Saturday, October 9, 2010


ஏழ்மை நிறைய கேட்கும், ஆனால் 
பேராசை எல்லாவற்றையும் கேட்கும்
                                               
                                                    - ரோமானிய பழமொழிசுவிஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட இந்தியப்பணத்தை மீட்க முடியுமா?

முதலாளித்துவத்தின் அழுக்குப்பணத்தில் இருந்து சந்தையை எப்படி விடுவிப்பது என்பதைப் பற்றிய புத்தகம் எழுதியவர் “உலக நாட்டுக் கொள்கைகளுக்கான மையத்தின்” இயக்குனர் ரேமான்ட் பேக்கர் எனும் அறிஞர். உலகின் ஒட்டுமொத்த வளங்களில் 57 விழுக்காட்டிற்கும் மேல், உலகின் 1 விழுக்காடு மக்களிடம் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்கிறார் அவர்.  மேலும் பல நாடுகளில் உள்ள ரகசிய வங்கிக் கணக்குகளில் பாதுகாக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணக்காரர்களின் நிதி 10 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு இருக்கும் என்றும் கணித்துக் கூறுகிறார் பேக்கர்.

இவ்வாறு ஒளித்து வைக்கப்பட்டுள்ள நிதியில், 50% அளவிற்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள திருட்டுப்பணம் என்று உலக நிதி அமைப்பு கூறுகிறது.  லஞ்சம், ஊழல், கிரிமினல்களின் பணம்,   கொள்ளையடிக்கப் பட்ட நாடுகளின் வளங்கள், வரி ஏய்ப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.    ஜவஹர்லால் நேரு காலம் முதல் 2006  ஆம் ஆண்டு வரை, இந்திய பெருச்சாளிகள் அயல்நாடு வங்கிகளில் ஒளித்து வைத்தவை 1.4 டிரில்லியன் டாலர்கள் என்று ஊகிக்கப்படுகிறது. (அதாவது இன்றைய மதிப்புப்படி ரூபாய் 71 லட்சம் கோடிகள்).

உலக வங்கி உட்பட அயல்நாடுகளிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள அயல்நாட்டுக் கடன்களை விட இத்தொகை 12 மடங்கு அதிகம்.  பழைய கணக்குகளான போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் போன்றவற்றைத் தாண்டி, சத்யம் ஊழல், ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், இந்தியா முழுவதும் சுரண்டப்படும் கனிமங்கள் போன்ற சமீபத்திய கணக்குகளை எடுத்துக் கொண்டால், மேற்படி ட்ரில்லியன் புள்ளி விவரத்தை இன்னும் மேல்திசை நோக்கி அதிகரிக்க வேண்டும்.

2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையுள்ள 5 வருடங்களில் மட்டும், இந்தியாவில் இருந்து 136.5 பில்லியன் டாலர்கள் (அதாவது 7 லட்சம் கோடிகள்) முறைகேடாக பறந்து சென்றிருக்கும் என்று கருதுகிறார் பெங்களுரு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்) நிதிப் பேராசிரியர் ஆர். வைத்தியநாதன். மேற்கூறிய புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவையா என்ற சந்தேகம் எழலாம். எப்படி இருப்பினும், உலகில் உள்ள ரகசிய வங்கிக்கணக்குகளில் அதிகமாக உழல் பணம் பதுக்கி வைத்துள்ள நாட்டவர்களில் இந்தியர்களே முதல் இட தங்கப்பதக்கத்தை அணிந்துள்ளனர் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. முன்னாள் கம்யூனிஸ்ட் நாடான ரஷியாவிற்கு இதில் வெள்ளிப்பதக்கம் என்பது கொசுறுச் செய்தி.

ஜார் கொடுங்கோலாட்சியைத் தூக்கியெறிந்து, பொதுவுடமை பொருளாதாரத்தை கட்டமைத்த சோவியத் யூனியனில் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்ட அதிகாரிகள் தான், 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருடர்கள் எனலாம். இன்றைக்கு, ரஷ்யா மட்டுமல்லாது, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளிலும், பொது சமூகத்தில் ஊழல் ஆழமாக புரையோடிப் போயிருக்கிறது என்பதில் வியப்பில்லை.

