Tuesday, February 14, 2012

FEB'12

                                               சிதம்பர ரகசியம்தான் என்ன?

தோழர்களே,
நமது நாடு, சமீபத்தில், 63வது குடியரசு தினத்தைக் கொண்டாடி நிறைவுசெய்துள்ள நிலையில், சில சிதம்பர ரகசியங்களை வெளிப்படையாகப் பேசித்தான் தீர்வு காண வேண்டியுள்ளது.

வழக்கமாக வழங்கப்படும் குடியரசு தின செய்தியாக, நமது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில், சிவில் சமூகத்திற்கு ஒரு அறிவுரை கூறினார். மரத்திலுள்ள ஒரு சில அழுகிய பழங்களை அப்புறப்படுத்துவதற்காக உலுக்கி உலுக்கி, மரத்தையே சாய்த்து விடாதீர்கள் என்றார். அதாவது, ஊழல்வாதிகள் சிலரை எதிர்க்கும் போர்வையில், இந்திய இறையாண்மையை அழித்துவிட வேண்டாம் என்பது அவரது செய்தி.

ஆனால், அவர் தவறாக, சிவில் சமூகத்தைப் பார்த்து அம்பை ஏவுகிறார். உண்மையில், அவர், மன்மோகன் சிங், சிதம்பரம் உட்பட இன்றைய தலைவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் தார்மீகமற்ற, பேராசை பிடித்த முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டு மக்களையே விற்கத் துணிந்து விட்டீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். ஏன், உங்கள் பராமரிப்பில் உள்ள மரத்திலுள்ள பெரும்பாலான பழங்கள் வெதும்பியோ, அழுகியோ விளைகின்றன என்று அவர்களைப் பார்த்துத்தான் கேட்டிருக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 26, கணிதமேதை ராமானுஜத்தின் 125வது பிறந்த நாள். ஆனால், அன்றைக்கு, தமிழகம் அதனைக் கொண்டாடிய விதமோ, இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்து மிகுந்த வருத்தத்தையும், மன அழுத்தத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ராமானுஜம் பிறந்தநாள் விழாவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் பேசியபோது, முதல் இரண்டு வரிசையில்தான், அதுவும் கிட்டத்தட்ட 200 பார்வையாளர்கள் மட்டுமே இருந்தனர். பார்வையாளர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக இருந்தவர்கள் பாதுகாவலர்கள்.

தேர்தலின் மூலம் மக்களை சந்திக்காத ஒருவர், ஓட்டுப் போடக்கூட போகாத ஒருவர், இப்படி மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கும் ஒருவர், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து இருந்து வருகிறார் என்பது எப்படிப்பட்ட முரண்பாடு என்று வியப்பு மேலிடுகிறது. அதைவிட, இவர்களெல்லாம், மக்களை வழி நடத்த வந்தவர்களா அல்லது வட்டித்தொழில் நடத்துபவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நிரந்தர ஏஜெண்ட்களா எனும் சந்தேகம்தான் இப்பொழுது வலுத்துள்ளது.

சென்னை நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பாரதப்பிரதமரும், அவரது உள்துறை அமைச்சரான சிதம்பரமும், உடனடியாக அரசு சிறப்பு விமானத்தில், காரைக்குடியில் வட்டிக்கு கடன் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்களின் வசதிக்காக கட்டப்பட்ட வாசன் தனியார் கண் மருத்துவமனையையும், அப்பொல்லோ தனியார்  மருத்துவமனையையும், துவக்கி வைக்கப் பறந்தனர். கூடவே, அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டது அதற்கான ஒரு சாக்கு, அப்பட்டமான இடைச்செருகல்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும், அந்த மருத்துவ வியாபார நிறுவனங்களையும் புகழ்த்து தள்ளிய பிரதமர், அரசு சலுகைகளைப் பெறும் இந்த கார்ப்பொரேட் மருத்துவமனைகள், ஏழைகளுக்குத் தரமான இலவச சேவை அளிக்க வேண்டும் என்று சற்றும் வெட்கமில்லாமல் பொன்மொழி உதிர்த்தார். அதற்கு பதில், ஈயத்தை நன்கு காய்ச்சி, ஏழை மக்களின் காதுகளில் வலுக்கட்டாயமாக ஊற்றியிருக்கலாம் பிரதமர்.

