Friday, October 7, 2011

OCT'11


விரட்டுவோம் சாதி எனும் பேயை
                                      -மனங்களிலிருந்து. 

     
அன்புத் தோழர்களே!
                           வணக்கம். ஒவ்வொரு மாதமும் வரவேற்பறை எழுத உட்காரும்போது, நல்ல செய்தி களை, நம்பிக்கையளிக்கக் கூடியவற்றை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால், எழுத உட்கார்ந் தால், உலகில் நடக்கும் பல்வேறு மோசமான நிகழ்வுகள் மட்டுமே கண்முன் ஊசலாடுகிறது.
                        
கொடுங்கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வன்முறை வெறியாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட ஆறாத புண்களுக்கு மருந்தாகவும், வற்றாமல் பெருக்கெடுத்து ஓடிய கண்ணீரைத் துடைப் பதாகவும், மிகத் தாமத மானாலும் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு இப்பொழுது வந்துள்ளது.

ஒரு ஜனநாயக நாடு, அதற்கென்று ஒரு மிகச் சிறந்த அரசியல மைப்புச்சட்டம், அந்தச்சட்டம் எளிய மக்களுக்கு அளிப்பதாகச் சொல்லப்படும் உரிமைகள், பாதுகாப்புகள். இத்தனை இருந்தும், இந்த சட்டத்தின் மாண்பையும், அதன் மூலம் நலிவடைந்த, காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் நலனையும் பேண வேண்டிய அரசு அதிகாரிகளும், காவல் துறையி னரும், ஒரு வெறிபிடித்த கும்பலாக, வேட்டை நாய்களின் கூட்டமாக அவதாரம் எடுத்து, ஒரு மலைசார்ந்த கிராமத்தின் மக்களையே துவம்சம் செய்ததும், கடித்துக் குதறியதும், மானபங்கம் செய்ததும் நினைத்தாலே மனது பதறுகிறது. 

அந்த எளிமையான, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத, வெள்ளாந்தி மக்களுக்கு கிடைத்த ஒரு சிறிய ஆறுதல் தான், சிபிஐ அளித்த குற்றப் பத்திரிக்கையை 18 ஆண்டுகளாக விசாரித்து தருமபுரி அமர்வு நீதி மன்றம்  அளித்த தீர்ப்பு. ஆயினும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மேல் முறையீடுகள் முடிந்து, இறுதி நிவாரணமும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க இன்னும் ஆண்டுகள் சில பிடிக்கும். தாமதமாகும் நீதி கிடைக்காத நீதி எனும் நிலை மாறவேண்டு மெனில், நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டு கொண்டுவர வேண்டிய அவசரத்தை இவ்வழக்கில் ஏற்பட்ட தாமதம் மீண்டும் நினைவூட்டுகிறது.

சரி, ஏதோ 20ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் இவ்வாறு அசுர இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த 18-20 வருடங்களில், பலரும் சமூக நீதிக்காக நெடும்பயணம் சென்றுள்ளார்கள். அதனால் இந்த 21-ம் நூற்றாண்டிலாவது நிலைமை சற்று மாற்றம் கண்டிருக்கலாம் எனும் நம்பிக்கையை செப்டம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று, பரமகுடியில் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட ஒரு சிறிய தலித் அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் மீது அவசியமில்லாமல் நடத்திய துப்பாக்கிச்சூடு, தகர்த்தெறிந்துவிட்டது. 

குறைந்தபட்ச விதிகளைக் கூட கடைப்பிடிக்காமல், 200 பேர் வரை மட்டுமே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்து இளைஞர்களை சாதுரியமாகக் கையாளாமல், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, அதனால் மார்பிலும், தலையிலும் கூட குண்டு பாய்ந்து சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கடை வீதிக்கு வந்த முதியவர்களும் அடங்கும். 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். 

மனித உரிமை ஆர்வலர்களும் மற்ற அமைப்புகளும் நடத்தியுள்ள விசாரணையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, கலவரம் போன்ற சூழலே இல்லை என்று தெரிகிறது. 

அது ஏனோ தெரியவில்லை, சாதிவெரிபிடித்த ஆதிக்க சாதியினர் மட்டுமல்லாமல், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களும், குறிப்பாக காவல்துறையினர், அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் வன்முறையை ஏவி விடுவது வழக்கமாக உள்ளது. நம்நாட்டில் காரண காரியங்கள் கூட இல்லா மல் மனித உயிர்கள் கொத்து கொத்தாக போகின்றன. இந்தியாவில் பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே போனாலும், மனித உயிர்கள் மட்டும் மலிவு. அதிலும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உயிர் மிக மலிவானது. 
    
அதனால்தான், தமிழக அரசு, இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனும் அமைத்து விட்டு முடித்துக் கொண்டது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் வசதிக்கு ஏற்ற விதமாக இரட்டை வேடம் போடுகின்றன. சமூகத்தில் இருந்து சாதி வேறுபாடுகளைக் களைவதற்கு, ஓட்டுப்பெட்டி அரசியலுக்காக போடப்படும் சாதிக் கணக்குகள் மிகப்பெரிய தடையாக உள்ளன.

என்னதான் இந்தியா வளர்ச்சிப்பாதையில் பீடு நடை போடுவதாக கூறப்பட்டாலும், சாதிப் பேயை நம் சமுதாயத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் விரட்டாமல் நாம் ஒரு முதிர்ச்சியடைந்த அறிவார்ந்த சமுதாய மாக உலக நாடுகளின் முன் தலை நிமிர்ந்து நடக்க இயலாது. இதற்கு முதற் கட்டமாக சாதிப்பேயை மனிதர்களின் மனங்களிலிருந்து விரட்டுவதை நம் தலையாயக் கடமையாகக் கொள்வோம். 
                                                                                              நட்புடன்,
அ.நாராயணன்.

No comments:

Post a Comment