Friday, June 14, 2013

ஜூன் 2013தலைதூக்கும் ஜனநாயக சர்வாதிகாரம்!

அன்புத் தோழர்களே!

அ.நாராயணன்
ஒவ்வொரு ஆண்டும், ஜுன் 23ம் தேதி, உலக “பொதுச்சேவை தினமாக”க் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது, ஐக்கிய நாடுகள் சபை, சிறந்த பொதுச்சேவை வழங்கிய ஒரு நாட்டின் நிர்வாகிக்கோ, அரசுத் துறைக்கோ, அந்த ஆண்டிற்கான “சிறந்த பொதுச் சேவை அளித்தவர்” எனும் விருதை வழங்குகிறது.

கடந்த 2012ம் ஆண்டு, உலகளவில் சிறந்த பொதுச்சேவை அளித்ததற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விருது, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசுக்கு அளிக்கப்பட்டது.

பொதுச்சேவை உத்திரவாத சட்டம் 2010 எனும் புரட்சிகரமான சட்டத்தை இயற்றி, 336 பொதுச் சேவை மையங்களை மாநிலம் முழுவதும் அமைத்து, 1.25 கோடி விண்ணப்பங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து, மக்களை உண்மையாகவே மாநிலத்தின் மன்னர்களாக்கிய சாதனைக்காக, உலகளாவிய இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில்,  “பொதுச்சேவையில் ஊழலைக் கட்டுப்படுத்தி தடுத்தது” எனும் பிரிவில், கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி அவர்களுக்கு இந்த விருது, ஐக்கிய நாடுகள் சபையால் அளிக்கப்படுகிறது.

2011ம் ஆண்டு பதவிக்கு வந்த கேரள முதல்வர், ஆயிரக்கணக்கான பொது மக்களை (தனித் தனியாக), எந்த அதிகாரிகளின் குறுக்கீடுகளும் இல்லாமல், நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வருகிறார்.

அவரது குறைகேட்கும் முகாம்களில், பலமுறை விடிகாலையில் மக்களை சந்திக்கத் துவங்கி, இரவு வரை கூட நிகழ்வு நீடிக்கிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் திறமையாகவும், எளிமையாகவும், அன்றாட அலுவலகளைச் செய்வதும், திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதுமாக, கேரள அரசு நிர்வாகத்தில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் காண முடிகிறது.

இதே போன்ற செயல்பாடுகளை, ராஜஸ்தான், பிகார், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.

கேரள முதலமைச்சருக்கும், கேரள அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துச் சொல்லும் வேளையில், அவர்களையெல்லாம் கண்டு வெகுவாக பொறாமையும் கொள்ளத் தோன்றுகிறது.

இன்றைக்கு மக்களாலும், குறிப்பாக ஊடகங்களாலும் விரிவாகப் பேசப்படும் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு, ஒரு ரூபாய்க்கு இட்டிலியும், மிக மானிய விலையில் மற்ற சில பதார்த்தங்களையும் வழங்கும் தமிழக முதல்வரின் மூளையில் திடீரென்று உதித்த “அம்மா உணவகம்” திட்டத்தை இப்படிப்பட்ட பொதுச்சேவைக்கான அடையாளமாகப் பார்க்க முடியுமா?

கோவில்களில் இலவசமாக பொங்கல் பிரசாதம் அளிக்கும்போது கூட, அதை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். கலைஞர் தொடங்கி வைத்த இலவச தொலைக்காட்சிகளை வாங்க மேட்டுக்குடி மக்கள் கூட கால்கடுக்க வரிசையில் முண்டினார்கள்.

ஜனநாயக நாட்டில் மக்களை அதிகாரப்படுத்துவதன் மூலம் ஊழலைக் களைந்து, நிர்வாகத்தை செம்மையாக நடத்தி, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த உதவுவதுதான் ஆள்பவர்களின் ஆரோக்கியமான செயல்பாடாக இருக்க முடியும்.

இலவச அரிசி, பலசரக்கு, இலவச எரிவாயு, மிக்சி போன்றவற்றை அளித்தது போதாதென்று, 1 ரூபாய்க்கு இட்டிலி விற்கும் அவலம் வேறு எங்கும் காண முடியாது. இலவசம் என்று எதுவும் கிடையாது என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. எல்லாம் உழைக்கும் மக்கள் அளிக்கும் வரிப்பணம்.

கடந்த ஆண்டு, ரூ.25,000 கோடி இலக்கு வைத்தாலும் ரூ.22,000 கோடி வரைதான் டாஸ்மாக் சாராய வருமானம் கிட்டியது. இதுவேகூட மாநில அரசின் சொந்த வருவாயில் 25 விழுக்காடுக்கும் அதிகம். நீதிமன்றங்கள் வலியுறுத்தியும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் போராட்டங்களையும், மாற்று அரசியல் கட்சித்தலைவர்களின் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளையோ, பள்ளி கல்லூரிகளுக்கு மிக அருகில் உள்ள சாராயக் கடைகளையோ கூட அப்புறப்படுத்த அரசு தயாரில்லை.