ஏனென்றால், அரசிடமிருந்து உச்சகட்ட சலுகைகளையும், மானியங்களையும், தாராளமாக நிலத்தையும் பெற்றுவிட்டு, ஏழை மக்களை ஏமாற்றியதில் முன்னணி வகிப்பது, இந்தியா முழுவதும் புகழ் பெற்ற அப்பொல்லோ மருத்துவ நிறுவனம்தான்.

டில்லியின் மிக பிரும்மாண்டமான தனியார் மருத்துவமனையான இந்திரப் பிரஸ்தா அப்பொல்லோ  மீது, டில்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வழக்கு போட்டது. அரசையும், ஏழைமக்களையும் ஏமாற்றியதற்காக, டில்லி உயர்நீதிமன்றம், அதன் மீது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, அப்பொல்லோ மருத்துவமனையின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு குழுவையும் நியமித்து ஆணையிட்டது. (அக்கினிக் குஞ்சொன்று வேண்டும் எனும் கட்டுரையையும் படிக்கவும்). இன்றைக்கு பொது மருத்துவச்சேவை பெருமளவில் நலிவடைந்து போனதற்கும், மருத்துவம் முழுக்க முழுக்க வணிக மயமானதற்கும், அதிகாரத்தில் இருப்பவர்களும், அப்பொல்லோ போன்ற வியாபாரிகளும் மருத்துவத் தொழிலில் பங்குதாரர்களானதுதான் முதன்மைக் காரணம்.

7.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் துவக்கப்பட்ட ஒரே ஒரு கண் மருத்துவமனையும், ஒரே ஒரு பல் மருத்துவமனையும், ஒரே ஒரு மனநோய் மருத்துவமனையும்தான் உள்ளது.  அதுவும் தலைநகரான சென்னையில் மட்டும்தான். அரசு மருத்துவக்கல்லூரிகள் திறப்பதைப்பற்றியோ பேசவே வேண்டாம். ஆனால், கண்களுக்கு, பற்களுக்கு, குடலுக்கு, சிறுநீரகத்திற்கு என்று தனித்தனியாக கார்ப்பொரேட் மருத்துவமனைகளை, நாளுக்கு ஒன்றாக தமிழகம் முழுவதும் ரிப்பன் வெட்டித் திறப்பதே, சிதம்பரம் மட்டுமல்லாது, எல்லா மத்திய மாநில அமைச்சர்கள் பலரின் முழுமுதற்கடமையாக உள்ளது.

1992ம் ஆண்டு, பங்குப்பத்திர ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட ஃபேர்குரோத் எனும் நிறுவனத்தில், அப்பொழுதும் அமைச்சராக இருந்த சிதம்பரம் முதலீடு செய்ததாகப் புகார் எழுந்தபோது, அவர் பொறுப்பேற்று பதவி விலகினார். என்னைப் போன்றவர்கள் மனதில், சிதம்பரம் மீதான மதிப்பு உயர்ந்தது, சிறந்த அறிவும், வாதத்திறமையும் கொண்ட சிதம்பரம் போன்றவர்கள், உயர் பதவியைப் பெற்றால், ஏன் பிற்காலத்தில் பிரதமரானால் கூட, இந்திய அரசியல் மேம்படும் என்று என்னைப் போன்றவர்கள் அப்பொழுது நம்பிக்கை பெற்றார்கள்.

ஆனால், இரட்டை அலைக்கற்றை ஊழல், வாசன் கண் மருத்துவமனையின் வளர்ச்சியில் அவரது அதீத அக்கறை, பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றின் மக்கள் விரோத செயல்பாடுகளில், அவர்கள் மீதான அவரது சார்பு நிலை உட்பட சிதம்பரத்தின் மீது சந்தேகத்தின் நிழல் அழிக்க முடியாதவாறு சூழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளிலேயே, மளமளவென்று தமிழகத்திலும், மற்ற இந்திய நகரங்களிலும் 100 கடைகள் வரை தொடங்கப்பட்ட வாசன் தனியார் கண்மருத்துவ மனைகளில் பலவற்றை, தொடர்ந்து மத்திய அமைச்சரவையில், மிக முக்கிய பதவிகளை வகித்துவரும் சிதம்பரம் தான் திறந்து வைத்துள்ளார். ஆனால், அவரது தொகுதிக்கோ, இந்தியாவின் மற்ற கிராமப்புரப் பகுதிகளிலோ, ஒரு பொது மருத்துவமனையைக் கூட இவர் திறந்து வைத்ததாகச் செய்தியில்லை.

