Monday, October 11, 2010


காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி வெற்றியடைந்தால் வருத்தமடைவேன் என்று மணிசங்கர் ஐயர் தொடங்கி வைத்த கூற்று ஒரு பெரும்புயலாக மாறி, காமன் வெல்த் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள், குளறுபடிகள், மனித உரிமை மீறல்கள் என்று பலவற்றையும் வெளிக் கொண்டு வந்தது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த ஊடகங்களும் சேர்ந்து இந்திய அரசையும், விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களையும் சாட்டையால் அடிக்காத குறைதான். ஆனால் எந்த ஊடகத்தின் பார்வையும் காமன் வெல்த் போட்டிகளை சாக்காக வைத்து நடத்தப்படும் ஒரு பேரவலத்தின் மீது விழவில்லை. ஏனென்றால், இந்த அவலத்திற்கு ஆட்படுபவர்கள் மற்ற எல்லோரையும் பொறுத்தவரை, அவர்களுக்கான ஒரு நுகர் பொருள், கேளிக்கைக்கான கருவி, அவ்வளவு தான்.


எல்லோரும் நாய் அழுக்காக்கிய மெத்தைகளையும், எச்சில் துப்பிய அறை மூலைகளையும், உடைந்து விழுந்த நடைபாலத்தையும் மட்டுமே மையப்படுத்தினர். ஆணாதிக்க சமூகத்தின் முடை நாற்றத்தையும், 70,000 கோடி பளபளப்பிற்கும் முலாம் பூச்சிற்கும் உள்ளே அழுகி புழுத்துக் கொண்டு இருக்கும் நம் சமூகத்தின் பல்வேறு அவயவங்களையெல்லாம் யார் தான் வெளிக்காண்பிப்பார்கள்? ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் இவற்றை எல்லாம் யார்தான் கவனத்தில் கொள்ளப் போகிறார்கள்?


இக்கட்டுரை, வாசகர்களின் கைகளில் இருக்கும் போது, இந்த விளையாட்டு போட்டிகள், வெற்றியா அல்லது தோல்வியா என்பது தெரிந்திருக்கக்கூடும். ஆனால், இக்கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கும் இந்த நிமிடம், வினை தீர்க்கும் விநாயகரின் கிருபையினால், ஏசுவின் கருணையினால், இன்ஷா அல்லா இரக்கத்தினால்  இப் போட்டிகள் தோல்வியடைந்து, இந்தியாவிற்கு பெருத்த அவமானம் தேடித்தர வேண்டும். அந்த அவமானத்தில் இருந்தாவது, ஒரு புதிய யுகம் பிறக்க வாய்ப்புண்டோ என்று வேண்டிக் கொண்டே தான் தொடருகிறேன்.


மணிசங்கர் ஐயரும், என்னைப் போன்றவர்களும் மட்டுமல்ல, இந்த விளையாட்டுப் போட்டிகளை சாக்காகக் வைத்து ஒரு பேரவலத்திற்குள் தள்ளப்பட்டவர்களும், காமன்வெல்த் போட்டிகள் மிகப் பெரிய தோல்வி அடைய வேண்டும் என்று கண்களை இறுக்க மூடியபடி ஆழந்த உறக்கத்தில் இருக்கும் தத்தம் கடவுள்களை வேண்டிக் கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது.


கடந்த மாத பாடம் இதழில் வெளி வந்த நேர்காணலில் “விளையாட்டு மட்டும் தான் மாணவ மாணவிகளை, இளைஞர்களை நல்ல ஒழுக்கமான முறையில் வளர்க்கும்” என்று முன்னாள் ஒலிம்பிக் வீரர் பாஸ்கரன் குறிப்பிட்டிருந்தார்.


விளையாடுவது, ஒழுக்கத்தை வளர்க்கிறதோ என்னவோ, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், ஒழுக்கமின்மையையும், சமூகச் சீர்கேடுகளையும் விலையாகக் கேட்கின்றன என்பது தான் துரதிருஷ்டம்.


பாலியல் தொழில் உலகின் மிகப் பழமையான தொழில் என்று கூறப்படுவது உண்டு. ஆனால், வெங்காயம் முதல் பன்றிக் காய்ச்சல் வரை, எப்படி இன்றைய உலகமயமாக்கலில், உலகம் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தில் அங்கமாகி விட்டனவோ, அது போல், பாலியல் தொழிலும் இன்று உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருள் அல்லது சேவையாகி விட்டது. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் விளைவாக பாலியல் தொழில் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இன்று உருவாகி வருகின்றன.