இந்த சாராய வருவாயில் இருந்து ஒரு சிறு தொகைதான், “அம்மா உணவகம்” எனும் வாய்க்கரிசி. நம் மாநிலத்தில், மக்களுக்கு உண்மையாக நன்மை பயக்கும் நிர்வாகத்தையும், திட்டங்களையும் பற்றி யாருக்கும் கருத்து இல்லை, நம்பிக்கை இல்லை.

மானிய விலை இட்டிலிக்கடை, முடிந்தால் இலவச இட்டிலிக்கடை போன்ற ஜிகினாத் திட்டங்களுக்கே காது கூசும் அளவிற்கு கரவொலி.

தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் மிகக்குறைவு, சிறு தூரங்களுக்குக்கூட அதிகக் கட்டணம். பராமரிப்போ மிக மோசம். எங்கும் வரலாறு காணாத தொடர் மின்வெட்டு. எல்லா துறையினருமே மிக அதிருப்தியில். சாதாரண மக்கள், காய்கறிகளை முகர்ந்து பார்க்கக்கூட அச்சப்படும் அளவுக்கு விண்ணை முட்டும் விலைவாசி, குடிதண்ணீருக்காக அலைக்கழிக்கப்படும் அவலம். எல்லா மட்டத்திலும் ஊழல் குறைந்ததாகத் தெரியவில்லை.

மாவட்டங்களில் இளைஞர்களிடம் அதிக வேலையில்லாத் திண்டாட்டம், சமூகத்தில் அமைதியின்மை, இருட்டறை நிர்வாகம், ஆரோக்கியமான விவாதங்களுக்கு வாய்ப்பில்லாத வகையில் மன்னராட்சி போன்று செயல்படும் சட்ட (ஜால்ரா) மன்றம், அடிமைகளைப் போல செயல்படும் அமைச்சர்கள், வாக்குகள் அளித்து அதிகாரத்தைக் கொடுத்த மக்களை சந்திக்காமல், உளவுத் துறையை மட்டுமே முழுக்க நம்பி எடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்கள் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் கூட அணுகிவிட முடியாத இரும்புக் கோட்டை போன்ற இறுக்கம். இதுதான் கடந்த இரு ஆண்டுகளாக, முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் லட்சணம்.

மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டதால், மிக அதிருப்தியில் இருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை சேகரித்து வெற்றி பெற வேண்டிய நிலையில், “அம்மா உணவகம்” போன்ற திட்டங்கள் கை கொடுக்கும் என்று நம்புகிறார். அவர் வெற்றி பெறக்கூடும். தமிழக அரசியலில் அப்படிப்பட்ட வெற்றிடம் மட்டுமே உள்ளது என்பதுதான் உண்மை. அதிகாரங்களை குவித்து வைத்துள்ள முதல்வரும் அவரது ஆளும் கட்சியும் தன்னிடத்தே வைத்துள்ளது அரசு நிர்வாக அமைப்பு எனும் ராட்சச இயந்திரம்.

அது நினைத்தால், ஒரு சில மாதங்களிலேயே மக்கள் பயன்பாட்டிற்காக ஆயிரம் தரமான பொதுக் கழிப்பிடங்களைக் கட்டி அதனை செம்மையாக நடத்தும் அமைப்புகளை ஏற்படுத்த முடியும்.

அதே ராட்சச இயந்திரத்தைக் கொண்டு ஒரு சில நாட்களிலேயே, இருநூறு இலவச சாப்பாட்டுக் கடைகளைத் திறந்து, ரேசன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி, இட்டிலிகளையும், சம்பாத்திகளையும் பொங்கலையும் ஒரு ரூபாய்க்கு என்ன இலவசமாகவே வாரி வழங்க முடியும்.

இட்டிலியாக இருக்கட்டும், நாளிதழ்களில் அதற்கான முழுப்பக்க விளம்பரங்களாக இருக்கட்டும் எல்லாமே, மக்கள் தலையில்தான் விடிகிறது.

கலைஞர் ஆட்சியில் அவர் முடிவெடுத்து, இயந்திரத்தனமான வேகத்தில், சென்னையின் மையப்பகுதியில் 500 கோடிக்கும் மேல் மக்களின் வரிப்பணத்தை செலவழித்து, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் உழைப்பை இரவும் பகலும் பிழிந்து கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தின் இன்றைய கதி என்ன?

இவைவெல்லாம், ஜனநாயக அமைப்பில் தலைமைப் பதவிக்கு வருபவர்களின் மனதில் சர்வாதிகார எண்ணம் தலை தூக்குவதால் வரும் திட்டங்கள், இந்தப்போக்கு உத்திரப்பிரதேசம் குஜராத் போன்ற சில மாநிலங்களின் தலைவர்களிடையேயும் காண முடிகிறது.

