Wednesday, March 6, 2013

டிசம்பர் 2012


அடங்க மறு! அத்து மீறு!

அன்புத்தோழர்களே,
கடந்த மாதம் தர்மபுரியில் நடந்த மிக மோசமான சாதிய வன்முறைக்குக் காரணமானவர்களையும், அதனைத் தடுக்கத் தவறிய காவல் துறையையும்துரித நடவடிக்கையும் உடனடி நிவாரணமும் போதிய அளவில் வழங்காமல், மெத்தனமாகச் செயல்படும் தமிழக அரசையும் கண்டிப்பதுதான் நடுநிலை யாளர்களின், குறிப்பாக நேர்மை உணர்வுள்ள பத்திரிகை ஆசிரியர்களின், சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர் களின் கடமை.

ஆனால் அதைச் செய்யாமல், வன்முறைக்கு ஆளானவர்களைக் குறைகூறுவது போன்றும், தலித் கட்சியினர் அடங்க மறு அத்து மீறுஎன்று கோஷம் எழுப்பி உணர்ச்சியைத் தூண்டி விடுவதாகவும் எழுதியும் பேசியும் உள்ளார் ஒரு நடுநிலைநாளிதழின் ஆசிரியர். ஆதிக்க வன் முறையைவிட, அப்படிப்பட்ட வன்முறையாளர் களைக் கேள்விக்கு உட்படுத்தாமல், வன்முறைக்கு இலக்கானவர்களைப் பற்றி, இடம், பொருள், ஏவல் பார்க்காமல் குறை கூறுவது வன்முறையாளர்களுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதற்கு இணையானது. நடந்த வன்முறையைவிட இப்படிப்பட்ட சிந்தனையை மக்களிடம் வெளிப்படுத்துவதுதான் தமிழக எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

சமீபத்திய தமிழக சமூக அரசியல் தளத்தில், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனை சாதிய அடிமைத்தனத்திலிருந்தும் பயத்திலிருந்தும் விடுவித்துதன்மான உணர்வு கொள்ளச் செய்த இந்தச் சொல்லாடல், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா பயன்படுத்திய இந்தச் சொல்லாடல் புதிது ஒன்றுமல்ல. உலகம் முழுவதுமே எங்கெல்லாம், நீதிக்கும்நியாயத்திற்கும், தர்மத்திற்கும் புறம்பாக மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் புரட்சியாளர்கள் அடிமைப்பட்டவர் களைத் தட்டியெழுப்பவும்அடக்குபவர்களுக்கு எதிர்வினையாற்றவும் பயன்படுத்திய உத்திதான். இது இயற்கையான ஒன்று.

இந்தியாவின் வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜாராம் மோகன் ராய், விவேகானந்தர், மகாகவி பாரதியார், காந்தியடிகள், அம்பேத்கார் உட்பட பல புரட்சியாளர்கள் கடந்த காலங்களில் வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்திய உத்தி தான்.

இந்து மயத்தை நவீனப்படுத்த நினைத்த ராஜாராம் மோகன்ராய், இச்சமயத்தில் இருந்த கேடுகளான சதி, குழந்தைத் திருமணம் மட்டுமின்றி சாதியை ஒழிக்க நினைத்தார். அதற்கு முதலில் தான் சார்ந்த வங்காள பிராமணர்களை எதிர்த்து, அத்து மீறினார். அதுதான் பின்னர், பிரம்ம சமாஜம் தோன்றக் காரணமானது.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று எள்ளி நகையாடிவிட்டு, ஒரு தாழ்த்தப்பட்ட நண்பனுக்கு பூனூல் அணிவித்து, பாரதியார் கொண்டாடவில்லையாஅன்றைய காலகட்டத்தில் அது சாதிய நியதிகளுக்குள் அடங்க மறுத்து அத்துமீறிய செயல்தானே?

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிச் சட்டங்களுக்கு எதிராக, அடங்க மறுத்தவர் காந்தி அல்லவா? என்னதான் இந்தியாவில் மேட்டுக் குடியில் பிறந்திருந்தாலும், தென்னாப்பிரிக்காவில் புகை வண்டியின் முதல் வகுப்பிலிருந்து வெள்ளைய அதிகாரிகளால் தூக்கியடிக்கப்பட்ட போது தானே, சமூகப் பாகுபாட்டின் வன்முறைக் கொடூரத்தை அவரால் நேரில் அனுபவித்துப் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த அனுபவத்திற்குப் பின்னர்தான், காந்தியின் சமூகப் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு, தென் ஆப்பிரிக்காவின் இந்தியர்கள், கருப்பர்கள் ஆகியோரைத்திரட்டி, நிறவெறி அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு அடங்க மறுத்து, அத்துமீறுவதற்கு, அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அது ஒத்துழையாமை இயக்கமாக, சத்தியாகிரகமாக உருவெடுத்தது.

