Wednesday, December 7, 2011

NOV'11

                         வெற்றிடமும்    நல்ல வாய்ப்பு தான்


அன்புத்தோழர்களே, 
                                வணக்கம். சமீபத்திய உள்ளாட்சித்  தேர்தல் முடிவுகள், அதிமுக மட்டுமே, இன்றைக்கு, தமிழக மக்களின் பேராதரவு பெற்ற கட்சி என்ற உண்மையை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த இரட்டை இலை, அவரது காலத்தில் கூட இவ்வளவு பலம் வாய்ந்ததாக இல்லை. தேர்தல்  பிரச்சார நேரத்தைத் தவிர சாதாரண மக்களுடன் சிறிதும் தொடர்பே வைத்துக் கொள்ளாத ஜெய லலிதாவின் இன்றைய தலை மையின் கீழ்தான், அதிமுக அதிக பலம் வாய்ந்ததாகப்படுகிறது.

சட்ட மன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்துள்ள உள் ளாட்சித்தேர்தலிலும், அதிமுக பெற்றுள்ள 39 விழுக்காடு வாக்குகளே, இக்கூற்றை உறுதிப்படுத்துகிறது. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலை அதிமுகவிற்கு ஏற்படும்வரை, இனி அதிமுக மட்டுமே ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக வலம் வரும் என்பதை நாம் தயக்கமின்றி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
  
திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், அவற்றிற்கு இறங்கு முகம்தான். திமுகவின் மிகப்பெரிய ஊழல்களும், இடைத்தேர்தல் அராஜகங்களும், வரலாறு காணாத நிர்வாகச் சீர்கேடுகளும், குடும்பம்தான் கட்சி என்ற பிற்போக்கு நிலைப்பாடும் அவற்றின் கணிசமான ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி, நடுநிலையாளர்களிடமும் மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாது, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், பாமக உட்பட கூட்டணிக்கட்சிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் மக்கள் முன் அம்பலமாகின.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை காங்கிரஸ், திமுக ஆகிய இவ்விருகட்சிகள் வேடிக்கை பார்த்ததுடன் மட்டும் இல்லாமல், மறைமுகமாக இலங்கை அரசுக்கு  ஆதரவாக செயல்பட்ட நிலையில், பெரும்பாலான சிறு கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் இவ்விரு கட்சிகளுக்கும் எதிராக தேர்தல் நேரத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. விஜயகாந்தின் தேமுதிக, கம்யுனிஸ்டுகள், உதிரிக் கட்சிகள் ஆகியவற்றுடன் எற்படுத்திக்கொண்ட கூட்டணி உடன்பாடும், திமுகவின் தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு எதிரான பல சமூக அமைப்புகளின் செயல்பாடுகளும் சேர்ந்து கொண்டு, அதிமுகவின் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு குறிப்பிட்ட அளவில் உதவின என்பதை மறுப் பதற்கில்லை.

ஆனால், கணிசமான மக்களின் ஆதரவினை திமுக  இழந்து  விட்ட நிலையில், இனி எந்த ஒரு கட்சியையும் நம்பி அதிமுக இல்லை என்ற ஜெய லலிதாவின் நம்பிக்கையை, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப் படுத்தியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி கிட்டத்தட்ட தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதை அடைந்து விட்ட நிலை.  ஊழல் வழக்குகளில் கதிகலங்கி இருப்பதனால் மட்டுமின்றி, அமைப்பு ரீதியாகவும், சித்தாந்த அடிப்படையிலும் சிதில மடைந்து கிடக்கிறது திமுக. அது, சுதாரித்துக் கொண்டு, தொடர்ந்து ஒரு அரசியல் சக்தியாக மீண்டெழுந்து வந்தால், அரசியலில் அது ஒரு பேரதிசயமாகக் கருதப்படும். காங்கிரஸ் மீது தமிழக மக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.
   
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், சித் தாந்தம், குறிக்கோள் என்று எதையும் வைத்துக் கொள்ள முடியாத, ஆனால் பெரிதாக ஊழல் எதுவும் செய்ய விருப்பமற்ற, சொல்லப்போனால் ஒரு ஆபத்து இல்லாத அரசியல்வாதி, அவ்வளவே. அவரது கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் எழுதிவிட முடியாது.

ஆனால் அண்ணா, பெரியார் போன்ற சிந்தனைவாதிகளோ, எம்.ஜி,ஆர் போன்ற மக்களின் பேராதரவைப் பெற்ற உண்மையான மாற்றுத் தலைவர்களோ இல்லாத நிலையில், இன்றைக்கு தமிழக அரசியல் தளத்தில் மிகப்பெரிய சூனியம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இந்த வெற்றிடத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சி மிகைப்படுத்துகிறது. மக்களின் பேராதரவு பெற்றுள்ள அதிமுகவில், ஜனநாயகம் வாசற் படியில் கூட நுழைய முடியாது என்பதும், ஜெயலலிதாவிற்குப் பின்னர் மக்களை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் இல்லை என்பதும், அதனால், ஜெயலலிதாவிற்கு அடுத்து, அக்கட்சிக் கும் எதிர்காலம் இல்லை என்பதும்தான் இப்போ தைக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், ஆடம்பரமில்லாத அரசு விழாக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் நடமாடு வது, அதிக ஓய்வில்லாமல் அலுவலகப் பணி மேற்கொள்ளுவது, கூடங்குளம் பிரச் சனையிலும், தூக்குதண்டனை விவகாரத்திலும் அவரது நிலைப்பாடு போன்ற ஜெயலலிதாவின் சில அணுகுமுறைகள், அவர் முதிர்ச்சி பெற்றுள்ளதாக வெளிக்காட்டுகிறது. திமுக பிரமுகர்கள் பலர் மீதான நிலப்பறிப்பு குற்றச் சாட்டுகளை தீவிரமாக கையாண்ட விதமும், அதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைத்ததும் பாராட்டுக்குரியவை.
    