உச்சக்கட்ட ஏழ்மையில் வாழும், தின வாழ்க்கையே போராட்டமாக உள்ள, ஹெயித்தி போன்ற ஆஃப்ரிக்க நாடுகளில், பாலியல் தொழில் என்பது மிக முக்கிய தொழில்களில் ஒன்றாகும். அங்கு முற்றிலும் விவசாயம் அழிக்கப்பட்டு விட்டதனால், உடலுழைப்பு மூலம் பிழைக்க வழியில்லை. அங்கு பல குடும்பங்களில் குழந்தை ஆணாக இல்லாமல், பெண்ணாகப் பிறந்தால் ஆறுதலடைவார்கள் என்று படித்த ஞாபகம். பாலியல் தொழில் செய்தாவது பிழைத்துக் கொள்வாள் என்று ஆறுதல் பெண்ணை பெற்றவர்களுக்கு. வறுமை தான், ஆஃப்ரிக்க நாடுகளில் எயிட்ஸ் நோய் அதிகரிப்பிற்கு முதன்மைக் காரணம்.


அதே போன்று இந்தியாவில், வறுமையினால், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்கள் கணக்கில் அடங்காதவர்கள். இன்றைய இந்தியாவில் ஒரு சாரார் கண்டு வரும் பொருளாதார வளர்ச்சி, பாலியல் தொழிலுக்கான நுகர்வை அதிகரித்து, மேலும் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது என்றால் மிகையில்லை.


உலகத் தொழில்கள் எல்லாம் சென்னையைச் சுற்றி அமைந்து, நிலத்தின் மதிப்பு உச்சத்தை அடைந்து, எவ்வாறு அது நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கும், ரியல் எஸ்டேட்காரர்களுக்கும், ஆயிரக்கணக்கான பொறியாளர்களுக்கும், லட்சக்கணக்கான கட்டடத் தொழிலாளர்களுக்கும் மட்டுமல்லாது, ஏகப்பட்ட குண்டர்களுக்கும், கூலிப்படைகளுக்கும், கட்டப்பஞ்சாயத்து கும்பல்களுக்கும் நிலையான வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோ, அதைப் போன்றதொரு வளர்ச்சி இந்த பாலியல் தொழிலுக்கும்  இந்தியாவின் பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ளது.


இப்பொழுது டில்லி காமன்வெல்த் ஊழல் விளையாட்டுக் கொண்டாட்டங்களுக்கு வருவோம். டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதின் விளைவாக, கட்டிடக்கலை வல்லுனர்கள், ஹோட்டல்கள், அங்காடிகள், சுற்றுலாத்துறையினர், விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பாலியல் நிறுவனங்கள், பிம்புகள், ப்ரோக்கர்கள், ரெட்லைட் ஏரியாவாசிகள் போன்றவர்களுக்கும் ஒரு ஜாக்பாட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, கடந்த ஒரிரு வருடங்களாகவே அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.


இந்த விளையாட்டுப் போட்டிகளை காண வருபவர்களுக்கு தீனி போடுவதற்காகவே இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது. வயதுக்கு வந்த சிறுமிகளுக்கு, “ஆக்ஸிடாசின்” ஹார்மேன் ஊசி போடப்பட்டு, அவர்களின் உடல்கள் பாலியல் தொழிலக்கு தயார் செய்யப்பட்டன என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சக்தி பாகினி எனும் தொண்டு நிறுவனம், ஒடிஸா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார் மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 13 முதல் 17 வயது வரை உள்ள பல சிறுமிகளை மீட்டுள்ளது.


கர்நாடகா, தமிழகம் உட்பட பல மாநிலப் பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர். கடத்திவரப்பட்ட பெண்களுக்கு சிறுசிறு ஆங்கில வாக்கியங்கள் பேசவும், குறிப்பாக “ஆணுறை பயன் படுத்துங்கள்” என்று ஆங்கிலத்தில் வாடிக்கையாளரிடம் சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தவும் பயிற்சி கொடுக்கப்பட்டதாக கோலின் தோதந்தர் எனும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.


டில்லியில் உள்ள ரெட் லைட் ஏரியாக்கள் புதுப்பிக்கப்பட்டு, டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.ஸி போன்றவை விடுதிகளில் பொருத்தப்பட்டன. அயல்நாட்டவருடன் பெண்களை அனுப்புவதற்காக எஸ்கார்ட் நிறுவனங்கள் பல (அதாவது பாலியல் சுற்றுலா)  முளைத்துள்ளன. காமன் வெல்த் டி ஷர்ட், தொப்பி, மிட்டாய், விஸ்கி, காபி போன்று, பெண்களும் இங்கு ஒரு சந்தைப் பொருள் அல்லது சேவைப்பொருள்.