இப்படிப்பட்ட ஜனநாயக சர்வாதிகாரம் துளிர்விட்டு பின்னர் நச்சு மரமாக விழுதுவிட்டு வளர்வதற்கு உரம் சேர்ப்பது சந்தர்ப்பவாத ஊடகங்கள்தான்.

மக்களாட்சியின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை, இன்று, தங்களது தார்மீக ஆடைகளைக் களைந்துவிட்டு, வெட்கமில்லாமல் காட்சியளிக்கின்றன என்றால் மிகையில்லை.

தமிழகத்தின் நாளிதழ்கள், அதிமுக அரசு அளிக்கும் தொடர் விளம்பர வருமானத்திற்காகவோ, அல்லது அவமதிப்பு வழக்குகளுக்கு பயந்தோ, முதல்வரின் ஆளுகையைப் பற்றி குறைந்தபட்ச விமர்சனம் செய்யக்கூட தயாரில்லை.

தமிழக ஊடகங்களின் நம்பகத் தன்மை கேலிக்கு ஆளாகிவிட்டது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. தமிழகத்தின் நீண்ட கால மேம்பாட்டிற்காக யாரும் சிந்திக்கத் தயாரில்லை. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் முயற்சிதான் தமிழக அரசியல் சமூகச் சூழலில் நிலவும் அவலம்.

இந்த அவலம் மாற வேண்டும். இல்லை யென்றால், எல்லோரும் ஜனநாயகப் பார்வையற்றவர்களாகி, தமிழக ஜனநாயக எதிர்காலம் சூனியமாகிவிடும். திமுக, அதிமுக கட்சிகளையும், பிற்போக்கு சாதி அமைப்புகளையும் தவிர்த்து புதிய ஜனநாயகத்திற்கான தலைமைகள் உருவாக வேண்டும். காலம் உருவாக்குமா?

உண்மை நிலையை விளக்கி மக்கள் இயக்கம் கட்டுவது எப்பொழுதையும் விட இப்பொழுது மிகக் கடினமாக உள்ளது.


பாடம் இதழின் மற்ற கட்டுரைகளுக்கு
 நட்புடன்
 அ.நாராயணன்

Thursday, May 9, 2013

மே 2013ஜனநாயகத்தை சீர்படுத்துவது சாத்தியமா?

அன்புத் தோழர்களே!
அ.நாராயணன்
தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகள், அடுத்த ஆண்டு வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே தயாராகி வருவதாகத் தெரிகிறது.

அவரவர் நிலைப்பாடுகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. மக்கள் வரிப்பணத்தில் கோடி கோடியாய் விழுங்கும் இதே நாடாளுமன்றம், மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பதில் அந்தந்த கட்சிகளின் தேர்தல் வியூகங்களுக்காக மட்டுமே பலி கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே, நாடாளுமன்றத்திற்கு, வியாபார முதலாளிகள் மட்டுமல்லாது, கிரிமினல் பின்னணி உள்ளவர்கள், பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், கொலை முயற்சி வழக்கு உள்ளவர்கள், இப்படிப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக் கப்பட்டு சென்றுள்ளார்கள் எனும் அவப்பெயர் உள்ளது.

அதுமட்டுமல்லாது, விவாதங்களுக்கு வாய்ப்பில்லாது, கூச்சல் குழப்பம் மிகுந்த சந்தைக்கடையாக மட்டுமே நாடாளுமன்றம் படிப்படியாக மாறி வருவதை ஆண்டுக்காண்டு கண்டு வருகிறோம். எந்த ஒரு மசோதாவும் திருப்தி அளிக்கும் வகையில் விவாதிக்கப்பட்டு சட்டமாவதில்லை.

ஏற்கனவே, ஜனநாயகத்தின் பல்வேறு தூண்கள் ஆட்டம் கண்டு வரும் நிலையில், பாராளுமன்ற ஜனநாயகம், மக்கள் கண்முன்னே ஒரு மோசமான நாடகமாக மாறி வருவது, படித்தவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒருவித கசப்புணர்வையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருவதை உணர முடிகிறது.

ஆட்சி அதிகாரத்தை வைத்திருப்பர்களும், அந்த அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்கட்சித் தலைவர்களும் இணைந்து, “கொண்டு வந்தானொரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டிஎனும் கதையாக, மக்கள் அரங்கத்தை அழித்துக் கொண்டு வருகிறார்கள்.

இன்றைக்கு, புதிய புதிய ஊழல் புகார்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை. பாலியல் வன்முறைகள், கொலைகள், விபத்துக்கள் எவையும் மக்களை உலுக்குவதில்லை. இவற்றையே தினமும் ஊடகங்களில் படித்துப், பார்த்து மரத்துப் போய் கிடக்கிறது சமூகம். மாறாக, ஒரு வித விரக்தியை, தன்னை மட்டும் தற்காத்துக் கொள்ளும் சுயநல போக்கை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனவோ என்றுகூட தோன்றுகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. அதிக வேலையிழப்பு, பொருளாதார மந்த நிலை, சுற்றுச் சூழல் சீர்கேடு, பணவீக்கம் எல்லாமும் சேர்ந்து நடுத்தர வர்க்கத்திடம் கூட ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அரசியல் கட்சிகளின் முதன்மைத் தலைவர்கள் கூட இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படும் எண்ணம் அறவே இல்லாதவர்களாக உள்ளனர்.