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து தொடர்ந்து வன்கொடுமைகளைக் கண்ட டாக்டர்.அம்பேத்கார் கையில் எடுத்ததும், அடங்க மறு, அத்து மீறு கோஷம்தான். வெறும் கோஷமாக இல்லாமல் செயல்பாட்டில் மக்களை இறக்கியவர் அவர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பொதுக்கிணற்றில் தண்ணீர் பிடிக்கக்கூட அனுமதி இல்லாத நிலையில், நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி, மனுநூலைக் கொளுத்திப் போட்டு, பொதுக் கிணற்றில் நீர் பிடிக்கப் போராடினார். கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களுடன் அத்துமீறி நுழைந்தார்.

சமூக சீர்திருத்தவாதி பெரியார், மூட நம்பிக்கைகளிலும், சாதிய அடிமைத்தனத்திலும், பெண்ணடிமைத்தனத்திலும் அடங்க மறுத்து, அரை நுற்றாண்டாக நடத்தாத அத்துமீறல்களா?

அதேநேரத்தில், படிநிலை சாதிய சமூகத்தில், தலித் மக்களுக்கு எப்பொழுதும் மரியாதையும், உரிமைகளும் சமத்துவமும் கிடைக்காது என்று முழுமையாக நம்பிய டாக்டர் அம்பேத்கார், வேறு வழி தெரியாமல், மீண்டும் மீண்டும் மத மாற்றத்தையே ஒரு தீர்வாக நம்பினார். ஆயினும் மாற்று மதத்திற்குப் போனாலும்விட்ட குறை, தொட்ட குறையாக சாதிப்பாகுபாடு ஒழிவதில்லை.

(ஒரு கிருத்துவ தேவாலயத்தையோ விடுதியையோ எடுத்துக் கொள்ளுங்கள். அங்கும் கழிப்பறை சுத்தம் செய்வதும் எச்சில் தட்டுக் கழுவுவதும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து மதம் மாறிய கிருத்துவராக இருக்கும். சீக்கியம் ஆனாலும் புத்தம் ஆனாலும் இதுதான் நிதர்சனம்.)

சமூக சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான மகாராஷ்டிராவின் ஜோதிராவ்  புலே ஒரு புரட்சியாளர்தான். அவரின் ஆளுமையினால் ஈர்க்கப்பட்ட அம்பேத்கார் கற்பி, போராடு, ஒன்று சேர்என்றுதான் இன மக்களுக்கு அறை கூவல் விடுத்தார்.

20ம் நூற்றாண்டிலும், அமெரிக்காவின் நிறவெறிக் கொள்கை, கருப்பர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக வைத்திருந்தது. அன்றைய அமெரிக்காவின் கேவலமான ஜிம்க்ரோ  சட்டத்தின்படி, கருப்பர்கள், வெள்ளையர்களின் விடுதிகள், அரசுப்பள்ளிகள் பேருந்துகள் குடிநீர், ஏன் பொதுக் கழிப்பறைகளைக் கூட பயன்படுத்தக் கூடாது. 1955ம் ஆண்டு அச்சட்டத்திற்கு எதிராக அடங்க மறுத்து அத்துமீறியது மார்ட்டின் லூதர் கிங் அல்லவா?

இரு ஆண்டுகளுக்கு முன்புகூட, இந்தியாவின் பல்வேறு கிராமப் பகுதிகளில் மனிதக் கழிவை அகற்றும் தொழிலில் காலம்காலமாக ஈடுபட்டுவந்த நுற்றுக்கணக்கான பெண்கள் சபாய் கரம்சாரி அந்தோலன்எனும் அமைப்பின் தலைமையில் தங்கள் கைகளில் இதுகாறும் திணிக்கப்பட்டிருந்த மலமள்ளும் முறத்தையும் துடைப்பத்தையும் மொத்தமாகப் போட்டு எரித்தனர். இனி பட்டினியால் செத்தாலும், இந்த சாதியச் சுரண்டல் அமைத்துக் கொடுத்த தொழிலுக்குள் அடங்க மாட்டோம் என்று மறுத்து, சாதியக் கெடுபிடிகளிலிருந்து அத்துமீறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது.