எட்டாவது நூற்றாண்டு முதலே இந்தியா மீது பல நாட்டு மன்னர்களும் படையெடுத்து இங்குள்ள வளங்களை கைப்பற்றிய வரலாறு உண்டு.  உச்சக்கட்டமாக, வெள்ளையர்கள் நம்மைப்பிழிந்து, சக்கையாக சுரண்டினர் என்பதும் தெரிந்ததே. ஆனால், அரசியல் விடுதலை பெற்று 63 வருடங்கள்   ஆகிய நிலையில், இந்தியாவைச் சோ்ந்தவர்களாலேயே இந்திய மக்கள் சுரண்டப்படுவது உக்கிரமடைந்துள்ளது.
  


யார் இந்த பதுக்கல் பெருச்சாளிகள்?  நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழலில் ஊதிப்பெருத்து வரும் அரசியல் வாதிகள்,  ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.பி.எஸ்., என்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருபவர்கள், மிக அதிக அளவிலான ராணுவ பேர இடைத் தரகர்கள், பல்வேறு வகையான புரோக்கர்கள், போதைப்பொருள் மன்னர்கள், நல்ல நேரத்திற்கான விஸ்கி ராஜாக்கள், சினிமா நட்சத்திரங்களில் சிலர், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் என்று பட்டியல் நீள்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்களின் பணத்தை (FII) இந்தியாவிற்குள் திருப்பிவிடும் முயற்சியாக “பிராமிசரி நோட்டுகள்” என்ற புழக்கடை வழி திட்டத்தை இந்திய அரசு 18 வருடங்கள் முன்பு அறிவித்தது.  இந்த புழக்கடை மூலம் யார் வேண்டுமானாலும் வெளிநாடுகளில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் மறைமுக முதலீடு செய்யலாம். வெளி நாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தையோ, ஹவாலா மூலம் கொண்டு சென்ற பணத்தையோ, பிராமிசரி நோட்டுகள் மூலம் பங்குச் சந்தையில் மூதலீடு செய்து கொள்ள முடியும். பிரச்சனையென்றால் வெளியில் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த “பிராமிசரி நோட்டுகள்”  என்பது தடயமே இல்லாத  ஆபத்தான ஒரு வழிமுறை என்றே எல்லோராலும் கருதப்படுகிறது. பங்குச்சந்தை மட்டும் அல்லாது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் போர்வையில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பெருமுதலைகளால் சுவாகா செய்யப்படுவதற்கும் ஹவாலா வழி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஆயினும், உலகளவில் இப்பொழுது பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கிய பின், இப்படி பிராமிசரி நோட்டுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட நிதி இந்தியாவிற்குள் மீண்டும் வருவது குறைந்து விட்டது என்று புள்ளி விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சுவிட்சர்லாண்டு உட்பட கிட்டத் தட்ட 40 நாடுகளில் உள்ள வங்கிகளில் யார் வேண்டுமானாலும் வரிகட்டாமலோ அல்லது மிக மிகக்குறைந்த வரியோ கட்டிவிட்டு,  ரகசிய கணக்கு திறந்து வங்கிகளில் பணத்தைப் பாதுகாக்கலாம். எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது.  மிக ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். சுவிட்சர்லாண்டு தவிர,  பெரும்பாலானவை இங்கிலாந்து, நெதர்லாண்டு போன்ற காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த அல்லது இருக்கும் குட்டித் தீவுகள்.  உலகின் மூன்றில் ஒரு பங்கு நிதி சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள ஒவ்வொரு முனிசிபாலிட்டியைச் சேர்ந்த வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன.

