Friday, July 15, 2011

மார்ச் 2011

    விடியுமா?
                          சுரண்டல்
                                                   நிற்குமா?

நம்மில் லட்சக்கணக்கான பேர் தினம் தினமும் ரயிலில் பயணம் செய்கிறோம். ரயில் நிலைய பிளாட்பாரங்களிலும், தண்டவாளங்களிலும் தினம் தினம் விழுகிற குப்பைகளையும், மலம் மற்றும் பிற கழிவுகளையும் அகற்றி  சுத்தம் செய்கிற  துப்புரவுப் பணி தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஒரு நிமிடம் நின்று எண்ணிப் பார்ப்பவர்களாய் நம்மில் எத்தனை பேர்  இருக்கிறோம்?
            
இந்தியாவின் மிகப்பெரிய அரசு  நிறுவனமாகிய ரயில்வே  துறையானது, சமீபத்திய பட்ஜெட்டைப் போலவே  ஒவ்வொரு முறையும் பயணிகளின் நலனுக்காக பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருவது உண்மைதான் என்றாலும், இப்படி ஒரு நல்ல பெயரை வாங்க எண்ணுவதன் நிர்வாகப் பின்னணியில், உழைக்கின்ற அடிமட்டத் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுகின்ற “அங்காடித் தெரு”க் காட்சிகள் மறைந்திருப்பதும் உண்மையாகவே  உள்ளது.
      
காண்ட்ராக்டர்களால் ஏழைத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதை அந்த தொழிலாளிகள் நடப்பது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, தண்டவாளங்களில் துப்புரவுப்பணி செய்கிற ஏழைப் பெண் தொழிலாளிகளும் இருக்கிறார்கள் என்பதை அந்த ஏழைத் தொழிலாளிகளில் ஒரு சிலரை நேர்முகம் கண்டபோது அறிந்தோம்.
    
அந்தப் பெண்கள் எம்முடன் நேர்முகமாக பகிர்ந்துகொண்டு பதிவு செய்திருக்கும் உரையாடலை  நீங்களும் பார்வையிடுங்களேன்.
                                                                                                                                             (ஆசிரியர்)
கேள்வி: பளாட்பாரங்களில் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போயிருந்தாலும் அதெல்லாம் சுத்தம் செய்றதும்  நீங்கதானா?

பதில்: ஆமா, பேசஞ்சர்  வர்றாங்க போறாங்க. அதெல்லாம் சுத்தம் செய்யறதுக்கு நம்ம மாதிரி ஆள் போட்டு வேலை வாங்கறாங்க.

கேள்வி : மனித கழிவை மனிதரே  அள்ளக்கூடாதுன்னு சட்டம் இருக்குதே ? கையாலே  அள்ளறதுக்கு பதிலா கிளவுஸ் கொடுக்கலையா?

பதில் : அதெல்லாம் ஒண்ணும் கொடுக்கலே 
கேக்கறோம்  ஆனா கொடுக்கலே..

கேள்வி: உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க?
 
பதில்: 3000 ரூபாய், ஒரு நாளுக்கு 100. லீவு எடுத்தா கிடையாது.

கேள்வி :  எத்தனை நாள் வேலை?

பதில் :  எல்லா நாளும் வேலை தான். லீவே  கிடையாது. லேடீஷ்க்கு அந்த நாலு அஞ்சு ” நாள் வராம இருந்தா சம்பளம் கிடையாது.

கேள்வி : பேப்பர், பிளாஸ்டிக் பொறுக்கி போடறதில் காசு கிடைக்குமா?

பதில் : அதெல்லாம் இல்லை.

கேள்வி : மனித கழிவுகளை அள்ளுற வேலை கையாலே செய்யக்  கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமா?

பதில் : தெரியாது.

கேள்வி : மெஷின் மூலம் எடுக்கலாமே?

பதில்: மெஷின் தரையிலே  விட முடியாதே . கையாலதான் அள்ளணும், மோட்டார் போட்டு தண்ணி அடிச்சி நாங்கலே  போட்டுருவோம். அதெல்லாம் காவாயிலே  எறங்கிடும். குப்பையெல்லாம் முறத்திலே  அள்ளிடுவோம் .

