Saturday, July 16, 2011

ஜூலை 2011

நல்ல ஆங்கிலத்திற்கும் பொது அறிவிற்கும்
தவறாமல் இந்துநாளிதழ் படியுங்கள்!

அன்பு நண்பர்களே!
வணக்கம், ஆங்கிலப் புலமையை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமா? ஒரு தனியறையில் உட் கார்ந்து கொண்டு, “இந்து’’ ஆங்கில நாளிதழை ஆழ்ந்து படி, பின்னர் முடிந்தால் உரக்கப்படி- இதுதாண் என் பள்ளி ஆசிரியர் என் சிறுவயதில் எனக்குக் கொடுத்த அட்வைஸ். 
      
இதனையே, நானும் பல வருடங்களாக பலருக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். தி இந்து’’ இதழின் ஆங்கிலமும், செய்திகளின் நேர்த்தியும் அலாதியானது. உலகின் தலை சிறந்த 10 நாளிதழ்களில், “தி இந்து’’வும் ஒன்று என்றால் மிகையில்லை.
    
என்னதான், விதவிதமான விளம்பரங்கள் மூலம், கோடிகளை சம்பாதித்தாலும், இந்து நாளிதழும், அதன் சகோதர வார இதழான  ஃபிரண்ட்லைனும், இடதுசாரி கம்யூனிஸ்ட் அபிமானம் மிக்க இதழ்கள். அதனாலேயே, இந்து, எனது மனதிற்கு நெருங்கிய நாளிதழானது.
     
இந்தியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, உலகின் பேர்பெற்ற அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் நோபல் விஞ்ஞானிகள் ஆகியோரின் கட்டுரைகள் இந்து நாளிதழில் தவறாமல் இடம்பெறும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம், விடுதலை பெற்ற பின் இந்தியா சந்தித்துள்ள ஒவ்வொரு சவால்கள், எல்லாவற்றையும் தி இந்து’’ ஆவணப்படுத்தியுள்ளது. 
   
ராஜீவ் காந்தி தொடர்புடைய போஃபோர்ஸ் ஊழல் முதல் இன்றைய விக்கிலீக்ஸ்வரை பலவற்றையும் அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்திய விவசாயிகளின் கையறு நிலை பற்றிய சாய்நாத் கட்டுரைகள், ஆதிவாசிகளின் பிரச்சனைகள், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகள், தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகும் தலித்துகள், இவை எல்லாவற்றுக்கும் இந்து பக்கங்களில் இடமுண்டு.
    
உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவோ, முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றனவோ, அவற்றை உலக வாசகர்களின், உலகத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும். இந்துவின் செய்திகள் மட்டுமல்ல, புகைப்படங்களும் செய்திகளுக்கு உரம் சேர்க்கும் பிரத்தியேக ரகத்தைச் சார்ந்தவை. அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள், பாகிஸ்தான், சீனா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, எகிப்து, கோசோவா மட்டுமல்லாது உலகின் இண்டு இடுக்குகளில் நடக்கும் அத்து மீறல்களையும், இரட்டை வேடங்களையும், இனப்போர்களையும், பூகம்பங் களையும், சுனாமிகளையும், கொடுங்கோலர்களின் அராஜகங்களையும் பொதுப்பார்வைக்கு கொண்டு செல்லும். ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தெளிவான, நடுநிலையான தலையங்கம் எழுதத்தயங்கியதில்லை. 

இந்துவில் வரும் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், தலையங்கங்களுக்கும் உலகத் தலைவர்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. உலகின் எல்லா நாடுகளிலும் இந்து நாளிதழுக்கு வாகர்கள் உண்டு. இந்து நாளிதழின் கட்டுரைகளும் புகைப்படங்களும் இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் மறுபதிவு செய்யப்படுகின்றன.


ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, 3 நாட்கள் பர்மாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது, உலகின் முற்போக்கு நாட்டு அரசுகளால் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள, 20 வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அந்நாட்டின் ராணுவ அரசுத்தலைவர்களை (Millitary junta) சந்தித்துவிட்டு, எதிர்க்கட்சித்தலைவரும், நோபல் அமைதிப்பிரிசு பெற்றவரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான 66 வயது பெண்மணி அவுன் சான் சு க்சீயை சந்திக்காமல் வந்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இந்தியா, இந்த கொடுங்கோல் ராணுவத் தலைவர்கள், இந்திய நிறுவனங்களுக்குப் போடும் காண்டிராக்ட் எலும்புத் துண்டுகளுக்காக, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.


வெளியுறவுத்துறை அமைச்சரின் விமானம் மீண்டும் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்குள் இந்து நாளிதழ் இது தொடர்பாக இந்திய அரசை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் தீட்டியது.இதை விட சிறப்பாக, ஒரு தார்மீகக் கோபத் துடன் நான்காவது தூண் செயல்பட முடியாது. இதுதான்  இந்துநாளிதழின் பெருமிதப்படத்தக்க அணுகுமுறை.


இத்தனை பெருமையும், பாரம்பரியமும் கொண்ட உலகின் மூலை முடுக்குகளில் நடப்பவை பற்றியெல்லாம் பொதுப்பார்வைக்கு கொண்டு வரும் இந்து நாளிதழ், இலங்கையில் போர் முற்றி இனப்படுகொலை நடந்த போதோ, முள்ளி வாய்க்கால் பேரழிவு ஏற்பட்டபோதோ, அதற்கு முன் அத்தகைய சூழல் ஏற்பட்ட போதோ, அதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர்த்தது. தனது கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டது. போருக்கு பின்னர் கூட, தமிழர்கள் அடைக்கப்பட்ட முகாம்களில் (தேனும் பாலும் ஓடுவதாக கூறவில்லை என்பது மட்டுமே ஆறுதல்) எல்லாம் இன்ப மயம் என்பது போன்று ராஜபக்சேவின் நேர் காணல்களை வெளியிட்டது.


இன்றைக்கு அமெரிக்கா, ஐரோப்பா ஐ.நா. குழு உட்பட பலநாட்டுத் தலைவர்களும், பல உலகின் முன்னணி இதழ்களும் இலங்கை அரசும் ராணுவமும் போர் குற்றங்கள் செய்ததாகவும், மனித அழிப்பில் ஈடுபட்ட தாகவும் கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டுள்ள நிலை உள்ளது. ஆனால், இந்து நாளிதழ் மட்டும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கும், இந்திய அரசின் இலங்கை தொடர்பான தவறான கொள்கைகளுக்கும் மிக வெளிப்படையாக ஒரு பக்கபலமாகஇருப்பதற்கான காரண காரியங்கள் பற்றி நாம் யூகிக்க விரும்பவில்லை. ஆனால், இந்து இதழின் இந்த சறுக்கல், அதன் சரித்திரத்தின் மீது விழுந்த அழிக்க முடியாத நிரந்தரக்கறை. அதுதமிழினம் அழிக்கப்பட்ட போது ஆறாக ஓடிய குருதியின் கறை.


இந்து நாளிதழின் வீச்சை ஒப்பிடும்போது, பாடம் இதழ் ஒரு சுண்டைக் காய். ஆயினும், ஒரு பத்திரிக்கையாளன், “இந்துவின் நீண்ட கால வாசகன், அதோடு மானுடக் காதலன் எனும் நிலையில் இருந்து, “தி இந்துஇதழின் இரட்டை வேடத்தை, பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரான அணுகுமுறையை பாடம் இதழ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். பாடம் இதழ் இந்த கண்டனத்தை பதிவு செய்யத் தவறியிருந்தால், எதிர்காலம் நம் இதழ் மீது காரித்துப்பியிருக்கும்.

ஆயினும் நண்பர்களே! சிறந்த ஆங்கிலச் சுவைக்கும், பொது அறிவிற்கும் இந்துநாளிதழ் தவறாமல் படியுங்கள்


மிக நட்புடன்
அ.நாராயணன்

1 comment:

  1. super sir, thanks. by balamurugan, journalist. log on: www.saffroninfo.blogspot.com

    ReplyDelete