டில்லி அரசோ, சாலைகளைத் தோண்டி புதுப்பிப்பது, சிவப்புக் கம்பளம் விரிப்பது, ஆங்காங்கே அலங்காரங்கள் செய்வது, ஆயிரக்கணக்கான பூத்தொட்டிகள் வைப்பது போன்று எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து டில்லி முழுவதும் நூற்றுக்கணக்கான ஆணுறை விநியோகிக்கும் இயந்திரங்களைப் பொறுத்தியுள்ளது. அதாவது பெண்களும், சிறுமிகளும் கடத்தப்படுவதை ஒன்றும் செய்ய முடியாது, அவர்கள் சித்திரவதைப்படுத்தப்படுவதை தடுக்க முடியாது, ஆனால் எயிட்ஸ் தொற்றுவதையாவது தடுக்க முயல வேண்டும் என்பது மட்டுமே அரசின் குறிக்கோளாக முடிந்து விடுகிறது.


“நமக்கு நாமே” எனும் பெண்களின் பாதுகாப்புக்கான நிறுவனம், ஜனாதிபதி முதல் பல்வேறு அரசுத் தலைவர்களிடமும் இந்தக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி முறையிட்டும் எந்த பலனும் இல்லை. மத்திய அரசு, போட்டிகளை எப்பாடுபட்டாவது தோல்வியிலிருந்து மீட்பதிலேயே குறியாக இருந்ததால், ஒரு சில நடத்தை விதிகளை மட்டும் வெளியிட்டு முடித்துக் கொண்டு விட்டது.


பெண்களும், சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட செய்யப்பட, டூரிஸ்ட் நிறுவனங்களும், விடுதி முதலாளிகளும், புரோக்கர்களும், போலிஸ்காரர்களும் நல்ல வருமானம் பார்ப்பார்கள். சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து ப்ராத்தல்கள் ஏற்கனவே விலையை ஏற்றியிருந்தனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றி, பாதுகாப்பு, விருந்தோம்பல் இவற்றிலேயே அரசுத்துறைகளின் கவனம் இருக்கும், ஆதலால், பாலியல் தொழில் தடையில்லாமல் கொழிக்கும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தியப் பெண்கள் மட்டும் அல்ல, இங்கிலாந்து, ஸ்பெயின், லத்தீன், துருக்கி, தெற்கு ஆசிய நாடுகள் என்று உலகின் பல பகுதிகளில் இருந்தும் பாலியலுக்காக பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா படேல், எதிர்கட்சித் தலைவர்  சுஷ்மா சுவராஜ், முதல்வர் ஷீலா தீக்ஷித் என்று ஆட்சி செய்யும் உயர் அதிகாரத்தில் பெண்கள் இருந்தும், டில்லி காமன்வெல்த் போட்டியின் போது நூற்றுக்கணக்கான பெண்கள், பாலியல் படுகுழியில் தள்ளப்படுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார் மற்றொரு கட்டுரையாளர் N. விஜி.


காமன்வெல்த் நடக்கும் இருவாரங்களுக்கும், வெளிநாட்டு பெண் என்றால், ரூபாய் 2 லட்சம் முதல் 7 லட்சம் வரை ஒரு வாடிக்கையாளர் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவில் விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டப் போகிறதோ இல்லையோ, பாலியல் தொழிலை உலகத்தரத்துக்கு(?) கொண்டு சென்று, இந்தியாவெங்கும் இத்தொழிலுக்கு புத்துணர்ச்சி(?) ஏற்படுத்தப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. அத்தாடு, ரஷ்யா, உக்ரெயின், கஜகஸ்தான், ஜியார்ஜியா போன்ற பழைய கம்யூனிஸ்ட் நாடுகளில் இருந்தும் பாலியல் தொழிலாளர்கள் படையெடுப்பதாக இருந்தது.


காமன்வெல்த் மட்டுமல்ல, 2008ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போதும், அதற்கு முன்பு ஏதென்ஸ் நகரில் நடந்த போதும் அங்கு பாலியல் தொழில் கொடிகட்டிப் பறந்தது. அப்போதும் லட்சக்கணக்கான ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டன. ஒலிம்பிக், உலகக் கோப்பைகள் போன்ற விளையாட்டு நிகழ்வுகளேடு, பாலியல் தொழில் வளர்ச்சி, கடந்த 10,15 வருடங்களாகத் தான் வேகமாக அதிகரித்துள்ளது.
இப்பொழுதே, இங்கிலாந்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பிற்கான பல தன்னார்வ நிறுவனங்கள் பயப்படத் தொடங்கிவிட்டன. ஏனென்றால், இங்கிலாந்து நாட்டில் 2012ம் வருடம் லண்டன் ஒலிம்பிக்ஸூம், 2014ம் வருடம் காமன்வெல்த் போட்டிகளும் நடக்கவிருக்கின்றன.