கேள்வி: ஏதாவது நோய் வந்தா செக்கப்  செய்யறாங்கள? சோப்  கொடுப்பாங்களா?

பதில்: இல்ல. அடிபட்டா கூட 10 ரூபா குடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பமாட்டாங்க. லீவு எடுத் துட்டு @பாக @வண்டியதுதான்.

கேள்வி : சோப் , சோப்  அலவன்ஸ் கொடுக்கணும்னு சட்டத்திலே  இருக்கே?
 
பதில்: அதெல்லாம் ஒண்ணுமில்லே. மாதம் மூணு நாள் சம்பளம் போக மீதிநாள் சம்பளம் தான். 20 நாளுன்னா 2000.

கேள்வி : பிள்ளைங்க படிக்கிறாங்களா?

பதில்: படிக்கிறாங்க. வேலைக்கு போறாங்க. என்னமோ  எப்படியோ  சம்பாரிக்கிறாங்க.

கேள்வி: அப்புறம் நீங்க ஏன் இந்த வேலையை  செய்யறீங்க?

பதில்: வருமானம் பத்தல. விக்கிற விலைவாசிக்கு ஒரு நாளைக்கி பால் சர்க்கரை எல்லாத்துக்கும் 200 ரூபாய் இருந்தாதான் புள்ள குட்டிக சாப்ட  முடியும்.

கேள்வி : வீட்டுக்காரருங்க என்ன செய்யராங்க ?

பதில்: சராயம் குடிச்சிட்டு ஒக்காந்திருக்காங்க. இல்லேன்னா வீட்டிலே  குப்பகொட்டிட்டு விட்டுட்டு போயிடறாங்க. குழந்தை பெத்துட்டும் விட்டுட்டுப் போறாங்க. கல்யாணம் பண்றதில்லே. தனியாவும் இருக்காங்க.

கேள்வி: அப்போ நீங்கதான் குடும்பத்துக்கு தலைவன். கணவன் இல்லே . அடுத்த தலைமுறையாவது டாக்டர், எஞ்சினீயர் ஆகணும், கார் வாங்கணும், வீடு வாங்கணும்னு ஆசை  இல்லையா?

பதில் (ஒரு பெண்): அதெல்லாம் ஆசை  படக் கூட முடியாது. அந்த அளவுக்கு கனவு இல்ல.  வேணும்னா எக்ஸ்போர்ட்... அந்த மாதிரி போகலாம். புள்ளைங்க பசி பட்டினி இல்லாம சாப்பிடனும். கட்டறதுக்கு துணிமணி இருந்தா போதும். கடவுள் புண்ணியத்துல வேற எதுவும் வேணாம்.

மற்றொரு பெண் : ஒரு பக்கத்துல அந்த ஆசை  இருக்கு. ஆனா வருமானம் பத்தல. படிப்பு இல்லியே? படிக்கிறாங்க. பெயிலா போயிடுத்தே ? ஏதோ கம்ப்யூட்டர், கம்பெனி மாதிரி வேலைக்கு போகலாம். காலேஜ் ஆசை  எல்லாம் இல்லை. ப்ளஸ் டூக்கு மேல  டிகிரி படிக்ககா” வேணுமே .

இன்னொரு பெண்: இந்த மாசத்தில இருந்து விதவைக்கு பென்ஷன் 500 ரூபா வருதாம். வாழா வெட்டிக்கு பத்து பைசா  கூட பிரயோசனம்  இல்லை, கேட்டா, வீட்டுக்காரன் ஆக்சிடென்ட் ஆகி செத்துட்டானு  சர்டிபிகட்  கேக்கறாங்க. வாழாவெட்டியா இருக்கிறவங்களுக்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்து செய்யணு. ஆனா செய்ய  மாட்டேங்க்ரங்க . நாங்க எப்படி ரெண்டு குழந்தைங்க வச்சிகிட்டு விக்கிற வெலவாசிக்கு குடும்பம் நடத்த முடியும்? இதை யெல்லாம் டி.வி. பெட்டியில  போட்டு காட்டணும்.