சுவிஸ் வங்கிகளுக்கும் இந்திய பணப்பெருச்சாளிகளுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அதோடு, சிங்கப்பூர் மற்றும் மொரிசியஸ் வங்கிகளில், இந்தியர்கள் பொதுவாக அதிகமாக ரகசிய டெபாசிட்கள் செய்வது வழக்கம். அதுவும் மொரிசியஸ் நாடு, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் திருட்டுப்பணத்தை பாது காப்பாக வைப்பதற்கும், மீண்டும் ஹவாலா மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும் நடை முறையில் மிகவும் வசதியான நாடாக இருக்கிறது.  இப்பொழுது நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளுக்கான பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ள நிறுவனங்களில் சில, மொரிசியஸ் வழியில் ஹவாலா பணத்தைப் பயன்படுத்திக்கொண்டதாக பேசப்படுகிறது. அது மட்டுமல்ல, காமன்வெல்த் ஊழல்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீண்டும் இந்த ரகசிய வங்கிப் பொந்துகளில் போய் பாதுகாப்பாக சேர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.  இந்த மொரிசியஸ் ஹவாலா வழி முறையைத்தான்,  ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் மற்றும் 20-20 கிரிக்கெட் சூதாட்டத்திற்கும்  பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சாற்றப்பட்டது.

சமீபத்திய காலங்களில், சிங்கப்பூர் மற்றும் மொரிசியஸ் நாடுகள் தொடர்புடைய பரிவர்த்தனைகளில் மத்திய வருமானத்துறை உயர் அதிகாரிகள் சிறிது கவனம் செலுத்தத் தொடங்கியதால், இந்நாடுகளுக்கு பதில், பிரிட்டிஷ் விர்ஜின் மற்றும் சேனல் தீவுகளில் உள்ள வங்கிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.    பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சேனல் தீவுகள் போன்ற குட்டித்தீவுகளில் உள்ள வங்கிகளில், இந்தியாவில் இருந்து வெளியேறும் அழுக்குப்பணம் முதலீடு செய்வது கடந்த இரு வருடங்களாக பல மடங்கு அதிகரித்து வருகிறது என்று “பிசினஸ் லைன்” பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தக் குட்டித்தீவுகளில், ஒரு விலாசம் மட்டும் இருந்து விட்டால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது.

அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பின்னர், ரகசிய வங்கிக் கணக்குகள் முலம் தீவிரவாதிகளுக்கு நிதி கிடைக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது.  அதோடு, வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, அந்நாடுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், உலகின்  வளர்ந்த நாடுகளின் கவனம் இப்படிப்பட்ட  திருட்டுப்பண  வங்கிகளின் பக்கம் முதன் முதலாகத் திரும்பியது.

அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா, சுவிஸ் நாட்டு வங்கிகளைக் கடுமையாக சாடினார். அவர் தலைமையிலான அரசு இப்பொழுது வேகமாக நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் வைத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி இரு சுவிஸ் வங்கி அதிகாரிகளைக் கைது செய்தது. முதல் தவணையாக 300 முக்கிய அமெரிக்க பணக்காரர் களின் கணக்குகளை சுவிஸ் வங்கிகளிடமிருந்து பெற்றுள்ளது. அதில் உள்ள பணக்காரர்களின் பெயர்களை வெளியிட்டு, இது வரை 17 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளது. மேலும், 52,000 அமெரிக்கர்களின் கணக்கு விபரங்களை சுவிஸ் நாட்டிடம் கேட்டு நெருக்குதல் கொடுத்து வருகிறது.

வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளுக்கு எதிராக, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கி விட்டன. ஜெர்மனி நாட்டின் ஒற்றர் படையான “BSD”, சுவிஸ் வங்கியான LTB வங்கியின் 1,400 ரகசிய வாடிக்கையாளர்களின் விபரங்களை, “போட்டுக்கொடுக்கும்” முன்னாள் ஊழியரிடமிருந்து விலைக்கு வாங்கியது.  இதில் 600 கணக்குகள் ஜெர்மனியைச் சேர்ந்தவை.  இந்தியா உட்பட மற்ற நாட்டு அரசுகள் கேட்டல் கொடுக்கத்தயார் என்று ஜெர்மனி அறிவித்தது. LTB வங்கியின் கணக்குகளில் இருந்து இந்தியப் பணக்காரர்களின் ரகசியங்களை, இந்திய அரசுக்கு ஜெர்மனி அரசு அளித்ததாகக் கேள்வி. ஆனால், நம் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போன்று, நைஜீரியா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல், பிரான்ஸ் போன்ற நாடுகள் சுவிஸ் வங்கி உட்பட பல நாட்டுக்கணக்குகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டன.