ஆனால், இவற்றைத்தவிர, அதிமுகவின் ஆட்சி இப்போதைக்கு சொல்லிக் கொள்ளும் படியான திறமையான நிர்வாகத்தை எல்லாத் துறைகளிலும் கொடுக்கவில்லை. அதன் முதல் பட்ஜெட் சட்டமன்றத் தொடர் எதிர்பார்த் ததைப் போலவே, அம்மாவின் புகழ் பாடும் ஜால்ரா சத்தத்துடனும், எதிர் கட்சிகளின் மீதான ஏச்சுபேச்சுக்களுடன்தான் முடிவடைந்தது. அதிமுக அரசின் பல அறிக்கைகள், அடுத்தக் கட்டத்திற்கு போகவில்லை. ஏகப்பட்ட இலவசத் திட்டங்களுக்காகவும், மற்ற உருப்படியான  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துவதற்காகவும் மிக அதிக நிதி வேண்டியுள்ளது. மின் உற்பத்தியை பெருக்கு வதும், மின்துறையில் ஏற்பட்டு வரும் பேரிழப்பை சீர்செய்வதும் மிகப்பெரிய சவால். கல்வி, வேளாண்மை, சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம், மருத்துவம் உட்பட எல்லாத்  துறைகளிலும் குறுகிய கால, நீண்ட கால செயல்திட்டங்கள் தேவைப்படுகிறது.
    
உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய அளவிலும், தமிழக அளவிலும், நிதித்தட்டுப்பாடும், பொருளாதார மந்த நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு என்பதை விட அதிக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
         
இவற்றையெல்லாம் முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆயினும், இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு சுதந்திரம் இல்லாமையும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆர்வமுள்ள அரசு உயர் அலுவலர்கள், திறமையுடன் செயல்பட்டால் தான் உண்டு.
 
பரமக்குடியில் மறியலில் ஈடுபட்ட தலித்துகள் மீதான துப்பாக்கிச்சூடும், அப்பிரச்சனையில் முதல்வர் நடந்து கொண்ட விதமும் நம்பிக்கை அளிக்க வில்லை. மற்ற சில விஷயங்களிலும் அரசின் அணுகுமுறை அவப்பெயரை உண்டாக்கும் விதமாக உள்ளது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவும், அதிமுகவினர் அவர்களுக்கு இம்முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி காசு பார்க்க வேண்டும் என்பதற்காகவும், டாஸ்மாக் சாராயம் தொடர்ந்து காட்டு வெள்ளமென கரை புரண்டு ஓடி, லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கும் சுவடே இல்லாமல் அழிந்தொழியும் அபாயம், விளக்க இயலாத திகைப்பை ஏற்படுத்துகிறது.

சாராய விஷயத்தில், இன்றைய முதல்வரிடம் எப்படியாவது ஆரோக் கியமான அணுகுமுறை மாற்றம் ஏற்படுமென்றால், சமூக ஆர்வலர்கள்,  நாட்டிலுள்ள கோயில், தர்கா, மசூதி, சர்ச் என்று நடைபயணமோ, அங்கப் பிரதட்சணமோ செய்தாலும் தவறில்லை.
 
தேர்தலில் தோற்று விட்டதனால், சிறு கட்சிகள் துவண்டுவிடத் தேவையில்லை. தார்மீகத் தளத்தில் மக்கள் பிரச்சனைகளைத் தெளிவாக எழுப்பி போராடி, மீண்டும் மக்களின் ஆதரவைப் பெரும் வாய்ப்பு உள்ளது. அதைவிட அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இச்சூழலில், அரசின் தவறான செயல்பாடுகளைத் தொடர்ந்து தைரியமாக விமர்சிப்பதையும் மக்கள் நலனுக்கு உகந்த விஷயங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துசெல்வதையும் தொய்வில்லாமல் செய்ய வேண்டிய வரலாற்று கடமை, கட்சி சார்பில்லா சமூக ஆர்வலர்களுக்கும் கட்சி சார்பில்லா அமைப்புகளுக்கும் உள்ளது.
  
உலகம் முழுவதுமே, இப்போது புரட்சிக் குரல்களும், உரிமைக் குரல்களும், சாதாரண மக்களிடமிருந்து மட்டுமில்லாது, நடுத்தர இளைஞர்களிடமிருந்து அதிகம் கேட்கின்றது. எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மட்டு மல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராக, அமெரிக்காவின் பல நகரங்களிலும், இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் இளைஞர்களின் அமைதிப் போராட்டங்கள் மாற்றத்தைக் கொண்டு வரத் துடிக்கின்றன.

ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை வலியுறுத்தியும் மக்கள் திரண்டு வரத்தொடங்கியுள்ளனர். தமிழக அரசியல் தளத்தில் ஆரோக்கியமான சக்திகள் முளைவிட்டு வெளிப்படுவதற்கான சிறந்த வாய்ப்பை, இப்பொழுது நம்மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் வெற்றிடம் அளிக்கிறது. இதுவும் ஒரு நம்பிக்கையளிக்கும் அம்சம்தானே !
                                                                                                                     
                                               அந்த நம்பிக்கையுடன்
                                                         
                                                    
                                                     
                                                                                                
                                                
                                                   அ.நாராயணன்
                                                                                                                                                                                                  

                                                              

No comments:

Post a Comment