Tuesday, July 12, 2011

பிப்ரவரி 2011 பாவம் அந்த குப்பமாளுக்கு கிடைக்காது....

            இலவச அரிசி, கலர் டிவி, மிக்சி,
                              கிரைண்டர், பேன், அரைபவுன், வீடு, ஆடு 
                      பாவம் அந்த குப்பமாளுக்கு கிடைக்காது....              

அன்பு நண்பர்களே!                              
              வெளிப்படையாக உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இம்மாத இதழில் கவனம் செலுத்தவே முடியவில்லை. கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டது மட்டுமல்ல காரணம். எவற்றை வாசகர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது, எந்த கட்டுரையை முதன்மைப்படுத்துவது என்று பெருங் குழப்பம்.

சூப்பர் ஹைடெக் ஜப்பான், நில நடுக்கம், அதைத் தொடர்ந்து சுனாமி ஆகிய இயற்கையின் பெரும் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போனது பற்றியா? அதனால் அங்குள்ள அணு உலைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளைப் பற்றியா? உணவு, தண்ணீர், இருப்பிடம் போன்ற அத்தியா வசிய தேவைகளுக்காக பசியிலும் துக்கத்திலும் திண்டாடிய போது கூட, அம்மக்கள் ஒருவொருக் கொருவர் முட்டி மோதிக்கொள்ளாமல் பொறுமையாக ஒழுங்காக வரிசையில் நின்று நிவாரணப் பொருட் களை பெற்றுக் கொண்ட பண்பைப் பற்றி எழுதுவதா?
லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கு ராணுவத் தாக்குதலைத் தொடங்கி விட்டு விழி பிதுங்கி நிற்பது பற்றியா? தலைப்புச் செய்திகளாக இந்திய உள்நாட்டு அரசியல் பற்றி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் பத்திகள் பற்றி எழுதுவதா? 2ஜி ஸ்பெக்ட்ரம் முதலான ஊழல் விவாதங்களையாகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் உட்பட பல ஊழல் வழக்குகள் நீர்த்துப் போய்க் கொண்டிருப்பதைப் பற்றியா? பிப்ரவரி மாத கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அளித்த 2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் பகுப்பாய்வை எடுத்துக் கொள்ளலாமா? அந்த நிதிநிலை அறிக்கை பற்றி விவாதம் நடத்தாமல், எல்லாக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நடத்தி வரும் அக்கப்போர் பற்றியா? அந்த ரகளையின் சந்தடி சாக்கில், பாராளுமன்றம் மூலம் தங்களுக்கு சாதகமானவற்றை, சக்திவாய்ந்த வர்கள் சாதித்துக் கொள்வது பற்றியா?