“2009ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நடந்த G-20 நிதித்துறைத் தலைவர்களின் மாநாட்டின் போது, பல நாட்டுத் தலைவர்களும், “வங்கி வெளிப்படைத் தன்மை” குறித்தும், ரகசிய கணக்குகளில் புதைந்துள்ள நிதியை வெளிக்கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்திப் பேசினர், ஆனால், இந்தியா இதைப் பற்றி பேசவே இல்லை, ஏனென்றால், இந்திய அதிகாரத்தில் உள்ள பெருச்சாளிகள் இதனை அனுமதிக்கமாட்டார்கள்” என்கிறார் பேராசிரியர் வைத்தியநாதன்.

வரும் நவம்பர் மாதம் கொரியாவில் நடக்க இருக்கிற மாநாட்டின் போதும், இது பற்றி உலகத்தலைவர்கள் பேச இருக்கிறர்கள். ஆதலால், உலக அளவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அழுத்தம் காரணமாக, ரகசியக்கணக்குகள் என்பது இனி பழைய சரித்திரமாகக் கூடும். எனினும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாசகர்கள் முணு முணுப்பீர்கள் என்பதை யூகிக்க முடிகிறது.இந்தியாவில் இப்பொழுது 69 பில்லியனர்களும் 1,26,700 மில்லியனர் களும் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இதே இந்தியாவில் தான் உலகில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் உள்ளனர்.  நிலம், நீர், இருப்பிடம், உணவு, கல்வி, வாழ்வாதாரம் என்று எல்லாவற்றிலும் மிக அகலமான, ஆழமான சமத்துவமற்ற நிலை நிலவுகிறது. உலகளவில் முதலாளித்துவத்தின் ஆதிக்கம் வியாபித்திருந்தாலும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளைப் பொருத்த வரை, அங்கு ஓரளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகம் இருப்பதாகக் கொள்ளலாம்.

உதாரணமாக, பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபராக இருந்தாலும், அவர் தனது சொந்தக்காரர்கள், பிள்ளைகள் எல்லோரையும் அவரது தொழிலுக்குள் இழுத்து வந்து, தனது சொத்து, தன் குடும்ப உறவுகளைத் தாண்டி போகக்கூடாது என்றெல்லாம் திட்டமிடமாட்டார். அதனால் தான், அவரும் சரி, பல அமெரிக்க பணக்காரர்களும் கூட தங்கள் சொத்துக்களை எல்லாம் மீண்டும் பொது வேலைகளுக்கு கொடுத்து விட முன் வருகிறார்கள்.

இந்திய முதலாளிகளில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ தலைவர் அசிஸ் பிரேம்ஜி போன்ற வெகு சிலர் மட்டுமே மிகப் பெரிய வெற்றி கண்ட தொழிலதிபர்களாக இருந்தாலும், குடும்பத்திற்காக சொத்து சேர்க்கும் வேலைகளில் இறங்கவில்லை. மிக எளிமையானவர்கள். ஆகப் பெரும்பாலான இந்தியப் பணக்காரர்களும், தான், தனது குடும்பம், பினாமி சொத்துக்கள், தனது சாதிக்காரர்கள் என்ற கடுகிலும் கடுகான மனம் கொண்ட, சாதிய முதலாளிகள். ஆங்கிலத்தில் இவர்கள் Crony Capitalist என்று கேலியாக அழைக்கப்படுகிறார்கள். ஒரு சில நல்ல விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலான இந்திய சாதிய பணக்காரர்களின் பணம், நாய் கொண்ட பண்டத்திற்கு ஒப்பாகும், அவர்கள் சேர்த்த பணத்தால் யார்க்கும் பலனில்லை என்பது தான், இன்று வரையிலான சோக வரலாறு.