இப்படிப்பட்ட பின்னணியில், திருமா போன்றவர்கள், அடங்கமறு, அத்துமீறு என்று தலித் இளைஞர்களை ஒன்று திரட்டுவதில், தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர் சாதிவெறி பித்துக் கொண்டு, இளைஞர்களை வன்முறைக்கு உசுப்பிவிடவில்லை. சட்டத்திற்கு அடங்க மறு, சமூக நலனுக்கு எதிராக அத்துமீறு என்று கோஷம் போடவில்லை. அப்படிச் செய்தால், அது வன்மை யாகக் கண்டிக்கப்படவேண்டியது. ஆனால், மேல் சாதி அடக்கு முறைக்கு எதிராக, அநீதிக்கு எதிராகத் தான் தலித்  இளைஞர்களைத் திரட்டுகிறார்.

பாராட்டப்பட வேண்டிய தலைமைப் பண்பு அது. வன்முறையில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் எல்லா சாதிகளுக்கும் பொருந்தும். கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்றால், பல கட்சிகளின் தலைவர்களுக்கும், சுயசாதித் தலைவர்களுக்கும் இக்குற்றச்சாட்டு பொருந்தும். அப்படி நடந்தால், சட்டம் செயல்பட வேண்டும். செயல்படவில்லை என்பது துரதிருஷ்டம். 

ஆனால், அரசியல் அமைப்புச் சட்டம் மூலம், சாதிகளுக்கு இடையே சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காக இட ஒதுக்கீடு போன்ற கருவிகளும், மற்ற சலுகைகளும் உருவாக்கப்பட்டும்கூட, ஆண்டுகள் கடக்கின்றனவே ஒழிய, தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு தொடர்ந்து கல்வியும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டு வருகிறது. மீறி கிடைக்கும் கல்வியும் பெரும்பாலானர்களுக்கு, தரமானதாகவும், பயனுள்ள தாகவும் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

ஆனால், இப்படி முழக்கம் செய்யும் தலித் தலைவர்களால் ஆசைப்படும் முன்னேற்றத்தைக் காண முடியாததற்கு அவர்களது அடுத்தடுத்த முரண்பாடுகளும் குழப்பமடையச் செய்யும் சிந்தனைகளுமே காரணம். என்னதான் திருமா போன்றவர்கள், தங்கள் கட்சி, எல்லோருக்கும் பொதுவான ஒன்று என்று அவ்வப்போது வாதம் செய்தாலும், எல்லாப் பொதுப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தாலும், தலித் அடையாள அரசியலில் இருந்து அவர்கள் வெளிவர முடியாது. மற்றவர்களும், அக்கட்சியை, தலித் கட்சி அதுவும் பறையர் சமூகத்திற்கான கட்சி என்பதைத்  தாண்டி அங்கீகரிக்கப் போவதில்லை.

அதேபோன்ற பிரச்சனைதான், தென் மாவட்டங்களில் உள்ள புதிய தமிழகம்  போன்ற கட்சி அமைப்புகளுக்கும். தமிழகத்தின் இன்றைய தலித் தலைவர்கள் எல்லாம் தங்களது உட்சாதிப்பிரிவின் தலைவர்களாக இருக்கிறார்களே தவிரதங்களுக்குள் விட்டுக் கொடுத்து, ஒன்று சேர்ந்து வாதாட, குரல் கொடுக்க, குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு சம்மதிக்கும் தீர்க்கதரிசிகளாக இல்லை. ஒரு சில சீட்டுகளுக்காகவும்சில்லரைச் சலுகைகளுக்காகவும் சமரசம் செய்து கொள்ளும் சராசரிகளாகவே ஆகிவிட்டனர்.

மற்றொன்று, தமிழகத்தில் தலித் அடையாளத்துடன் கிட்டத்தட்ட 18-19 விழுக்காடாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், படிநிலை சாதிய அடையாளத்தின் மூலம் தனித்தனி உட்சாதிகளாகப் பிரிந்தும், தங்களுக்குள்  சண்டையிட்டுக் கொண்டும் சில நேரம் வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், போதிய கல்வியறிவும் நிலையான வேலை வாய்ப்புகளும் இல்லாத நிலையில் அரசியல் வாதிகளால் சுரண்டப்பட்டும், பல்வேறு கட்சிகளில் சிதறுண்டும், இன்றும் மூடப்பழக்கங்களிலும் சாராய போதையிலும் கட்டுண்டும் கிடக்கிறார்கள்.

இதுவே ஆதிக்கம் செலுத்தும் சாதி இந்துக்களுக்கு வசதியாக உள்ளது. தலித் அமைப்புகளின் தலைவர்களோ, ஒரு தார்மீகத் தளத்தில் நின்று உரிமைகளுக்காகப் போராடாமல், ஆட்சிக்கு வரும் கட்சிகளுடனும் கூட்டணிக் கட்சிகளுடனும் பதவிக்காக சமரசம் செய்து கொண்டு நடுநிலையாளர்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.