தொடர்ந்து சுற்றுச்சூழலை நாசமாக்கும் விதத்திலேயே எல்லோரும் எல்லாவற்றையும் செயல்படுத்தி வருவது பற்றியா? தமிழகத்தில் தேர்தலில், இலவசங்கள் என்ற பாம்பை, மக்களிடம் கயிறாகத் திரித்துக் காண்பித்து, கட்சிகள் ஓட்டுக் களவாடல் நடத்துவது பற்றியா? அப்படி ஓட்டுக் களைக் களவாடி, பொது சொத்துக்களை பெருமளவில் கூட்டுச் சேர்ந்து கொள்ளை யடிக்கவும், அதற்கான அதி காரத்தைக் கைப்பற்றவும் எடுத்து வரும் கடும் முயற்சிகளைப் பற்றியா? ஏற்கனவே கொள்ளையடித்தவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்ள கூடாது என்பதாலும், கொள்ளையடித்தனவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், எப்படியாவது ஆட்சி கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவும் தரந்தாழ்ந்து வெறி பிடித்த மாதிரி தேர்தல் வேலை செய்வதைப்பற்றியா? கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, மற்ற கட்சி வேட் பாளர்களில் மிகப் பலர், கட்சியில் உள்ளவர்களாக இல்லாமல், காசுவைத்திருப்பவர்கள் ரேஸ் குதிரை மேல்  பணம் கட்டுவது போன்று, கட்சிகள் சார்பாக நிற்பதற்கு விண்ணப்பித்து, பண பலம், சாதி பலம் ஆகிய இரு தகுதிகள் அடிப்படையில் மட்டும் வேட்பாளர்களாக, கட்சித் தலைமைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவலத்தைப் பேசவா?
மழையில் முளைக்கும் காளான்களைப் போன்று தேர்தல் நேரத்தில் திடீரென்று முளைவிட்டுள்ள சாதிச்சங்கங்கள், சாதிக்கட்சிகள் எனும் நச்சுக் காளான்கள் பற்றி எழுதலாமா? தமிழகம் முழுவதும் மக்களை, குறிப்பாக கல்லூரி இளைஞர்களை சந்தித்து உரையாடிய அனுபவத் தொகுப்புகள் பற்றியா? பெரும்பாலான கல்லூரி இளைஞர்களிடம் அரசியலைப் பற்றியும், பொதுவான ஜனநாயக செயல்பாடுகள் பற்றியும் உள்ள கோபம் நிறைந்த, ஆனால் புரிதலற்ற தன்மை பற்றி எழுதலாமா? அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வரலாறு காணாதவகையில் திட்டமிட்டு கண்ணியமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி செய்தாலும், அவற்றையெல்லாம்  நூதன வகைகளில் முறியடித்து தேர்தல் ஜனநாயகத்தை கேவலப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுகளம் இறங்கியவர்களைப் பற்றியா? இந்தக் குழப்பங்களையெல்லாம் தாண்டி, உலகக் கோப்பை கிரிக்கெட், தேர்தல் என்று உச்சகட்ட ஜுர வேகத்தில் இருக்கும் மக்களிடம் வேறு எதையாவது எழுதினால், கரை சேருமா என்ற புதுக்குழப்பம் வேறு! பத்திரிக்கை நடத்துவதும், வியாபார ரீதியில் இல்லாமல் அதில் எவற்றையெல்லாம் பற்றி வாசகர் களிடம் கொண்டு சொல்வது என்பதும் திகைப்பை ஏற்படுத்தும் அனுபவம் என்பது மட்டும் தெளிவாகக் புரிகிறது
ஆயினும், இந்த குழப்பங்களையெல்லாம் தாண்டி, 32வயது குப்பம்மாளின் கதை என் கவனத்தை ஈர்க்கிறது. அவளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தபோயர்எனும் பட்டியல் இனத்தில் (scheduled tribe) பிறந்தவள் குப்பம்மாள். ஆட்டுக்கல், அம்மிக் கல் செய்வதும், கல்லுடைப்பதும் இந்த இனமக்களின் தொழில். பல மாவட்டங்களில் கல்குவாரி களில் கொத்தடிமைகளாக உள்ளவர்கள் இம்மக்களில் பலர்.
கிருஷ்ணகிரியில் இருந்து, பஞ்சம் பிழைப்பதற்காக கணவனுடன் கோயம்பத்தூர் பகுதிக்கு வந்து, அங்குள்ள தனியார் இடத்தில் மற்ற விளிம்பு நிலை மக்களைப் போல, குடிசை போட்டு வாழ்பவள் குப்பம்மாள். மூன்று பெண் குழந்தைகளையும், இரு ஆண் குழந்தைகளையும் பெற்ற குப்பம்மாள், ஆறாவதாக ஒரு ஆண் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்த நிறைமாத கர்ப்பிணி. கணவனும் மனைவியும் கூலி வேலை பார்ப்பவர்கள், அவளது குப்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போன்றே, குப்பம்மாளும் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து, பொழுது விடிவதற்கு முன்பாக ரயில் பாதையருகே காலைக் கடன்களை முடிக்க மறைவிடத்தைத் தேடு வது வழக்கம். 

தீடீரென்று ரயிலொன்று கடந்து சென்றால் வெட்கப்பட்டு அவசரமாக மானத்தைக் காக்கும் முயற்சியில் எழுந்து நிற்பதும், ரயில் கடந்த பின் உட்கார்ந்து முந்தைய நாள் சாப்பிட்ட கழிவை வெளியேற்ற முயற்சிப்பதும், அந்த அவசரத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு, மலக்கழிவு வெளியேற மறுப்பதோ அல்லது ஒயடியாக பேதி ஏற்படுவதோ தினசரி அனுபவம்.