கேள்வி : சரி, உங்களுக்கு வேறு என்ன பிரச்சினை? 

ஒரு பெண் : புள்ளைங்க கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்காங்க. ஒரு புள்ள இன்னிக்கோ  நாளைக்கோ  கல்யாணம் பண்ற நெலையில இருக்கு. 

கேள்வி : பொண்ணுங்க? 

பெண் : இல்லை சார் . ஆண் பிள்ளைங்களா இருக்கிறால பிரச்சினை இல்ல. ஆளாக்கி விட்டா அவனவன் பொண்டாட்டி புள்ளைங்கன்னு போயிடுறான். அப்புறம் தாய்  எப்படி பொழைப்பா? கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா ஆச்சேன்னு , தாய்க்கு  ஒரு பிடி சோறுபோட்டு  பெத்த புள்ளை 10 ரூபா கையில குடுத்தா அதுக்கு அவன் பொண்டாட்டி சண்டை பிடிப்பா. நாங்க அனாதை மாதிரி நின்னு தவிக்கிறோம்.

கேள்வி : இது எங்கேயும்  பணக்கார வீட்டிலேயும் இருக்கிறதுதான். சில பேர் பெத்தவங்களை ஆசிரமத்திலே  விட்டுட்டு போயிடறாங்க. சரி, இந்த
வேலையிலே  வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?

ஒரு பெண்: வேற ஒண்ணும் இல்ல. வந்தோமா குப்பையை வாரி பெருக்குனோமா, பீ இருந்தா கழுவி விட்டுட்டு போனமான்னு அதுதான் எங்களுக்கு.

வேறு பெண்: ஒரு அடிபட்டா கூட எங்களுக்கு பாதுகாப்பு இல்லே . 10 ரூபா கொடுக்க மாட்டாங்க. அப்பப்போ  உடம்பு சரியில்லாம போகுது. வழுக்கி விழுந்தா இந்தா 10 ரூபான்னு எங்கள தாங்கறதுக்கு ஆளு கெடையாது. இஷ்டம் இருந்தா செய்யுங்க, இல்லாட்டி போங்க. நீங்க இல்லே ன்னா, கொண்டக்காரி இல்லன்னா, பின் ஊக்குக்காரி வருவான்னு சொல்லறாங்க. அந்த அளவுக்கு டேலண்டா வேலை வாங்குறாங்க. சூப்பர்வைசர் கையிலதான் பதவியே  இருக்கு. சம்பளம் கொடுக்கற அன்னிக்கு அவரை கையில புடிக்க முடியாது. சம்பளம் கொடுக்கற ஓணரு எங்கயோ  இருக்காரு.

கேள்வி : சம்பளம் எவ்வளவு? அதுக்கு அக்ரிமென்ட் இருக்கா?
ஒரு பெண்: சம்பளம்னு போட்டா 5000 கொடுக்கணும். ஆனா 3000 தான் கொடுப்பாங்க. கையெழுத்து 5000 வாங்குவாங்க.

வேறு பெண் :  அதெல்லாம் தெரியாது. கையெழுத்து போட்டு வாங்கறதோடு சரி.

என்ன வாசகர்களே! பயணங்களின் போது ரயில்கள் நிலையத்தில் நிற்கும் நேரங்களில் கழிவறையில் மலம் கழிப்பதை தவிர்க்கும்படி ரயில்வே துறை பயணிகளுக்கு விடுக்கும் @வண்டுகோளை மறக்காமல் கருத்தில் கொண்டு கௌரவிப்பதற்கு மேற்படி  ஏழைத் தொழிலாளிகளின் களங்கம் அறியா  இந்த உரையாடல்கள் சற்றுத்  தூண்டுதலாக இருக்கின்றன அல்லவா?
                                                                                                                
 நட்புடன் 
                                                                                                             
அ.நாராயணன்.

1 comment:

  1. very good posting..I appreciate your writings on this poor women - vimalavidya@gmail.com

    ReplyDelete