மகாராஷ்டிராவில் வரலாறு காணாத வறட்சி, விவசாயிகள் தற்கொலை, தீராத தண்ணீர் பஞ்சம் என்ற அவலச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத வண்ணம், அம்மாநில அமைச்சர் ஒருவர், மிக மிக ஆடம்பரமாக தனது குடும்பத் திருமணத்தை நடத்தி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்வை எந்த மாநிலத்திற்கும் பொருத்திப் பார்க்க இயலும். 

நமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அப்படிப்பட்டவை. அடுத்த ஆண்டு நடத்தப்படும் தேர்தலிலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் வாய்ப்புகள்தான் அதிகம் என்பதால் குதிரை பேர எம்.பிக்களின் சராசரி சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. அதனால், ஒவ்வொரு கட்சிகளிலும் எம்.பி பதவிக்குப் போட்டியிட ஆசைப்படும் பெரும் பணக்காரர்கள், சாராயக்கடை ஏலம் எடுத்தவர்கள், கூலிப்படைத்தலைவர்கள் போன்றோரின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும். 

அரசியல் புரோக்கர்கள், இடைத்தரகர்களின் மதிப்பும் அதிகரிக்கக்கூடும். இந்த அரசியல் வியாபாரச் சந்தையில், மாநிலக் கட்சிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, “நாற்பதும் நமதேஎன்ற கோஷத்துடன் அதிமுக தயாராகி வருவதுஅதன் எல்லாச் செயல்பாடுகளிலும் தெரிகிறது.

இக்கட்சி நாற்பது தொகுதிகளையும் கைப்பற்ற இருதடைகள் மட்டுமே உள்ளன. ஒன்று மின்சாரம், இரண்டாவது டாஸ்மாக் சாராயம், இந்த இரண்டும், பொது மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கிவிட்டது. பெரும் வறட்சியும், வேலைவாய்ப்பு இன்மையும் இணைந்து, தமிழகத்தில் பொது அமைதி கெட்டு வருகிறது. மாநிலத்தில், அதிக வன்முறையும் அதிக குற்றங்களும் நடப்பதாகத் தோன்றுகிறது.

தேர்தலுக்கு முன்பு, நல்ல மழை பெய்து, மின்சார உற்பத்தியும் அதிகரித்து, அதிருப்தியை சரிகட்டிவிடலாம் எனும் நம்பிக்கையில் இருக்கிறது ஆளும் கட்சி. தொடர்ந்து முழுப்பக்க அரசு விளம்பரங்கள் மூலமும் மற்ற மறைமுக செயல்பாடுகள் மூலமும் தங்களைப் பற்றி நல்ல விதமான செய்திகளை மட்டுமே தமிழக ஊடகங்களை போட வைக்கும் விதமாக ஆட்சியில் இருப்பவர்கள் சமாளித்து வருவதாகத் தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாது, இலங்கைப் பிரச்சனை உட்பட பல விஷயங்களில் தங்களின் கடந்த கால நிலையை, நாடாளுமன்றத் தேர்தலை மனத்தில் கொண்டு, தற்காலிகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இவற்றை எல்லாம் வைத்து தேர்தல் பந்தயத்தில் முந்திவிடலாம் என்பது ஆளுங்கட்சியின் கணிப்பு என்று தோன்றுகிறது.

ஜெயிக்கும் குதிரைமீது ஏறி சவாரி செய்யும் எண்ணம் மட்டுமே கொண்டுள்ள தமிழகத்தின் உதிரிக்கட்சிகள், ஆளும் கட்சித்தலைமைக்கு சிறிதும் மனக்கசப்பு வந்துவிடாத வண்ணம், ஆட்சியாளர்களை மறந்தும் விமர்சிப்பதை தவிர்த்து வருகின்றனர். 

ஊடகங்களும் தமிழக அரக்கு எப்பாட்டு பாடி வருகின்றன. தட்டிக் கேட்க யாரும் இல்லாத நிலையில், தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடிகளும், ஊழல்களும் மக்கள் களத்தில் விவாதிக்கப்படாமலே மறைக்கப்படுகின்றன. இவையெல்லாம், கூடிய விரைவில், தமிழக மக்களின் மீதுதான் விடியப்போகின்றன.

