Friday, July 2, 2010
மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி, திப்பு சுல்தான் வாள், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள், இரண்டாவது முறையாக ராஜ்ய சபா எம்.பி. சீட்டு என்று எதுவாக இருந்தாலும், ஏலத்தில் அதற்கான விலையைக் கொடுத்து வாங்கி விடுவது இவரது பொழுதுபோக்கு மட்டுமல்ல, இவரது வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமானால், பல மடங்கு லாபத்தைக் கொடுக்கும் “திட்டமிட்ட முதலீடு”.

கடந்த முறை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபோது, பல தடவை, மும்பையிலிருந்து காலையில், தனது தனி விமானத்தில் பறந்து பார்லிமெண்டில் மக்கள வைக்கடமையை(?) ஆற்றி விட்டு, மாலை அதே தனி விமானத்தில் மீண்டும் மும்பைக்கோ, பங்களூருவுக்கோ, கோவாவிற்கோ இவர் வந்துவிடுவது வழக்கம் என்று பேசப்படுகிறது.

நமது முன்னாள் பிரதமரும், ஜனதாதாள் (மதச் சார்பற்ற) கட்சித் தலைவருமான தேவகவுடா, கடந்த முறை ராஜ்ய சபா தேர்தலில் தனது சொந்தக் கட்சிக்காரர்களைப் புறக் கணித்து விட்டு, இவரைத்தான் எம்.பி.யாக்கி அழகு பார்த்தார். இந்த முறையும் அதே தேவகவுடா, தனது கட்சிக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்தப் பிரமுகர் எம்.பி. ஆவதற்காக, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுக்களைத் தந்துள்ளார். (நல்ல விலைக்குத்தான் - 50 கோடி என்பதாகப் பேச்சு) எல்லாக் கட்சிகளிலும் தனக்கு நண்பர்கள் இருப்பதாகக் கூறிய இப்பிரமுகர், எம்.பி. ஆவதற்கு வேண்டிய மீதம் ஓட்டுகளுக்கு ப.ஜ.க.விற்கோ, காங்கிரஸிற்கோ, இன்னும் எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் தரத் தயாரானார். கடைசியில் பாரதிய ஜனதா கட்சி, தனது மாநில முதல்வரின் எதிர்ப்பையும் மீறி, அவருக்கு வேண்டிய மீதி ஓட்டுக்களைக் கொடுத்து, அவரை அமோக வெற்றி பெறச் செய்துள்ளது. ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக கொடுக்க வேண்டிய கோடிகள் அவரைப் பொறுத்த வரை “பாக்கெட் மணி”.

ஆம், நாம் இப்பொழுது விவாதித்துக் கொண்டிருப்பது, இரண்டாவது இடத்திலிருந்து மிகக்கூடிய விரைவில், உலகின் மிகப் பெரிய சாராய சக்கரவர்த்தியாகி விடும் நிலையில் உள்ள விஜய் மல்லயாவைப் பற்றிதான்.

விஜய் மல்லயா இப்படி வாங்கிக் குவித்த தற்கும், அவருக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேர்வதற்கும், இந்திய சமூகம், ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய விலை கொடுத்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. இவர் விளம் பரப் படுத்தும் “மகிழ்ச்சியைக் கொண்டாட”, விட்டில் பூச்சிகளாய் விழும் இளைஞர்கள் மற்றும் இளம் பிராயத்தினர், வாழ்க்கை முழு வதும் இவரது வாடிக்கையாளர்கள். குடிப்ப வர்கள் குடிநோயாளிகள் ஆனாலும் அவர்களது கல்லீரல் புற்று நோய் கண்டாலும், அவரைப் பொறுத்தவரை அது பாதிக்கப் பட்டவர்களின் பிரச்சனை. மது நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு என்று எதுவுமில்லை.

கடந்த வருடம் தீபாவளிப் பரிசாக, இந்தியாவின் எல்லா எம்.பி.க்களுக்கும் மிக உயர்ரக(?) ஸ்காட்ச் விஸ்கி பாட்டில்களை அனுப்பி வைத்தப் புண்ணியவான் மல்லயா. இப்படிப்பட்டவரை சாராயக் காசுக்கு ஆசைப் பட்டு மீண்டும் மீண்டும் ராஜ்ய சபாவிற்கு எம்.பி.யாக அனுப்புவதைவிட ஜனநாயகத்தை அசிங்கப்படுத்தும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது
.
“காங்கிரஸ், ப.ஜ.க., தி.மு.க, அ.தி.மு.க. என்று கட்சிகள் தான் பதவிக்கு வந்து நம்மை ஆளுகின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் மக்களே! உண்மையில், அம்பானிகளும், டாட்டாக்களும், மற்ற பன்னாட்டு வணிக நிறுவனங் களும் தான் நம்மை ஆண்டு வருகிறார்கள்” என்று கூட்டமொன்றில் குறிப்பிட்டார் ஒரு பேச்சாளர். அவர் சொல்வது போல, கட்சிகளெல்லாம் முகமூடிகள், முகத்திரைகளுக்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான வணிக சந்தையே என்று தான் ஆமோதிக்க வேண்டியுள்ளது.

