Thursday, July 15, 2010


விடுதலை வாங்கி அறுபது ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மக்களால், மக்களுக்காக,   மக்களைக் கொண்டு மாறிமாறி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த கட்சிகளைச் சேர்ந்த அரசுகளாய் இருந்தாலும் அவை வருடம் தவறாமல் புதிய நலத் திட்டங்களை வெளியிட்டும் பல பழையத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்துள்ளன.

அந்த வகையில், 2009-10ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையின்படி வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள சமூகங்கள், நல வாரிய உறுப்பினர்களின் குடும் பங்கள், அரசு அலுவலர்கள் என்று எல்லாவகை மக்களுக் கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், வேளாண் கடன் வட்டி ரத்து, பயிர்க்காப்பீட்டுத்திட்டம், புதிய கல்லூரிகள், மருத்துவ முகாம்கள், தொழிலாளர்களுக்குத் தங்கும் இடங்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பல புதிய திட்டங் கள், ஒரு இலட்சம் சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, நல வாரியங்கள், பல பொருட்களுக்கு வரிவிலக்கு, அதிக எண்ணிக்கையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், மேலும், பலப்பல இலவசங்கள் என்று இன்றைய அரசின் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற மாநில அரசுகளை முந்திக்கொண்டு மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையின்படி, மிகப்பெரிய சம்பள உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பண நெருக்கடியையும் பொருட்படுத்தாது அளிக்க தமிழக அரசு முன் வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான நிலமற்ற ஏழைகளுக்கு நிலமும், வேளாண் மக்களுக்கு பலவகை உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. ஆனால் சிறு விவசாயிகள், உழவர் சந்தைகளில் விளை பொருட்களை விற்று வந்த பணத்தையும், விவசாயக் கூலிகள் உழைத்துக் கிடைத்த பணத்தையும் உழவர் சந்தைகளுக்கு அருகில் உள்ள அரசு மதுக்கடைகள் மூலம் அரசுக்கே தாரை வார்த்து  விடுகின்றனர். விதை நெல்லைக்கூட விற்றுக் குடித்து விட்டு நடைப்பிணமாக வீட்டிற்குத் திரும்புவது வாடிக்கையாகி விட்டது.

தீவிரவாதத்தைக் காவல் துறை மூலம் அடக்கி வைத்திருப்பதாகவும், காவல்துறையின் நலன் காக்க மூன்றாவது போலீஸ் கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறுகிறது தமிழக அரசு. ஆனால் என்றும் இல்லாவண்ணம் அதிக அளவில் பல காவலர்கள் இரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றாலும், சிலர் எச்.ஐ.வி. நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வந்துள்ளன.இந்நிலைக்கு, அவர்களது  வேலையின் தன்மையால் பெரு மளவில் மாறிவிட்ட வாழ்க்கை முறையும், டாஸ்மாக் மூலம் அதிகரித்துவிட்ட - தீவிரவாதத்தை விட கொடூரமான - குடிப்பழக்கமுமே இந்நிலைக்குக் காரணம்.

மூத்த தமிழ்மொழி, கலை, பண்பாடு, கலாச் சாரம் ஆகியவற்றை அரசு கண்ணெனப் போற்றிக் காப்பதாக நிதிநிலை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல இளை ஞர்கள் மற்றும் விடலைகள், டாஸ்மாக்  செலவிற்காக,  தமிழகத்தின் நகர வீதி களில், மொபைல், தாலிப் பறிப்புகள் மட்டு மின்றி, பல்வேறு சிறிய, பெரிய குற்றங் களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது       “சட்டம் ஒழுங்கு” என்கிற குறுகிய பார்வை யைத் தாண்டி, அரசின் தவறான கொள்கை யால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் “பண்பாட்டு, சமூகச் சீரழிவின் ஒரு சிறிய பகுதி” என் கருத வேண்டும்.

வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை, கணிசமாக, அரசு மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசிடம் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

வரலாறு காணாத அளவில் நடுவண் அரசிடம் அதிக நிதி பெற்று “அனைவரு க்கும் கல்வி” “தேசிய இடை நிலைக் கல்வித் திட்டம்” எனப் பள்ளிக் கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள தமிழக அரசு பாராட்டுக்குறியது. ஆயினும், “21 வயது நிரம்பியவர் மட்டுமே மது வாங்கலாம்”  என்று சட்டம் ஏற்படுத்திவிட்டு, நடைமுறையில் சீருடை அணிந்த, அணியாத பள்ளிச் சிறுவர்கள்கூட டாஸ்மாக் கடைகளில் இரண்டறக் கலப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது முறையல்லவே!

குழந்தைத் தொழிலாளர்கள், முச்சந்தி தோறும் குழந்தைப் பிச்சைக்காரர்கள், ஆங்காங்கே தொடங்கப்படுகிற ஆதரவற்றோர் இல்லங்கள்ஆகியவை பெருகுவதற்கும் மாநில அரசு டாஸ்மாக் மூலம் எதிர்பார்க்கும் ரூ. 12,000 கோடிக்கும் மேற்பட்ட வருவாய்க்கும் உள்ள தொடர்பு -ஆராய்ச்சி செய்தால் இன்னும் உறுதிப்படலாம்.

நோய்களைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற உதவும் முன்னோடித் திட்டமான “வருமுன் காப்போம் திட்டம்” மூலம் கடந்த வருடமும் இந்த வருடமுமாகச் சேர்த்து 13,500 முகாம்கள் நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் கூறுகிறார்.

ஆனால், முதல், இரண்டாவது மற்றும் தீவிரமான மூன்றாவது கட்டம் என்று பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலட்சக் கணக்கானோர் குடிநோயில் சிக்கித் தவித்தாலும், மதுப்புழக்கத்தை மற்ற நோகளுக்கான முதன்மைக் காரணியாகப் பார்க்காமல், வருமுன் காக்காமல், வருமானமாகவே அரசு பார்ப்பது மிகவும் விசித்திரமாகவும் வேதனையாகவும் உள்ளது.

2005-06ஆம்ஆண்டில்,  ரூ. 1,487 கோடியாக இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான ஒதுக்கீடு 2009-10 ஆம் ஆண்டு ரூ. 3,391 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 125 மருத்துவ மனைகள் அவசரச் சிகிச்சை மையங்களாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

ஆயினும், பெருகிவரும் மது விற்பனையால், பல்வேறு வகை நோய்கள், மிகப் பெரிய அளவில்   சாலை விபத்துக்கள், தற்கொலைகள், மனநோய்கள் ஆகியவற்றை சமாளிக்கவே மருத்துவத் துறையின் அவசரச் சிகிச்சை நிபுணர்களின் பெரும்பாலான சக்தி விரயமாகி வருகிறது என்பது ஏன் அரசுக்கு புரிந்தும் புரியாமல் உள்ளது?

எல்லாவகை அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்காவும் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அரசு கூறுகிறது.  ஆயினும்,  கட்டடத் தொழிலாளர்கள் பணியின் போது அடிக்கடி விபத்துக்குள்ளாவதற்கும், மீனவர்கள் நீர் நிலைகளில் மூழ்கி இறப்பதற்கும் குடிவெறி ஒரு முக்கிய காரணியாகி வருகிறதே! இந்நிலையை மாற்றுவது அரசின் கடமை யாகும்.கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறுகால உதவித்திட்டம்,மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்,குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம் போன்றவற்றிற்காக அதிக நிதி அறிவித்தாலும்,  இத்திட்டங்களின் தாக்கம் ஓரளவுக்குத்தான் இருக்கும்.  கர்ப்பிணிப் பெண்களின் கருக் கலைப்பிற்கும்,இரத்தசோகைக்கும், எடை குறைந்து குழந்தைகள் பிறப்பதற்கும்,பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் நோய்நொடிகளால் பீடிக்கப்படுவதற்கும் முக்கிய காரணம், கணவரின் சொற்ப வரு மானம் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கரைவதனால் அல்ல என்று அரசு விளக்கம் அளிக்க முடியுமா?

தமிழகம் முழுவதும் 104,42,500 குடும்பங்களுக்கு மும்முரமாக, நான்கு கட்டங்களில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தமிழகஅரசு விநியோகித்து வருகிறது. ஒரு வேளை, வீட்டு ஆண்மகன்கள், குடும்ப மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் டாஸ்மாக் விடுதிகளில் தொலைத்து விட்டு வருவதால் எழும் நிஜவுலகத்துக்கத்தை, வண்ணத் தொலைக்காட்சியின் கனவுலகம் மூலம் மறக்கடிக்க, மழுங்கடிக்க குடும்பப் பெண்களுக்கு உதவும் திட்டம் இது என்று ஓருக்கால் அரசு நினைத்துவிட்டதோ என்னவோ?

உலக வங்கி, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஜெர்மனி நாட்டு நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியுடன், தமிழக நகராட்சிகளில் விரைவாக பாதாளச் சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால்,இவ்வகைப் பாதாளச் சாக்கடைகளில் முத்துக் குளிப்பது, ஊராட்சிகளில் செத்த கால்நடைகளை அப்புறப்படுத்து வது, பிணவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக் காகவே ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, “தூய்மைப்பணி புரிவோர்” என்று அழகு தமிழில் கூப்பிட்டுக் கொண்டே, அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவே நிலைநிறுத்தி வேலை வாங்குவதற்கு, அரசுத் துறை அலுவலர்கள் மூலமே, மது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களைக் கட்டி சாதியை ஒழித்து விட நினைக்கிறது அரசு. சாதி, மதம், ஏன் - வயது வித்தியாசம்கூட இல்லாமல் எல்லா ஆண்களும் சங்கமம் ஆவது அதிகரித்து வருவதால், மதுவிடுதிகளையும் சமத்துவ புரங்களாக கருதுகிறதோ அரசு?

“மதுத் தீர்வை மூலம் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவது” என்றே டாஸ்மாக் நிறுவனம் கொள்கை விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசு வருவாயில் கிட்டத்தட்ட 30         சதவீத அளவிற்குக் கிடைக்கும் சாராய வருவாயானது, ஈ.எஸ்.ஐ, பி.எஃப், ஓய்வூதியம், ஆறாவது சம்பளக் கமிஷன் என்று எதுவுமே இல்லாத அமைப்பு சாராகூலித் தொழிலாளர்களும், மீனவர்களும், நெசவாளர்களும், இளைஞர்களும் கொடுத்ததே.

எனவே, “டாஸ்மாக்” என்கிற அரசு நிறுவனமானது, பன்னாட்டு, உள்நாட்டுச்சாராய அதிபர்களின் துணையோடு, தமிழகமெங்கும் எட்டாயிரத்திற்கும் அதிகமான ஆக்டோபஸ்கிளைகளைப் பரப்பி, எல்லாப் பிரிவு மக்களின் இரத்தத்தையும், பொருளாதாரத்தையும் உறிஞ்சி, ராட்சஸ மரமாக விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதன் நிழலில் இலவசங்கள், நலத்திட்டங்கள் என்கிற உரங்களின் உதவியுடன், சமத்துவமான சமூகப் பயிர்கள் வளரும் என்று தமிழக அரசு கூறுவது, பொதுஅறிவுக்கும், பகுத் தறிவுக்கும், உண்மையான நாட்டுப் பற்றுக்கும் விடப்பட்ட சவால் என்பதே உரைகல்லில் உரசிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் உண்மையாக இருக்க முடியும்.

