Tuesday, October 4, 2011

AUG'11


உலகமயமாக்கப்பட்ட பயங்கரவாதம்!
                                              -தீர்வு தான் என்ன?

அன்புள்ள தோழர்களே,
                 
              ‘நான் முஸ்லிம்களை வெறுக்கவில்லை, ஆனால், முஸ்லிம்கள் ஐரோப்பிய இனக் கலாச்சாரத்துக்குள் ஊடுருவி, காலனியாதிக்கம் செய்து, பல்லினக் கலாச்சாரம் கொண்டதாக ஐரோப்பா மாறுவதை முறியடிப்பேன்’ - ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரேவிக் எனும் 33 வயது நார்வே இளைஞன், தெளிவாக, விலாவாரியாக, இப்படிப்பட்ட வாதங்கள் நிரம்பிய 1500 பக்க வெறுப்புப் பிரகடனம் ஒன்றை பலவருடங்களாகத் தயாரித்து, வலைத்தளத்தில் ஏற்றிவிட்ட பின்னரே தனது பயங்கரவாதச் செயலை நிறைவேற்றியுள்ளான்.
       
தனக்கு சக்தியும் வெறியும் ஏற்படுவதற்காக போதைமருந்தேற்றிக் கொண்டு, வெடி குண்டும், இயந்திரத்துப்பாக்கியுமாக தனது பழி வாங்கல் படலத்தை நிறைவேற்றியுள்ளான்.
          
இந்த நிகழ்வு நடந்தவுடன், 95 விழுக்காடு மக்களும், ஊடகங்களும், உடனடியாக இது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வேலைதான் என்று வழக்கம்போல தவறான முடிவுக்கு வந்தார்கள். உலகில் மிகப்பாதுகாப்பான, குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடைபெறும், உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் சோசியலிசப் பொருளாதாரத்தையும் போற்றும், ஸ்கான்டினேவிய நாடுகளில் ஒன்று நார்வே. வருடாவருடம் நோபல் பரிசுகள்  வழங்கும், ஒரு பரந்த மனப்பான்மையுடைய, வளமான நாடு. இங்கு, பயங்கர வாதச் செயல் நடைபெறும் என்று கொடுங்கனவாகக்கூட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 
                     
தனது சித்தாந்தம் அல்லது நம்பிக்கையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, மாற்று நம்பிக்கை கொண்டோரின் மனதில் மிகப்பெரிய கிலியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் எண்ணத்தில், அவர்கள் மீதோ, மாற்று நம்பிக்கைச் சின்னங்களின் மீதோ பெரிய வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாதம் எனப்படும்.

இப்பொழுது, பெஹ்ரிங் ப்ரேவிக்கை கிறித்துவத்தின் ஒசாமா பின்லாடன் என்று கூப்பிடத் தொடங்கியுள்ளார்கள். தனது பிரகடனத்திற்கு, இந்துத்து வாவிலிருந்து சில கூறுகளை கடன் வாங்கியிருக்கிறான் இந்த இளைஞன். இதனை வலைத்தளத்தில் படிக்கும் தீவிர கிருத்துவப்பற்று கொண்ட இளைஞர்கள், இவனுடைய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வன்முறையை நாடும் ஆபத்து உள்ளது. சிறிய கீறல்களாக உள்ள இந்த வலதுசாரி பயங்கரவாதம், ஐரோப்பா முழுவதும் வெளிப்படும் அபாயம் உண்டு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், பயங்கர வாதமும் உலகமயமாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றுதான் கூற வேண்டும். இன்றைய தகவல் தொழில் நுட்பமும், ஊடகங்களும் எகிப்திய புரட்சிக்கும் உதவுகிறது, தீவிரவாத சித்தாந்தங்களை உலகெங்கும் தூவவும் துணை புரிகிறது. 

ஐரோப்பிய கிருத்துவ சித்தாந்தத் திற்குள்ளும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்ட நிலையில், இனி எந்த நாடும், எந்த மதமும், மத உட்பிரிவும், இந்த தீவிரவாதத்தின் வெளிப்பாடான பயங்கரவாதத்தில் இருந்து தப்ப முடியாது. ஐரோப்பாவிலிருந்து இஸ்லாமியர்களைத் துரத்த நினைக்கும் பிரேவிக், பெண்விடுதலையையும் வெறுக்கிறான். 

இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பெண்களை அடிமைகளாக நடத்தவே விரும்புகிறார்கள். இந்துத்துவ தீவிரவாதிகளும் பெண்கள் மீது அவ்வப்போது வன்முறையை ஏவி விடுவதைப் பார்க்கின்றோம். இஸ்லாமைப் பாதுகாக்க ஒசாமாவிற்கு இருந்த எல்லா நியாயங்களும், ஐரோப்பியக் கிருத்துவத்தை அல்லது அதை ஒட்டிய கலாச்சாரத்தைப் பாதுகாக்க பிரேவிக்கிற்கு இருக்கிறது. இவர்கள் முன்வைத்த நியாயங்களே, பாபரி மசூதியை இடித்துத் தள்ளுவதற்கு இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கு இருந்தது. 

இஸ்லாமியத் தீவிரவாதி, இந்துமதத் தீவிரவாதி, கிருத்துவத்  தீவிரவாதி, யூதத்தீவிரவாதி, பவுத்தத் தீவிரவாதி என்று அவரவர் போக்கில் சொல்லிக்கொண்டே போகலாம். பிரேவிக் மட்டுமல்ல, எல்லாத் தீவிரவாதிகளுமே, 1500 என்ன, 15000 பக்கங்கள் கொண்ட தங்களுக்கான சித்தாந்தப் பிரகடனங்களை எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

அகிம்சையைப் போற்றும் பவுத்தம் வேர்பிடித்துள்ள இலங்கை யில்,  ஆயிரக் கணக்கான தமிழ்மனித உயிர்கள், பிணங் களாக அறுவடை செய்யப்பட வில்லையா? மும்பையில், வடஇந்தியர்கள் மீது அவ்வப்போது வெறுப்பு உமிழப்பட்டு வன்முறை வெடிப்பதில்லையா? கஷ்மீரிலிருந்து, பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்க வில்லையா?


ஆர்தர் வாஸ்கோ எனும் யூதப்பாதிரியார்(ரப்பி) மிக அழகாகச் சொல்லுகிறார். “மதங்கள் நேசத்தையும், நீதியையும் வலியுறுத்துகின்றன என்கிறோம், அவரவருக்கான மதங்களை ஆடையாக அணிந்து கொள்கிறோம், ஆயினும், வெறுப்பையும், மனித ரத்தத்தையும் கொண்டு, ஆடையின் சில இழைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த உண்மையை எல்லா மதத்தினரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே, ஆடைகள் கிழியாமல், தீவிரவாத இழைகளை எப்படிக் கழுவலாம் என்று யோசிக்க முடியும்” என்கிறார் அவர். நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் மேயர், ஜனநாயகத்தையும் அன்பையும் கொண்டு, பயங்கரவாதத்தை தண்டிப்போம் என்கிறார்.  நார்வேயின் பிரதமரும் இந்த முற்போக்குச் சிந்தனையை வழிமொழிகிறார்.  

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, காவல்துறையும், பாதுகாப்புப் படைகளும் மட்டும் போதாது. அரசியலும், மதத் தீவிரவாதமும் இரண்டறக்கலப்பது தடுக்கப்படவேண்டும். மதம் தனிமனித நம்பிக்கை சார்ந்தது. மதநம்பிக்கையும் சரி, நம்பிக்கையின்மையும் சரி, பொது வெளியில் கலப்பது தவிர்க்கப்படவேண்டும். ஐ.நா சபையிலிருந்து உள்ளூர் ஆசிரியர்கள் வரை, எல்லோரும் ஜனநாயகத்தையும், சகிப்புத் தன்மையையும், மனித விழுமியங்களையும் அடிவேரிலிருந்து பலப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம்.


கடந்தகால, நிகழ்காலப் பாடங்களைக் கற்று, வேற்றுமைகள் நிறைந்த இந்தியா உலகுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும். நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவை வெறியாக மாற்றப்படுவதற்கு யாருமே துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் கட்சிகளின் வாக்குவங்கி அரசியல் வெறுப்பைத் தான் விதைக்கும்.
 
வேற்றுமையையும், மாற்றுக் கருத்துக்களையும் கொண்டாடுவோம். அவற்றைப் பள்ளிகளிலிருந்து தொடங்குவோம். 
                                                          நட்புடன் 
                                                                   
                                                                                                                           
                                                        அ .நாராயணன் 

No comments:

Post a Comment