Friday, April 6, 2012

MARCH'12


உண்மையான நாகரீகத்தை சமூகத்தில் வளர்ப்போம்!

தோழர்களே,

வணக்கம். நம் ஒவ்வொருவருக்குமே, நம் உயிர் என்பது மிகப்புனிதமானது. தெரிந்தே, அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்நிலைப்பாட்டின் அங்கீகாரமாகவே, நமது ஜனநாயக அரசியலமைப்புச்சட்டம், உயிர் பாதுகாப்பு உரிமையை, நம் ஒவ்வொருக்கும்,
சரத்து 21 மூலம் உறுதியளிக்கிறது. மக்கள் வரிப்பணத்தை கோடிகோடியாக கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படுகிறார் ஒரு பெரிய அரசியல் தலைவர் அல்லது அமைச்சர். ஆயினும், கருப்புப்பூனைப் படை, நாய்ப்படை, குண்டு துளைக்காத வாகனம் என்று மிகுந்த பொருட் செலவானாலும், பல அடுக்குப் பாதுகாப்பு, அதே மக்கள் வரிப்பணத்தில்தான் அவருக்கு வழங்கப்படுகிறது. இதனை எல்லோரும் சிறிதும் குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.

சட்டப்பாதுகாப்பும், ஜனநாயக நடைமுறையும் இப்படியிருக்க, சமீபத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி, தமிழகக் காவல் துறையினர், 5 நபர்களை, சென்னையில் அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்து, நள்ளிரவில், ‘என்கவுன்டர்என்ற பெயரில் சுட்டுக்கொன்று விட்டனர். இந்த நிகழ்வு, மிகுந்த மன அழுத்தத்தை அளித்ததோடு, நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் மீது அச்சம் எழுவதற்கு மற்றொரு காரணமாகி விட்டது.

இந்த 5 வட நாட்டு நபர்களைச் சுட்டுக் கொல்லாமல், நன்கு திட்டமிட்டு உயிருடன் பிடித்து உண்மையை நீதிமன்றத்தில் விளக்கி, தண்டனை வாங்கித்தருவது நமது காவல்துறைக்கு கடினமான தல்ல. ஆயினும், இப்படி சுட்டுக்கொன்று, ‘வெற்றியைபொதுமக்களுக்குக் காணிக்கையாக்குவதோடு, கொள்ளையில் ஈடுபட நினைக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளும், இதற்கு பச்சைக்கொடி காட்டிய ஆட்சியாளர்களும் யோசித் திருப்பார்களோ? இப்படி நினைப்பதே, முதுகுத் தண்டைச் சில்லிடச்செய்கிறது.

அதைவிட, இந்த என்கவுன்டரை ஆதரித்து பொதுமக்கள் பலர் பேசியுள்ளனர். காவல்துறையின் கறார் நடவடிக்கையைப் பாராட்டி கையெழுத்து இயக்கம் கூட நடத்தப்பட்டது. இதைப் பார்க்கும் போது, நம் சமூகம் எதை நோக்கிப் போகின்றது எனும் கேள்வி எழுகிறது.

அது மட்டுமல்ல, பஞ்சம் பிழைக்க வடமாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள் எல்லோரையும் சமூகவிரோதிகளாகச் சித்தரிக்கும் மனநிலையும் எழுந்துள்ளது. வட நாட்டுக் கொள்ளையன் என்று தவறாகக் கருதி, ஆந்திராவில் இருந்து வந்த கூலித் தொழிலாளி ஒருவர் மீது, பொதுமக்கள் கூட்டம் ஒன்று மரணத்தாக்குதல் நடத்தியுள்ளது. எங்கு தீவிர வாதச் செயல்கள் நடந்தாலும், இஸ்லாமிய இளை ஞர்கள் சிலரைக் கைது செய்து, ‘துப்புத் துலக்குவதுபோன்று, இனி தமிழகத்தில் குற்றங்கள் நடந்தால், சில வடமாநில நபர்களைக் கைது செய்து கணக்குக் காட்டும் படலம் நடக்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமல்லாது, “வடநாட்டு கும்பல்கள் அட்டூழியம்’’ என்று சில பத்திரிகைகள் எழுதி, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்றன.

இவ்வகை என்கவுன்டர்களை, கொள்ளையர்கள் மீதான உறுதியான நடவடிக்கை என்ற கோணத்தில் பார்ப்பது மிகமிகப் பிழையானது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தைப் புறம் தள்ளி, தனிமனிதர் களின் உயிரைப் பறிக்கும், முற்றிலும் கண்டனத்துக்கு உரிய செயல்.