உலகம் முழுவதும், பெற்றோரை இழந்து, அரவணைப்பு தர வேண்டிய குடும்பங்களை இழந்து, தெருக்களிலும், ஆதரவற்றோர் விடுதிகளிலும் புகலிடம் தேடும், குழந்தைகளின் எண்ணிக்கை இன்றைய அளவில் 14  கோடிகளைத் தாண்டிவிட்டதாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  இவர்களில் எண்பது சதவீதம் ஆதரவற்றகுழந்தைகள், இந்தியா உட்பட வளரும் நாடுகளில் இருப்பவர்களே. இன்றைய அளவில், உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்,ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, இப்படி நாளுக்கு நாள் குழந்தைகள் பெற்றோரையும், வீடுகளையும் இழப்பதற்கு குடும்பங் கள், சமூகம், அரசியல், அரசின் தவறான கொள்கைகள் என்று அனைத்திற்குமே குற்றப்பங்கு உண்டு.  இயற்கை விபத்துக்கள், சாலைவிபத்துக்கள், பொத்துப் போன விவசாயம், எயிட்ஸ் உட்பட பல்வேறு வகை நோய்கள், கொலைகள், குற்றங்கள், கந்து வட்டிக்கடன் தொல்லை, கள்ளச்சாராய சாவுகள், அரசே நடத்தும் சாராயக்கடைகளால் ஏற்படும் சாவுகள், முறைதவறும் உறவுகள் என்று நாளுக்கு நாள் காரணங்கள் அதிகமாகி வருகின்றன.

ஆயினும், ஆதரவற்ற இக்குழந்தைகள் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் எப்படி நடத்தப்படுகின்றனர்? எப்படிப்பட்ட எதிர்கால வாழ்க்கைக்கு இக்குழந்தைகள் தயார் செயப்படுகிறார்கள் என்பதைப்பற்றி சமூகம் அக்கறைப்படுவதற்கான அறிகுறிகள் சிறிதும் இல்லை என்பதே மிகவும் வேதனைக் குரியது.

அனாதை ஆசிரமம் என்பது, பலரும் தமிழகத்தில் பொதுவாக உபயோகிக்கும் ஒரு வார்த்தை.  தமிழ் சினிமாவில் வரும் பணக்காரத் தந்தைகூட, ஊதாரியான மகனிடம் கோபம் கொண்டு, “என் சொத்துக்களை ஒரு அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைப்பேனே தவிர, உனக்கு ஒரு சல்லிக்காசுகூட கொடுக்க மாட்டேன்.” என்று வசனம் பேசுவார். ஆதரவற்ற குழந்தையை, அனாதை என்று அழைப்பது வழக்கமாயினும், அவ்வார்த்தை சற்றும் சிந்தனையில்லாமல் நாம் அலட்சியமாகத் தூக்கிவீசும் ஒரு அநாகரீகச் சொல்லே ஆகும். மேலும், வாழ்க்கையின் தொடக் கத்தில் இருக்கும் ஒரு குழந்தை, குடும்பத்தை இழந்து சந்தர்ப்பவசத்தால் தஞ்சமடையும் இடத்தை நிச்சயம் “ஆசிரமம்” என்று குறிக்கலாகாது.

சமூகநலத்துறை மூலமாகவும், உண்மையான தொண்டுள்ளத்துடன் அறக்கட்டளைகள் மூலமாகவும் நிர்வகிக்கப்படும் பல காப்பகங்களில் பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் குழந்தைகள் மிகுந்த பரிவுடன் நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மைதான். 

ஆயினும், அரசு பதிவு பெற்ற, பதிவு பெறாத நூற்றுக்கணக்கான காப்பகங்கள்குழந்தைகளுக்கு அடைக்கலம்கொடுக்கிறோம் என்கிற போர்வையில் மிகப்பெரிய அநீதி இழைத்து வருகின்றன என்பதும் உண்மையின் கசப்பான மற்றோரு பக்கம். பெரும்பாலான காப்பகங்களில், அரசு வரையறுத்துள்ள குறைந்தபட்ச வசதிகள்கூட செயப்படவில்லை.  இதில், அரசே நடத்தும் விடுதிகள்கூட விதிவிலக்கல்ல என்பதும் வேதனையான விஷயம். இடவசதி, படுக்கை வசதி, காற்றோட்டம், கழிப்பிடம், சுகாதாரமான உணவகம், தண்ணீர், உடை, முக்கியமாக அன்பு, பரிவு, புரிதல் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறை.

விடுதிகளையும், காப்பகங்களையும் சமூகநலத்துறை மற்றும் குழந்தை நலகுழுமம் ஆகியவை ஆய்வு செய்து, வரையறுக்கப்பட்டுள்ளவசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல, ஆய்வாளர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது காப்பகங்கள், விதிமுறைகளின் படி செயல்படுகின்றனவா என்று தணிக்கை செய்ய வேண்டும். ஆயினும், சமூகநலத்துறையில் உள்ள ஊழல்,  விடுதிகளையும் காப்பகங்களையும் முறைப்படுத்த வேண்டிய சரியான செயல்திட்டம் இல்லாமை ஆகியன எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். ஆதலால், சமூக நலத்துறை, நலங்கெட்ட ஒரு துறையாக உள்ளது என்பதே நடைமுறை உண்மை.

மிகுந்த மனஅழுத்தத்துடனும், உடல்நலம் இல்லாமலும் உள்ள விடுதிச் சிறுவர், சிறுமியரிடம் (Institutionalised Children) பரிவாகவும், பாசத்துடனும் பழகுவதுடன், அவர்களது பிரச்சினைகளையும், பயங்களையும் போக்குவதற்கு ஒவ்வொரு விடுதிகளிலும் “ஆலோசகர்கள்” “வழிகாட்டிகள்” இருக்க வேண்டியது மிக அவசி யம். ஆயினும், தகுதியுள்ள குழந்தை மனநல ஆலோசகர்கள், அரசு நடத்தும் விடுதிகளிலேயே பற்றாக்குறை. புற்றீசல் போல கிளம்பியுள்ள பல தனியார் காப்பகங்களில், குழந்தைகளின் மன அழுத்தம் பற்றிய குறைந்தபட்ச சிந்தனையோ, அதன் அவசியம் பற்றிய புரிதலோகூட இல்லை என்பதே வெளிப்படை.

திருமணசத்திரத்திலோ, இரயில் நிலையத் தங்கும் அறையிலோ, ஒரே ஒரு இரவைக் கழிப்பது கூட நம்மில் பலருக்கு மிகுந்த மன உளைச்சலைக்கொடுக்கும்.  மாட்டுக் கொட்டகைகள் போல சுகாதாரமற்று இருக்கும் பல காப்பகங்களின் வரிசையான படுக்கைகளில்,அருகில் இல்லாத தாய் தந்தையரின் நினைவுகளுடனும், ஏக்கங்களுடனும்,அடுத்தடுத்து படுத்துறங்கும் குழந்தைகளின் நிலையை சமூகம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


பல சிறுவர் விடுதிகளில், கொடையாளிகள் மூலம் உணவு படைக்கப்படும் பொழுது, விடுதிக் குழந்தைகள் உணவு உட்கொள்ளும் முன்,கொடையாளிகளை வாழ்த்தியும், அவர்களது நலனுக்காக கடவுள்களிடம் வேண்டிய பின்னரே, உணவு உட்கொள்ள விடுதி நடத்துபவர்களால் பழக்கப்படுத்தப்படுகின்றனர். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக, கொடையளிப்போர் இறைவனிடம் வேண்டுவதற்குப் பதில், விடுதிக் குழந்தைகளைக் கொண்டு கொடையாளிகளை வாழ்த்த வைப்பது எவ்வளவு கேவலமான செயல். 

மணநாள், பிறந்தநாள் என்று முக்கிய தினங்களில் கொடை அளிப்போரில் சிலர், விடுதிகளுக்கு நேரில் வரமுடியாத பட்சத்தில், மதிய உணவின் போது குழந்தைகள் தங்களுக்காக பிரார்த்தனை செய்தார்களா என்று தொலைபேசி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வேதனையான நிகழ்ச்சி களும் வாடிக்கைதான்.

எல்லா மதங்களின் பெயராலும், அன்னைதெரஸா, மகாத்மாகாந்தி போன்ற மகான்களின் பெயர் கொண்டும், பெட்டிக்கடைகள் போல ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்பட்டுள்ள பல ஆதரவற்றோர் இல்லங்கள், அதனைத் தொடங்கியவர்களுக்கு ஒருவகைத் தொழில்களாகவே மாறிவிட்டன.  இவ்வகை விடுதிகளின் நிர்வாகிகள்,கொடையாளர்களின் முன்னால் சிறுவர் சிறுமியரை நடத்துவதற்கும்,தனிமையில் அவர்களை நடத்துவதற்கும் மிகுந்த இடைவெளி உண்டு.

இவ்வகை நிறுவனங்கள், வகை வகையான வீடியோக்கள், கலர் கலரான நோட்டீஸ்கள் என்று வெளியிட்டு அயல்நாட்டு நிதியைத் திரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றிய குழந்தைகள் ஆகியோர் அனுமதி கொடுக்க இயலாத நிலையில், அவர்களின் புகைப்படங்களை, கொடையாளர்களிடம் பச்சாதாபம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவது ஒரு வகையில் மனித உரிமை மீறலே.  முச்சந்திகளில் வாடிய குழந்தை முகத்தைக் காட்டி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தி யாசம்?

பல விடுதிகளில் சிறுகுழந்தைகள் முதல் வயதுக்கு வந்து விட்ட இளம் பிராயத்தினர் வரை பலருக்கும், காப்பகம் நடத்துபவர்களாலும் மற்றோராலும் ஏற்படும் பாலியல் தொல்லைகள், பாலியல் குற்றங்கள் பற்றி, மத்திய மாநில சமூகநலத் துறைகளுக்குத் தெரியாமல் இல்லை.

உதாரணத்திற்கு, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான விடுதிகள் இருந்தாலும், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, மகாபலிபுரம் என்று சுற்றுலாத் தலங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் அவை தொடங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து, அவர்களது டாலர் நோட்டுகளைப் பெறுவதே இவ்விடுதி தொடங்கியவர்களில் பெரும்பாலானவர்களின் நோக்கம்.

மகாபலிபுரத்தை எடுத்துக் கொண்டால்,   அங்கு மட்டும் கிட்டத் தட்ட 40 விடுதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. வந்து போகும் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலரின் குரூரத்திற்கு, மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தலங்களில்,விடுதி இளம்சிறார்கள் பாலியல் ரீதியாக பலியாக்கப்படுவதாக பல வருடங்களாகச் சொல்லப் படுகிறது.  தமிழகத்தில் உள்ள மகாபலிபுரங்கள்,இன்றைய அளவில் “மகா பாவபுரங்களாக” மாறி வந்தாலும், இப்பிரச்சினை சமூக நலத்துறையையும், காவல்துறையையும்,சமூக ஆர்வலர் களையும், சமூகநீதி பேசும் அரசியல் தலைவர்களையும் இன்னும் உறுத்தவில்லை என்பது நம் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

புதிய சட்டசபை வளாகம் கட்டவேண்டுமென்று முடிவெடுத்து விட்டால், அதனை உடனே செயல்படுத்தி, அவ்வளாகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஆட்சியாளர்கள் பூரித்துப் போகிறார்கள். ஆனால், எயிட்ஸ் நோய் பரவுவதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றான, மது விடுதிகளை ஒரு பக்கம் மும்முரமாக நடத்திக் கொண்டே, எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு நல வாரியம் அமைப்பதாக நிதி நிலை அறிக்கையில் சொல்லி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், அதற்கான அடிப்படை வேலைகளைக் கூட பூர்த்தி செயாத அரசிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

வண்ணத்தொ(ல்)லைக்காட்சி முதல் பொங்கல் இனிப்புப் பொட்டலங்கள் வரை முதலமைச்சர் களின் முகம் வரைந்து இலவசமாக விநியோகம் செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கின்றன நம் அரசுகள்.  ஆனால், இதே அரசுகள் தங்கள் தவறான, பல நடவடிக்கைகளின் விளைவாக, ஆதரவற்றுப்போன குழந்தைகளின் மேம்பாட்டிற்கு, போதிய முதலீடு செய்வதில் அக்கறை காட்டாதிருக்கின்றன.

தமிழகத்தில் மாவட்டத்தோறும் உள்ள குழந்தைநல குழுமங்களுக்கு (Child Welfare Committee) அவசியமான குறைந்த பட்ச வசதிகள்கூட செய்துதரப்படவில்லை. நல்ல ஒரு அரசுக்கு, சமூகநலத்துறையே மிக முக்கியம் வாய்ந்த ஒரு துறையாக இருக்க வேண்டும். ஆயினும் ஆழ்ந்த அனுபவமோ அல்லது குறைந்தபட்ச அக்கறையோ இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களையே சமூக நலத்துறை அமைச்சர்களாக ஆக்குவது பல வருடங்களாக தொடரும் வாடிக்கையாகி விட்டது.

காப்பகங்களில் உள்ள சிறுவர், சிறுமியர்களில் பெரும்பாலானோர், தாயோ (அதிகமாக) அல்லது தந்தையோ உள்ளவர்களே.  பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் பொருளாதாரப் பிரச்சனையின் காரணமாகவே,அவர்கள் காப்பகங்கள் மற்றும் விடுதிகளில் விடப்படுகிறார்கள்.  பெற்றோர் ஆதரவு இல்லாமல், காப்பகங்களிலோ, விடுதிகளிலோ வாழும் பலர், வெளிச் சமூகத்தின் மேல் பயத்துடனோ, கோபத்துடனோ, தாழ்வுமனப்பான்மையுடனோ, குற்ற உணர்ச்சியுடனோ, தன்னம்பிக்கை இழந்தோ, இவை கலந்த மனஅழுத்தத்துடனேயோ நாட்களைக் கழிக்கிறார்கள். ஆதலால், பதினெட்டு வயதுக்குப் பின் காப்பகங்களை விட்டு வெளியேறி, சமூகத்தின் அங்கத்தினராக முழு வாழ்க்கை வாழ்வது அவர்களுக்கு ஒரு பெரும் போராட்டமாகவே அமைந்து விடுகிறது.

ஆறுமாதமோ, அல்லது ஓரிரு வயதோ ஆன பச்சிளங் குழந்தைகள் எளிதாகத் தத்துக் கொடுக்கப் படுகின்றனர். ஆனால், 4 வயது முதல் 16 வயதுவரை உள்ள ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் விடலைகளை யாரும் தத்தெடுக்க முன் வருவதில்லை. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆதரவற்ற தாய்க்கு, கைம் பெண்ணிற்கு பொருளாதார ரீதியிலும், நல்ல ஆலோசனைகள் வழங்கியும் ஆதரவாக இருந்தாலே போதும், குழந்தைகளுக்கான காப்பகங்கள் பெருவாரியாகக் குறைந்துவிடும். அத்துடன், ஆதரவு அளிக்கும் ஒவ்வொரு குடும்பமும் பல்கலைக்கழகமாகி விடும்.

எங்கேயோ வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து தம்பதிகளாக ஆகமுடியும் என்றால், அவர்கள் பின்னர், ஒரு ஆதரவற்ற சிறுவனையோ, சிறுமியையோ தங்களுடன் இணைத்துக் கொண்டு, நிறைவான அர்த்தமுள்ள பெற்றோராகவும் முடியும் என்பதை ஏன் நம்மால் மனப்பூர்வமாக உணரமுடியவில்லை? குடும்பத்தை இழந்த ஒரு குழந்தைக்கு ஒரு மாற்றுக் குடும்பம், பெற்றோரை இழந்த ஒரு குழந்தைக்கு மற்றோரு பெற்றோர் அமைய வேண்டும். அதுவே ஒரு மேம்பட்ட சமுதாயத்தின் அடையாளம்.  இதுவே அரசின் கொள்கையாகவும் இருக்க வேண்டும்.

முத்தாய்ப்பாக ஒரு உண்மை நிகழ்ச்சியை விவரித்தால்தான் இக்கட்டுரை நிறைவு பெறும்.  
கும்பகோணம் பள்ளியில் குழந்தைகளைத் தீ விபத்தில் பறிகொடுத்து பெற்றோர் கதறி அழுததைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கண்கலங்கினார்கள் சென்னைக்கு அருகில் உள்ள ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகள்.  பின்னர், ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசிக்காமல், தனித்தனியே எல்லோரும், கும்பகோணத்துப் பெற்றோருக்கு எழுதிய ஆறுதல் கடிதங்கள் வெவ்வேறு முறையில் எழுதப்பட்டிருந்தன. ஆயினும், அவற்றின் மையமாக ஒரே கருத்தே அமைந்திருந்தது. 

“குழந்தைகளை இழந்து தவிக்கும் நீங்களும், பெற்றோர் இல்லாமல் வாடும் நாங்களும் இணைந்து, ஏன் மீண்டும் “அழகிய குடும்பங்கள்” ஆகக் கூடாது” என்பதே அக்கருத்து.    


Wednesday, July 14, 2010

கடந்த மாதம், பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தினத்தை கோலாகலமாகக் கொண்டாடின தமிழக அரசும், அரசியல் கட்சிகளும். இம்மாதமும் வழக்கம்போல, காந்தி ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம். இதேபோல் தான், பெரியார் பிறந்த தினம், அம்பேத்கர் ஜெயந்தி என்று பலரும் இந்த தினங்களை ஒரு சம்பிரதாயம் போல் மாற்றிவிட்டோம்.
கடவுள்கள் பெயரில் போலிச்சாமியார்களும், கோவில்களைச் சேர்ந்த சிலரும் அறியாத மக்களைச் சுரண்டுகிறார்களோ அதேபோல், தங்களை நிலைநிறுத்திக் கொண்டு மக்களைச் சுரண்டுவதற்கு அந்தந்த இயக்கங்கள் பெயரில் போலித் தலைவர்கள், இப்பெரியவர்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதேபோல, காந்தியத்திலும் அம்பேத்கரியத்திலும், பெரியாரின், அண்ணாவின் உண்மை மிகுந்த கொள்கைகளின் மேலும் தங்களுக்கே நம்பிக்கையில்லாமல், அவற்றை காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள் அரசியல்வாதிகள். ஆனால், இந்தப் பெரியோர்களின் அதீத பிம்பத்தை மட்டும் தங்கள் இலாபத்திற்காக தூக்கிப்பிடித்து வருகின்றனர். உதாரணமாக காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும், அண்ணாவும் ஒருவருக்கொருவர் கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், வெவ்வேறு விதமான அரசியலை முன்வைத்திருந்தாலும் ஒரு முக்கியமான புள்ளியில் சந்தித்தனர், உடன்பட்டனர்.
சாராயத்தை ஒரு வருமானமாகப் பார்க்காமல், ஒரு சமூகத்தீமையாகக் கருதியதே அப்புள்ளி. ஆனால், பின்னர் வந்த அரசியல் தலைவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சாராய முதலாகளிடம் விலை போனதோடு, தங்களது கட்சிக்காரர்களைத் திருப்திபடுத்துவதற்காக சாராய ஒப்பந்தங்களை துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தினர்.
இவ்வாறு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக படிப்படியாக இந்திய இளைஞர்களை, சமுதாயத்தை எப்படி சாராய நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளிவிட்டார்கள் என்பதற்கு சாராய அதிபர் விஜய் மல்லையா போன்றோரின் இன்றைய வெற்றி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். 
உலகத்தின் மிகப்பெரிய சாராய மன்னராகவும், மக்களவை உறுப்பினராகவும் திகழும், “யுனைடெட் புரூவாரீஸ்” நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா. அவரை கோவா கடற்கரையை ஒட்டியுள்ள, அவரது மிகப்பிரம்மாண்டமான “வசந்த மாளிகை”யில் வைத்து, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் CNN அமெரிக்க தொலைக்காட்சியின் நிருபர், பேட்டிக்காக சந்தித்தார். விஜய் மல்லையா தனது வெற்றியின் இரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கான உரையாடலாக அந்த பேட்டி அமைந்தது.
கோவாவில் உள்ள, அவரது மாளிகையின் சொர்க்க வாசலைத்தாண்டி வரும் எவரும், அதன் மிகுந்த ஆடம்பரத்தைப் பார்த்து, கால்கள் நடுநடுங்கி துவண்டு விழ வேண்டும் என்ற அளவிற்கு, அவராகவே முன்னின்று பார்த்துப்பார்த்து, அந்த மாளிகையை பிரம்மாண்டமாக வடிவமைத்ததாக மல்லையா அப்பொழுது நிருபரிடம் கூறினார்.
மாளிகையின் கம்பீரமான அறைகள், உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் குளங்கள் ஆகியவற்றைப் பார்த்து நிஜமாகவே தலை சுற்றிய நிருபரிடம், தான் இதுவரை சேகரித்துள்ள 250  வகை புராதனக் கார்கள், 200 பந்தயக் குதிரைகள், உலகத்தின் எல்லைப்பகுதிகளிலும் வாங்கியுள்ள எஸ்டேட்டுகள், திப்புசுல்தானின் வாள், பல நாடுகளில் இருந்து வாங்கியுள்ள கலைப்பொருட்கள், தங்கத்தால் ஆன ஓவியங்கள் என தன் பல்வேறு சொத்துகளைப் பற்றி பெருமையுடன் விளக்கினார்.
பின்னர் தனது வியாபார வெற்றிக்கான நெளிவு சுளிவுகளைத் தன் தந்தையிடம் இருந்து பாலபாடமாகக் கற்றது பற்றி கூறினார். இந்தியா விடுதலை அடைந்த 1947ம் வருடம், ஆங்கிலேயர்களின் “யுனைடெட் புரூவாஸ்” என்கிற சாராய நிறுவனத்தை, அவரது தந்தை விலைக்கு வாங்கி, திறம்பட நடத்தி வந்தார். பின்னர் 1977ம் ஆண்டு, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், நாடு தழுவிய முழு மதுவிலக்குக் கொள்கை கொண்டு வருவதாகத் திட்டமிட்டார்.  ஆதலால், இந்தியாவில் உள்ள பல மது நிறுவனங்களின் பங்குகள் மிகுந்த வீழ்ச்சியடைந்தன.  அப்பொழுது அந்த மது நிறுவனங்களை, மல்லயாவின் தந்தை, அடிமாட்டு விலைக்கு வாங்கியுள்ளார்.
மதுவிலக்குக் கொள்கையை, மொரார்ஜி அரசு அமுல்படுத்த இருக்கும் நிலையில், நஷ்டமடைந்து வரும் மது நிறுவனங்களைப் போய் ஏன் வாங்குகிறீர்கள் என்று இளைஞரான விஜய் மல்லயா கேட்டதற்கு, “இந்தியாவில் உள்ள அரசுகள், மதுத்தீர்வைகள் மூலம் வருமானம் பார்த்து ருசிகண்டு விட்டன. எனவே மது விலக்கைக் கொண்டு வர அவற்றால் முடியாது, அதனால், இந்தச் சாராய நிறுவனங்களை குறைந்த விலைக்கு வாங்க இதுதான் சரியான நேரம்”என்று தீர்க்க தரிசனத்துடன் அவரது தந்தை விளக்கமளித்துள்ளார்.
தந்தையின் தொழிலில் இறங்கிய பின்னர், 27 வயது இளைஞரான விஜய் மல்லயா, “கிங்ஃபிஷர்” என்னும் மேலைநாட்டு மது பிரான்டை (Brand), வெறும் பத்து இலட்ச ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியதாகக் கூறினார். பல கல்லூரிகளுக்கும் சென்று, அங்குள்ள, பதினேழிலிருந்து பத்தொன்பது வயதுக்குட்பட்ட, இளைஞர்களிடம் “நீங்கள், பீர் குடிக்க விரும்புகிறீர்களா? எந்த வகையான பீர்கள் குடிப்பது பிடிக்கும்?” என்றெல்லாம் பேசி தனது, “கிங்ஃபிஷர்” பிரான்டை எல்லா இளைஞர்களும் விரும்பத்தக்க வகையில் வளர்த்ததாக, பேட்டியின் போது நினைவு கூர்ந்தார் விஜய் மல்லையா. 

மேலும், “கிங்ஃபிஷர்” பெயரை பிரபலப்படுத்தும் நோக்கில், பல இசை நிகழ்ச்சிகள், எல்லாவகை விளையாட்டுப் போட்டிகள், எல்லா நகரங்களிலும் பேஷன் நிகழ்ச்சிகள், அழகிப் போட்டிகள் என தொடர்ந்து “ஸ்பான்ஸர்” செய்ததைக் கூறி புளகாங்கிதமடைந்தார்.
அதன் விளைவாக கடந்த முப்பது வருடங்களில் இது, “கிங்ஃபிஷர்” என்றாலே, நல்ல வாழ்க்கை, ஜாலியான நேரம் என் இளைஞர்கள் கருதும் அளவிற்கு, இந்தியாவின் மிகப் பிரபலமான, முதன்மையான பிராண்டாக வளர்ந்து விட்டதாக, பெருமைபொங்க  கூறினார்.  
மேலும் கூறுகையில் “உலக அளவிலும், இந்தியாவிலும் தனது இந்திய நிறுவனங்கள் மூலம், பீர் மற்றும் கரும்புக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகள் நன்றாக விற்பனையாகி வருகின்றன, ஆயினும், பொருளாதார ரீதியில் முன்னேறிவரும் இந்திய இளைஞர்கள், உலகத்தரத்தில் பார்லி அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்காட்ச் விஸ்கியை மிகவும் விரும்புவார்கள் என்று புரிந்தது, ஆதலால் சமீபத்தில் ஸ்காட்லாண்டு நாட்டில் உள்ள, தொன்மையான ஸ்காட்ச் விஸ்கி நிறுவனத்தை வாங்கியுள்ளதன் மூலம், உலகின் மிகப்பெரிய மதுநிறுவன அதிபராகி விட்டதாகவும்” நிருபரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், எல்லோரும் சேமிக்கும் பழக்கத்தை கைவிட்டு, தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவதாகவும், இதன் காரணமாக, தங்களது மது வியாபாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும்” மல்லயா அப்போது கூறினார்.
சட்டத்தில் உள்ள ஓட்டையை சாதுர்யமாகப் பயன்படுத்தி, அரசியல்வாதிகள் துணையுடன் அவரால் தனது சாராய பிராண்ட் “கிங்ஃபிஷர்” பெயரிலேயே, ஆகாயவிமான சேவை நிறுவனம் துவங்கி, “கிங்ஃபிஷர்” சாராயத்தை பறந்து, பறந்து உலகளவில் பிரபலப்படுத்த முடிகிறது.
கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் கிளப் ஒன்றை மிகச்சுலபமாக நடத்தும் அவரைப் பொருத்தவரை, ஐபிஎல் கிரிக்கெட் அவரது “கிங்ஃபிஷர்” சாராய விற்பனையை அதிகரிக்க உதவும் முதலீடுதான்.  சமீபத்தில்தான் விஜய் மல்லயா, ஒரு தீவையும் விலை பேசி முடித்திருக்கிறார்.
அவரது கோவா வசந்த மாளிகையில் நடக்கும் மது விருந்து கோலாகலக் கொண்டாட்டங்களில் நடிகர் நடிகைகள், மும்பை அழகிகள், எம்.பிக்கள் மற்றும் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்கிறார்கள்.
மகாத்மா காந்தி பயன்படுத்திய கண்ணாடி, கடிகாரம், பாதணி போன்ற சில பொருட்களை, தம் வசம் வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர், அப்பொருட்களை சில மாதங்களுக்கு முன் நியூயார்க் நகரத்தில் வைத்து ஏலத்திற்கு விட்டார்.  காந்தியின் பொருட்களை விற்காமல், இந்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டுமானால், இந்திய அரசு இராணுவத் தடவாளங்களுக்கு மேலும், மேலும் செலவு செய்வதைக் குறைத்து, மக்களின் ஏழ்மையைப் போக்குவதற்கும், அவர்களின் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்குவதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை அளித்தார், ஓடிஸ். ஆயினும் காந்தியின் பொருட்கள் ஏலத்திற்கு வந்தன.
காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தியும், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும், நடுத்தர வர்க்கமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து நாட்டுப்பற்று பீறிட, எப்படியாவது, காந்தியடிகளின் பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று தொடர்ச்சியாக தொலைக்காட்சிச் செய்திகள் மூலமாக, உச்சக்கட்ட கவலையோடு, கருத்துப் பரிமாற்றம் செய்தார்கள். அவர்களது கவலையைப் போக்கும் விதமாக, விஜய்மல்லயா, 1.6 இலட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 80 இலட்சம்) கொடுத்து, காந்தியின் பொருட்களை ஏலத்தில் மீட்டெடுத்தார். எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள்.  அகிம்சையை நினைவூட்டும் காந்தியின் நினைவுச் சின்னங்களை மீட்ட மல்லயாவிற்கு நன்றி சொன்னார்கள்.
காந்தியைக் காப்பாற்ற....மன்னிக்கவும்..., காந்தியின் பொருட்களைக் காப்பாற்ற, சாராயப் பணமா? என்கிற சிறிய கூச்சம் கூட இன்றி, இந்திய அரசு தான், மறைமுகமாக விஜய் மல்லயா மூலம் ஏலத்தில் வாங்கியதாகக் கூறியது காங்கிரஸ். கடந்த மாதம், மற்ற சில பொருட்கள் அயல் நாடுகளில் ஏலத்திற்கு வந்தது. ஏனோ இம்முறை, இந்தக் காந்திப் பற்றாளர்களும், சாராய அதிபர்களும் இதனைப் பெரிதுபடுத்தவில்லை.
சாராயம் இருக்கும் வரை, இந்தியாவில் அகிம்சை எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. கோடிக்கணக்கான இளைஞர்களையும், குடும்பங்களையும் நிர்மூலமாக்கும் சாராய வியாபாரம் மூலமாக மட்டும், இன்று, 5 பில்லியன் டாலர் (ரூ. 25,000- கோடி) அளவிற்கும் மேலாக சொத்து மதிப்புள்ள மல்லயாவிற்கு, ரூ. 80  இலட்சம் என்பது  சில்லரைக்காசு. “அதனாலென்ன? சட்டத்திற்கு உட்பட்ட வியாபாரம் தானே அவர் செய்கிறார்” என்று விளக்கமளித்தனர். சரிதான். உப்பிற்கு வரி என்பது சட்டத்திற்கு உட்பட்டதா இருந்தாலும்,   நீதிக்கும், நியாயத்திற்கும் எதிர்மறையாக இருந்தால், அந்த சட்டத்தைக் கூட மீறலாம் என்கிற காந்தியச் சிந்தனையை ஏன் நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்? 
அரசாங்கமே மக்கள் நலன் பற்றிய சிந்தனை இல்லாமல் சாராய வியாபாரம் செய்து, 30 சதவீத அளவிற்கு அரசு கஜானாவை நிரப்புகின்ற இழிநிலை உள்ள காலகட்டத்தில் இருந்து கொண்டு, நீதியையும், நியாயத்தையும், ஒழுக்கத்தையும் பற்றி பேசுவதற்கு நமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை தானே?  துரதிர்ஷ்டவசமாக, கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள், சட்டத்திற்கு உட்பட்ட தொழில்களாக இல்லாமல் போய்விட்டன.  இல்லையென்றால், மல்லயா போன்றவர்களின் புண்ணியத்தில், அரசே நடத்தும் மது போதை நிறுவனங்கள் மூலமாக, கஞ்சா, போதை ஊசி என்று இரத்தச் சகதி மிகுந்த கடைபரப்பி , மாநில அரசுகளும், தங்களது நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பெரும் புரட்சி கொண்டு வந்திருப்பார்கள். அண்ணா பிறந்த தினத்தையும், அம்பேத்கார் ஜெயந்தியையும், காந்தி ஜெயந்தியையும் வருடம் தோறும் விடாமல் கொண்டாடும் ஆட்சியதிகாரத்தில் உள்ள இவர்கள் யாருக்கும் வெட்கமில்லை?........

Tuesday, July 13, 2010கடந்த செப்டம்பர் மாதக் கடைசியில் “கிவ் லைப்” எனும் அமைப்பு, மற்ற பல நிறுவனங்களுடன் இணைந்து “சென்னை மாரத்தான்” ஓட்டப்பந்தைய நிகழ்ச்சியை நடத்தியது. சமூக சேவையின் அவசியத்தை முன்வைத்ததோடு, இந்நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு ஏழைக்குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு முதலீடு செய்வதாக அறிவித்தது, பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சியே! இதில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளும், ஆர்வலர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். 
பலகாலமாகவே, தொண்டு நிறுவனங்களுக்கு மற்றும் ஏழைமக்களின் மருத்துவத்திற்கு என்று பல்வேறு தேவைகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.  ஆயினும் பெரும்பாலான இவ்வகை நிகழ்ச்சிகளின் முடிவில், விளம்பரம், பராமரிப்பு மற்றும் விழாச் செலவுகள் போக பயனாளிகளுக்கு எஞ்சுவதோ மிகச் சொற்பமான நிதியே. அதுவும் கூட காலம் தாழ்ந்து வந்து சேர்கிறது என்பதே பல பயனாளிகளின் மனக்குறையாக உள்ளது.
இடது கைக்குத் தெரியாமல், வலது கை கொடையளிக்க வேண்டும் என்பது பழைய கதை. அதிநாகரீக இக்காலத்தில், சுய விளம்பரத்திற்காகவே சமூக சேவை என்றாகி விட்டது. பத்து ரூபாய் கொடையளித்துவிட்டு அதனை நூறு ரூபாய் செலவழித்து விளம்பரம் செய்கிறார்கள் சிலர். ஆடம்பர விழாக்களின் முடிவில், மீந்து விட்ட உணவை, குப்பங்களில் கொண்டு போய் விநியோகம் செய்வதெப்படி என்று யோசிக்கும் பலரும், எளிமையாக விழா நடத்துவது பற்றி யோசிப்பதே இல்லை. 
நிறுவனங்களின் சமூகக் கடமை (CSR) என்பது, இன்று புதிதாகப் பிறந்துள்ள வார்த்தை. பல பெரிய தொழில் நிறுவனங்களிலும், CSR என்பதை ஒரு தனிப்பிரிவாக எடுத்துக் கொண்டு, தொண்டு நிறுவனங்களுக்கும், சமுதாயப் பணிகளுக்கும் நிதியுதவி செயப்படுகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்கள், சில கோடிகள் சமூகப் பணிக்காக செலவிடுகின்றன.  ஆனால், குறைந்த பட்ச அளவில் கூட அரசுக்கு வரி அளிக்க வேண்டியதில்லை. ஒரு சமூகத் தணிக்கை அமைப்பு வெளியிட்ட விபரங்களின்படி, இவ்வகை மென்பொருள் நிறுவனங்கள், வரி விலக்கு மூலம் அடைந்த பயனில் மிகக்குறைந்த அளவே CSR மூலம் சமூகப் பணிக்கு செலவிட்டு அதிக விளம்பரமும், மதிப்பும் தேடிக் கொண்டுள்ளன.  
NSS எனப்படும் நாட்டு நலப் பணியில் கல்லூரி மாணவர்களும், அந்தத் துறை சார்ந்த ஆசிரியர்களும் வெறும் சான்றிதழ்களுக்காக “கடனே”என்று மேலோட்டமாக ஈடுபட்டு வரும் போக்கு, சமூகப் பணியிலிருந்தும், நாட்டுப் பணியிலிருந்தும், இளைஞர் சமுதாயம் அன்னியப்பட்டு வருவதையே குறிக்கிறது.  அதே போல், இன்று சமூகப் பணி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு சமூகப் பணியின் குறிக்கோள், சமூக முன்னேற்றத்திற்கான வழிகள் திட்டங்கள் போன்றவற்றை விட தொண்டு நிறுவனங்கள் தொடங்கினால் எப்படி நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்வது, எப்படி Project Report தயார் செய்வது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத விதமாக பெரிய அளவில் சுனாமி தாக்கியபோது மூன்று, நான்கு வருடங்களாக நடைப்பெற்ற சுனாமி புனரமைப்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன. பல தன்னார்வ நிறுவனங்கள் மிகச்சீரிய பணி மேற்கொண்டன என்பது உண்மைதான். ஆயினும், மத்திய மாநில அரசுகள், உள் நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள், ஆசிய, உலகவங்கி என பல அமைப்புகளும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்தும், உண்மையான பலன், உண்மையாக சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, தரமான வகையில் சென்றடைந்தனவா என்பது இன்றுவரை ஒரு கேள்விக்குறியே. 
சுனாமி நிவாரணப் பணிகள் மூலம், பல இடைத்தரகர்களும், போலித் தொண்டு நிறுவனங்களும், சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்களது தொப்பையையும், நிதி ஆதாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதே நிதர்சனம். மீண்டும் ஒரு சுனாமி வராதா இன்னும் கொஞ்சம் காசு பார்ப்போமே என் சிலர் காத்திருக்கின்றனர் என்றால் மிகை இல்லை.
இன்றைய அளவில், இந்தியாவெங்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை, அரசு மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுடனும் இணைந்து கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில், பல்வேறு வகையான தன்னார்வ அமைப்புகள் உண்மையான அர்ப்பணிப்புடன் நாட்டு முன்னேற்றத்திற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்டு வருகின்றன. சுய உதவிக் குழுக்களை செம்மையாக வழி நடத்துவதுடன், அவர்களுக்கும், அரசின் குறிக்கோள்களுக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், கணிசமான நிறுவனங்கள், வட்டிக்கடைகள் போல் செயல்பட்டுக் கொண்டும், முறை கேடாக வருவாயைப் பெருக்கிக் கொண்டும் வருவது, சிதம்பர ரகசியம் ஒன்றும் இல்லை.
பல அரசு சாரா நிறுவனங்கள் (NGOS), தங்களது தொடக்ககாலத்தில் கொண்ட கொள்கை களை மறந்து விட்டு, நிதி வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், Project Report எழுதியும், விண்ணப்பித்தும் வெறும் லெட்டர் பேடு நிறுவனங்களாக சுருங்கி வருகின்றன.  மத்திய, மாநில சமூக நலத் துறையிலும், மற்ற அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகி வருவதுடன், அத்துறைகள் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் செய்யும் செலவுகளுக்கு முறையான தணிக்கையும், கணக்குகளும் இல்லை.  சமூக நலத்துறையில் பணிபுரியும் சிலருக்கும், சில தொண்டு நிறுவனங்களை நடத்துவோருக்கும் இடையில் கூடா நட்பும், கூட்டுச் சதியுமே மிஞ்சுகின்றன.  இதனால், அரசு சாரா நிறுவனங்களுக்குள் ஆரோக்கியமற்ற போட்டியும், பொறாமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மதஅமைப்புகள் சார்பாகவும், மற்ற விதத்திலும் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தும் சிலரின் முறைகேடுகள் பற்றி எழுத வேண்டுமானால் பத்து பிரதிகளாக புத்தகங்கள் எழுத வேண்டியிருக்கும்.
வரம் வேண்டிய உண்மையான ஒரு பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரே இரவில் கடவுள், நாட்டிலிருந்து, எயிட்ஸ் நோயை நீக்கிவிட்டாரானால், தனிநபர்கள் முதல்  பன்னாட்டு நிறுவனங்கள் வரை பலருடைய தொழில் பாதிக்கப்படும், அவர்களது பொருளாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பது வேடிக்கையான வேதனை.
இன்று படிப்பதே, பணம் சம்பாதிப்பதற்கு என்றும், சம்பாதிப்பதே, “தான்” நுகர்வதற்கு என்றும் ஆகிவிட்டது. முதியோரும், மனநோய் உள்ளவர்களும், உடல் குறையுள்ளோரும், குப்பைகளைப் போல, வீடுகளிலிருந்து விசிறியடிக்கப்படுகிறார்கள். டீக்கடைகள் போல, வறியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் திறக்கப்படுகின்றன.
ஒரு சிலர் முன்னேற வேண்டும், பணக்காரர்கள் ஆக வேண்டுமென்றால், பலர் சமூக பொருளாதார தளத்தில் பின்தங்கியே கீழ்நிலையில் இருக்க வேண்டும் என்பது எழுதாத விதியாகி விட்டது.  அரசியல் செய்வதே, ஜிகினாத் திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் ஓட்டைப் பறிப்பது அல்லது தக்க வைத்துக் கொள்வது, சாராயம், கட்டப் பஞ்சாயத்து முதல் வாரிசு அரசியல் எல்லா வகையிலும் பணம் மற்றும் அதிகாரத்தை சிறு கூட்டமே கையில் வைத்துக் கொள்வது என்றாகிவிட்டது. எலியாக நுழைந்து பெருச்சாளியாகப் பரிணாம வளர்ச்சி யடைவது எப்படி என்பதே அரசியலில் பால பாடமாக எடுக்கப்படுகிறது.
ஓஷோவிலிருந்து பெரியார் வரை, அவர்களது கருத்துகளை, படைப்புகளை உள்வாங்கிக் கொண்டு சமூக முன்னேற்றமடைந்தோமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் அவர்களது படைப்புகள், அந்த ஆளுமைகளின் பெயர்களில் நடத்தப்படும் அமைப்புகளின் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வரு கின்றன என்பதில் விவாதமே இல்லை.
அவரவர் கடமைகள் மறந்து போய், “ஊழல்” என்பது சமூகம், அரசியல், அதிகாரம், கல்வி, கடவுள் என்று எல்லா மட்டங்களிலும் வியாபித்து விட்டது.  இப்படிப்பட்ட சமூக சீரழிவின் விளைவாகவே, இன்று தாழ்த்தப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் தாழ்ந்த நிலையிலேயே உள்ளார்கள்.  இயற்கையாக ஏற்படும் பூகம்பமோ, புயலோ, வெள்ளமோ, வறட்சியோ அல்லது மனிதர்களின் பேராசையால் எற்படுத்தப்படும் செயற்கையான சமூகப் புதைகுழிகளோ எல்லாமே விளிம்புநிலை மக்களையே தாக்குகின்றன. உடலுழைப்பு முதல் சிறுநீரகம் வரை, ஓட்டுக்கள் முதல் வாடகைத் தாய் வரை எல்லாமே அவர்களிடமிருந்தே திருடப்படுகின்றன.
உடல் ஊனமுற்ற மக்கள், மிக மிக அடிப்படையான விஷயங்களுக்குக் கூட வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இருபத்தோராம் நூற்றாண்டு இந்தியாவிலும், உடல் ஊனமுற்றவர்களும் சரி, பிறக்கும்போதே “சாதி” என்ற பெயரில் ஊனமாக்கப்படுபவர்களும் சரி, அந்த ஊனத்துடனே, முடிவில்லாத மராத்தான் ஓட வேண்டிய சமூக நிலையிலேயே பலர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான, சமூக நீதிக்கான தேடுதல் இன்னும் பல காலம் நீடிக்கும் அபாயம் உள்ளது.  அதிலும், சமூக நீதி இயக்கங்கள் என்ற பெயரில், அடாவடி அரசியல் நடத்துவதற்கும், கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறிப்பதற்குமே சிலர் கடை பரப்பி வருகின்றனர்.  சமூக சேவையிலும், சமூக நீதியிலும், எது அசல்? எது போலி? என்பது இன்று புரிபடாத புதிராகிவிட்டது. அதனால் “சமூக சேவை” போல், “சமூக நீதி”யும் ஒரு கெட்ட வார்த்தையாகிவிடும் அபாயமும் சேர்ந்துள்ளது.  
சமூக சேவைக்கான “கிவ் லைஃப்” மாரத்தான் ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், தனிமனிதக் கடமைகளை ஞாபகப்படுத்த, விளிம்பு மக்களின் உண்மையான உரிமைகளுக்காக உண்மையுடன் குரலெழுப்ப, நாட்டுப்பற்றை முன்வைக்க, வரிகளை ஏய்ப்பு செய்யாமல் கட்டச்செய்ய, கருப்புப் பணத்தை தோண்டியெடுக்க, அர்த்தமற்ற நுகர்வுக் கலாச்சாரத்தைப் புறந்தள்ள, அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்ய, யாராவது மாரத்தான் ஓட்டம் நடத்துவார்களா? நடத்தினால் சமூக சேவைக்கான மாரத்தான் ஓட்டத்திற்கு இனி தேவையிருக்காது?


குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் இன்றைய கால கட்டத்தில், குடிநோயில் சிக்குண்டு, தங்களது மற்றும் தங்கள் குடும்பங்களின் எதிர் காலத்தை தொலைத்துக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.
உண்மை நிலையைக் கூறுவதானால், மலேரியா, சிக்குன் குனியா, காசநோய், எச்.ஐ.வி. எயிட்ஸ், புற்றுநோய் போன்ற பலவித நோய்களை விட, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை விட குடிநோயின் தாக்கமே, தமிழகக் குடும்பங்களை நாளுக்கு நாள் அதிகமாக பாதித்து வருகிறது.
பொதுவாக, குடிப்பழக்கம் இருப்பவருக்கு, குடிக்காத மற்றவர்கள் வந்து, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்வதனாலோ, உதவுவதனாலோ, எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.  குடிக்காத ஒருவர், குடிநோய் உள்ளவரின் மனநிலையிலிருந்து அணுகுவது இல்லை அல்லது அணுகமாட்டார் என்று மற்றவர் கருதுவதே இதற்குக் காரணம்.
குடிநோய் முறிவு மையங்களில் கூட, ஆலோசனைகளுடன் சில மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவரின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், குணமடைவது மிகக் கடினம்.  தற்காலிகமாக குடிப்பதை நிறுத்தினாலும், சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் தீவிரமாக குடியை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
இதனைப் புரிந்து கொண்ட, தீவிரமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த இரு குடிநோயாளிகள், நண்பர்களானார்கள்.  தாங்கள் எப்படியும் ஒருவருக்கொருவர் இணைந்து உதவிக் கொண்டு, நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டனர்.  அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் 1935ம் ஆண்டு சந்தித்துக்கொண்ட, 'பில் வில்சன்' மற்றும் 'பாப்ஸ்மித்' ஆகிய இவ்விருவரே குடிநோயில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்காக ஒரு அமைப்பை தொடங்கி, 'ஆல்கஹாலிக் அனானிமஸ்' (AA) என்று பெயரிட்டனர்.
'அஅ' கூட்டங்களுக்கு வருவோர், மது அருந்து வதைத் தவிர்த்து குணமடைவதற்கு ஏதுவாக, 'பன்னிரண்டு அம்ச வழிமுறைகள்' (12 - Steps) மற்றும் 'பன்னிரண்டு அம்ச விதிமுறைகள்' (The 12 Traditions) ஆகியவற்றை ஏற்படுத்தினர்.
1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'AA'பின்னர் உலகின் எல்லா நாடுகளிலும், நகரங்களிலும் சிறு சிறு சுயஉதவிக்குழுக்கள் போன்று செயல்படத் துவங்கின. உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குடி நோயாளிகள், இவ்வகை 'AA'  குழுக்களில் உறுப்பினர்களாகி பயன்பெற்று, தாங்களும் குடி நோயிலிருந்து விடுபட்டு, மற்றவர்களும் விடுபடுவதற்கு உதவி செய்து, தங்களது வாழ்க்கையையும், குடும்ப மகிழ்ச்சியையும் மீண்டும் புதுப்பித்துள்ளார்கள்.  இன்றைய அளவில் உலகெங்கும், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட 'AA'  குழுக்களும், 20 இலட்சம் உறுப்பினர்களும் உள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை, கிட்டத்தட்ட 120 'AA' குழுக்கள் உள்ளன. பொதுவாக இவை, கிறித்துவ தேவாலயங்கள் அல்லது அவர்களது கல்வி நிலையங் களை ஒட்டி அமைந்துள்ளன.  சமூக சேவையை முன்னிறுத்தும் கிறித்துவ தேவாலய அமைப்புகள்'AA' ஏற்படுவதற்கும், தொடர்ந்து நடப்பதற்கும் உந்துதலாக உள்ளன.
ஆயினும்'AA' குழுக்கள், எந்த மதசார்பும், அரசியல், கல்வி, சமூக, பொருளாதார சார்பும் இல்லாதவை.  'AA' அமைப்புகள் யாரிடமும் நன்கொடை வசூலிப்பது, இலவச உதவிகள் பெறுவது ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, குழு உறுப்பினர்களே இணைந்து, செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  அதே போல்'AA' கூட்டங்களுக்கு வரும் எவரும், அவர்களது பெயர், முகவரி உட்பட அவர்களது விபரங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.  'AA' கூட்டங்களுக்கு யாரும் வந்து கலந்து கொண்டு அமைதியாகத் திரும்பலாம்.
ஒவ்வொரு வாரமும், குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.  தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் எப்படி குடிக்காமல் தவிர்த்தனர் என்பதைப் பற்றியும், வரும் வாரம் தினமும் குடிக்காமல் இருப்பது பற்றியும் கலந்துரையாடி, ஒருவொருக்கொருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு, 12 அம்ச வழிமுறைகள் மற்றும் 12 அம்ச விதிமுறைகள் உதவுகின்றன. புதியதாக குடி நோயில் இருந்து விடுபட யாரேனும் விருப்பம் தெரிவித்தால், அவர்களை அணுகி, விபரங்களைத் தெரிவித்து, தங்களது கூட்டங்களுக்கு வருவதற்கு தூண்டு கோலாக செயல்படுகின்றனர்.  இப்படியாக 'AA' குழு வட்டங்கள் பெரிவடைவதும், புதிய இடங்களில் குழுக்கள் உருவாவதும் ஏற்படுகின்றன.
தாங்கள் குடிநோயில் இருப்பதற்கு, வேறு யாரும் அல்லது குடும்ப, சமூக சூழல் காரணமில்லை, தாங்கள் தான் முழுவதும் காரணம் என்கிற புரிதல், இவ்வகை 'AA' கூட்டங்களின் மூலம் ஏற்படுகிறது.  மேலும், குடிநோய் என்பது, உடல் பாகங்களில் ஒவ்வாமை மற்றும் மனபாதிப்பு என இரண்டு வகையாகவும் வெளிப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்கிறார்கள்.  குடிக்காமல் செயல்பட முடியாது என்ற நிலை மாறி, குடியை ஒவ்வொரு நாளாக நிறுத்துவதனால்உடல், மனம் மற்றும் குடும்பத்திற்கு, உடனடியாக ஏற்படும் நன்மைகள் பற்றிய புரிதல் எற்படுகிறது.
மதுவின் முன் நாம் சக்தியற்றவர்கள், ஆதலால், குடியை நிறுத்துவதற்கு நம்மை காக்கும் கடவுள் அல்லது ஒரு சக்தியின் உதவி தேவைப்படுகிறது என்பது போன்ற ஆன்மிக நம்பிக்கை உடையவர்களாக ஆகிறார்கள்.  குடும்பங்களுக்கு பணப் பற்றாக்குறை, அலைச்சல், மன உளைச்சல் ஆகியவை ஏற்படுத்தாமல், குடிப்பழக்கம் உள்ளவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு'AA' அமைப்புகள் ஏற்றவையாக உள்ளன என்றால் மிகையாகாது.
'AA' போன்றே, குடிநோயில் உள்ளவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்காக ஏற்பட்டுள்ள மற்றோரு சுய உதவி அமைப்பே (Al-Anon) 'ஆல் அனான்'  எனப்படுபவையாகும். 'ஆல் அனான்' கூட்டங்களில், குடிநோயாளியின் மனைவி, சகோதர, சகோதரிகள் ஆகியோர் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
சாதி, மதம், சமூகம், கல்வி ஆகிய சார்பு இல்லாத இவ்வகைக் கூட்டங்களில், பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் கலந்து கொண்டு, குடிநோய் பற்றிய புரிதலை அதிகப்படுத்திக் கொண்டு, மன அழுத்தங்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.  குடிப்பழக்கம் உள்ள தங்களது கணவர் அல்லது குடும்ப உறுப்பினரை, இனி ஒரு ஆரோக்கியமான மனநிலையில், கோணத்தில், அணுகமுடியும்.
'AA'  போன்றே, போதைப் பொருட்களுக்கு அடிமையாய் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உந்துதலாய் இருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாய், 'Narcotics Anonymous' (NA)  அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
'AA', 'Al-Anon', 'NA' அமைப்பு உறுப்பினர்கள், யாரையும் எதிர்ப்பதோ, எதிர்வினை ஆற்றுவதோ இல்லை.  எந்தவித விவகாரத்திலும் தலையிடுவதோ, உதவி கேட்பதோ, சுயவிளம்பரம் செய்து கொள்வதோ இல்லை.  மற்ற உறுப்பினர்கள் குடி அல்லது போதையிலிருந்து விடுபடுவதற்கு உந்துதலாய் இருப்பதன் மூலம்,  தாங்களும் குடி நோயிலிருந்து மீளமுடியும் என்பதே அவர்களின் முதன்மையான 'குறிக்கோள் சார்ந்த நம்பிக்கை'யாகும்.
இந்த நிலையில்'AA' மற்றும் 'Al-Anon' போன்ற குழுக்கள் மூலமே, பலர் தொலைத்து விட்ட அமைதியையும், வாழ்க்கையையும் மீண்டும் புனரமைத்துக் கொள்ள முடியும். 'AA' அமைப்புகளும்உறுப்பினர்களும், தமிழகத்தில் மிக மிகக் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றனர்.  இந்நிலைக்கு'AA' பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், 99.99 சதவீத மக்களுக்கு எதுவும் தெரியாததே காரணம்.
'AA' அமைப்புகள், சுய விளம்பரமோ, உதவியையோ அவர்களாகவே நாடமாட்டார்கள் என்கிற கட்டுப்பாடு உள்ளதால், இனி தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், எல்லா மதங்களையும் சேர்ந்த ஆன்மிக அமைப்புகள், தனியார் மற்றும் அரசு பள்ளி - கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியோர்'AA' பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த முன்வர வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் அந்த பகுதிகளில் குடிநோய் பற்றியும், AA பற்றியும் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யலாம். எந்தவித அரசியல் மற்றும் இயக்கரீதியான குறுக்கீடு செய்யாமல் சாதி மத அரசியல் சார்பு இல்லாத விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தால்'AA' உறுப்பினர்களோ, குடி நோயில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையை சீர் அமைத்துக் கொண்டவர்களோ, தங்கள் அனுபவங்களை இக்கூட்டங்களுக்கு வந்து பகிர்ந்து கொள்ள தயாராகவே இருப்பார்கள். புதிய குழுக்களுக்கு வேண்டிய இட வசதிகளை மிக மிகக் குறைந்த வாடகைக்கு தருவதற்கும் முன்வர வேண்டும்.  தங்களுக்குத் தெரிந்த குடிநோய் உள்ள நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும்'AA' குழுக்களின் கூட்டங்களுக்கு செல்லுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்.
இன்று, மிகக் குறைந்த அளவிலேயே 'AA' குழுக்கள் உள்ள தமிழகத்தில், கிராமங்கள் தோரும், ஆயிரக்கணக்கில் அக்குழுக்கள் அமைவதற்கு வேண்டிய முன் முயற்சிகளை எடுப்பதற்கு, எல்லோரும் முன்வர வேண்டும்.  இதனை நமது சமூகக் கடமையாக கருதினால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளியேற்றி வைத்த புண்ணியம் வந்து சேரும்.

Monday, July 12, 2010


சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு புத்தகங்களை பதிப்பித்த உயிர்மை பதிப்பகம் நடத்திய வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆடிட்டோரியத்தில் நடந்தது. புத்தக வெளியீட்டு விழா, உலகத் திரைப்பட விழா, பாராட்டு விழா, கருத்தரங்கம் என்று தினந்தோரும் பல நிகழ்ச்சிகள் நடக்கும் மிகப்பிரபலமான அரங்கம். நிகழ்ச்சி முடிவில், மிக அழகாக இதயத்திலிருந்து சிந்தித்து பேசினார் எஸ்.ராமகிருஷ்ணன். இயற்கை அழைத்துக் கொண்டே இருந்தாலும், பொறுமையாகப் பல்லைக் கடித்தபடி ஆனால், மகிழ்ச்சியுடன் எல்லோருடைய பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, பேச்சு முடிந்த அடுத்த நொடி பாத்ரூமிற்கு ஓடினேன். சிறுநீர் கழித்து முடித்த பின், கிடைத்த மகிழ்ச்சிக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்திருப்பேன். ஜிப்பைப் போட்டுக் கொண்டே அந்தப் பக்கமும், இந்தப்பக்கமும் பார்த்தேன். பொட்டில் அறைந்தது.
உயிர்மைப் பதிப்பகத்தின் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன், போலியோவால் தாக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வளைய வருபவர் ஆயிற்றே! அரங்கத்திற்கு இன்னொரு பார்வையாளரும் கூட சக்கர நாற்காலியில் வந்திருந்தாரே! இவர்களும் தானே குளிரூட்டப்பட்ட (A.C.) அரங்கத்தில் மூன்று மணி நேரம் இருந்தார்கள்! இவர்கள் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால், இவ்வளவு புகழ்பெற்ற அரங்கத்தில் இவர்களைப் போன்றவர்களுக்கு ஏதுவான பாத்ரூம் வசதி இல்லையே! வீடு போய்ச் சேருவதற்குள் எப்படித் தவிப்பார்களோ?
வெளியில் வரும்போது இரண்டொரு படிகளில் இறங்கினேன். ஓ! படிகள் கட்டியவர்கள், குறைந்த பட்சம் ஒரு சருக்குப்படி (RAMP) அமைப்பதைப் பற்றி இவ்வளவு வருடங்களில் யோசிக்கவே இல்லையே? மனுஷ்ய புத்திரன் மேடையேற வேண்டிய போது கூட, சர்க்கஸ் மாதிரி நான்கைந்து பேர், சக்கர நாற்காலியுடன் சேர்த்து தூக்கிக் கொண்டே, படிகளில் ஏறி கொண்டு விட்டனர் (இறக்கினர்). பார்த்தபோது, என்னை, என் சமுதாயத்தை நினைத்து வெட்கமாக இருந்தது.
இந்த மனுஷ்ய புத்திரர்களுக்கு சிறு பையன்களா இருக்கும் போதிலிருந்து, எப்படியெல்லாம் பல தடைகள் ஏற்பட்டிருக்கும் என்று மனதில் ஓடியது. மனுஷ்யபுத்திரனா நான் இருந்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதுவும், சக்கர நாற்காலியில் வளருவது ஒரு ஏழைச் சிறுமியாக, பெண்ணாக இருந்தால்?
அடுத்த வாரமே, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உலக ஊனமுற்றவர்கள் தினம்” நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அமைச்சர் சிறப்பு விருந்தினராக வந்தார், ஒரு சில கருவிகளை வழங்கினார். புகைப் படங்களுக்காக கொஞ்சம் சிரித்தார், பேசினார், கிளம்பினார்.
நூற்றுக்கணக்கான ஊனமுற்றவர்கள் வந்த இந்நிகழ்ச்சிக்கு மேடைக்கும், அரங்கிற்கும் சருக்குப் பலகை அமைத்தவர்கள், அவர்களுக்கு வேண்டிய கழிப்பிடங்களைப்பற்றி கவலைப்படவில்லை. நாற்றம் குடலைப்பிடுங்கியது. ஆண்களுக்கான கழிப்பிடத்திற்கு மட்டும் செங்குத்தாக, ஆட்டம் காணும் சருக்குப்படி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் இறங்கும் யாரும் கரணம் அடித்து விழுந்து விடுவார்கள்.
நிகழ்ச்சிக்கு சக்கர நாற்காலியில் வந்த அமுத வல்லியிடம் பேச்சுக் கொடுத்தேன். நிகழ்ச்சிக்கு வந்த ஊனமுற்ற எந்தப் பெண்களும், உணவோ, நீரோ, மாலை வரை அருந்தவில்லை என்றார். அருந்தினால், பாத்ரூம் போகவேண்டுமே? ஊனமுற்ற ஆண்களில் ஒரு சிலர் மட்டும் தவழ்ந்தபடி சென்று, திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க  வேண்டியிருந்தது.
தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும், ஊனமுற்றவர்களைப் பற்றி சிறிதும் யோசிக்காத சமூகமாகஅரசாங்கமாக இருக்கிறோமே? புகைவண்டி, பேருந்து நிலையங்கள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள்அலுவலகங்கள் போன்ற பெரும்பாலான தனியார் அல்லது பொது இடங்களில், சருக்குப்படிகள் மற்றும் கைப்பிடி வசதியாவது கொண்ட ஒரே ஒரு கழிப்பறை, இப்படி குறைந்த அளவில் கூட ஏன் நாம் யாரும் யோசிப்பதே இல்லை? கட்டிடக்கலை சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகளிலும், சிவில் பொறியியல் கல்லூரிகளிலும், இதைப்பற்றிய பாடம் இருக்கிறதா? இருந்தால், அதற்கு வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?
சென்னையில் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம், பிரிட்டிஷ், அமெரிக்கன் நூலகங்கள் உட்பட பல புகழ்பெற்ற நூலகங்கள் அமைந்துள்ளன. ஆயினும், வலுக்கட்டாயமாக, உலகத்தரத்தில் அண்ணா நூலகத்தை 200 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சென்னையில் தான் வேண்டும் என்று அடம்பிடித்து கட்டமைத்து வருகிறது. (அப்பொழுது தானே, கட்சி மாநாடுகளுக்கு லாரிகளில் வரும் தொண்டர்கள், ஊர்வலம், பிரியாணி, குவார்ட்டர் முடிந்த பின்னர் அழகுபடுத்தப்பட்ட மெரினா பீச், அண்ணா சமாதி அப்படியே அண்ணா நூலகம் என்று சுற்றிப்பார்க்க முடியும் - சொல்ல வந்த விஷயத்தைத் தாண்டி விட்டேனோ? மன்னிக்கவும்) சரி, ஏற்கனவே உள்ள கன்னிமரா உட்பட இந்த நூலகங்கள் எதுவுமே உடல் ஊனமுற்றவர்கள் சுலபமாக வந்து பயன்படுத்திக் கொள்வது மாதிரி மாற்றி அமைக்கப்படவில்லையே? உடல் ஊனமுற்றவர்கள் நூலகங்களுக்குள் நுழைந்து கல்விக்கண் திறந்து கொள்வதற்கு தகுதியற்றவர்கள் எனும் மன நிலை தானே தமிழகம் முழுவதும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது?
மிகப் பெரிய சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட போனால் போகிறது என்று ஒரே ஒரு சருக்குப்படி, அதுவும் தேடித் தேடிப் பார்க்க வேண்டும். வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்த போது, அது கூட உடல் ஊனமுற்றவர்களின் தேவையை மனதில் கொண்டு அமைக்கப்பட்டதல்ல, கேஸ்கட்டுக்களையும், ஆவணங்களையும் தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு போவதற்கு வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது என்றார். மாநிலத்தின் பல நீதிமன்றங்களிலோ, பத்திரப்பதிவு அலுவலகங்களிலோ, காவல் நிலையங் களிலோ கேட்கவே வேண்டாம். இது என்ன வகை நீதி?

நீதி பற்றி எழுதும் போது, மூன்று வருடம் முன்னால் நடந்த வழக்கு ஞாபகம் வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊனமுற்றோர் சங்கத்தலைவர் வழக்குத் தொடுத்திருந்தார். மாநகர் அரசுப் பேருந்துகளில் உடல் ஊனமுற்றவர்கள் ஏறுவதற்கு வசதி இல்லையாம். உடனே நீதிபதி தீர்ப்பளித்தார். குறிப்பிட்ட சில பேருந்துகளில் தானியங்கி சருக்குப்பலகை அமைக்கப்பட வேண்டும் என்று.  வெற்றிஎன்றார் வழக்கு தொடுத்தவர். நீதிபதி அதோடு நிற்கவில்லை. தானியங்கி சருக்குப் பலகை அமைக்கப்பட்ட, “மாதிரி (Model) பேருந்தைக் காண்பிக்க ஆணையிட்டார். போக்குவரத்துத்துறை கொண்டு வந்து காண்பித்த பேருந்தின் சறுக்குப்பலகை மிகவும் செங்குத்தாக இருக்கிறது என்று சரி செய்ய சில யோசனைகளும் சொன்னார். இப்பொழுது சென்னையிலும் தமிழகத்திலும் என்ன நிலைமை?
எங்காவது நமது ஊர்களில் பேருந்து நிறுத்தங்களுக்கு சக்கர நாற்காலியிலோ, அல்லது ஊன்று கோல்களின் துணையுடனோ, போக முடியுமா? திடமான கால்கள் உள்ளவர்களே நடப்பதற்கு சாலைகளும் நடைபாதைகளும், நிற்பதற்கு ஏற்ற பேருந்து நிறுத்தங்களும் இல்லையே!
உடல் ஊனமுற்றவர் யாராவது பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, பெருங்கூட்டத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடிந்தால், நம் பேருந்துகள் நிறுத்தத்திலா நிற்கின்றன. பொதுமக்களே ஏதோ, மாரத்தான் ஓட்டத்திற்கு தயாராவது மாதிரி தள்ளி நிற்கும் பேருந்தை நோக்கி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். கால்களுக்குப் பதில் ஊன்று கோல்களோ, செயற்கைக்கால்களோ, சக்கர நாற்காலியோ உள்ள ஒருவர் என்ன செய்ய முடியும்? தானியங்கி சருக்குப்பலகை வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதி, நடைபாதைகளும், நிறுத்தங்களும், பேருந்து நிலையங்களும், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது பற்றி யோசித்தாரா?
பிறவியிலேயே பார்வையிழந்த நான்கைந்து மாணவர்கள் ஒரு குச்சியை முன்பக்கம் தட்டியபடி சாலைகளில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு விருவிருவென்று நடப்பதைப் பார்க்கும் போது பெருமையா இருக்கும். அவர்களது மன உறுதியையும், அளவற்ற திறமையையும் நினைத்து சற்று பொறாமை கூட வரும். ஆனால் கூடவே, நமக்கு மிகுந்த பதைபதைப்பு ஏற்படுகிறதே? சாலைகளில் மூடிகள் திறந்திருக்கும் சாக்கடைப் பள்ளங்களிலோ, குழிகளிலோ விழுந்து பார்வை இல்லாததோடு காலும் ஒடிந்து விட்டால்?
இந்த வருடம் சென்னையின் கல்லூரிகள் ஜூன் மாதத்தில் திறந்த போது, தமிழக கிராமங்களில் இருந்து பார்வையற்ற ஆதிதிராவிட மாணவர்கள் மீண்டும் அரசு விடுதிகளுக்கு வந்த போது திண்டாடிப் போய்விட்டார்கள். கல்லூரிகள் திறந்து விட்டாலும், விடுதிகள் அதிகாரபூர்வமாக திறக்கப்படவில்லை. அதனால், விடுதிகளில் உணவுப்பொருட்கள், சமையல்காரர்கள், ஏன் வார்டன்கள் கூட இல்லை. கண் தெரிந்த மாணவர்களாவது, எங்காவது பகுதி நேர வேலை செய்து சாப்பாட்டு பிரச்சனையை சமாளித்தார்கள். பார்வையற்ற மாணவர்கள், பல நாட்கள் அசுத்தத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பட்டினி கிடந்தார்கள். கிட்டத்தட்ட பிச்சையெடுத்தார்கள் என்றால் மிகையில்லை. சில நல்ல உள்ளங்கள் முடிந்த அளவு உதவி புரிந்தார்கள். விசாரித்த போது, தமிழகம் முழுவதும் பல வருடங்களாக இப்படிப்பட்ட குளறுபடி நிலைமைதான்  என்று தெரிந்தது.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அவர்களே! துறையின் அதிகாரிகளே! வார்டன்களே! உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? ஊனமுற்ற பார்வையற்ற ஏழை தலித் மாணவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு பிராயச்சித்தம் தான் என்ன? இதற்கு பரிசாகத்தான், உங்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதா?
தமிழகத்தின் ஆதிதிராவிட பள்ளி, கல்லூரி விடுதிகள் ஏதோ ஹிட்லரின் சிறைச்சாலைகள் போல தான் இன்றும் இருக்கின்றன. நாற்றத்திற்கும், கொசுவிற்கும், மிகக் கேவலமான உணவுக்கும், நான்கு கால் பெருச்சாளிகள் மட்டுமல்லாமல், இரண்டு கால் பெருச்சாளிகளுக்கும் அங்கு என்றுமே பஞ்சமில்லை. வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும், தண்ணீருக்கும், கக்கூஸிற்கும், மனிதாபிமானத்திற்கும், கற்பதற்கான சூழ்நிலைக்கும் தான் மிகுந்த தட்டுப்பாடு. அதிலும் பார்வையற்ற மாணவர்கள் இந்த விடுதிகளில் தங்கி, அசுத்தமான கழிப்பிடங்களில் எதை மிதிக்கிறோம் என்று தெரியாமலும் பிளாஸ்டிக் வாளிகளில் பரிமாறப்படும் எதைத் தின்கிறோம் என்று புரியாமலும் எப்படியோ விழுந்து எழுந்து படித்து முடிக்கின்றனர். பின்னர், திறமை அடிப்படையில் ஒரு ஆசிரியர் வேலை கேட்டால், அவர்கள் தலைகளில் லஞ்சம் எனும் இடி விழுகிறது.
சென்னை அசோக் நகரில் இருக்கிறது புகழ் பெற்ற அரசு ஊனமுற்றோர் மறுவாழ்வு மற்றும் செயற்கை கால்கள் மையம். அங்கு தினமும் தமிழகம் முழுவதும் இருந்து வரும் பல உடல் ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலிகளுக்காகவும், செயற்கைக் கால்களுக்காகவும், ஊன்று கோல்களுக்காகவும் பதிவு செது விட்டு காத்துக் கிடக்கின்றனர். இங்கு வரும் மிகப் பெரும்பாலானோர், சாலை விபத்துக்களில் பாதிக்கப் பட்டவர்களே.
தமிழ்நாட்டில், வருடத்திற்கு ஏற்படும் 60,000 விபத்துக்களில், 12,800 சாவுகளோடு, 70,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைகின்றனர். தமிழக சாலை விபத்துக்களில், கால் கைகளை இழந்தவர்கள், பார்வையைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இலட்சங்களில் இருக்கும். முழுமையான புள்ளி விபரங்களே கிடையாது. பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும், போலியோவால் கால்களை இழந்தவர்களும் கூட எவ்வளவோ பரவாயில்லை. இப்படி சாலை விபத்துக்களில் பார்வையையோ, உடல் உறுப்புகளையோ இழக்கும் போது தலைமுறைகளும் அந்த பாதிப்புகளில் இருந்து மீள முடிவதில்லை. 60 விபத்துக்களுக்கு குடித்துவிட்டு ஓட்டுவதே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடுத்தது குளறுபடியான சாலைப் போக்குவரத்து நிர்வாகம், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உள்ள அதிகபட்ச ஊழல். அதுபோலவேகுடி போதையில் பணியிடங்களில் வேலை செய்யும்போது விபத்து ஏற்பட்டு கை, கால், கண்களை இழப்பவர்கள் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காதவை.
தமிழக மக்களே! ஒரு உண்மையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரும் நம் தமிழக அரசுகள், அரிசி, சேலை, மின்சாரம், தொலைக்காட்சிப்பெட்டி என்று கொடுக்கும்      இலவசங்களுக்கு வேண்டிய அளவு நிதியை நியாயமான, நேர்மையான வழியில் பெருக்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன், அரசின் கடன்களுக்கு வட்டி, இவற்றிற்கே அரசின் நிதி கரைந்து விடுகிறது. அதனால்தான், மாதவருட  இலக்குகள் வைத்து நடக்கும் அரசு சாராய வியாபாரம்.
இப்பொழுது, மனதில் கை வைத்துச் சொல்லுங்கள் லட்சக்கணக்கான மக்களை முடக்கிப் போடும், குருடர்களாக்கும், சக்கர நாற்காலிகளில் தள்ளிவிடும் அரசின் பாழாப்போன டாஸ்மாக் சாராயக்கடை வருமானத்தில்தான் நாம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைப் பெற்று சினிமா நிகழ்ச்சிகளை ரசிக்க வேண்டுமா? நமது ரசிப்பிற்கும், சிரிப்பிற்கும் பின்னால் இருப்பவை, பலரது ரத்தமும், சிதறிய உடல்களும், உடல் முடங்கிப்போய் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர்களும், அதனால் ஏற்படும், வற்றவே வற்றாத கண்ணீர் பிரவாகமும், வற்றிய தொண்டைகளில் இருந்து வெளிப்படும் கூக்குரல்         களும் தான். அவர்களும் தமிழர்கள். மனிதர்கள். நம்மைப் போன்று சிரிக்க வேண்டியவர்கள், முழு வாழ்க்கை வாழ வேண்டியவர்கள். கேவலமான சாராய வருமானத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி! அடுக்குமா?
உலகில் அமைதியை வலியுறுத்தும் மதங்களில் ஒன்றான பார்ஸிமதத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டில், யாரேனும் இறந்து விட்டால், அந்த பூதஉடலை பிணந்தின்னிக் கழுகுகளுக்குப் படைப்பார்கள். மிக அற்புதமான ஒரு வகை ஈமைக்கிரியை. இறந்தும் கூட மற்ற உயிர்களின் மேல் அன்பு. இப்பொழுது வந்தது பிரச்னை. பிணந்தின்னிக் கழுகுகள் மனிதர்களின் செயல்பாட்டினால் அரிதாகிவிட்டதாம். டாட்டா நிறுவனம் முயற்சியெடுத்தும் கூட, ஆராய்ச்சிகள் செய்தும் கூட, முன்னேற்றம் இல்லையாம். அதனால் தான், மனிதர்களில் சிலர் பிணந்தின்னிக் கழுகுகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ? மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டிய அரசே அந்த செயலில் தானே இறங்கியுள்ளது!
தனிமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று வார்த்தையில் தீவிரம் காட்டிய பாரதியே!  நீ இந்தியாவில் எங்கோ தீவிரவாதியாக மறு பிறவி எடுக்க முடிவெடுத்திருக்கிறாயா? வேண்டாம், வேண்டாம், மறைமுக வன்முறைக்கு எதிராக நேரடி வன்முறை நியாயமற்றது. Eye for an Eye makes the whole world Blind. உனக்குப்போய் சொல்கிறேனே! நான் முட்டாள். நீ நேர்மையான முடிவெடு. மீண்டும் எங்களிடம், எங்களுக்காக வா. நீ வரும் நல்ல சேதியை, மனுஷ்ய புத்திரனின் காதிலாவது அசரீரியாகப்போச் சொல்.