Monday, February 13, 2012

JAN'12

                          2011ம் ஆண்டின் இந்திய சூப்பர் ஸ்டார்    - ஐஸ்வர்யா ராய்
                                                                                                                                      

தோழர்களே!   

மற்றொரு ஆங்கிலப் புத்தாண்டில் நாம் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், தொடர்ந்து உங்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து வருவது பற்றி, உள்ளபடியே மகிழ்வடைகிறேன். கடந்த ஆண்டு, உலகின் பல இடங்களில் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரண்டனர். சில புரட்சிகளும் கைகூடின. சில பல நன்மைகளும் தீமைகளும் ஏற்பட்டன. குறிப்பாக, உலகளவில் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் சிலர் வீழ்ந்து, ஜனநாயகம் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.

தமிழகத்தைப் பொருத்தவரை, ஒரு சமூக விரோத ஆட்சி மக்களின் ஓட்டுப்புரட்சியின் மூலம் அகற்றப்பட்டு, மக்கள் மீள்வதற்கான வாய்ப்பு கிட்டியது, அதை மக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். “என்ன நடக்கிறது தமிழகத்தில்?’’ என்று தொடங்கி, “எதுவும் நடக்கலாம் தமிழகத்தில்’’ என்று சற்று விரக்தியுடன் கடந்த மாத வரவேற்பறையை முடித்திருந்தேன். நான் அவ்வாறு எழுதிய நேரமோ என்னவோ, உடனடியாகவே முதலமைச்சரின் அதிகார மையத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவினால் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்திருந்தாலும், நாற்காலியில் உட்கார்ந்தது முதல் அடுத்தடுத்து மக்களின் நலவாழ்வை பாதிக்கக்கூடிய பல தவறுகளை செய்யத் தொடங்கினார் ஜெயலலிதா. குறிப்பாக,  ஆக்டோபஸ் போன்று அவரைச் சூழ்ந்து கொண்டிருந்த சிலர், மீண்டும் சுரண்டலைத் தொடங்கியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

இப்பொழுது, இந்த ஆக்டோபஸ்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு, நல்ல செய்தியை மக்களுக்கு அளித்திருக்கிறார் முதல்வர்.  தெளிவான முடிவை அவர் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இத்தெளிவு தொடர வேண்டுமே என்பதுதான், 2012ம் ஆண்டில் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும். மேலும், மக்களும் சமூக அக்கறை கொண்டோரும் எளிதில் அணுக முடியுமாறு அவர் தன்னை மாற்றிக் கொண்டால், ஒரு நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பதில் தடையேதும் இருக்காது.

சுதந்திரமாக முடிவெடுக்கும் வாய்ப்பு, இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக்கொண்டால், தமிழக அரசின் டாஸ்மாக் சாராயக் கொள்கையில் சிறிதாவது நல்ல மாற்றம் கொண்டு வர, வெளியில் உள்ளவர்கள் ஆக்கபூர்வமான சில முயற்சிகள் எடுத்தால் பலன் கிட்டும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அமைச்சர்கள் பெரிய அளவில், வெளிப்படையாக ஊழல் செய்வதற்கு பயப்படும் நிலையும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆனால், சுயமாக முடிவெடுப்பதற்கும், திறமையான நிர்வாகத்தை அளிப்பதற்கும் அவர்களால் முடியாமா  என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

நிற்க. 2011ம் ஆண்டு, உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பல தீமைகளையும் சில நன்மைகளையும் கொண்டுள்ளது. தடையில்லா முதலாளித்துவமும், உற்பத்திப் பொருளாதாரமும் உன்னதமானது எனும் சித்தாந்தத்திற்கு பலமான அடி விழுந்துள்ளது. இது ஒரு விதத்தில் நல்ல செய்தி.  இந்த அடியிலிருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தப்பித்து வருவதற்கும், தங்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளவும் மிகவும் போராட வேண்டி வரும்.

ஒசாமா பின்லாடன் போன்ற மத பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல கடந்த ஆண்டு ஏற்பட்ட மரணம்.  வடஅமெரிக்கா மிகப்பேரிய அளவில் தொடங்கி வைக்க, ஐரோப்பியாவை எட்டி, ஜப்பான், சீனா போன்ற கிழக்கு நாடுகளில் கடை பரப்பி, துபய் உட்பட பல மேற்காசிய கனவுப் பிரதேசங்களில் மூளைச்சலவை செய்யப்பட்டு,  இந்தியாவிலும் காலூன்றி பரவியுள்ள வரைமுறையற்ற ‘நுகர்வு தீவிரவாதமும்’ இன்றைக்கு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்தையும், வால்மார்ட் போன்ற அன்னிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதையும் இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

ஆயினும், முதலாளித்துவ நாடுகளுக்கு உண்டாகியுள்ள நிதி நெருக்கடியாலும், அடுத்தடுத்த இந்திய அரசுகளின் குளறுபடிகளாலும், இந்தியாவில் மிக மோசமான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு, பணவீக்கத்தை விலையாகக் கொடுத்துள்ளோம். (இம்மாத “இந்திய பொருளாதாரம் - 2020?’’ தலைப்பிலான சற்றுக் கடினமான கட்டுரையைப் படிக்கவும்). இந்திய ரூபாய், வரலாறு காணாத வகையில் மதிப்பிழந்து கிடக்கிறது. 