வரும் நாடாளுமன்றத் தேர்தல், கடந்த காலங்களைவிட மிகவும் காஸ்ட்லியானதேர்தலாக இருக்கும் என்று கருதப்படுவதால், அரசியல் கட்சிகளின், அதன் வேட்பாளர்களின் முதலீடுகளும், செலவுகளும் மிக அதிகமாக இருக்கும் எனும் கருத்து நிலவுகிறது. அதனை எப்பாடுபட்டாவது ஈடுகட்டும் விதமாக, எல்லா கட்சிகளும், நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும், தொகுதி வாரியாக அதற்கான இலக்கு நிர்ணயிப்பதிலுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று செய்தி வருகிறது. 

இது ஒருபுறமிருக்க, அடுத்த தேர்தலுக்குள் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க, மீண்டும் வன்னியர் சங்கமாகவிஸ்வரூபம் எடுத்து வன்முறை அரசியல் செய்து வருகிறது. பா.ம.க. மற்ற சாதிக்கட்சிகளும் தங்கள் தொடைகளைத் தட்டி, ஓசையெழுப்பி பலத்தை நிரூபிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத பண பலம், சாதிய உணர்வு ஆகியவைதான் பெருமளவில் விதைக்கப்பட்டு, வெற்றியை அறுவடை செய்ய முற்படுவார்கள். அரசியல் தரகர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, தமிழகம் உட்பட அந்தந்த மாநிலங்களில், அரசியல் வன்முறை, அரசியல் கொலைகள், சாதிய மோதல்கள், போராட்டங்கள் போன்றவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய காலங்களைப் போன்று, அல்லது அதைவிட உறுதியாக, தேர்தல் ஆணையம் செயல்படுமா என்பது தெரியவில்லை. இந்த நிலையில், சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தேர்தல் கண்ணியமாக நடைபெறுவதையும் தேர்தல் ஜனநாயகத்தில் அதிகமாக இளைஞர்கள் ஈடுபடுவதையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

2011ம் ஆண்டு, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பே, கண்ணியமான தேர்தலுக்கு களப்பணியாற்றுவோம்என்று கூறியபடி பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து தேர்தல் ஊழலுக்கு எதிராகவும், பணபலம், ஆட்பலம் ஆகியவற்றை எதிர்த்தும் குரல் கொடுத்தனர். 

சில பல கல்லூரிகளுக்கு சென்று இளைஞர்களிடம் பரப்புரை செய்தனர். அந்த தேர்தலில் பண பலத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு ஒரு சிறிய தூண்டுதலாக அச்செயல்பாடுகள் அமைந்தன.

இம்முறையும், அடுத்த ஆண்டு தேர்தலில், பண பலம், சாதி பலம் போன்றவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக, சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் கொண்டவர்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய கடமை உள்ளது. ஆட்சியாளர்களை விருப்பு வெறுப்பின்றிவிமர்சிக்கவும், தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், துணிந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஜனநாயகத்தை சீர்படுத்தும் ஆர்வமும், அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்கள் மக்கள் மத்தியில் கணிசமாக உள்ளனரா?

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டவர்கள் போதிய எண்ணிக் கையில் உள்ளனரா? அப்படியென்றால், ஒரு குழுவாக இணைந்து, அர்ப்பணிப்புடன் தங்களது நேரத்தையும், பொருளாதாரத்தையும் கொடுத்து களப்பணியாற்ற தயாராக இருப்பார்களா?

வாசகர்களுக்கு இதெல்லாம் ஏதாவது பேராசையுடன் கூடிய உளறலாகத் தோன்றுகின்றனவா?

நட்புடன்


Wednesday, April 10, 2013

ஏப்ரல் 2013 கைக்கு எட்டியதா? கானல் நீர்தானா?


கைக்கு எட்டியதா? கானல் நீர்தானா?
‘அகிலா’க்களுக்கு வேண்டிய பணியிடப் பாதுகாப்பு
பாலியல் தொந்தரவுக்கு ஆட்படும்
‘அகிலா’க்கள்
                                                                                                                                                                                                அ.நாராயணன்
தமிழகத்தின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி செய்த அகிலா என்ற செய்தி வாசிப்பாளருக்கு, அவரது மேலதிகாரியிடமிருந்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டது பற்றி செய்தி கேள்விப்பட நேர்ந்தது. அந்த மேலதிகாரி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும், குற்றம் சாட்டிய செய்தி வாசிப்பாளருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அகிலா மட்டுமல்லாது, மற்ற சில பெண் செய்தியாளர்களும் பாலியல் சுரண்டலுக்கு, இந்நிறுவனத்தில் ஆளாகியிருப்பதாக கட்டுரை படிக்க நேர்ந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவிற்கு உண்மை என்பது இப்பொழுது தெரியவில்லை. உண்மையாயிருப்பின், இப்படிப்பட்ட பாலியல் சுரண்டல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் பற்றி தீர விசாரித்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், தான் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அகிலா நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி அவருக்கு, மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களோ, ஊடகங்களோ வேலை வழங்குமா என்பது கேள்விக்குறி.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், நிர்வாகத்தைக் கண்டித்தும் பெண்ணியவாதிகள், சில பெண் ஊடகச் செயல்பாட்டாளர்கள் அறிக்கை விட்டுள்ளார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நிருபரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு பிரபல அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் பொழுது, தனக்கும், சக மாணவிகளுக்கும், அவர்களது துறைப் பேராசிரியர் எப்படி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கோபத்துடன் விவரித்தார். பிற்பாடு, அந்த பாலியல் சுரண்டல் பேர்வழி, பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பதவி வகித்தார். அந்த சுரண்டல் பேர்வழிதான், அக்காலகட்டத்தில், மாணவிகள் ஆடை தொடர்பாக கடுமையான விதிகளை முன்வைத்தார் என்பது நகைமுரண்.

