுதாயத்தை நினைத்து வெட்கமாக இருந்தது.
இந்த மனுஷ்ய புத்திரர்களுக்கு சிறு பையன்களா இருக்கும் போதிலிருந்து, எப்படியெல்லாம் பல தடைகள் ஏற்பட்டிருக்கும் என்று மனதில் ஓடியது. மனுஷ்யபுத்திரனா நான் இருந்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதுவும், சக்கர நாற்காலியில் வளருவது ஒரு ஏழைச் சிறுமியாக, பெண்ணாக இருந்தால்?
அடுத்த வாரமே, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உலக ஊனமுற்றவர்கள் தினம்” நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அமைச்சர் சிறப்பு விருந்தினராக வந்தார், ஒரு சில கருவிகளை வழங்கினார். புகைப் படங்களுக்காக கொஞ்சம் சிரித்தார், பேசினார், கிளம்பினார்.
நூற்றுக்கணக்கான ஊனமுற்றவர்கள் வந்த இந்நிகழ்ச்சிக்கு மேடைக்கும், அரங்கிற்கும் சருக்குப் பலகை அமைத்தவர்கள், அவர்களுக்கு வேண்டிய கழிப்பிடங்களைப்பற்றி கவலைப்படவில்லை. நாற்றம் குடலைப்பிடுங்கியது. ஆண்களுக்கான கழிப்பிடத்திற்கு மட்டும் செங்குத்தாக, ஆட்டம் காணும் சருக்குப்படி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் இறங்கும் யாரும் கரணம் அடித்து விழுந்து விடுவார்கள்.
நிகழ்ச்சிக்கு சக்கர நாற்காலியில் வந்த அமுத வல்லியிடம் பேச்சுக் கொடுத்தேன். நிகழ்ச்சிக்கு வந்த ஊனமுற்ற எந்தப் பெண்களும், உணவோ, நீரோ, மாலை வரை அருந்தவில்லை என்றார். அருந்தினால், பாத்ரூம் போகவேண்டுமே? ஊனமுற்ற ஆண்களில் ஒரு சிலர் மட்டும் தவழ்ந்தபடி சென்று, திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க  வேண்டியிருந்தது.
தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும், ஊனமுற்றவர்களைப் பற்றி சிறிதும் யோசிக்காத சமூகமாகஅரசாங்கமாக இருக்கிறோமே? புகைவண்டி, பேருந்து நிலையங்கள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள்அலுவலகங்கள் போன்ற பெரும்பாலான தனியார் அல்லது பொது இடங்களில், சருக்குப்படிகள் மற்றும் கைப்பிடி வசதியாவது கொண்ட ஒரே ஒரு கழிப்பறை, இப்படி குறைந்த அளவில் கூட ஏன் நாம் யாரும் யோசிப்பதே இல்லை? கட்டிடக்கலை சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகளிலும், சிவில் பொறியியல் கல்லூரிகளிலும், இதைப்பற்றிய பாடம் இருக்கிறதா? இருந்தால், அதற்கு வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?
சென்னையில் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம், பிரிட்டிஷ், அமெரிக்கன் நூலகங்கள் உட்பட பல புகழ்பெற்ற நூலகங்கள் அமைந்துள்ளன. ஆயினும், வலுக்கட்டாயமாக, உலகத்தரத்தில் அண்ணா நூலகத்தை 200 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சென்னையில் தான் வேண்டும் என்று அடம்பிடித்து கட்டமைத்து வருகிறது. (அப்பொழுது தானே, கட்சி மாநாடுகளுக்கு லாரிகளில் வரும் தொண்டர்கள், ஊர்வலம், பிரியாணி, குவார்ட்டர் முடிந்த பின்னர் அழகுபடுத்தப்பட்ட மெரினா பீச், அண்ணா சமாதி அப்படியே அண்ணா நூலகம் என்று சுற்றிப்பார்க்க முடியும் - சொல்ல வந்த விஷயத்தைத் தாண்டி விட்டேனோ? மன்னிக்கவும்) சரி, ஏற்கனவே உள்ள கன்னிமரா உட்பட இந்த நூலகங்கள் எதுவுமே உடல் ஊனமுற்றவர்கள் சுலபமாக வந்து பயன்படுத்திக் கொள்வது மாதிரி மாற்றி அமைக்கப்படவில்லையே? உடல் ஊனமுற்றவர்கள் நூலகங்களுக்குள் நுழைந்து கல்விக்கண் திறந்து கொள்வதற்கு தகுதியற்றவர்கள் எனும் மன நிலை தானே தமிழகம் முழுவதும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது?
மிகப் பெரிய சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட போனால் போகிறது என்று ஒரே ஒரு சருக்குப்படி, அதுவும் தேடித் தேடிப் பார்க்க வேண்டும். வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்த போது, அது கூட உடல் ஊனமுற்றவர்களின் தேவையை மனதில் கொண்டு அமைக்கப்பட்டதல்ல, கேஸ்கட்டுக்களையும், ஆவணங்களையும் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு போவதற்கு வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது என்றார். மாநிலத்தின் பல நீதிமன்றங்களிலோ, பத்திரப்பதிவு அலுவலகங்களிலோ, காவல் நிலையங் களிலோ கேட்கவே வேண்டாம். இது என்ன வகை நீதி?

நீதி பற்றி எழுதும் போது, மூன்று வருடம் முன்னால் நடந்த வழக்கு ஞாபகம் வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊனமுற்றோர் சங்கத்தலைவர் வழக்குத் தொடுத்திருந்தார். மாநகர் அரசுப் பேருந்துகளில் உடல் ஊனமுற்றவர்கள் ஏறுவதற்கு வசதி இல்லையாம். உடனே நீதிபதி தீர்ப்பளித்தார். குறிப்பிட்ட சில பேருந்துகளில் தானியங்கி சருக்குப்பலகை அமைக்கப்பட வேண்டும் என்று.  வெற்றிஎன்றார் வழக்கு தொடுத்தவர். நீதிபதி அதோடு நிற்கவில்லை. தானியங்கி சருக்குப் பலகை அமைக்கப்பட்ட, “மாதிரி (Model) பேருந்தைக் காண்பிக்க ஆணையிட்டார். போக்குவரத்துத்துறை கொண்டு வந்து காண்பித்த பேருந்தின் சறுக்குப்பலகை மிகவும் செங்குத்தாக இருக்கிறது என்று சரி செய்ய சில யோசனைகளும் சொன்னார். இப்பொழுது சென்னையிலும் தமிழகத்திலும் என்ன நிலைமை?
எங்காவது நமது ஊர்களில் பேருந்து நிறுத்தங்களுக்கு சக்கர நாற்காலியிலோ, அல்லது ஊன்று கோல்களின் துணையுடனோ, போக முடியுமா? திடமான கால்கள் உள்ளவர்களே நடப்பதற்கு சாலைகளும் நடைபாதைகளும், நிற்பதற்கு ஏற்ற பேருந்து நிறுத்தங்களும் இல்லையே!
உடல் ஊனமுற்றவர் யாராவது பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, பெருங்கூட்டத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடிந்தால், நம் பேருந்துகள் நிறுத்தத்திலா நிற்கின்றன. பொதுமக்களே ஏதோ, மாரத்தான் ஓட்டத்திற்கு தயாராவது மாதிரி தள்ளி நிற்கும் பேருந்தை நோக்கி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். கால்களுக்குப் பதில் ஊன்று கோல்களோ, செயற்கைக்கால்களோ, சக்கர நாற்காலியோ உள்ள ஒருவர் என்ன செய்ய முடியும்? தானியங்கி சருக்குப்பலகை வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதி, நடைபாதைகளும், நிறுத்தங்களும், பேருந்து நிலையங்களும், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது பற்றி யோசித்தாரா?
பிறவியிலேயே பார்வையிழந்த நான்கைந்து மாணவர்கள் ஒரு குச்சியை முன்பக்கம் தட்டியபடி சாலைகளில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு விருவிருவென்று நடப்பதைப் பார்க்கும் போது பெருமையா இருக்கும். அவர்களது மன உறுதியையும், அளவற்ற திறமையையும் நினைத்து சற்று பொறாமை கூட வரும். ஆனால் கூடவே, நமக்கு மிகுந்த பதைபதைப்பு ஏற்படுகிறதே? சாலைகளில் மூடிகள் திறந்திருக்கும் சாக்கடைப் பள்ளங்களிலோ, குழிகளிலோ விழுந்து பார்வை இல்லாததோடு காலும் ஒடிந்து விட்டால்?