2005ம் ஆண்டு, ஃபிப்ரவரியில், நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை, ரூ8,420 கோடியிலிருந்து, ரூ10,280 கோடியாக உயர்த்தினார், அப்பொழுது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். யுபிஏ-1 அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியாக, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை GDP யில் 0.9% லிருந்து, GDP யில் 3% ஆக படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சிதம்பரம், மன்மோகன் சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றவர்கள் வாயால் பந்தல்போட்டார்கள்.

 யுபிஏ-1 முடிந்து, இரண்டாவது முறை மீண்டும் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், கடந்த ஆண்டு, சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்தது, ரூ26,760 கோடி தான். 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, இது ஒரு சோளப்பொறி. ஆனால், ராணுவத்திற்கான பட்ஜெட், ரூ83,000 கோடியிலிருந்து, படிப்படியாக அதிகரித்து, இப்போழுது, ஆண்டுக்கு ரூ1,64,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரவேற்பறையிலேயே இதையெல்லாம் பேசத்தான் வேண்டுமா, தனிமனித செயல்பாடுகள் பற்றிய விமர்சனம் அவசியமா என்று தவறாகக் கருதவேண்டாம். நமது நாட்டையே மூழ்கடித்து விடக் கூடிய ‘தானே’வை விட பலமடங்கு வீரியம் கொண்ட புயல் சின்ன அறிக்கை இது. மன்மோகன் சிங், சிதம்பரம் போன்ற அதிகாரத்தில் உள்ள தலைவர்களின், அப்பொல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை போன்ற தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனம் இல்லை இது.

குன்றா வளர்ச்சி தொடர்பானது இது. இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன் தொடர்பானது. சமூகத்தில் ஏற்பட வேண்டிய சமத்துவமும், மகிழ்ச்சியும் தொடர்பானது.  மக்களுக்காக சந்தையா?, சந்தைக்காக மக்களா? - இந்த சித்தாந்தம் தொடர்பானது. இந்த சித்தாந்தப் போரில், கூறை மேல் ஏறி, உரக்கக்கூவி, ஆபத்தை அம்பலப்படுத்தப்பட வேண்டிய சமூகக் கடமை இது.

நாட்டின் குழந்தைகளில் 42 விழுக்காட்டினர், எடை குறைந்து இருப்பது, ஒரு தேசிய அவமானம் என்று பிரதமர் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். இந்த தேசிய அவமானத்திற்கான காரணம், அரசின் சிறப்பு விமானத்தில், டில்லியிலிருந்து, தமிழகத்தின் மாவட்டத் தலைநகருக்குப் பறந்து வந்து, பரம்பரைப் பணக்காரர்களின் நலனுக்காக, தனியார் மருத்துவமனைக் கடைகளைத் திறந்து வைத்து சொற்பொழிவாற்றும் அவரைப் போன்றவர்களது அவமானகரமான செயல்பாடுகள்தான் என்று யாராவது அவரிடம் கூறினால் நல்லது. இப்படிப்பட்ட இழிநிலை வேரெந்த நாடுகளிலும் இல்லை.

கரும்பலகையைத் துடைத்துவிட்டு, மீண்டும் எழுதுவது போல, முழுமையான மக்கள் புரட்சிதான் இந்த இழிநிலைக்கான ஒரே மாற்று. அதற்கு அக்கினிக் குஞ்சொன்று வேண்டும். அது மக்கள் மனதில் அணையாத தீயாக கொழுந்து விட்டு எரியவேண்டும். அதற்கு, முதலில் தரமான கல்வி வேண்டும்.

கோழியா?, முட்டையா? எது முதலில் எனும் கேள்வி இது. 

புரட்சிக்கான நம்பிக்கையுடன்
அ.நாராயணன்


No comments:

Post a Comment