பணியிடங்கள் தாண்டி, பள்ளி கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதுதான் நடைமுறை உண்மை. ஆகப் பெரும்பாலான சமயங்களில், சமூகமும், நிறுவனமும் காவல்துறையும் தங்களுக்கு எதிராகத் திரும்பி அவமானப்படுத்திவிடுமோ எனும் அச்சத்தில், தொந்தரவுக்கும், சுரண்டலுக்கும்  ஆளாகிற பெண்கள், அதனை வெளிக்கொண்டு வராமல், சகித்துக் கொள்கிறார்களோ  என்று தோன்றுகிறது.

ஊடகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கே பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு இல்லை என்றால் திரைத்துறை, அமைப்பு சாராத தொழிலிடங்கள், பின்னலாடை நிறுவனங்கள், வீடுகளில் பணி புரியும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், காப்பகங்களில் இருப்போர், விவசாயக்கூலிப் பெண்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு கிடைப்பது சாத்தியமா?

உதவிக்கு வந்த விசாகா தீர்ப்பு:
எல்லா விதமான பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அவர்களின் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து ஏற்படக் கூடிய பாலியல் தொந்தரவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒரு மசோதா, பிப்ரவரி மாதம் 26ம் தேதி, பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு விரையில் சட்டமாக உள்ளது.

2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு) மசோதா, 2012 என்றழைக்கப்படுகிறது.

1997ம் ஆண்டு, விசாகா (எதிரி) ராஜஸ்தான் அரசு எனும் வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நிறுவனத்திலும், பெண் ஊழியர்களின் குறைகளைத் தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு உதவி அளிக்கப்பட வேண்டும், ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புதான், 15 ஆண்டுகளுக்குப்பின், இப்பொழுது சட்டமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டத்தின் சாதகங்கள்:
இம்மசோதாவின்படி, வீடுகள், பள்ளி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், அரசு, அரசு சாரா நிறுவனங்கள் விவசாயத் தொழில்கள் ஆகிய எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். பெண் ஊழியர்களது குறைகளைக்  கேட்டறிந்து தீர்க்கும் அமைப்புகள் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இந்த மசோதா.

இந்த குறை தீர்க்கும் அமைப்புகள் இல்லாத நிறுவனங்கள் மீது ரூ50,000ற்கும் மேற்பட்ட அபராதம் விதிக்கப்படுவதோடு, அந்நிறு வனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்கிறது இம்மசோதா. ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்படுத்தப்படும் குறைதீர் அமைப்புகளில் 5 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். ஒரு பெண் ஊழியரிடமிருந்து முறையீடு வந்தால், 90 நாட்களுக்குள் விசாரித்து குறை தீர்க்கப்பட வேண்டும்.

இது போக, ஒவ்வொரு மாவட்டத்திலும், தாலுகா அளவிலும்கூட 4 உறுப்பினர்களைக் கொண்ட குறைதீர் குழுக்கள், அரசு சார்பாக ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு ஏற்படுத்தும் குழுவிற்கு, சிவில் நீதிமன்றம் போன்று விசாரிக்கும் அதிகாரம் உண்டு. இந்த மாவட்ட அளவிலான குழுவின் தலைவர் உட்பட மூவர் பெண்களாக இருக்கவேண்டும்.

இந்த அமைப்புகள் செயல்பட, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கும். பாலியல் தொந்தரவு எனும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாதிப்பிற்கு உள்ளான பெண் ஊழியருக்கு, குற்றம் இழைத்தவரிடமிருந்து, அபராதம் பெற்று இழப்பீடு அளிக்க முடியும். இழப்பீடு என்பதை, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட உடல், மன ரீதியான பாதிப்பு, வேலையிழப்பு மருத்துவச் செலவு, தவறு செய்தவரின் பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து, இழப்பீடு நிர்ணயிக்கப்படும். குற்றச்சாட்டை எழுத்து மூலமாக இல்லாமல், வாய்மொழி மூலமாகவும் அளிக்கலாம்.

இம்மசோதாவின்படி, விருப்பமில்லாமல் உடலைத் தொடுவது, நெருக்கமாக வருவது, பாலியல் செய்கைகளுக்கு வற்புறுத்துவது, பாலியல் ரீதியாகப் பேசுவது, இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சு, நீலப்படங்களைக் காட்டுவது போன்றவை, பாலியல் தொந்தரவுகளில் அடங்கும்.

