Friday, March 8, 2013

பிப்ரவரி 2013

நம் அடிப்படைக் கடமைகளையும் புரிந்து கொண்டு செயல்படுவோம்

அன்புத்தோழர்களே,

ஒரு திரைப்படம் எடுத்தால், இது எனது பேச்சுரிமைவியாபார உரிமைஅதனை தடை செய்யலாகாது என்கிறார்கள். இந்தக் கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பவர்களோ, உனது கருத்து எனது மனதைஎனது நம்பிக்கையைப் புண்படுத்துகிறது, அதனை நான் அனுமதிக்க இயலாது என்கிறார்கள்.

திரைப்பட ரசிகர்களோதிரைப்படத்தைக் காண்பது எனது உரிமை அதனைத் தடுக்கலாகாது என்று போராடுகிறார்கள். ஆட்சியாளர்களோ, பொது அமைதியை நிலைநாட்டுவது எங்கள் கடமை, அதனால்திரைப்படத்தைத் தடை செய்ய முடியும் என்று கூறிதங்களது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு ‘‘அரசின் கடமை’’ எனும் முகமூடியை, அணிவிக்கிறார்கள். ஆக, இன்றைய தினம் எல்லோராலும் பொதுத்தளங்களில் திகமாகப் பேசப்படுவது, வலியுறுத்தப்படுவது, கோரப்படுவது, அவரவர்களின் உரிமைகளைத்தான்.

குழந்தைகள் உரிமைபெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமை, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை என்று சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரின் உரிமைகளுக்காக வாதாடுகிறோம்.

அது போகஎல்லாவற்றையுமே அடிப்படை உரிமை என்ற தளத்தில் வைத்துத்தான் செயல்படுகிறோம். ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் தனி மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குரல் கொடுக்கிறோம்.

வீட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் ஒவ்வொரு விஷயத்திலும் இது எனது உரிமை’ என்ற கோணத்தில்தான் வாதாடுகிறோம்.

தொழில் நடத்துபவர்கள்தங்கள் தொழிலினால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தொழில் நடத்துவது எங்களது அடிப்படை உரிமை, அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது என்கிறார்கள். தொழிலினால், சூழலியல் பாதிக்கப்படும் போது, அது மற்றவர்களால் எதிர்க்கப்படுகிறது.

மனித உரிமை எனும் சொல்லாடல் கொச்சைப்படுத்தப்பட்டு, கூட்டுக் கொள்ளை போன்று இந்தியாவில் தத்தம் சுயநலத்திற்குஉரிமை’ என்ற சட்டையை முக மூடியாக மாட்டிவிடும் அவலமும் சமீப காலமாக வெளிப்படையாக பலராலும் நடத்தப்படுகிறது.

நம்மில் பலர் பெரிய வாகனம் இருப்பதனால், சாலையை அடைத்துக் கொண்டு, விடாமல் ஓலம் செய்து கொண்டே பயணிக்கிறோம். இதனை தத்தம் உரிமையாகவே கருதுகிறோம். மற்றவர்கள் பாதிப்பு அடைவது பற்றி யோசிக்கும் மன நிலையே இல்லை.

இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களோ, சைக்கிளில் செல்பவர்களின், நடந்து செல்பவர்களின் உரிமையைப் பறித்துவிடுகிறார்கள்.

நுகர்வது எனது உரிமைவாங்கித் தின்பதுஅனுபவிப்பது எனது உரிமை என்ற கோணத்தில் மட்டுமே சிந்திக்கிறோம். கிட்டத்தட்ட எல்லோருமே, குப்பைகளை சாலைகளில் போட்டு விட்டு மறந்து விடுகிறோம். குப்பைகள் நாறும் பொழுது, சாக்கடைகள் பொங்கி வழியும் போது, எல்லோரையும் திட்டுகிறோம்.

எப்படியாவது திட்டமிட்டுகாய்களை நகர்த்திகூட்டிக்கழித்துதேவையான வாக்குகள் கிடைத்து ஆட்சிக்கு வந்துவிட்டால்எந்த வகையிலும் அதிகாரம் செலுத்துவது எனது உரிமை என்பது வெற்றி பெற்றவர்களின் எண்ணச் செயல்பாடாக உள்ளது. 

அப்படி ஆட்சிக்கு வரும் அரசு, இலவச மடிக் கணினி (லேப்டாப்) கொடுக்கவில்லை என்றால் அந்தப் பொருள் கிடைக்க வேண்டியது எனது உரிமை என்று கூறி சாலை மறியல் செய்கிறோம். அந்தச் சாலை மறியலால் மற்றவர்கள் உரிமை பாதிக்கப்படுவது பற்றி யோசிப்பதுகூட இல்லை. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிட்டால்அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராடுகிறார்கள் உறவினர்கள். அவர்களது போராட்டத்தினால், மற்ற நோயாளிகள் துன்பப்பட்டுசிகிச்சை பெற முடியாமல், யாராவது இறக்க நேரிட்டால்பொறுப்பு எடுத்துக் கொள்ளத் தயாரில்லை.

சாலையை ஒட்டி கடை வைத்திருப்பவர்கள், தங்களது வியாபார உரிமையை நிலைநாட்ட அப்படியே நடைபாதைவரை கடை விரித்து விடுகிறார்கள்.

சிறுவியாபாரிகளோநடைபாதைகளையே கடைகளாக்கி விடுகின்றனர். அவர்களது வாழ்வாதார உரிமை பெரிதாபாதசாரிகளின் உரிமை பெரிதாஇப்படிப்பட்ட கேள்வி எழுகிறது.

என் வீட்டுக் குழாயில் தண்ணீர் வருவதனால்அதனை எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்துவது, செலவழிப்பது எனது உரிமை என்ற அணுகு முறையே  கிட்டத்தட்ட எல்லோரிடமும் உள்ளது. குழாய் வசதி இல்லாமல், குடத்துடன் அலைபவர்களைப் பற்றி சிந்திப்பதுகூட இல்லை. 

இப்படி அவரவர் உரிமைகளை மட்டும் நிலைநாட்ட நினைக்கும் சமூகம், எப்படி ஒரு ஜனநாயக சமூகமாக இருக்க முடியும்?

அது ஒரு அப்பட்டமான சுயநல மக்களைக் கொண்ட கும்பலாக மட்டுமே வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு அன்புப் பரிமாற்றம், பரஸ்பர புரிதல் என்பதாக ஒரு சமூக ஒழுங்குடன் இணக்கமாக இந்தியச் சமூகம் வாழும் சூழல் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

பரஸ்பர சுயநலமேதத்தம் பொறுப்பற்ற தன்மையே, சமூகத்தில் ஒரு பொருத்தமற்ற ஒழுங்கை நிலைநாட்டிசெயற்கையான சமத்துவத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கருதுகிறேன். அவரவர் ஒழுங்கீனமே, ஒரு விதமான  சமூக ஒழுங்காக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.

வாழுவாழ விடு என்பதாக இல்லாமல்என்னால் முடிந்த வரை என் சக்தியை வெளிப்படுத்துகிறேன், உன்னால் முடிந்தவரை நீ முயன்று பார் என்பதாக அவரவர் உரிமைகளுக்கு மட்டுமே முன்னுரிமை எடுத்துக்கொள்கிறோம்.

இந்தியாவை ஒரு “செயல்படும் அராஜகம்” என்றுஇந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் கென்னெத் என்பவர் கூறிச் சென்றார். இதற்கு ஒரு முக்கிய காரணம்உரிமைகளைப் பற்றி பேசும் சமூகமும், தனிமனிதர்களும் தங்கள் கடமைகளைப் பற்றி குறைந்தபட்ச புரிதலோ, சிந்தனையோ ஏற்படுத்திக் கொள்வதில்லை.

இதோ 64வது குடியரசு தினம் வந்து போனது. குடியரசு என்றால் என்ன?
மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதே குடியரசு ஆகும். மக்கள் தங்களுக்காகதங்கள் பிரதிநிதிகளைக் கொண்டு நிர்வாகம் செய்து கொள்ளவும்சமூகத்தில் ஒரு ஒழுங்கு ஏற்படுத்திக் கொண்டு சமத்துவத்துடனும், மாண்புடனும் சுய கவுரவத்துடனும் வாழ்ந்து கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டதுதான் அரசியலமைப்புச் சட்டம்.