இந்த வருடம் சென்னையின் கல்லூரிகள் ஜூன் மாதத்தில் திறந்த போது, தமிழக கிராமங்களில் இருந்து பார்வையற்ற ஆதிதிராவிட மாணவர்கள் மீண்டும் அரசு விடுதிகளுக்கு வந்த போது திண்டாடிப் போய்விட்டார்கள். கல்லூரிகள் திறந்து விட்டாலும், விடுதிகள் அதிகாரபூர்வமாக திறக்கப்படவில்லை. அதனால், விடுதிகளில் உணவுப்பொருட்கள், சமையல்காரர்கள், ஏன் வார்டன்கள் கூட இல்லை. கண் தெரிந்த மாணவர்களாவது, எங்காவது பகுதி நேர வேலை செய்து சாப்பாட்டு பிரச்சனையை சமாளித்தார்கள். பார்வையற்ற மாணவர்கள், பல நாட்கள் அசுத்தத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பட்டினி கிடந்தார்கள். கிட்டத்தட்ட பிச்சையெடுத்தார்கள் என்றால் மிகையில்லை. சில நல்ல உள்ளங்கள் முடிந்த அளவு உதவி புரிந்தார்கள். விசாரித்த போது, தமிழகம் முழுவதும் பல வருடங்களாக இப்படிப்பட்ட குளறுபடி நிலைமைதான்  என்று தெரிந்தது.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அவர்களே! துறையின் அதிகாரிகளே! வார்டன்களே! உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? ஊனமுற்ற பார்வையற்ற ஏழை தலித் மாணவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு பிராயச்சித்தம் தான் என்ன? இதற்கு பரிசாகத்தான், உங்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதா?
தமிழகத்தின் ஆதிதிராவிட பள்ளி, கல்லூரி விடுதிகள் ஏதோ ஹிட்லரின் சிறைச்சாலைகள் போல தான் இன்றும் இருக்கின்றன. நாற்றத்திற்கும், கொசுவிற்கும், மிகக் கேவலமான உணவுக்கும், நான்கு கால் பெருச்சாளிகள் மட்டுமல்லாமல், இரண்டு கால் பெருச்சாளிகளுக்கும் அங்கு என்றுமே பஞ்சமில்லை. வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும், தண்ணீருக்கும், கக்கூஸிற்கும், மனிதாபிமானத்திற்கும், கற்பதற்கான சூழ்நிலைக்கும் தான் மிகுந்த தட்டுப்பாடு. அதிலும் பார்வையற்ற மாணவர்கள் இந்த விடுதிகளில் தங்கி, அசுத்தமான கழிப்பிடங்களில் எதை மிதிக்கிறோம் என்று தெரியாமலும் பிளாஸ்டிக் வாளிகளில் பரிமாறப்படும் எதைத் தின்கிறோம் என்று புரியாமலும் எப்படியோ விழுந்து எழுந்து படித்து முடிக்கின்றனர். பின்னர், திறமை அடிப்படையில் ஒரு ஆசிரியர் வேலை கேட்டால், அவர்கள் தலைகளில் லஞ்சம் எனும் இடி விழுகிறது.
சென்னை அசோக் நகரில் இருக்கிறது புகழ் பெற்ற அரசு ஊனமுற்றோர் மறுவாழ்வு மற்றும் செயற்கை கால்கள் மையம். அங்கு தினமும் தமிழகம் முழுவதும் இருந்து வரும் பல உடல் ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலிகளுக்காகவும், செயற்கைக் கால்களுக்காகவும், ஊன்று கோல்களுக்காகவும் பதிவு செது விட்டு காத்துக் கிடக்கின்றனர். இங்கு வரும் மிகப் பெரும்பாலானோர், சாலை விபத்துக்களில் பாதிக்கப் பட்டவர்களே.