இந்த வணிக சந்தை கொடுக்கும் நிதியைக் கொண்டு நடத்தப்படும் அரசியல் சூதாட்டம் தான் தேர்தல், ஓட்டு அரசியல் என்றாகி விட்டது. மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு பதிலாக, ட்வென்டி-20 கிரிக்கெட் சூதாட்டம் போன்றே கால்குலேட்டர் மூலம் செய்யப்படும் கூட்டல் கழித்தல் என்பதாகி விட்டது இந்தியத் தேர்தல் முறை. மக்கள் ஓட்டுரிமையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு பதில், மக்களிடமிருந்து ஓட்டு களவாடப்படுகிறது, விலை பேசப் படுகிறது, மிரட்டி வாங்கப்படுகிறது என்று தான் கூற முடிகிறது.

நாடாளுமன்றத்தில் தொடங்கி மாநகராட்சி வார்டுகள் வரை ஊழல் கரைபுரண்டு ஓடுவதைத்தான் தினமும் பார்க்கும் வேதனை நிலைக்கு ஒட்டு மொத்த சமுதாயமே தள்ளப்பட்டு விட்டது. 
விஜய் மல்லயா போன்ற அப்பட்டமாக சமூக நலனுக்கு எதிரானவர்களும், குத்தகைக்காரர்களும், சுவிஸ் வங்கியில் போட்டு வைக்கக் கூடிய அளவிற்கு பெரும் பணக்காரர்களும், மாஃபியா பேர்வழிகளும் அதிக அளவில் நாடாளுமன்றத்திற்கு “சட்டம் இயற்று வதற்காக”ச்  செல்வது தொடர்கதையாகி விட்டது.

இன்றைய லோக் சபாவில் உள்ள 543 எம்.பி.க்களில் 300 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள். ராஜ்ய சபாவில் உள்ள, 183 எம்.பி.க்களில், 98 பேர் (54%) கோடீஸ்வரர்கள். மீதமுள்ளவர்களிலும் கூட எத்தனை பேர் கருப்புப்பண கோடீஸ்வரர்களோ? நாம் அறியோம்.

அதேபோல, 543 லோக்சபா எம்.பி.க்களில், 30 சதவீதம், அதாவது 150 மக்கள் பிரதிநிதிகளின் மேல் கிரிமினல் வழக்குகள் உள்ளன. ராஜ்ய சபாவில், 17% எம்.பி.களுக்கு கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளது. 

அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள் ஈடுபடும் கால்நடைத் தீவன ஊழல் முதல் சுடுகாடு கட்டியதில் ஊழல் வரை, கஷ்மீர் அஸ்ஸாம் மாநிலங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய உரிமை மீறல்கள் முதல், நம் மதுரை மண்ணில் தினகரன் ஊழியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நிகழ்வு வரை, எதிலும் நீதி, நியாயம் வழங்க முடியாத ஆண்மையற்ற குற்றப்பிரிவு நீதித்துறையைத் தான் காண முடிகிறது.

சீக்கியர்கள் படுகொலை, குஜராத் கலவரம், பாபரி மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்த கலவரங்கள், குஜராத் படுகொலைகள், போபால் நச்சு வாயு பேரிடர் என்று எந்த மிகப் பெரிய குற்றங்களிலும், நீதி, நியாயம், நஷ்ட ஈடு மற்றும் மறுவாழ்வு எதற்கும் உத்திரவாதம் இல்லாத ஆன்மாவற்ற ஆளுமை தான் இந்தியாவில் உள்ளது. இப்படியே, இருட்டும் கருப்புமாகத்தான் தெரிகிறது நமது ஜனநாயகச்சூழல்.

