Friday, October 7, 2011

SEP'11

 சமூகம் முதிர்ச்சியடைய 
                         - ஒரு வாய்ப்பு              
அன்பு தோழர்களே!                                                                                     
                    வணக்கம், அண்ணா ஹசாரே, லோக்பால், ஊழல் - இவைதான் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதிலும் மிக அதிகமானவர்களால் உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட, வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட மூன்று வார்த்தைகள். அநேகமாக, இந்தியாவையும் தாண்டி, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இதழ்களிலும் இவை இடம் பிடித்தன என்பதால், அண்ணா ஹசாரேவின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டம், உலக அளவில் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் சட்டம், ஊழலை ஒழித்துவிடும் ஒரு மந்திரக்கோல் அல்ல என்பது அண்ணா ஹசாரே உட்பட எல்லோருக்கும் புரியும். இந்தக் குழுவினர் முன்வைத்த லோக்பால் மசோதாதான் சிறந்தது என்பதை வலியுறுத்த அவர்களுக்கே உரிமையில்லை என்பதும் உண்மை. முதலில் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்படுத்தப் பட்ட குழுவில் இடம் பெற்ற எல்லோரும் மேட்டுக்குடியினர் , அதில் ஒரு பெண்மணி கூட இடம்பெறவில்லை, சிறிதும் முன் யோசனையில்லாமல் அமைக்கப்பட்ட குழு என்று நானே உடனடியாக விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போதைய போராட்டத்தின் தார்மீகத்தை ஆதரிக்கிறேன். ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட எல்லோரும் ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன், நம்பிக்கையுடன் அண்ணாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

அண்ணா ஹசாரே குழுவினரின் இந்தப் போராட்டம் மீது கீழ்கண்ட 5 விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்தை மிகைப் படுத்தி ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டன. இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினரைத் தவிர்த்து, அவர்களை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் போராட்டம், படித்த நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே கலந்து கொண்ட போராட்டம். ஊழலால் பயன் பெற்றவர்களும், ஊழல் வாதிகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம். பாராளுமன்ற ஜனநாயகத்தையே சிறுமைப்படுத்தும் வகையில் நடந்த போராட்டம் என்பவை அவை.

ஆனால், இந்த வாதங்கள் எல்லாம், உண்மையை வேண்டுமென்றே புறக்கணித்து, அல்லது சரியாகப் புரிந்து கொள்ள இயலாமல், அல்லது ஒரு தற்காப்பு / தாழ்வு மனநிலையி னாலோ அல்லது ஈகோ மனநிலையினாலோ வைக்கப்படும் வாதங்கள்.

இந்தப் போராட்டத்தில் இந்துத்துவ சக்திகள் அதிகமாகக் கலந்து கொண்டது உண்மை. இதனை இந்துத்துவவாதிகளும், மதவாதிகளும், ஊழலையும் ஒரு பெரிய பிரச்சனையாகப் பார்க்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். அது போல் படித்த நடுத்தர வர்க்கத் தினர் அதிக அளவில் வீட்டுக்கு வெளியில் வந்து குரல் கொடுப்பது, நமது நாட்டின் அரசியலுக்கு, ஜனநாயகத்திற்கு மிகச்சிறந்த நன்மை. ஏனென்றால், அரசியல் ஆர்வம் உள்ள நடுத்தர வர்க்கத்தினால் சமூகத் தளத்தில் தார்மீகத்தையும், ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும். ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியாக (Conscience Keepers) உருவெடுக்க முடியும். அது நமது ஜனநாயகத்தை முதிர்ச்சி யடையச் செய்ய உதவும். 

 எந்த ஒரு மக்கள் திரட்சியிலும், ஊழல் பேர்வழிகள் ஆதாயம் காண முயல்வது இயற்கை. மேலும் அன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடியவர்கள் இன்றும் அவ்வாறு திரள்வார்கள் என்பது மிகையானது. இன்று நிதிஷ்குமார் போன்று உண்மையானவர்களும், மாயாவதி போன்ற தலித்தலைவர்களும் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். அங்கொன் றும் இங்கொன்றுமாக ஏதாவது பிரச்சனை எழலாமே தவிர, இந்துத்துவ சக்திகள் ஒன்று திரளும் வாய்ப்புகள் மிகக்குறைந்து விட்டன. சமூகம் முதிர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

அதே போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தைத்தான் முதன்மைப் படுத்துகிறது. மக்கள் விருப்பம் போலத்தான் நாடாளுமன்றம் செயல்பட முடியும். லோக்பால் மசோதா பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால், மக்கள் மன்றம்தான் வெற்றி பெறும் என்பது கண்கூடு.
                
ஆக, ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் மக்களிடம் அரசியல் ஞானத்தை, உணர்2வை மேம்படுத்த உதவியுள்ளது. மக்கள் பிரதிநிதி களின் கடமையை நன்கு உணர்த்தியுள்ளது.

அதோடு ஒட்டுமொத்த அரசியல்வாதிகளிடம், அரசு ஊழியர்களிடம், பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், நேர்மை குறித்த விழுமியங்களை ஆழப்பதிப்பதற்கு ஒரு பாதையைக் காட்டியுள்ளது.

 இந்த மாற்றத்திற்கு வழிவகுத்த கதாநாயகன் அண்ணா ஹசாரே உட்பட பொது வாழ்வில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல், கிடைத்துள்ள பாதையில் எல்லோரையும் இணைத்துக் கொண்டு, திறம்பட பயணம் செய்ய வேண்டும்.

அண்ணா ஹசாரே குழுவினருக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஒரு சில அடி கள் தவறினால் கூட, அவை மிகைப்படுத்தப் பட்டு, இந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை பாதிப்படையும் ஆபத்து உள்ளது. அவ்வாறு நடக்காது என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டு மல்ல, தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், ஊடகங்களும் கூட, ஊழல் செயல்பாடுகளுக்கு விதிவிலக்கல்லவே.

நேற்று நடந்தவை நேற்றோடு போகட்டும். பிராயச் சித்தத்திற்கான நேரமிது. முறைகேடாகப் பெறும் பெரிய வெற்றி கூட மன அழுத்தம் தரக்கூடியது. தோல்வியில் முடியும் நேர்மையான முயற்சி கூட மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இதனை ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொண்டு விட்டால், இந்தியா உண்மையாகவே ஒளிரும் அல்லவா?
                                                                                                                                   நட்பு பாராட்டும்
அ.நாராயணன்
                                                                                                                       

No comments:

Post a Comment