கற்பி, போராடு, ஒன்று சேர் என்று அண்ணல் அம்பேத்கார் கூறியதற்கு வலுவான காரணம் உண்டு. தலித் தலைமைகளும், இயக்கங்களும், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கான உரிமைகளை எவ்வளவு சீக்கிரமாகவும், தேவையான அளவிலும், தரமானதாகவும், தொடர்ந்தும் வென்றெடுத்து கிடைக்கச் செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், சாதியத் தடைகளை உடைத்தெறிந்து இம்மக்கள் மேம்பட வாய்ப்புண்டு.

இது, பள்ளர்கள், பறையர்கள், அருந்ததியர்கள், குறவர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு மட்டுமல்ல, வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் பொருந்தும்.

வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும், கல்வி நிலையில் பெரிய வித்தியாசம் இல்லை. அதே போன்று, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள தேவர் இளைஞர்களும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேம்பட்டு விடவில்லை சாதியக் கலவரமானாலும், சாதியத் தலைவர்களை குருவாகவும், தெய்வமாகவும் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபடுவதானாலும், சாதிக் கூட்டங்களில் திரண்டு கூடுபவர்களானாலும், தரமான கல்வியும், வேலையும் இல்லாதவர்களே ஈடுபடுகிறார்கள். சுயநலம் மிக்க சுயசாதித் தலைவர்களின் பேச்சினாலும், விளம்பரங்களினாலும் கவரப்பட்டு, சமுதாய கவுரவம், ஆண்மை, மாற்றுச் சாதித்திமிர், சுயசாதி உணர்வு போன்ற பிற்போக்கான போலித்தனத்திற்குள் மாட்டிக் கொண்டுள்ள வேலையற்றவர்களே, இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

தமிழர்களின் கலாச்சாரம், வீர விளையாட்டு என்று கூறி, ஜல்லிக் கட்டிற்கான தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை போனார்களே, நம் தமிழ் உணர்வாளர்கள். அவர்களில் பெரும்பாலும் சாதித் தலைவர்கள். படித்து வசதியாக வாழ்க்கையிலும், பதவிகளிலும் நன்கு செட்டில்ஆகிவிட்ட தங்கள் பிள்ளைகளையா தமிழ் கலாச்சாரத்தைக் காக்க, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டில் இறக்குகிறார்கள்? படிக்காத வீரவெறி ஏற்றப்பட்ட இளைஞர்களும், மற்ற வகைகளில் வெறியேற்றப்பட்ட மாடுகளும்தானே முட்டி மோதுகின்றனர்?

உயிர் போவதும், படுகாயம் அடைவதும் யார்? மாடுகளும், படிக்காத வீர இளைஞர்களும் தானே? சாதித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இல்லையே! தலைவர்கள் பணமுடிப்பு தானே வழங்குகிறார்கள்? இதே ஆணாதிக்க பிற்போக்குத்தனம்தான் சாதிய வன்முறைகளிலும் ஈடுபடத் தூண்டுகிறது.

அதற்காக, படித்த இளைஞர்கள் எல்லோரும் சாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவர்களா ஆணாதிக்கச் ட்டையை அவிழ்த்து எறிந்தவர்களா என்றால் கட்டாயம் இல்லை. அப்படிப்பட்ட மூக மாற்றத்திற்கான கல்வி, இன்றும் எட்டாக்கனிதான். அதனை தங்கள் குடும்ப அளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தெருவுக்கு வருவதில்லை.

ஆக, தமிழக இளைஞர்களின் முன் வைக்க வேண்டிய, இன்றைக்கு மிகவும் தேவையான கோஷம் கற்பி, எப்படியாவது கற்றுக்கொள், அநீதிக்கு எதிராக அடங்க மறு, அடக்குமுறைக்கு எதிராக அத்துமீறுஆணாதிக்க சாதிய வெறிக்கு எதிராகப் போராடு, போராடும் வலிமைக்காக ஒன்று சேர்இருகை தட்டினால்தான் ஓசை. சாதி ஆதிக்கம் செலுத்துபவர்களும் இதய பூர்வமாகத் தங்கள் தவறை உணரும் சூழ்நிலை ஏற்படவேண்டும். சுரண்டப்படுபவர்களும், அடிமை உணர்வுக்குள் அடங்கிக்கிடக்க மறுத்து, ரவுத்திரம் பழக வேண்டும். இது அம்பேத்கார் வழி மட்டுமல்ல. ஒரு விதத்தில் காந்தியமும்தான் இது.

நாலாம் தலைமுறையைப் பார், நாவிதனும்
சித்தப்பா ஆவான் என்றார் மகாகவி பாரதி.

அடுத்த தலைமுறை நாலாம் தலைமுறை ஆகுமா?


அன்புடன்

அ.நாராயணன்

No comments:

Post a Comment