இது குப்பம்மாளுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கோடானு கோடி பெண்கள், தாய்மார்கள், வளர் இளம்பெண்கள் இவ்வாறு சபிக்கப்பட்டவர்கள். கிராமமாக இருந்தாலும் சரி, நகர்புற குடிசைப் பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஏழை யாகப் பிறந்த, தலித்தாகப் பிறந்த குற்றத்திற்காக இப்படி. சூரியன் எழும் முன்னே எழுந்து வயிற்றில் உள்ள 9 மாத குழந்தையைச் சுமந்த படி நடந்து, தண்டவா ளப் பாதையில் மலம் கழிக்க முயன்ற போபாது, பிரசவ வலி ஏற்பட்டு துடித்துத் தன்னந்தனியாக ஆண்பிள் ளையை பெற்றாள் குப்பம்மாள், உயிர் போகும் பிரசவ வலியைத் தாங்காமல் ஆயாசம் ஏற்பட்டு மயக்க முற்று தண்டவாளத்தின் மீது சாய்ந்தாள் குப்பம்மாள்.

தேனிலவுத் தம்பதிகளையும், தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும், அரசு அலுவலர்களையும், வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பியவர்களையும், கட்சித் தொண்டர்களையும், .சி. கோச்சுகளில் போர்த்திக் கொண்டு  தூங்கிய பாக்கியசாலிகளையும், அன்ரிசர்வ்டு பெட்டிகளில் திணித்துக் கொண்டு தூக்கமில்லாமல் விழித்துக்கொண்டு, சிறுநீர் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் குப்பம்மாள் போன்ற கூலிகளையும் இழுத்துக் கொண்டு விரை வாக விரைந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், தண்டவாளத்தில் மயங்கிக்கிடந்த குப்பம்மாளை சிதைத்து சின்னா பின்னமாக்கி மறைந்தது. ஒன்றரை மணிநேரம் தாய்ப்பாலில்லாமல், மூச்சும் திணறியபடி கதறிக்கொண்டிருந்தது அவள் பெற்ற 9 மாத ஆண் குழந்தை. அந்தப் பக்கம் ஏழு மணிக்கு வந்தவர்கள் குழந்தையைக் கண்டெடுத்து, 108 ஆம்புலன்சுக்கு சொல்லி, குழந்தை இப்பொழுது அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

கட்டுரை எழுதும்வரை உயிரோடு உள்ளதா தெரியவில்லை. கிருஷ்ணகிரி யிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த அவள், கவுரவமாக மலம் கூட போக முடியாத நிலைக்கு யார் காரணம்? குப்பத்திற்கு அருகில் பொதுக்கழிப்பிடம் இல்லையா? அல்லது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்க முடிந்த அவள், கக்கூஸ் போக கட்டணக்காசு கொடுக்க முடியாமல், இருட்டுகலையும் முன் காடு கழனி செல்ல வேண்டி வந்ததா? மன்மோகன்சிங்கும், சிதம்பரமும், அத்வானியும், தமிழகத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ள ஒளிரும் இந்தியாவில் உள்ள ஒளிரும் தமிழகம், குப்பம்மாள்களைப் பலியாகக் கேட்கின்றதா?

ஆறாவது முறை முதல்வராகும் வாய்ப்புக்கு முயன்று வரும் முதியவர் விநியோகித்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியையும், விநியோகிக்க விரும்பும் மிக்சியையும், கிரைண்டரையும், கர்ப்பிணிப்பெண்களுக்கான 6000 ரூபாய் உதவித் தொகையையும், அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல், ஒரு கக்கூஸ் பிரச்சனை அவளது உயிரைப் பறித்தது நியாயமா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாயக் கல்வி அவளது 6 குழந்தைகளுக்கும் கிடைக்குமா? புரட்சித்தலைவி போட்டி போட்டுக் கொடுக்க நினைக்கும் இலவச மண்ணெண்ணையும், இருபது கிலோ இலவச அரிசியும் இக்குழந்தைகளின் பசியாற்றுமா? தலைவர்கள் அறிவித்துள்ள இலவச லேப்டாப் மடி கணினியை வாங்கும் தகுதியான 11ம் வகுப்பு போகும் வரை, இந்த 6 குழந்தைகளில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள்? அல்லது தங்கத்தலைவி கட்ட நினைக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் ஏதாவது ஒன்றில் இந்த ஆறு குழந்தைகளும் சேருவார்களா

 நட்புடன்
அ.நாராயணன்.

No comments:

Post a Comment