Tuesday, July 13, 2010



கடந்த செப்டம்பர் மாதக் கடைசியில் “கிவ் லைப்” எனும் அமைப்பு, மற்ற பல நிறுவனங்களுடன் இணைந்து “சென்னை மாரத்தான்” ஓட்டப்பந்தைய நிகழ்ச்சியை நடத்தியது. சமூக சேவையின் அவசியத்தை முன்வைத்ததோடு, இந்நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு ஏழைக்குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு முதலீடு செய்வதாக அறிவித்தது, பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சியே! இதில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளும், ஆர்வலர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். 
பலகாலமாகவே, தொண்டு நிறுவனங்களுக்கு மற்றும் ஏழைமக்களின் மருத்துவத்திற்கு என்று பல்வேறு தேவைகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.  ஆயினும் பெரும்பாலான இவ்வகை நிகழ்ச்சிகளின் முடிவில், விளம்பரம், பராமரிப்பு மற்றும் விழாச் செலவுகள் போக பயனாளிகளுக்கு எஞ்சுவதோ மிகச் சொற்பமான நிதியே. அதுவும் கூட காலம் தாழ்ந்து வந்து சேர்கிறது என்பதே பல பயனாளிகளின் மனக்குறையாக உள்ளது.
இடது கைக்குத் தெரியாமல், வலது கை கொடையளிக்க வேண்டும் என்பது பழைய கதை. அதிநாகரீக இக்காலத்தில், சுய விளம்பரத்திற்காகவே சமூக சேவை என்றாகி விட்டது. பத்து ரூபாய் கொடையளித்துவிட்டு அதனை நூறு ரூபாய் செலவழித்து விளம்பரம் செய்கிறார்கள் சிலர். ஆடம்பர விழாக்களின் முடிவில், மீந்து விட்ட உணவை, குப்பங்களில் கொண்டு போய் விநியோகம் செய்வதெப்படி என்று யோசிக்கும் பலரும், எளிமையாக விழா நடத்துவது பற்றி யோசிப்பதே இல்லை. 
நிறுவனங்களின் சமூகக் கடமை (CSR) என்பது, இன்று புதிதாகப் பிறந்துள்ள வார்த்தை. பல பெரிய தொழில் நிறுவனங்களிலும், CSR என்பதை ஒரு தனிப்பிரிவாக எடுத்துக் கொண்டு, தொண்டு நிறுவனங்களுக்கும், சமுதாயப் பணிகளுக்கும் நிதியுதவி செயப்படுகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்கள், சில கோடிகள் சமூகப் பணிக்காக செலவிடுகின்றன.  ஆனால், குறைந்த பட்ச அளவில் கூட அரசுக்கு வரி அளிக்க வேண்டியதில்லை. ஒரு சமூகத் தணிக்கை அமைப்பு வெளியிட்ட விபரங்களின்படி, இவ்வகை மென்பொருள் நிறுவனங்கள், வரி விலக்கு மூலம் அடைந்த பயனில் மிகக்குறைந்த அளவே CSR மூலம் சமூகப் பணிக்கு செலவிட்டு அதிக விளம்பரமும், மதிப்பும் தேடிக் கொண்டுள்ளன.  
NSS எனப்படும் நாட்டு நலப் பணியில் கல்லூரி மாணவர்களும், அந்தத் துறை சார்ந்த ஆசிரியர்களும் வெறும் சான்றிதழ்களுக்காக “கடனே”என்று மேலோட்டமாக ஈடுபட்டு வரும் போக்கு, சமூகப் பணியிலிருந்தும், நாட்டுப் பணியிலிருந்தும், இளைஞர் சமுதாயம் அன்னியப்பட்டு வருவதையே குறிக்கிறது.  அதே போல், இன்று சமூகப் பணி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு சமூகப் பணியின் குறிக்கோள், சமூக முன்னேற்றத்திற்கான வழிகள் திட்டங்கள் போன்றவற்றை விட தொண்டு நிறுவனங்கள் தொடங்கினால் எப்படி நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்வது, எப்படி Project Report தயார் செய்வது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத விதமாக பெரிய அளவில் சுனாமி தாக்கியபோது மூன்று, நான்கு வருடங்களாக நடைப்பெற்ற சுனாமி புனரமைப்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன. பல தன்னார்வ நிறுவனங்கள் மிகச்சீரிய பணி மேற்கொண்டன என்பது உண்மைதான். ஆயினும், மத்திய மாநில அரசுகள், உள் நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள், ஆசிய, உலகவங்கி என பல அமைப்புகளும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்தும், உண்மையான பலன், உண்மையாக சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, தரமான வகையில் சென்றடைந்தனவா என்பது இன்றுவரை ஒரு கேள்விக்குறியே. 