பெண் தொழிலாளரின் வேலையில் குறுக்கிடு தல், மிரட்டுதல், மோசமான பணியிடச் சூழல், அவரின் உடல் நலம், பாதுகாப்பு ஆகியவை  பாதிக்கப்படும் வகையில் தரக்குறைவாக நடத்துதல், அவரது பணி தொடர்பாக உள்நோக்கம் கொண்ட அல்லது வெளிப்படையான மிரட்டல் அல்லது தூண்டுதல் போன்றவற்றை, பாலியல் தொந்தரவுக்கான சூழலாக இம்மசோதா கருது கிறது.

அமைப்பு சார்ந்த அரசு, தனியார், அரசு சாரா நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டுக் கூடங்கள், அமைப்புகள், அமைப்பு சாரா துறைகள், வீடுகளில் பணிபுரிவது வேலை தொடர்பாக ஒரு பெண் ஊழியர் வரும் இடங்கள் ஆகியவை, இம்மசோதாவின் கீழ் பணியிடங்களாகக் கருதப்படுகிறது.

இம்மசோதாவின் பெரும் ஓட்டைகளாகக் கருதப்படுபவை யாவை?
1. பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு எழுந்தால், நிறுவனத்தின் குறைதீர்க்கும் குழு மூலமாகவோ, மாவட்ட அரசின் குறைதீர் குழு மூலமாகவோ, குற்றம் சாட்டியவர், குற்றவாளி இருவரும் சமரச முயற்சியை முதற்கட்டமாக மேற்கொள்ளலாம் என்கிறது இம் மசோதாவின் பிரிவு 10. சமரசம் என்றால் என்ன என்று தெளிவாக்க வில்லை இப்பிரிவு. சமரசம் என்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்க முடியுமா? அது, பார்ப்பவர் கண்ணுக்கும், சமுதாயச் சூழலுக்கும், ஆணாதிக்கத்தின் அளவு கோலுக்கும், முறையீடு செய்தவரின் சமூக நிலைக்கும் ஏற்ப வேறுபடும் என்பது  ‘காமன் சென்ஸ்’ இல்லையா?

(பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் பற்றி சமீபத்தில் ஆய்வறிக்கை அளித்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா கமிட்டி, மேற்கூறிய மசோதாவின் இந்தப் பிரிவை வன்மையாகக் கண்டிக்கிறது. பாலியல் தொந்தரவிற்கு சமரச தீர்வு என்பது பெண்ணின் தன்மானத்திற்கு இழுக்கு என்று சாடுகிறது வர்மா கமிட்டி.)

வடிகட்டிய ஆணாதிக்க இந்திய சமுதாயத்தில், சமரசப்போக்கு என்று சட்டமே அங்கீகாரம் அளித்தால், பெண் அடங்கிப்போக வேண்டும், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு சமாதானம் செய்து கொள்வது நல்லது என்று கூறும் கட்டப்பஞ்சாயத்து அணுகுமுறைக்கு அரசின் சட்டமே வழிசெய்து தருவதாகக் கருதுகின்றனர் பல சமுக ஆர்வலர்கள்.

2.  அடுத்த அபாயகரமான பிரிவு.14 ஆகும். இதன்படி, குற்றம் சாட்டியவர் வேண்டுமென்றே அவதூறாகக் குற்றம் சாட்டினார் அல்லது பொய் என்று தெரிந்தே முறையீடு செய்தார் என்று தீர விசாரித்து குழு முடிவுக்கு வருமானால், குற்றம் சாட்டிய பெண் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம். அதுமட்டுமல்ல, பொய் சாட்சி சொன்னார் என்று ஒரு குழு முடிவுக்கு வருமானால், சாட்சி சொன்னவர் மீதும் துறை ரீதி நடவடிக்கைக்கு  பரிந்துரைக்கலாம். (அதாவது, பாதிக்கப்பட்ட உங்கள் தோழிக்காக சாட்சி சொன்னீர்கள் என்றால், குழுவின் முடிவைப்பொறுத்து, தோழி மீது மட்டுமல்ல உங்கள் மீதும் அவதூறு நடவடிக்கை பாயும் வாய்ப்பு உண்டு. உங்கள் சக ஊழியருக்காக சாட்சி சொல்ல வேண்டுமா கூடாதா என்றுநீங்களே யோசித்து முடிவுக்கு வாருங்கள்.)

இப்பிரிவைப் பற்றியும் வர்மா குழு குறை கூறியுள்ளது. இம்மசோதா எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்தையே சிதறடிக்கும் பிரிவு இது என்கிறது வர்மா அறிக்கை. என்னதான் சட்டப் பாதுகாப்பு இருந்தாலும், பெண்கள் எளிதாக முறையீடு செய்ய முன்வருவது இல்லை. ஆக, இம்மசோதா இன்னும் ஓரிரு மாதங்களில் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாகியவுடன், அது பெண்களுக்கு நல்லதொரு ஆயுதமாகும். என்ன, அது இரு முனை கொண்ட கூர்மையான வாளாக இருக்கும்.  தொடுப்பவரையே குத்தி விடலாம்.

3. பணியிடம் என்று விவரிக்கும்போது, கல்வி நிலையங்கள் உட்பட  எல்லாவிதமான   நிறுவனங்களையும் விவரிக்கிறது. ஆனால், பணியாளர்கள் எனும்போது மாணவிகளை விட்டு விட்டது. அதாவது, ஒரு கல்லூரியில், சக ஊழியர்களால் பாதிக்கப்படும் பெண் ஊழியரோ, சக ஆசிரியர்களால் பாதிக்கப்படும் பெண் ஆசிரியரோ முறையீடு செய்யலாம், ஆனால், பேராசிரியரால் ஏற்படும் பாலியல் தொந்தரவுக்கு, ஒரு மாணவி இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற முடியாது.

ஆண்-பெண் சமத்துவத்திற்கு  வழிவகுக்குமா?
விசாகா தீர்ப்பு வந்தபின்பு, 17 ஆண்டுகளுக்குப் பின் புதிய சட்டம் வந்தாலும், 1997 ஆண்டின் விசாகா தீர்ப்பின் சாராம்சத்தை முழுவதுமாக உள்வாங்கவில்லை என்பது உண்மை. இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இம்மசோதா, கடந்த ஆண்டு மக்களவையில் (லோக்சபாவில்), நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக நடந்த கூச்சல் குழப்பத்திற்கு நடுவே, எந்தவித விவாதமும் இன்றி ஒப்புதல் பெறப்பட்டது.

இப்பொழுது, ராஜ்யசபாவிலும் ஆழமான விவாதங்கள் எதுவுமின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெண்களின் உரிமை, சமத்துவம் தொடர்பாக சட்டம் இயற்றுபவர்களின் மன நிலையையே இது பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. அதனால்தான், பெண்களுக்கு அரசியல் அவைகளில் 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்னும் அந்தரத்தில் தொங்குகிறது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

உச்சநீதிமன்றம், பணியிடங்களில் பெண்கள் வேலை செய்ய வரும்போது, அவர்களுக்கு ஆண்கள் அளவிற்கு சமத்துவம் அளிக்கும் விதத்தில் நடத்தப் படுவதற்கும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவேண்டும் என்கிறது. குற்றம், விசாரணை, தண்டனை, இழப்பீடு என்பது தாண்டி, குற்றம் சுரண்டல், தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கும் விதத்தில் பணியிடச் சூழல் இருக்கவேண்டும் என்கிறது.

இச்சட்டம், அதற்கு வழிவகுக்குமா என்பது விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்தும் போதுதான் தெரியவரும். பாதுகாப்பான சூழல் தொடர்பாக இச்சட்டம் தெளிவை அளிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. வீடுகளில் பணிபுரிய வருவோர், விவசாயக் கூலி தலித் பெண்கள் ஆகியோர் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.

அதுபோலவே, ஆயத்த ஆடை நிறுவனங்கள், மாநகராட்சிகளின் துப்புரவுப்பணி செங்கல் சூளை போன்று கொத்தடிமைகளாகப் பணி புரிவோர் ஆகியோருக்கும் விடிவுகாலம் ஏற்பட வேண்டும். இதற்கு, சமூக மாற்றம், சட்டம், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகிய பலரது உளப்பூர்வமான, தொடர் பங்கு தேவைப்படுகிறது.

தாமதமாகவந்தாலும், கேட்பதற்காவது நன்றாக இருக்கும் இம்மசோதா சட்டமாக்கப்பட்ட பின்னர், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், சட்டம் கெசெட் மூலம் வெளியான பின்பு, உடனடியாக அதற்கான விதிகளை, மத்திய மாநில அரசுகள் இயற்ற வேண்டும். இதற்கான போதிய அழுத்தத்தை சமூக ஆர்வலர்களும் ஊடக வியலாளர்களும், பெண்ணியவாதிகளும் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், ஏற்கனவே இப்படிப்பட்ட சட்டங்கள் மூலம் அமைக்கப்பட்ட மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையமும், மகளிர் ஆணையமும், அரசியல்படுத்தப்பட்டு அரசு வாரியங்கள் போன்று  குறிக்கோளற்றும் செயல்படாமலும் முடங்கிக் கிடக்கின்றன. மாநில மனித உரிமை ஆணையமும் முடங்கிக் கிடக்கிறது. பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட அமைப் புகளை எல்லாம் தூசிதட்டி, முடுக்கிவிட்டு, செயல்படச் செய்யவேண்டியது நம் கடமையாகிறது. 


நட்புடன்

அ.நாராயணன்