சமீபத்தில்தான், உச்ச நீதிமன்றம், போலி என்கவுன்டர் கொலைகளுக்காகவும், அவற்றின் விசாரணையில் முட்டுக்கட்டை போட்டதற்காகவும், குஜராத் அரசு மீது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட என்கவுன்டர்கள், எல்லா மாநில அரசுகளாலும், மத்திய அரசாலும் கூட, அவ்வப் போது, காவல்துறை மூலமும், இராணுவத்தினர் மூலமும் அரங்கேற்றப்படுகிறது. என்கவுன்டர்கள் மட்டுமில்லாமல், லாக் அப் (தற்)கொலைகளும் அவ்வப்போது நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

அதே வேளையில், போலீஸ் என்கவுன்டர் கொலைகளுக்கு மக்கள் ஆதரவும், அங்கீகாரமும் அளிப்பதாகக் கூடத் தோன்றுகிறது. இப்படித் தொடங்கும் நியாயப்படுத்தல்கள்தான், பின்னர் ஹிட்லர் போன்ற ஜனநாயக அரக்கர்கள் உயிர்த்தெழ வழிவகுக்கும்.

காவல்துறையும், அரசும், தங்கள் அதிகாரத்தை, தனி மனிதர்களின் உயிரைப்பறிக்கப் பயன்படுத்தும் போது ஆதரவு அளிக்கும் சமூகம், நாளை தங்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் நடக்கும் போது, அதை எதிர்க்கும் தார்மீகத்தை இழந்துவிடுகிறது.  

அறிவியலும், தொழில் நுட்பமும், கல்வியும் வளரும் வேகத்தில், ஜனநாயக நாட்டில் வாழும் மக்களிடையே, சகிப்புத்தன்மையும், மனித நேயமும் காணாமல் போய்விடுகிறதா? திரைப்படங்களில், கதாநாயகர்கள், வில்லன்களை உடனடித் தீர்ப்பாகப் போட்டுத்தள்ளும் போது, அரங்கில் ரசிகர்கள் விசிலடித்துக் கைத் தட்டுகிறார்கள். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் என்று மூன்று தலைமுறைகளும்  தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து, கொலவெறியை ரசிக்கிறார்கள். சாதாரண சராசரி மக்களாகிய நாம், அகிம்சா வாதிகளோ, வன்முறையாளர்களோ, வன்முறை ஆதரவாளர்களோ அல்ல என்று எண்ணமிருந்தால், அத்தக் கருத்தை மாற்றிக் கொள்ளும் நிலை வந்து விட்டதோ என்று கூடத் தோன்றுகிறது.
சாலைகளில் இறங்கினாலே, நம் சமூகத்தின் கோர முகம் அம்பலப்படுகின்றது.

கத்தியும், துப்பாக்கியும்தான் வன்முறை ஆயுதம் என்றில்லை. வாகனங்களில் செல்லும் போது, சாலைகளில் அவசியமில்லாமல் விடாது ஹாரன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கூட வன்முறை யாளர்தான். தன்னையொற்றிய சக மனிதர்களுக்கு எவ்விதமான மன அழுத்தமும், நலக்குறைவும் ஏற்படுகிறது எனும் குறைந்தபட்ச சிந்தனை சிறிதும் இல்லை.

ஹாரன் ஒலியை விடாது எழுப்பி, ஒலிமாசு எற்படுத்துவது ஏதோ அடிப்படை உரிமை என்பது போல, ஒரு ஆதிக்க மனப்பான்மையுடன் பலரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர், இவ்வாறு, சாலைகளில் ஒலி வன்முறையை சர்வ சாதாரணமாக ஏவி விடுகிறோம்.

அமைதியை விரும்பும் எந்த ஒரு அறிவார்ந்த சமூகத்திலும் நடவாத ஒன்று, நம் தெருக்களில் தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குப்பையை சாலைகளில் விட்டெறிவதானாலும், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதானாலும், விடாது ஹாரன் ஒலிமாசு எழுப்புவதானாலும், இவையெல்லாம் ஒரு கலாச்சார சீர்கேடு, சமூக அக்கறையின்மை என்பதைத் தாண்டி, சமூக உறுப்பினர்களின் ஆழ்மனதில் ஏற்படும் வன்முறைப் போக்கின் வெளிப்பாடு என்று கருத இடமுண்டோ? சாலைகளில் வெளிப்படும் இப்படிப்பட்ட கலாச்சாரத்தில்தான், நாளைய வன்முறை சமூகத்திற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன.

எப்படியோ, சமூகத்தில் நிலவும் இப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற போக்கிலிருந்தும், வன்முறை மன நிலையிலிருந்தும் எப்பொழுது நாம் விடுபட்டுத் தெளிவு பெறுகிறோமோ, அப்பொழுது தான் நாம் உண்மையிலேயே நாகரீகம் அடைந்ததாகக் கருத இடமுண்டு. சகிப்புத்தன்மையும், சக உயிர்கள் மீதான உண்மையான அக்கறையும் கொண்ட சமூகம் எனும் இலக்கு நோக்கி நாம் பயணிப்போமாக!
நட்புடன்

அ.நாராயணன்
                                                          

No comments:

Post a Comment