Thursday, March 7, 2013

ஜனவரி 2013



2013ல் மனம் திறந்து சிந்திக்க வேண்டிய நேரம் இது!

அன்புத்தோழர்களே,
               2013ம் ஆண்டிற்குள் நுழைந்துவிட்டோம். ஆனால், இன்றைய இந்திய சமூகத்தின் அணுகுமுறை என்ன?

அரசியலமைப்புச் சட்டம் எல்லா மக்களுக்கும் சமத்துவமாகவும், கவுரவமாகவும் வாழும் உரிமையை வலி யுறுத்துகிறது. ஆயினும், இந்த உரிமையை உறுதி செய்யும் அதிகாரத்தில் இருக்கும் இந்திய அரசு, அரசு இயந்திரத்தின் பல்வேறு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
தீண்டாமைக் கொடுமையை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு பதில், சில சமயங்களில் அரசு அமைப்புகளே தீண்டாமைக் கொடுமை கடைப்பிடிக்கப்படு வதற்கு துணை போவது என்பது எவ்வளவு அவலமான நிலைமை?

சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் 20 கோடி மக்கள் தொகை கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், 124 வகைகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தீண்டாமைக் கொடுமை களை அனுபவித்து வருகிறார்கள். இன்று கூட காலனிகளாகத்தான் தனித்து வசிக்கின்றனர்.
  • 37.8% கிராமங்களில், தலித் குழந்தைகள் பள்ளிகளில் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள்.
  • 27.6% கிராமங்களில், தலித்துகள் காவல் நிலையங்களுக்குள் நுழைவது கடினம்.
  • 25.7% கிராமங்களில், தலித்து மக்கள் ரேஷன் கடைகளில் நுழையதடை
  • 33% கிராமங்களில், பொது காதார ஊழியர்கள், தலித்து வீடுகளுக்கு செல்வதைத் தவிர்க்கிறார்கள்.
  • 23.5% தலித் காலனிகளுக்கு, தபால்கடிதங்கள் கொடுக்கப்படுவதில்லை.
  • 14.4% தலித் கிராமங்களில் தலித்துகள், பஞ்சாயத்து அலுவலகங்களு க்கு உள்ளும், உள்ளூர் அரசு அலுவலகங்களுக்கு உள்ளும் செல்ல முடியாது.
  • 12% தலித் கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் பொது வரிசேயில் நின்று தேர்தலில் வாக்களிக்க முடியாது.
  • 48.4% தலித் காலனிகள், கிராம பொது கிணற்றிலோ, அடி பம்புகளிலோ, குளத்திலோ நீர் எடுக்க முடியாது.
  • 35% கிராமங்களில், உள்ளூர் சந்தைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருட்களை விற்க முடியாது.
  • 64% கிராமங்களில், தலித்துகள் கிராமத்தில் உள்ள வழிபாட்டுக் கூடங்களுக்குள் செல்ல முடியாது
  • 50% கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், பொது சுடுகாட்டில் தங்கள் பிணங்களை ஏரியூட்டவோ, புதைக்கவோ முடியாது.
  • 73% கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்ற சாதியினரின் வீடுகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • 70% கிராமங்களில், தாழ்த்தப்பட்ட தலித்துகளும், மற்ற சாதியினரும் இணைந்து உட்கார்ந்து உணவருந்த முடியாது.
  • 35.8% தலித்து மக்கள், கிராமப்புற கடைகளுக்குள் நுழைய முடியாது.
  • 80.2% தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றங்கள், நீதிமன்றங்களில் விசாரணை அளவிலேயே நிலுவையில் உள்ளன.
  • 47% கிராம கூட்டுறவுப் பண்ணைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பால் விற்பனை செய்ய முடியாது.
  • 25% கிராமங்களில், தலித்துகள், பால் வாங்க இயலாது.
  • 25% கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், மற்றவர்களை விட குறை வான கூலியே பெறுகின்றனர். அதிக நேரம் உழைக்கின்றனர். தாமத மாகக் கூலி பெறுகின்றனர். வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் வன்முறையை எதிர் கொள்கின்றனர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சியை எப்பாடுபட்டாவது நிலை நாட்ட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் முனைந்து வருகின்றன.
ஆனால், வளர்ச்சியின் பலன்கள், இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களுக்கும், அமைப்புசாரா உழைக்கும் மக்களுக்கும் சென்று சேராமல் பார்த்துக் கொள்வதிலும் எல்லோரும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம் என்பதுதான் உண்மை.

பொருளாதாரம் நலிவடைந்தாலும், அதன் விளைவுகள் இவர்களைத்தான் முதலில் தாக்குகிறது. நாட்டில் சுற்றுச்ழல் பாதிப்படைந்தாலும், அதுவும் மிக அதிகமாக தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் பாதிக்கிறது.

பாலியல் வன்முறையாக இருக்கட்டும், எல்லாமே அவர்களை அடக்கி ஒடுக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது.

அவர்களைப் பாதுகாக்க எத்தனை சட்டங்களும், உதவிகளும் வந்தாலும், அவற்றால், அதிர்ஷ்டவசமாக மிகச் சிலரே பயனடைகிறார்கள். பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓட்டைப் பானையில் போட்ட நாணயங்களாக, அவை நழுவி விடுகின்றன.

ஹேப்பி நியூ இயர் என்று புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், தனிமனிதர்களின் மகிழ்ச்சிகள், எல்லோரும் சுய கவுரவமுடனும் உண்மையான சமத்துவத்துடனும் வாழ முடிகிற போதுதானே சமூக மகிழ்ச்சியாக உருவெடுக்கும்

அப்படிப்பட்ட அமைதியான சமூகத்தில் தானே, நமது மகிழ்ச்சி நிலையானதாகவும், நமது வாழ்வு போலியற்று அர்த்தமுடனும், மனநிறைவு தருவதாகவும் இருக்கும். ஒருவரை எந்த வகையிலாவது சுரண்டுவதோ, துன்புறுத்துவதோ, பாகுபாடுகாட்டுவதோ, நமக்கே ஒரு வகையில் மனச்சோர்வையும், குற்ற உணர்வையும், மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்துகிறது அல்லவா?

தொழிலின் பெயராலும், மதத்தின் பெயராலும் இன்ன பிற காரணங்களைக் கூறியும், நம்மை மூளைச்சலவை செய்து திணிக்கப்பட்டவைதானே, இந்த உயர்ந்த சாதி தாழ்ந்தசாதி எனும் கேவலம்?

இன்னும் எத்தனை புத்தாண்டுகளை, பொங்கல்களை, சுதந்திர தினங்களை, குடியரசு தினங்களை, இந்த கேவலத்தை சுமந்து கொண்டே நாம் கொண்டாடப் போகிறோம்?

தீண்டாமை எனும் சிலுவையை இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் சகமனிதர்களின் முதுகில் ஏற்றி பத்திரமாக சுமக்கச் செய்து வரப் போகிறோம். இதற்கு என்று முடிவு?

மனம் திறந்து, நம் ஒவ்வொருவரும் மனசாட்சியைத் தொட்டு சிந்திக்க வேண்டிய நேரமிது. சிந்திப்பதைத்தாண்டி, விரைவாக செயல்பட வேண்டிய நேரமும் இது. 

இனி ஒரு கணம் தாமதிப்பதற்கில்லை.
நட்புடன்
அ.நாராயணன்


No comments:

Post a Comment