2017ற்குள் உலகில் மிக அதிகமான பில்லியனர்களை உருவாக்க முயன்று வரும் இந்திய அரசின் பொருளாதார வளர்ச்சித்தத்துவம் தான், மிக அதிகமான இந்தியர்களை நித்தமும் உச்சக் கட்ட பசிப்பிணியுடன் இரவு கண் அயரச் சொல்கிறது.  வளைகள் பலவற்றினுள் கைநுழைத்து, எலிகள் சேகரித்து வைத்துள்ள நெல்மணி களை திரட்டிச் சென்று கஞ்சி வடிக்க முனைபவர்களும் இந்திய கடைக்கோடி கிராமங்களில் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்நிலையில், இந்திய ஏழைகளிடமிருந்து சுரண்டி வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ஊழல் பணத்தில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டு வந்தால் கூட, பிரமிக்கத் தக்க மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, எல்.கே.அத்வானி,  இந்த சுவிஸ் வங்கி பண விஷயத்தை அரசியல் பிரச்சனையாக்கி, அதைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார்.  மார்ச் மாத பார்லிமெண்ட் தொடரின் போது, உலகில் உள்ள 20 நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பணத்தைத் திருப்பிக்கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அத்வானியின் கேள்விக்கு பதில் அளித்துப் பேசினார் பிரதமர்.  சுவிஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் இரட்டை வரி (தவிர்ப்பு) ஒப்பந்தம் இப்பொழுது கையெழுத்தாகி உள்ளது, ஆயினும், கடந்த கால ரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டுப்பெற இயலாது என்று இப்பொழுது நடந்து முடிந்த பார்லிமெண்ட் தொடரின் கடைசி நாளன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
  
போஃபோர்ஸ் முதல் சமீபத்திய உச்சக்கட்ட வெளிப் படையான, கேவலமான ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் வரை,  நம் தலைவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்துள்ள நமக்கு, இவர்களின் வாக்குறுதி சிறிதும் நம்பிக்கை அளிக்கவில்லை.  ஏனென்றால், பி.ஜே.பி. தலைவர்களாய் இருக்கட்டும், காங்கிரஸ்காரர்களாய் இருக்கட்டும், விஞ்ஞான ஊழல் செய்து வரும் பல்வேறு மாநிலக் கட்சிகளாய் இருக்கட்டும், தங்களது முகமூடியைக் கழற்றி, தங்களது கோரமான முகத்தை தாங்களே நாட்டு மக்களுக்குக் காட்ட முன் வருவார்களா?

ஒரு முக்கிய உண்மையை மட்டும் இக்கட்டுரையின் மூலம் புரிய வைக்க வேண்டிய கடமை உள்ளது. இன்றைக்கு இந்திய அரசு சில நாடுகளுடன் வெளிப்படையான வங்கிப் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்ய முன் வந்திருப்பது கூட ஏதோ மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் எடுத்த தன்னிச்சை முயற்சியல்ல. அடுத்தடுத்த G-20 மாநாடுகளுக்கு பின்னர், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட வளர்ந்த நாடுகள் வலியுறுத்தி வரும் உலக அளவிலான சீரமைப்புத் திட்டங்களின் ஒரு அம்சமாகவே வேறு வழி இல்லாமல் இந்த ஒப்பந்தங்கள் இந்திய அரசால் போடப்பட்டு வருகின்றன.

ஆக, ஒரு வேளை,  எதிர்காலத்தில் சுவிஸ் வங்கிகள் உட்பட பலநாட்டு வங்கிகளில் உழைக்கும் மக்களிடமிருந்து,  ஏழைகளிடமிருந்து திருடி ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணம் கொஞ்சமாவது இந்தியாவிற்கு தப்பித்தவறி வந்தால், (வந்தால் தான்) நாம் நன்றி சொல்ல வேண்டியது, நம் தலைவர்களுக்கு அல்ல, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலைநாட்டுத் தலைவர்களுக்குத்தான்.

No comments:

Post a Comment