Saturday, August 18, 2012

AUG'2012

                                         மற்றும் ஒரு விடுதலையை நோக்கி...!


அன்புத்தோழர்களே!

A.NARAYANAN
மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து விட்டு, இப்பொழுது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இவ்விதழ். இதழில் பல குறைகள் இருக்கலாம். சில நிறைகளும் இருக்கலாம். குறைகளை சுட்டிக் காட்டி, சீர் செய்வதற்கு வாய்ப்பளியுங்கள். நிறைகளை வரவேற்று, அவற்றின் நன்மை பலருக்கும் சென்று அடைய பங்காற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் பள்ளிச் சிறுமி, பள்ளிப்பேருந்து ஓட்டை வழியாக விழுந்து உடல் நசுங்கி இறந்த நிகழ்வு, உயர்நீதிமன்றம் முதல் தமிழக முதல்வர் வரை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. உடனடியாக மாவட்டங்கள் தோறும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பள்ளித் தாளாளர், போக்குவரத்து அலுவலர், ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் பல குழந்தைகள் உடல் கருகி இறந்த பின்னர், அரசு நிர்வாகம் அவசர கதியில் மாநிலம் முழுவதும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.


அப்பொழுதும் அப்பள்ளியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஓர் எழுச்சியை ஏற்படுத்திவிட்டு அடங்கியது அந்நிகழ்வு. இவையெல்லாம் விபத்துக்கள் அல்ல, கொலை என்று பலர் உணர்ச்சி வசப்பட்டு கூவுகின்றனர். பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது சிறுமிக்கு ஏற்பட்ட மோசமான முடிவு.


கும்பகோணத்தில், ஒரு குறுகலான நெருக்கடியான கட்டிடத்தில் அங்கீகாரம் பெறாமல் நடந்த தனியார் பள்ளியில் நடந்த விபத்தானாலும், இப்பொழுது சிறுமிக்கு நேர்ந்த விபத்தானாலும், இவை ஏதோ அரசு ஊழியர்களின் ஊழலாலும், தனியார் பள்ளி நிர்வாகிகளின் அலட்சியத்தாலும் நடந்த சம்பவங்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது. அதனை எல்லோரும் நம்பி ஏற்றுக் கொள்கிறோம். ஊழலுக்கு இதில் பங்குண்டு. நிர்வாகிகளின் கவனக்குறைவும் காரணம்.


ஆயினும் அதையும் தாண்டி, கடந்த பல ஆண்டுகளாக சீரழிந்து, சிதைந்து, சின்னா பின்னமாகிக்கிடக்கும், குறிக்கோளற்ற கல்விக் கொள்கையே முதன்மைக் காரணம் என்று நாம் அடையாளம் காணத் தவறி விடுகிறோம்.


நமது அரசுகள், பள்ளிக்கல்வித் தளத்தை பொதுப்பள்ளியாகவும், அருகாமைப் பள்ளியாகவும் மாற்றிவிட்டால், குழந்தைகள் ஏன் வேன்களிலும், பஸ்களிலும், ஆட்டோக்களிலும் நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளியை அடைய வேண்டும்?


கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்ளையாக நடைமுறையில் ஆக்கப்பட்டுவிட்டது. பள்ளிப் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது போதாதென்று, ஷீ, டை, யூனிஃபார்ம், சிறப்பு வகுப்புகள், மாலை டீயூஷன் வகுப்புகள் மட்டுமல்லாது பள்ளிப் போக்குவரத்துச் செலவுக்கும், கணிசமான நேரமும், பணமும் பெற்றோரால் செலவு செய்யப்படும் மூடத்தனமான சூழல், நகரமானாலும், குக்கிராமமானாலும், ஏற்படுத்தப்பட்டு விட்டது.


கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தும், அச்சட்டம் எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லையோ என்று சந்தேகம் எழுகிறது. இந்த ஆண்டு கூட, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து அதிக மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது.


ஒன்றாம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு ஆகியவற்றில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடை நிறுத்தம் ஆகியிருக்கிறார்கள் அல்லது அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அவர்களது பெற்றோரால் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவின மாணவருக்கான 25% ஒதுக்கீடு என்பதும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. “கல்வி உரிமை” என்ற கோணத்தில் புரிந்து கொள்ள மக்கள் இன்னும் தயாராக இல்லை. தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர் காலம் கிடைக்கும் என்ற நப்பாசையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பெரும்பாலும் சமரசம் செய்து கொள்ளவே பெற்றோர் விரும்புகிறார்கள்.


அரசும், அதன் அமைப்புகளும், மக்களிடம், தரமான கட்டாயக்கல்வி என்பது குடிமக்களாகிய உங்களது குழந்தைகளின் உரிமை, அதனைத் தருவது எங்கள் கடமை என்று பரப்புரை செய்யப் போவதில்லை.


சர்வ சிக்ஷா அபயன் (SSA) மூலம் கொட்டப்படும் கோடிகள், ஊழலில் கொள்ளை போவதாகச் செய்திகள் வருகின்றன. அரசு வேலை என்பது மக்களுக்கு சேவை அளிப்பதற்கு அல்ல, மாறாக, கை நிறைய சம்பளம், வேலைப் பாதுகாப்பு, முடிந்த வரையில் குறுக்கு வழியில் மேலும் ஆதாயம் என்பதாக நடைமுறையாகிவிட்டது- அதனால்தான், அரசு வேலைக்கு விண்ணப்பங்கள், கோடிகளில் விற்பனையாகின்றன.


அரசு வேலை கிடைக்குமென்றால் லட்சங்களை லஞ்சமாக அளிக்க யாரும் அஞ்சுவதில்லை. இதைவிடக் கேவலமாக ஒரு சமூகம் மாற்றம் காண முடியாது. அதல பாதாளத்தில் ஒட்டு மொத்தமாக வீழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு இயந்திரத்தில் காணப்படும் பலதரப்பட்ட ஊழல்களையும், சுணக்கத்தையும் களையெடுத்து, சாதாரண மக்கள் அதிகாரப்படுத்தப்படும் போது, படிப்படியாக, நம் சமூகத்தை மீட்டெடுக்க இயலும்.


இன்று இந்தியாவின் சில மாநிலங்களில் இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இப்படி கரைபுரண்டு ஓடும் ஊழலைத் தடுப்பதற்கும், மக்களை முதன் மைப்படுத்தி அரசு நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்வதற்கும் பல தளங்களில் செயல்பட வேண்டியுள்ளது, வலியுறுத்த வேண்டியுள்ளது, அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. எவையெல்லாம் முதலில் அவசியம் என்று சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அந்த விதத்தில் இம்மாத பாடம் இதழ், ஊழல் ஒழிப்பு இதழாக அமைந்துள்ளது. படித்துப்பாருங்கள்.


கருத்து உருவாக்க முன் வாருங்கள். சிந்திப்போம். சீரிய செயலாற்றுவோம். எல்லோரும் இணைந்து மற்றொரு ஆகஸ்ட் பதினைந்தைத் தாண்டி பயணிப்போம்.


மற்றுமொரு விடுதலையை நோக்கி, விடிவெள்ளியைத்தேடி.


 புதிய நம்பிக்கையுடன்
 


அ.நாராயணன்