சுனாமி நிவாரணப் பணிகள் மூலம், பல இடைத்தரகர்களும், போலித் தொண்டு நிறுவனங்களும், சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்களது தொப்பையையும், நிதி ஆதாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதே நிதர்சனம். மீண்டும் ஒரு சுனாமி வராதா இன்னும் கொஞ்சம் காசு பார்ப்போமே என் சிலர் காத்திருக்கின்றனர் என்றால் மிகை இல்லை.
இன்றைய அளவில், இந்தியாவெங்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை, அரசு மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுடனும் இணைந்து கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில், பல்வேறு வகையான தன்னார்வ அமைப்புகள் உண்மையான அர்ப்பணிப்புடன் நாட்டு முன்னேற்றத்திற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்டு வருகின்றன. சுய உதவிக் குழுக்களை செம்மையாக வழி நடத்துவதுடன், அவர்களுக்கும், அரசின் குறிக்கோள்களுக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், கணிசமான நிறுவனங்கள், வட்டிக்கடைகள் போல் செயல்பட்டுக் கொண்டும், முறை கேடாக வருவாயைப் பெருக்கிக் கொண்டும் வருவது, சிதம்பர ரகசியம் ஒன்றும் இல்லை.
பல அரசு சாரா நிறுவனங்கள் (NGOS), தங்களது தொடக்ககாலத்தில் கொண்ட கொள்கை களை மறந்து விட்டு, நிதி வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், Project Report எழுதியும், விண்ணப்பித்தும் வெறும் லெட்டர் பேடு நிறுவனங்களாக சுருங்கி வருகின்றன.  மத்திய, மாநில சமூக நலத் துறையிலும், மற்ற அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகி வருவதுடன், அத்துறைகள் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் செய்யும் செலவுகளுக்கு முறையான தணிக்கையும், கணக்குகளும் இல்லை.  சமூக நலத்துறையில் பணிபுரியும் சிலருக்கும், சில தொண்டு நிறுவனங்களை நடத்துவோருக்கும் இடையில் கூடா நட்பும், கூட்டுச் சதியுமே மிஞ்சுகின்றன.  இதனால், அரசு சாரா நிறுவனங்களுக்குள் ஆரோக்கியமற்ற போட்டியும், பொறாமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மதஅமைப்புகள் சார்பாகவும், மற்ற விதத்திலும் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தும் சிலரின் முறைகேடுகள் பற்றி எழுத வேண்டுமானால் பத்து பிரதிகளாக புத்தகங்கள் எழுத வேண்டியிருக்கும்.
வரம் வேண்டிய உண்மையான ஒரு பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரே இரவில் கடவுள், நாட்டிலிருந்து, எயிட்ஸ் நோயை நீக்கிவிட்டாரானால், தனிநபர்கள் முதல்  பன்னாட்டு நிறுவனங்கள் வரை பலருடைய தொழில் பாதிக்கப்படும், அவர்களது பொருளாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பது வேடிக்கையான வேதனை.
இன்று படிப்பதே, பணம் சம்பாதிப்பதற்கு என்றும், சம்பாதிப்பதே, “தான்” நுகர்வதற்கு என்றும் ஆகிவிட்டது. முதியோரும், மனநோய் உள்ளவர்களும், உடல் குறையுள்ளோரும், குப்பைகளைப் போல, வீடுகளிலிருந்து விசிறியடிக்கப்படுகிறார்கள். டீக்கடைகள் போல, வறியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் திறக்கப்படுகின்றன.