இச்சட்டத்தில் உரிமைகள் மட்டும் பேசப்படவில்லை, ஒவ்வொரு குடிமகனுக்கான கடமைகளும் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 51-Aல் பிரிவு IV-A அவற்றைத் தெளிவாக தொகுத்துள்ளது. 

வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொண்டு நம் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகச் செயல்பாடாகாது. (வாக்கு அளிப்பதையும், சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதையும்கூட நம்மில் பலர் செய்வதில்லை என்பதேஒரு அவலம்) அதன்பின்னர் நமது உரிமைகளுக்காகப் போராடுவதும்பேசுவதும், நுகர்வதும் மட்டுமே நமக்கு மேன்மை அளிக்காது. தேசியக் கொடி ஏற்றிவிட்டு, விரைப்பாக தேசிய கீதம் பாடுவதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. 

நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பதோடுசாதிமதம்மொழிபிராந்தியம், கலாச்சாரம் ஆகியவற்றில் வேற்றுமை இருந்தாலும், சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பது சட்டப்படி நம் அடிப்படைக் கடமையாகிறது.

பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனங்களை விடுவது நம் கடமை என்று வலியுறுத்துகிறது நம் சட்டம். நமது கலாச்சார இழைகளைப் பேணிக் காப்பதும் அவசியம் என்கிறது. உயிர்கள் அனைத்திடமும் அன்பு பாராட்டி, வனங்கள், விலங்குகள், நதிநீர்நிலைகள் உட்பட சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக  வலியுறுத்துகிறது நம் சட்டம்.

அறிவியல் பார்வையையும், மனித நேயத்தை வளர்த்துக் கொள்வது, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் நமது அடிப்படைக் கடமைகளுள் ஒன்று. வன்முறையைத் தவிர்த்து பொது சொத்துக்களைப் பாதுகாப்பதும் நம் கடமை என்கிறது சட்டம்.

நம் அளவிலும்கூட்டாகவும் நமது செயல் திறனை வளர்த்துக் கொண்டுசிறந்து விளங்கிநம் நாட்டைவளர்ச்சியின் மேன்மைக்கு இட்டுச் செல்வதும் நம் கடமை என்கிறது அரசியலமைப்புச் சட்டம். 

உரிமைகளைப் பற்றியும்நம் உடமைகளைப் பற்றியும் ஓயாது சிந்தித்து வரும் நாம் ஒவ்வொருவரும், நமது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 11 வகையான அடிப்படைக்  கடமைகளைப் பற்றியும் சிந்தித்துச் செயல்படும் நேரம் வந்துவிட்டது.

இன்றைக்கு பள்ளியளவில்அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி ஒரு ஊறுகாய் அளவிற்கு மட்டுமே மாணவ மாணவிகளால் தொட்டுக் கொள்ளப்படுகிறது. பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி வகுப்புகளில் அதற்கான வாய்ப்பே இல்லை. நமது கல்வி அமைப்பில் உள்ள மிகப்பெரிய ஓட்டை என்பது இதுவே. 

எப்பொழுதுநமது அரசும்கல்வியாளர்களும்அறிஞர்களும் இணைந்து நம் நாட்டு மக்களுக்கு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பற்றிய கல்வியை அளித்து எல்லோரும் நம் உரிமைகளையும்முக்கியமாகக் கடமைகளையும் முழுமையாகப் புரிந்து உள்வாங்கிக் கொள்கிறோமோ, அன்றுதான் நம் நாடு உண்மையாகவே ஒரு உயிர்ப்புள்ள  ஜனநாயக நாடாகும். 

அப்பொழுதுதான், நாம் ஜனநாயகத்தின் மாண்பை உணர்ந்து ஏற்றுக் கொண்ட குடிமக்களாகி விடுவோம். அன்று முதல்,  நமக்கும்நம் நாட்டிற்கும் ஏறுமுகம் தான்.

நம்பிக்கையுடன்
அ.நாராயணன்

No comments:

Post a Comment