பொதுவாக விளையாட்டு போட்டிகள் என்பது சிகரெட், மது நிறுவனங்கள் மற்றும் பாலியல் சந்தையோடு பின்னிப் பிணைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சிகரெட் மற்றும் மது நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த, இளைஞர்களைத் தங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக்க, மூளைச் சலவை செய்ய, இசை நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை ஸ்பான்ஸர் செய்து நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட வரலாறு உள்ளது. நேரடி விளம்பரம் தடை செய்யப்பட்ட பின்பும், மறைமுக விளம்பரம் மூலம், தங்கள் ஆக்டோபஸ் பிடியை அவர்களால் இறுக்க முடிகிறது.


ஜென்டில்மென்களின் விளையாட்டு என்று கூறப்பட்ட வெள்ளையுடை கிரிக்கெட்டை, ஐ.பி.எல். கிரிக்கெட் எனும் இழிவு மூலம் அலங்கோலமாக்கியது இந்த சந்தை வியாபாரிகள் தான். சூதாட்டம், சியர் லீடர்ஸ், மதுக் கலாச்சாரம், ஹவாலா பணம், எஸ்கார்ட் (பாலியல்) தொழில் ஆகிய அவலங்களை கிரிக்கெட் மூலம் விரிவு படுத்தி நூற்றுக்கணக்கான கோடி களை புரட்டிக் கொண்டிருக்கும் கும்பல்கள் இன்று பெரிய மனிதர்களாக, தொழிலதிபர்களாக, சினிமா துறையினராக வளைய வந்து கொண்டு உள்ளனர். இளைஞர்களின், நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு வெறியைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் இமாலய வெற்றி பெற்றுள்ள இவர்களை, உச்சநீதி மன்றம் முதல் பார்லிமென்ட் வரை எந்த அதிகார அமைப்பும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியின் போதும், வெளிப்படையாக அரங்கங்களிலேயே மது விநியோகிக்கப்படுகிறது. போட்டி முடிந்த பின்னரும், மது விருந்துகள், போதைப் பார்ட்டிகள், டிஸ்கோ என்று அமர்க்களப்படுகிறது. வெளித்தோற்றத்திற்கு கவர்ச்சி கரமாகவும், பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் இவ்வகைக் கொண்டாட்டங்கள், பல பெண்களை இருட்டறைக்கு மட்டுமே கொண்டு செல்லும் ஒரு வழிப்பாதையில் விட்டு விடுகிறது என்பது யார் கண்களுக்கும் புலப்படுவதில்லை.


உலக வரலாறு முழுவதும் விளையாட்டு இருந்திருக்கிறது. மதுக்கலாச்சாரம் என்பதும் இனங்களின் கலாச்சாரமாக அமைந்து இருக்கிறது. பாலியல் தொழிலும் சரித்திரத்தின் எல்லா காலங்களிலும் பதிவாகி இருக்கிறது. ஆனால், இந்த மூன்றையும் வெற்றிகரமாக, லாபகரமாக இணைத்து இன்றைய உலகப் பொருளாதாரமயம் பெண்ணின் உடல் மீது அவிழ்த்து விடும் திட்டமிட்ட வன்முறை, வேறெந்த காலத்தையும் விட பலமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்றே கூறத் தோன்றுகிறது. இந்த வன்முறையைத் தடுப்பதற்கான எந்த சக்தியும் இல்லை என்பதோடு, இளம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான நேரடி மற்றும் மறைமுக பாலியல் பலாத்காரம் இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளது என்றும் தோன்றுகிறது.


வீட்டு வரவேற்பறையில் உள்ள வண்ணத்தொலைக்காட்சி பெட்டி, சிறுவர்கள் மூச்சிறைக்க ஓடி வந்து வாசலில் விசிறியடிக்கும் நாளிதழ், உடலின் ஒரு புதிய உறுப்பாகி விட்ட செல்போன், கணினி மூலம் பின்னப்படும் வலைதளம் எல்லாமுமே இந்த பொருளாதார வெற்றிக்கான வெறி கொண்ட நாய்களின் கோரப் பற்களாகி விட்டன. நுகரு, நுகரு என்று விளம்பரங்கள் மூலம் இவை ஓயாமல் குரைத்துத் தீர்க்கின்றன.


இன்று வீதிகளிலும், வீடுகளிலும், விடுதிகளிலும் முழுவதுமாக வியாபித்துள்ள இந்த “நுகர்வு வன்முறை”, பேயாட்டம் ஆடிவிட்டுத் தான் ஓயும் போல் தோன்றுகிறது.
அதுவரை, நுகர்வுக்கான பிரம்மாண்டமான சந்தையின் ஒரு பகுதியில் இன்னும், இன்னும் பல பெண்களின், சிறுமிகளின் உடல்கள் பலி கேட்கப்படும்.

No comments:

Post a Comment