தமிழ்நாட்டில், வருடத்திற்கு ஏற்படும் 60,000 விபத்துக்களில், 12,800 சாவுகளோடு, 70,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைகின்றனர். தமிழக சாலை விபத்துக்களில், கால் கைகளை இழந்தவர்கள், பார்வையைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இலட்சங்களில் இருக்கும். முழுமையான புள்ளி விபரங்களே கிடையாது. பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும், போலியோவால் கால்களை இழந்தவர்களும் கூட எவ்வளவோ பரவாயில்லை. இப்படி சாலை விபத்துக்களில் பார்வையையோ, உடல் உறுப்புகளையோ இழக்கும் போது தலைமுறைகளும் அந்த பாதிப்புகளில் இருந்து மீள முடிவதில்லை. 60 விபத்துக்களுக்கு குடித்துவிட்டு ஓட்டுவதே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடுத்தது குளறுபடியான சாலைப் போக்குவரத்து நிர்வாகம், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உள்ள அதிகபட்ச ஊழல். அதுபோலவேகுடி போதையில் பணியிடங்களில் வேலை செய்யும்போது விபத்து ஏற்பட்டு கை, கால், கண்களை இழப்பவர்கள் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காதவை.
தமிழக மக்களே! ஒரு உண்மையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரும் நம் தமிழக அரசுகள், அரிசி, சேலை, மின்சாரம், தொலைக்காட்சிப்பெட்டி என்று கொடுக்கும்      இலவசங்களுக்கு வேண்டிய அளவு நிதியை நியாயமான, நேர்மையான வழியில் பெருக்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன், அரசின் கடன்களுக்கு வட்டி, இவற்றிற்கே அரசின் நிதி கரைந்து விடுகிறது. அதனால்தான், மாதவருட  இலக்குகள் வைத்து நடக்கும் அரசு சாராய வியாபாரம்.
இப்பொழுது, மனதில் கை வைத்துச் சொல்லுங்கள் லட்சக்கணக்கான மக்களை முடக்கிப் போடும், குருடர்களாக்கும், சக்கர நாற்காலிகளில் தள்ளிவிடும் அரசின் பாழாப்போன டாஸ்மாக் சாராயக்கடை வருமானத்தில்தான் நாம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைப் பெற்று சினிமா நிகழ்ச்சிகளை ரசிக்க வேண்டுமா? நமது ரசிப்பிற்கும், சிரிப்பிற்கும் பின்னால் இருப்பவை, பலரது ரத்தமும், சிதறிய உடல்களும், உடல் முடங்கிப்போய் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர்களும், அதனால் ஏற்படும், வற்றவே வற்றாத கண்ணீர் பிரவாகமும், வற்றிய தொண்டைகளில் இருந்து வெளிப்படும் கூக்குரல்         களும் தான். அவர்களும் தமிழர்கள். மனிதர்கள். நம்மைப் போன்று சிரிக்க வேண்டியவர்கள், முழு வாழ்க்கை வாழ வேண்டியவர்கள். கேவலமான சாராய வருமானத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! அடுக்குமா?
உலகில் அமைதியை வலியுறுத்தும் மதங்களில் ஒன்றான பார்ஸிமதத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டில், யாரேனும் இறந்து விட்டால், அந்த பூதஉடலை பிணந்தின்னிக் கழுகுகளுக்குப் படைப்பார்கள். மிக அற்புதமான ஒரு வகை ஈமைக்கிரியை. இறந்தும் கூட மற்ற உயிர்களின் மேல் அன்பு. இப்பொழுது வந்தது பிரச்னை. பிணந்தின்னிக் கழுகுகள் மனிதர்களின் செயல்பாட்டினால் அரிதாகிவிட்டதாம். டாட்டா நிறுவனம் முயற்சியெடுத்தும் கூட, ஆராய்ச்சிகள் செய்தும் கூட, முன்னேற்றம் இல்லையாம். அதனால் தான், மனிதர்களில் சிலர் பிணந்தின்னிக் கழுகுகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ? மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டிய அரசே அந்த செயலில் தானே இறங்கியுள்ளது!
தனிமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று வார்த்தையில் தீவிரம் காட்டிய பாரதியே!  நீ இந்தியாவில் எங்கோ தீவிரவாதியாக மறு பிறவி எடுக்க முடிவெடுத்திருக்கிறாயா? வேண்டாம், வேண்டாம், மறைமுக வன்முறைக்கு எதிராக நேரடி வன்முறை நியாயமற்றது. Eye for an Eye makes the whole world Blind. உனக்குப்போய் சொல்கிறேனே! நான் முட்டாள். நீ நேர்மையான முடிவெடு. மீண்டும் எங்களிடம், எங்களுக்காக வா. நீ வரும் நல்ல சேதியை, மனுஷ்ய புத்திரனின் காதிலாவது அசரீரியாகப்போச் சொல்.

1 comment: