Monday, July 12, 2010







சர்க்கரை பொங்கல், லட்டு போன்ற இனிப்பு பதார்த்தங்கள் மீது ஏனோ, எனக்கு சிறு வயதில் இருந்தே விருப்பம் இருந்ததில்லை. பாகற்காய், சுண்டைக்காய் என்றால் எனக்கு ஜிலேபி போல் மிகவும் பிடிக்கும். வளர்ந்த பின், உலகில் கரும்பு பெருகிய கதையைத் தெரிந்து கொண்ட பின் சர்க்கரை என்றாலே மிகவும் கசக்கத் துவங்கியது.
2009 ஜனவரியில் கிலோ ரூ.20/-ஆக இருந்த சர்க்கரை விலை இப்பொழுது ஒரேயடியாக ரூ.40-45 என்று அதிகரித்து விட்டது. சர்க்கரையை ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களும், பதுக்குபவர்களும் மிகுந்த லாபம் பார்த்து வருகிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் எல்லா மக்களிடமும் அதிருப்தி நிலவுகிறது. மற்ற உணவுப் பொருட்களின் விலை உயர்வை விட சர்க்கரை விலை உயர்வு மத்திய அரசுக்கு குறிப்பாக, வேளாண் அமைச்சர் சரத்பவாருக்கு மிக தர்மசங்கடமாகி விட்டது. அவரது கட்சிக்கு சொந்தமான மராத்திய இதழில்
சர்க்கரை விலை ஏறினால் என்ன? ஏன் எல்லோரும் சர்க்கரையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? மக்கள் சர்க்கரையை ஒதுக்கிவிட்டால், சர்க்கரை நோயின் தலைநகரம் என்ற அவப் பெயரில் இருந்து இந்தியா மீள முடியும் என்ற ரீதியில் ஒரு கட்டுரை வெளியானது. இக்கட்டுரையை விமர்சித்து எதிர் கட்சிகள் குய்யோ, முறையோ என்று அறிக்கை விட்டார்கள். நாளிதழ்களில் தலையங்கங்கள் எழுதப்பட்டன. நடுத்தட்டு மக்களை கேலி செய்யும் விதத்தில் எழுதப்பட்டு இருந்தாலும், இதில் சில உண்மைகள் உள்ளன என்பதை நம்மால் மறுக்க முடியாது.
சர்க்கரை அத்தியாவசியமான உணவுப் பொருள் அல்ல. அது ஒரு துணைப்பொருள்தான். உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், போன்ற மாநிலங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர்களில், உணவுப் பயிர்களைத் துரத்தி விட்டு பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது கரும்பு. மிக அதிக அளவில் தண்ணீர் விரையம் ஆகும் ஒரு பணப் பயிரும் கூட. இன்று வரை, எந்த ஒரு கரும்பு விவசாயியும், கரும்பிற்கு நியாயமான விலை கிடைத்து மகிழ்ந்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் எப்பொழுதும் ஆலைகளிடமிருந்து நிலுவையிலேயே இருந்து வருவதாக குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தனியார் சர்க்கரை ஆலை அதிபர்கள் பெரும் லாபம் அடைகிறார்கள் என்று கூறப்பட்டாலும், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனங்களின் நிலை அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தியாவில் உள்ள பல சர்க்கரை ஆலைகள், ஊழியர்களுக்கு சம்பளத் தொகை பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகள் கரும்பு என்ற புலி வாலை தைரியமாக விட்டு விட்டு, மாற்றுப்பயிர்களுக்கு குறிப்பாக உணவுப்பயிர்களுக்கு மாறினால் நிலைமை மேம்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இன்று நமக்கு வேண்டியது புதிய சிந்தனைகளும், மாற்று வழிகளுமே!
சர்க்கரையை விட, கரும்புக்கழிவான மொலாசாஸ் மூலம் சாராயம் காய்ச்சும் ஆலைகளை நிறுவி, இந்திய இளைஞர்களுக்கு போதை ஏற்றுவது தான் மிக லாப கரமான தொழில் என்று சிலர் முடிவெடுத்தது போல் தோன்றுகிறது.
இவர்கள் சர்க்கரையை சைடு பிசினஸாக வைத்துக் கொண்டு, ஆலைகள் மூலம் சாராயம் காய்ச்சுவதை முக்கியத் தொழிலாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். கவர்ச்சிகரமான பெயர்களில் விதவிதமான சாராய வகைகளை வித்தியாசமான வடிவங்கள் கொண்ட பாட்டில்களில் அடைப்பது, அவற்றை விளம்பரப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆடைகளைக் களைந்து அழகிகளை அம்மனமாக்கி போட்டோ எடுத்து, காலணடர்கள் வடிவமைப்பது என்று கலக்கி கொண்டிருக்கிறார்கள். விஸ்கி, பிராந்தி, ரம் என்று விதவிதமான பெயர்களில் கரும்புக் கழிவு சாராயத்தை, அதிபர்களும், மாநில அரசுகளும் கூடா நட்புடன் கைகோர்த்துக் கொண்டு, மிகக் கேவலமான முறையில் முச்சந்திகள் தோறும் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு மிகப் பெரிய சாராயப் பொருளாதாரத்தையே கட்டமைத்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை. இந்த கரும்பு கழிவு சாராயத்திற்கு, 19ஆம் நூற்றாண்டு வரையிலான "கசப்பான",  "கறுப்பான" சரித்திரம் ஒன்று உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டு அரசரின் உதவியுடன் புதிய நாடுகளை கண்டறிய இரண்டாவது முறையாக பயணப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ், தனது கப்பலில் கரும்புக் குருத்துகளையும் கொண்டு சென்று இருந்தார். அவரது பரிவாரங்கள் மேற்கிந்திய தீவுகளைச் சென்றடைந்த போது, அக்குருத்துக்கள் அங்கு பயிரிடப்பட்டன. ஸ்பெயின் நாட்டவரும், போர்ச்சு கீசியரும் மிகப் பெரிய அளவில் மேற்கு இந்தியத் தீவுகளிலும், புதிய உலகமான அமெரிக்காவிலும் தங்கள் காலனிகளை அமைக்கத் தொடங்கினர். மேற்கிந்திய தீவுகளிலும், அமெரிக்காவிலும் இருந்த (அன்றைக்கு நியூ இங்கிலாந்து) வம்சாவளி செவ்விந்தியர்கள், ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மோசமான "சின்னம்மை" போன்ற நோய்க் கிருமிகளால் மாண்டு அழிந்தனர். காடுகளை அழித்து கரும்புகளையும், மற்ற பணப்பயிர்களையும் பயிரிடுவதற்கு ஆயிரக்கணக்கான ஆட்கள் தேவைப்பட்டனர். இதனால், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நீக்ரோக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு, இத்தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக, ஆப்பிரிக்க அடிமைகள், அரேபிய முஸ்லிம் நாடுகளுக்கு விற்கப்படும் நிலை இருந்து வந்ததுதான். பின்னர், ஐரோப்பியர்கள் இந்த அடிமைகளை ஆப்பிரிக்க மன்னர்களிடமிருந்து வாங்க முற்பட்டனர்.
வட அமெரிக்காவில் காலனி ஆதிக்கம் தொடங்கிய ஐரோப்பியர்கள் முதலில் அங்கு சாராய ஆலைகளை நிறுவினர். உற்பத்தி செய்யப்படும் "ரம்" சாராயம் இங்கிலாந்து கப்பல்படைக்கு விற்கப்பட்டது. மேலும் ரம் சாராயத்தை கப்பல்கள் மூலம் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு போய் ஆப்பிரிக்க மன்னர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்றனர். பண்ட மாற்றாக நீக்ரோ அடிமைகளை வாங்கி மீண்டும் மேற்கிந்தியதீவுகளுக்கு பயணப்பட்டனர். ரம் சாராயத்தை மிகவும் விரும்பிய ஆப்பிரிக்க மன்னர்கள், அதிக அளவில் நீக்ரோக்களை கொடுக்க முன் வந்தனர்.
ரம் சாராயம், துப்பாக்கி ஆகியவை தாங்கிய ஐரோப்பிய கப்பல்களை எதிர்பார்த்து, வியாபாரிகளாலும், மன்னர்களாலும் ஆப்பிரிக்க துறை முகங்களில் உள்ள கோடவுன்களில் "கறுப்பு அடிமைச்சரக்குகள்" அடைத்து வைக்கப்பட்டன. ஓரிரு மாதங்கள் கூட கோடவுன்களில் அடைந்து இருக்கவேண்டி இருந்ததால், கணிசமான "அடிமைச் சரக்குகள்" இறக்க நேரிட்டு வீணாயின. மிக அதிகமான எண்ணிக்கையில் கறுப்பு அடிமைகளை படுக்க வைத்து அடைத்துக் கொண்டு போவதற்கு லாகுவாக, பிரத்யேகமான பெட்டிகளைக் கொண்ட கப்பல்கள் ஐரோப்பிய வியாபாரிகளால் வடிவமைக்கப்பட்டன.
உறைய வைக்கும் குளிரில், பசிபிக் பெருங்கடலில், மிருகங்களை விட மோசமாக பசியும், பட்டினியும், தாகமுமாகக் கொண்டு செல்லப்பட்டதனால் வழியிலும் கூட பல "நீக்ரோ அடிமைச்சரக்குகள்" மாண்டன. இவ்வாறு இறந்து வீணாகும் நீக்ரோ அடிமைச் சரக்குகளை கப்பல்களிலிருந்து கடலுக்குள் வீசி அப்புறப்படுத்துவார்கள். ஆப்பிரிக்க துறைமுகங்களில் 4, கடல் பயணத்தின் போது 12, பின்னர் தீவுகளை அடைந்து ஏலங்களில் விற்பதற்குள் 4 என்று, கிட்டத்தட்ட 20  சரக்குகள் பயன்படாமல் நோய்களாலும், உடல் உபாதைகளாலும் வீணடிக்கப்பட்டன. பின்னர், இவ்வாறு வீணாவதைக் குறைக்க, 23 மணி நேரத்திற்கு ஒரு முறை நிமிர்ந்து நிற்கவும், உட்காரவும் அவை அனுமதிக்கப்பட்டன.
மேற்கிந்திய தீவுகளில் காடுகளை அழித்து கரும்புப் பயிரிட மிக அதிக அளவில் அடிமைகளை வாங்க முதலாளிகள் தயாராக இருந்தனர். அதனால், அடிமாட்டு விலைக்கு "ரம்" கொடுத்து ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட சரக்குகள், நல்ல இலாபத்திற்கு ஏலங்கள் மூலம் வியாபாரிகளால் விற்கப்பட்டன. அவர்களிடம் இருந்து பண்ட மாற்றாக கரும்புச் சாற்றையும், மொலாசஸ் எனப்படும் சாராயத்திற்கு வேண்டிய மூலப் பொருட்களையும் வாங்கி கப்பலை நிரப்பினர். அவற்றை மீண்டும் ரம் உற்பத்தி செய்யும் அமெரிக்க ஆலைகளுக்கு கொண்டு சென்றனர். கரும்புச்சாறு, மொலாசஸ் ஆகியவற்றை நிரப்புவதற்கு முன் அடிமைகளை கொண்டு கப்பலில் உள்ள பிணங்களையும், மனிதக் கழிவுகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டி இருந்தது.
மேற்கிந்திய தீவுகளில் கரும்பு பயிரிடவும், ஆலைகளிலும் லட்சக்கணக்கான நீக்ரோ அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டன. முள் வைத்த சாட்டைகளால் நாள் முழுவதும் அவை அடிக்கப்பட்டன. இத்தீவுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும் இரவு தூங்குவதற்கு அடிமைகள் ஒற்றை அறைகளில் அடைத்து வைக்கப்பட்டன. சுவாசிப்பதற்கு ஒரே ஒரு ஜன்னல்தான். பிரெஞ்சு முதலாளிகள் மற்றொரு தந்திரத்தையும் கையாண்டனர்.  கரும்பு சாகுபடியையும், கரும்புபிழிவதையும் அதிகரிக்க அறுவடைக் காலங்களில் சரியாக உணவு அளிக்காமல், ரம் சாராயத்தைக் கூலியாகக் கொடுத்து, அடிமைகளை சாராயத்திற்கும் அடிமைப் படுத்தினர். இதன் மூலம் அடிமைகளின் "போராட்ட குணம்" அழிக்கப்பட்டது.
இப்படியாக போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள், அரேபியர்கள், பிரெஞ்சு, ஸ்பெயின், டச்சுக்காரர்கள் என்று பல நாட்டவர்களும் கறுப்பர்களை வாங்கியும், விற்றும் ஒரு அடிமைப் பொருளாதாரத்தை உருவாக்கினர். அடலாண்டிக் பெருங்கடலில் குறுக்கும், நெடுக்குமாக கூண்டுகளில் அடைத்து எடுத்துச் செல்லப்பட்ட கருப்பு அடிமைகளின் வாழ்வு ரம் சாராயத்தில் கரைக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டவர்களின் இனிப்பு ஆசை அதிகரிக்க அதிகரிக்ககருப்பர்களின் எதிர் காலம் மேலும் கருப்பானது.


கப்பல்கள் மூலம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கிந்தியதிவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைப் பெற்ற இந்த வியாபாரத்தை "முக் கோணச் சந்தை" என்று சரித்திர வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த சந்தையில், சர்க்கரை, ரம் சாராயம், நீக்ரோ அடிமைகள் ஆகிய மூன்று பொருட்களும் தான் முதன்மை வகித்தன. இன்று உலக மய மாக்கல் (Globalisation), சந்தை பொருளாதாரம் என்று தினமும் பேசுகிறோமே, உண்மையான உலகமயமாக்கல், 16ஆம் நூற்றாண்டே தொடங்கி விட்டது எனலாம். மேற்கிந்திய தீவுகளில் விற்க முடியாத நீக் ரோக்கள், அமெரிக்காவில் பெரிய அளவில் பருத்தி, புகையிலை போன்றவை பயிரிட பயன்படுத்தப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி முதல் பத் தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை குறைந்தது ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ஆப்ரிக்கர்கள், ஐரோப்பியர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.
ஐரோப்பியர்கள் போக, பிரேசில் நாட்ட வரும் நேரடியாக ஆப்பிரிக்காவில் இருந்து கருப்பு அடிமைகளை பண்ட மாற்று முறையில் மிக அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இன்று உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகத் திகழும் பிரேசில் நாடு, போர்ச்சுகீசியர்களுக்கு கீழ் இருந்த போதும், பின்னர் அவர்களிடமிருந்து விடுதலை அடைந்த பின்னரும் கூட, மிகப் பெரிய அளவில் கிட்டத்தட்ட 35 இலட்சம் நீக்ரோ அடிமைகளை பயன்படுத்தி உள்ளது.
1807ஆம் வருடம், நீக்ரோ அடிமைகளை கப்பல்கள் மூலம் விற்பனை செய்வதை, இங்கிலாந்து நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் மேற்கு அமெரிக்காவில் பெரிய அளவில் புகையிலை பயிரிட அடிமைகள் தேவைப்பட்டன. அடிமைகளுக்கு கிராக்கி அதிகம் ஆனது. உடனே முதலாளிகள் நீக்ரோ அடிமைகளை, ஆடு மாடு களைப் போல் இனவிருத்தி செய்ய தொடங்கினர். இன விருத்திக்கு எற்ற ஆண், பெண் அடிமைகள், விளம்பரங்கள் மூலம் விற்கப்பட்டன. நீக்ரோ இன விருத்திப் பண்ணைகள் கூட பலரால் நிறுவப்பட்டன. உலகின் எந்த இனமும் இவ்வாறு பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு அழிக்கப்பட்டதில்லை. உச்சக்கட்ட கொடுமை களை அனுபவித்ததில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகளுக்கு பின், நீக்ரோ அடிமைகளுக்கு வெளிச்சம் மீண்டது. ஆபிரகாம் லிங்கன் அவைகளின், இல்லை இல்லை அவர்களின் விடி வெள்ளியானார்.
கருப்பர்கள் அடிமைத்தளைகளை உடைத்துக் கொண்டு விட்டாலும், உலகம் சாராய வியாபாரிகளிடமிருந்து மீண்டபாடில்லை. ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் காலனி ஆதிக்கம் உள்ள நாடுகளில் இன்று வரை கோடிக்கணக்கான குடும்பங்கள், மது நிறுவனங்களின் தந்திரம் மிக்க, ஈவு இரக்கம் இல்லாத கோரப்பிடிகளில் சிக்கி, சிதறுண்டு அழிந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் பின் பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மது நுகர்வு உச்சக்கட்டத்தை அடைந்தது. அவர்கள் மொடாக் குடியர்களானார்கள். ஆயினும், கடந்த இருபத்தைந்து வருடங்களாக அமெரிக்காவில் மது நுகர்வு படிப்படியாக குறைந்து வருகிறது. ஐரோப்பாவில் தேக்க நிலை அடைந்து இப்பொழுது அங்கும் குறையத் தொடங்கியுள்ளது. மதுவின் கேடுகள் வாழ்க்கைமுறை நோய்கள் ஆகியவை பற்றி அதிகரித்து உள்ள விழிப்புணர்வும், மருத்துவக் காப்பீடுகளுக்கான செலவுகள் மிக அதிகமாகி விட்டதும்தான் இதற்கு காரணிகள். அதனால் பன்னாட்டு மது நிறுவனங்கள் தங்கள் சந்தையை தக்க வைத்துக் கொள்ள சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளையே இப்பொழுது நம்பியுள்ளன. இந்தியாவில் உள்ள சில சர்க்கரை ஆலை அதிபர்களும், பன்னாட்டு மது நிறுவனங்களும் இணைந்து கொண்டு உள்ளதால், இந்தியாவில் மது வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. விஜய் மல்லையா போன்ற திமிங்கலங்களுக்கும் மற்ற சாராய நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி தொடங்கி உள்ளது.
மேல்தட்டு இளைஞர்களின் நுகர்விற்கு பார்லி அரிசியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அயல்நாட்டு மது மற்றும் ஒயின் வகைகள், மற்ற பெரும்பா லானவர்களுக்கு கரும்புக்கழிவிலிருந்து  காய்ச்சப்படும் “IMFL” என்ற பெயரில் பட்டைச் சாராயம். இந்திய இளைஞர்களையும், இளைஞிகளையும் அதிக அளவில் மது நுகர்வுக்குள் சுலபமாக இழுத்துவிடுவதற்காக பீர் விற்பனை  இவ்வாறாக, அமெரிக்காவில் வேகமாக குறைந்து வந்தாலும், ஐரோப்பிய யூனியனில் தேக்க நிலையில் இருந்தாலும், இந்தியாவில் சாராய வியாபாரம் களை கட்டி வருகிறது.     
பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களிடம் பணப்புழக்கம் அழகிப்போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் நுகர்வுக்கலாச்சாரம், மோசமான கல்விச் சூழல், மானிய, இலவச அரசியல், அரசு களின் இலக்கு வைத்த நேரடி சாராய வியாபாரம், ஓட்டு அரசியல், கட்சிக்காரர்கள் நடத்தும் பார்கள் இவையெல்லாம் சேர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒரு மிகப் பெரிய சாராய மாஃபியாவை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த மாஃபியாவில் சாராய ஆலை முதலாளிகளும், அரசின் நிதித்துறையும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பங்குதாரர்கள். அரசின் நிதித்துறை இதில் சைலண்ட் பார்ட்னர். அவர் பிரித்துக் கொண்டது போக, மீதி லாபத்தை மற்ற மாஃபியா உறுப்பினர்கள் பங்கு போட்டுக் கொள்கின்றனர்.
ஆக, கருப்பான நீக்ரோ மக்கள் மீண்டுவிட்டாலும், அவர்கள் அடிமைகளாகக் காரணமாக இருந்த சரித்திரத்தின் "கசப்பான" பக்கங்கள் இப்பொழுது இந்தியாவில் மீண்டும் தொடராக எழுதப்படுகின்றன. அரசுகளின் முழு முயற்சியின் பலனாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, இந்திய இளைஞர்கள் மதுச்சந்தை எனும் உயிரும், உடலும் முடக்கப்படும் இரத்தச்சகதி மிகுந்த கூண்டுகளுக்குள் அடைக்கப்படுகிறார்கள். பல மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு உருவாக்கிவரும் இந்த புதிய "சாராய அடிமைப் பொருளாதார சந்தையில்", தமிழக அரசே இன்றைய அளவில் முன்னிலை வகிக்கிறது.
போதும்!  கரும்பு மிகவும் கசக்கிறது!   சீ !...     தூ!...
என்ன நண்பர்களே! உங்களுக்கு சர்க்கரை இனிக்கிறதா?  கசக்கிறதா?





No comments:

Post a Comment