தங்கத்தின் விலை உச்சாணிக்கொம்பின் மீது ஏறி, இப்பொழுது வீழும் நிலையில் உள்ளது. இந்திய அரசின் வரி வருவாய் கணிசமாகக் குறைந்து, திட்டமிட்டதை விட அதிகக்கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ் வொரு இந்தியனின் மீதான கடன்சுமை ஏறிக் கொண்டே போகிறது.  அது மட்டுமல்ல, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி தரமான நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சற்று ஆழமானது என்பதால், 2012ம் ஆண்டு, இந்தியாவில் பரவலான வேலையிழப்பு ஏற்படும் உண்மையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேவை தொடர்பான வேலைகளும், உற்பத்தி தொடர்பான வேலைகளும் குறையலாம் அல்லது மந்தநிலையை எட்டலாம். வேளாண்துறை வலுப்பெற்றால் மட்டுமே, உணவு உற்பத்தியும் அதிகரித்து, விவசாயம் தொடர்பான வேலை வாய்ப்புகள் பெருகி, மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்.

மற்றபடி, ஆடம்பரத்தைத் தவிர்த்து, தின வாழ்க்கையை அதிக சிக்கலுக்கு ஆளாக்கிக் கொள்ளாமல் இருந்தால், தனி மனிதர்கள் தப்பித்துக்கொள்ளவும், வெற்றி அடையவும் முடியும். வேறு வழியில் கூற வேண்டுமானால், கடந்த ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்ட ஆடம்பரங்கள் சிலவற்றை, போகிப் பண்டிகை அன்று போட்டுப் பொசுக்கிவிட்டு, வாழ்க்கையை நேர் வழியில் அமைத்துக்கொண்டு, உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணிக்காப்பதற்கு, 2012ம் ஆண்டில் அதிகரிக்கக் கூடிய பொருளாதார நெருக்கடி, ஒரு வாய்ப்பாக  அமைகின்றது..

நம்பிக்கையுடன் முயன்றால் முடியும் என்பதற்கு, கடந்த ஆண்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யாராய் நமக்கு ஒரு “முன்னுதாரணத்தை’’ அளித்துள்ளார். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை விட்டால் வேறு வழியில்லை என்ற எண்ணம் கடந்த பல ஆண்டுகளாகவே மருத்துவர்களால் மக்களின் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ள நிலையில், 38 வயதிலும் பிரசவ வலியையும் ஆபத்துக்கான வாய்ப்பையும் மன உறுதியுடன் எதிர் கொண்டு, இயற்கையான முறையில் கத்தி வைக்காமல் ஆரோக்கியமான பெண் குழந்தையை கடந்த ஆண்டு பெற்றெடுத்த ஐஸ்வர்யாராய், ஒரு விதத்தில், 2011ம் ஆண்டின் “முன் மாதிரி பிரபலம்” என்றால் மிகையில்லை. 

இம்மாதிரி நிகழ்வினை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரிந்த செய்தியாக்கி இருக்க வேண்டும். ஏனோ, பெரும்பாலான ஊடகங்களும் அரசின் சுகாதாரத் துறையும் கூட, இந்த ஆரோக்கியமான முன்மாதிரி செய்தியை ஊதிப் பெரிய விஷயமாக்காமல் இருந்து விட்டனரே என்பதுதான், 2011ம் ஆண்டின் நமது ஆதங்கங்களில் ஒன்று. ஊடகம் என்று பேசும்போது, 2011ம் ஆண்டு துவக்கப்பட்ட “புதிய தலைமுறை” தொலைக்காட்சி சேனல் பற்றி பதிவு செய்ய வேண்டிய கடமை உள்ளது. சினிமா, பிற்போக்குத் தனமான பொழுதுபோக்கு நிகழ்வுகள், மனஅழுத்தம் தரக்கூடிய விதமான செயற்கையான நாடகங்கள், அப்பட்டமான அரசியல் சார்புநிலை, இவையே தமிழக சின்னத்திரையை ஆக்கிரமித்து வைத்திருந்தன.  

சொல்லப்போனால், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்து வந்தன. வாசிப்பு பொதுவாகக் குறைந்து வரும் நிலையில் இந்த தொலைக்காட்சிச் சேனல்கள், சமூக சீரழிவை சிறப்பாக செய்து, மக்களை கேளிக்கை விரும்பும் மேலோட்ட சமூகமாக மாற்றி வந்தன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சியும், 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியும், அரசியல், சாதிய பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், தமிழக காட்சி ஊடகச்சூழலுக்கு ஒரு ஆரோக்கியத் தன்மையை அளித்து வருகின்றன. 

இவை 2012ம் ஆண்டில் மென்மேலும் வளர்ந்து தமிழக காட்சி ஊடகச் சூழலில் சிறப்பான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று, எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் வாழ்த்துவோமாக. 

பாடம் குழுவினர் சார்பாக, வாசகர்களுக்கு, ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களையும், உழவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்புடன்
அ. நாராயணன்


No comments:

Post a Comment