ஒரு சிலர் முன்னேற வேண்டும், பணக்காரர்கள் ஆக வேண்டுமென்றால், பலர் சமூக பொருளாதார தளத்தில் பின்தங்கியே கீழ்நிலையில் இருக்க வேண்டும் என்பது எழுதாத விதியாகி விட்டது.  அரசியல் செய்வதே, ஜிகினாத் திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் ஓட்டைப் பறிப்பது அல்லது தக்க வைத்துக் கொள்வது, சாராயம், கட்டப் பஞ்சாயத்து முதல் வாரிசு அரசியல் எல்லா வகையிலும் பணம் மற்றும் அதிகாரத்தை சிறு கூட்டமே கையில் வைத்துக் கொள்வது என்றாகிவிட்டது. எலியாக நுழைந்து பெருச்சாளியாகப் பரிணாம வளர்ச்சி யடைவது எப்படி என்பதே அரசியலில் பால பாடமாக எடுக்கப்படுகிறது.
ஓஷோவிலிருந்து பெரியார் வரை, அவர்களது கருத்துகளை, படைப்புகளை உள்வாங்கிக் கொண்டு சமூக முன்னேற்றமடைந்தோமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் அவர்களது படைப்புகள், அந்த ஆளுமைகளின் பெயர்களில் நடத்தப்படும் அமைப்புகளின் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வரு கின்றன என்பதில் விவாதமே இல்லை.
அவரவர் கடமைகள் மறந்து போய், “ஊழல்” என்பது சமூகம், அரசியல், அதிகாரம், கல்வி, கடவுள் என்று எல்லா மட்டங்களிலும் வியாபித்து விட்டது.  இப்படிப்பட்ட சமூக சீரழிவின் விளைவாகவே, இன்று தாழ்த்தப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் தாழ்ந்த நிலையிலேயே உள்ளார்கள்.  இயற்கையாக ஏற்படும் பூகம்பமோ, புயலோ, வெள்ளமோ, வறட்சியோ அல்லது மனிதர்களின் பேராசையால் எற்படுத்தப்படும் செயற்கையான சமூகப் புதைகுழிகளோ எல்லாமே விளிம்புநிலை மக்களையே தாக்குகின்றன. உடலுழைப்பு முதல் சிறுநீரகம் வரை, ஓட்டுக்கள் முதல் வாடகைத் தாய் வரை எல்லாமே அவர்களிடமிருந்தே திருடப்படுகின்றன.
உடல் ஊனமுற்ற மக்கள், மிக மிக அடிப்படையான விஷயங்களுக்குக் கூட வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இருபத்தோராம் நூற்றாண்டு இந்தியாவிலும், உடல் ஊனமுற்றவர்களும் சரி, பிறக்கும்போதே “சாதி” என்ற பெயரில் ஊனமாக்கப்படுபவர்களும் சரி, அந்த ஊனத்துடனே, முடிவில்லாத மராத்தான் ஓட வேண்டிய சமூக நிலையிலேயே பலர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான, சமூக நீதிக்கான தேடுதல் இன்னும் பல காலம் நீடிக்கும் அபாயம் உள்ளது.  அதிலும், சமூக நீதி இயக்கங்கள் என்ற பெயரில், அடாவடி அரசியல் நடத்துவதற்கும், கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறிப்பதற்குமே சிலர் கடை பரப்பி வருகின்றனர்.  சமூக சேவையிலும், சமூக நீதியிலும், எது அசல்? எது போலி? என்பது இன்று புரிபடாத புதிராகிவிட்டது. அதனால் “சமூக சேவை” போல், “சமூக நீதி”யும் ஒரு கெட்ட வார்த்தையாகிவிடும் அபாயமும் சேர்ந்துள்ளது.  
சமூக சேவைக்கான “கிவ் லைஃப்” மாரத்தான் ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், தனிமனிதக் கடமைகளை ஞாபகப்படுத்த, விளிம்பு மக்களின் உண்மையான உரிமைகளுக்காக உண்மையுடன் குரலெழுப்ப, நாட்டுப்பற்றை முன்வைக்க, வரிகளை ஏய்ப்பு செய்யாமல் கட்டச்செய்ய, கருப்புப் பணத்தை தோண்டியெடுக்க, அர்த்தமற்ற நுகர்வுக் கலாச்சாரத்தைப் புறந்தள்ள, அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்ய, யாராவது மாரத்தான் ஓட்டம் நடத்துவார்களா? நடத்தினால் சமூக சேவைக்கான மாரத்தான் ஓட்டத்திற்கு இனி தேவையிருக்காது?


No comments:

Post a Comment