இந்தியாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் பேரம்பேசி விற்கப்படும் இன்றைய இழிநிலை மாற்றப் படாவிட்டால். நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்று கல்வி யாளர் அனந்தக்கிருஷ்ணன் வருத்தப்படும் அளவிற்கு நிலைமை முற்றி விட்டதே என்று தோன்றுகிறது. 

சாராய அதிபரை மீண்டும், மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதை ஒரு முன்னாள் பிரதமர் செய்கிறார் என்றால், பின்புலம் உள்ள தோழமைக்கட்சி அமைச்சர் மீதான ஊழல் குற்றச் சாட்டிற்கு அடிப்படை இருந்தும் கூட்டணி நிர்பந்தத்தினால், அவருக்கு பக்கப்பலமாக இந்நாள் பிரதமர் இருக்கிறார். 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டும், அதற்கான அடிப்படை முகாந்திரங்கள் வெளிவந்த பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட அமைச்சர்  தொடர்ந்து பதவியில் இருக்கமுடிகிறது. 

இந்த இழிநிலைதான் இன்றைய பாராளுமன்ற ஜனநாயகமாக உள்ளது. இப்படிப்பட்ட கால கட்டத்தில் இருந்து கொண்டு, நாட்டில் 220 மாவட்டங்களில் தீவிரவாதம் பரவிவிட்டது என்று பேசுவதில் என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது?

இதே நாட்டில் தான், 1956ம் ஆண்டு நடந்த ஒரு இரயில் விபத்திற்கு பொறுப்பேற்று சற்றும் தயங்காமல் பதவியில் இருந்து இறங்கிய அன்றைய இரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி போன்றோருடைய தார் மீக வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சமுதாயம் புரையாடிப் போய்விட்டது என்றும் அதனால் தான் அரசியல் பாழ்பட்டுக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். மக்களை வழிநடத்த நல்ல அரசியல் தலைமை  இல்லை என்றும் அதனால் தான் சமுதாயமும் சீர் கெட்டு விட்டது என்கிறார்கள் மற்றொரு சாரார். காலம் காலமாக, அரசியல் கெட்டு விட்டது, சமுதாயம் சரியில்லை என்று பேசுவதற்கு ஒரு கூட்டம் இருந்து தான் வருகிறது என்றும் உலகம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பது மூன்றாவது சாரரின் கூற்று.

ஆனால், ஊழலை விட மிகப் பெரிய மனித உரிமை மீறல் இல்லை என்பதை சராசரி மக்கள் இன்றைக்கு புரிந்து கொண்டதாகத் தெரிய வில்லை. ஊழலுக்கு நாம் நமது உயிரை விலை கொடுக்கிறோம். உடல் நலத்தை இழக்கிறோம். பல உரிமைகளை விட்டுக் கொடுக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் நம் தன்மானத் தையும், எதிர்காலத்தையும் நாமே அழித்துக் கொள்கிறோம்.

தமிழின் பழம் பெருமை பேசுவதற்காகவும், ஆட்சியாளர்களைப் புகழ்வதற்கான களமாகவும் ஆகிப் போன செம்மொழி மாநாட்டிற்கு வாரி யிறைக்கப்பட்ட நிதியானாலும் சரி, போபால் நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 வருடம் கழித்து அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி யானாலும் சரி, அதிகாரவர்க்கத்தடன் இணைந்து இவற்றில் கொள்ளை அடிப்பதற்கு வாய்ப்பு உணடா என்று கருதும் கூட்டம் நாட்டில் பெருகிவிட்டது. 

இதெல்லாம் சில மக்களுக்குப் புரிந்தாலும், தெரிந்தாலும் செய்வதறியாது தவிக்கின்ற நிலை தான் உள்ளது. இப்படிப்பட்ட நாளுக்கு நாள் இருள் சூழ்ந்து வரும் நிலையை மாற்ற வேண்டிய “அவசர நிலை”, இந்திய அரசியல் சூழலில் தோன்றியிருக்கிறது என்பதை சமுதாயப் பற்றுள்ளவர்கள் உணர வேண்டும்.

ஆக இடைவிடாத, தொய்வில்லாத விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மக்கள் மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்கள் நலம் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சமாக, மக்கள் நலனில் மண்ணள்ளிப் போடுபவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்கவாவது சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் எல்லோரும் திரண்டு முயற்சிக்க வேண்டும்.
போலி ஜனநாயகத்தில் உள்ள “போலி”யை தூக்கி எறிந்து விட்டு உண்மையான ஜனநாயகத்தை எவ்வாறு மீட்கப் போகிறோம்? பதில் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment