கைக்கு
எட்டியதா? கானல் நீர்தானா?
‘அகிலா’க்களுக்கு
வேண்டிய பணியிடப் பாதுகாப்பு
பாலியல்
தொந்தரவுக்கு ஆட்படும்
‘அகிலா’க்கள்
அ.நாராயணன்
தமிழகத்தின்
மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி செய்த அகிலா என்ற செய்தி
வாசிப்பாளருக்கு, அவரது மேலதிகாரியிடமிருந்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டது பற்றி செய்தி
கேள்விப்பட நேர்ந்தது. அந்த மேலதிகாரி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு,
அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும்,
குற்றம் சாட்டிய செய்தி வாசிப்பாளருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் செய்திகள்
தெரிவிக்கின்றன. அகிலா மட்டுமல்லாது,
மற்ற சில பெண் செய்தியாளர்களும் பாலியல் சுரண்டலுக்கு,
இந்நிறுவனத்தில் ஆளாகியிருப்பதாக கட்டுரை படிக்க நேர்ந்தது.
இந்தக்
குற்றச்சாட்டுகளில் எந்த அளவிற்கு உண்மை என்பது இப்பொழுது தெரியவில்லை.
உண்மையாயிருப்பின், இப்படிப்பட்ட பாலியல் சுரண்டல்,
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் பற்றி தீர விசாரித்து கடுமையான தண்டனை
வழங்கப்பட வேண்டும். ஆனால், தான் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அகிலா நிர்வாகத்தால் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி அவருக்கு,
மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களோ, ஊடகங்களோ வேலை
வழங்குமா என்பது கேள்விக்குறி.
பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு ஆதரவாகவும், நிர்வாகத்தைக் கண்டித்தும்,
பெண்ணியவாதிகள், சில பெண் ஊடகச் செயல்பாட்டாளர்கள் அறிக்கை விட்டுள்ளார்கள்.

பணியிடங்கள்
தாண்டி, பள்ளி கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது
என்பதுதான் நடைமுறை உண்மை. ஆகப் பெரும்பாலான சமயங்களில்,
சமூகமும், நிறுவனமும் காவல்துறையும் தங்களுக்கு எதிராகத் திரும்பி
அவமானப்படுத்திவிடுமோ எனும் அச்சத்தில்,
தொந்தரவுக்கும், சுரண்டலுக்கும் ஆளாகிற பெண்கள்,
அதனை வெளிக்கொண்டு வராமல், சகித்துக் கொள்கிறார்களோ
என்று தோன்றுகிறது.
ஊடகத்
துறையில் பணியாற்றுபவர்களுக்கே பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு இல்லை
என்றால், திரைத்துறை,
அமைப்பு சாராத தொழிலிடங்கள், பின்னலாடை நிறுவனங்கள்,
வீடுகளில் பணி புரியும் பெண்கள், பள்ளி கல்லூரி
மாணவிகள், காப்பகங்களில் இருப்போர்,
விவசாயக்கூலிப் பெண்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு கிடைப்பது சாத்தியமா?
உதவிக்கு
வந்த விசாகா தீர்ப்பு:
எல்லா
விதமான பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,
அவர்களின் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து ஏற்படக் கூடிய பாலியல்
தொந்தரவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒரு மசோதா,
பிப்ரவரி மாதம் 26ம் தேதி, பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு,
விரையில் சட்டமாக உள்ளது.
2007ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு
இப்பொழுதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு
(தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு) மசோதா, 2012
என்றழைக்கப்படுகிறது.
1997ம்
ஆண்டு, விசாகா (எதிரி) ராஜஸ்தான் அரசு எனும் வழக்கில்,
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் ஒரு பகுதியாக,
ஒவ்வொரு நிறுவனத்திலும், பெண் ஊழியர்களின் குறைகளைத் தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட
வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு உதவி அளிக்கப்பட வேண்டும்,
ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த உச்ச நீதிமன்ற
தீர்ப்புதான், 15 ஆண்டுகளுக்குப்பின்,
இப்பொழுது சட்டமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டத்தின் சாதகங்கள்:
இம்மசோதாவின்படி,
வீடுகள், பள்ளி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள்,
மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், அரசு,
அரசு சாரா நிறுவனங்கள், விவசாயத் தொழில்கள் ஆகிய எல்லா இடங்களிலும்
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். பெண் ஊழியர்களது
குறைகளைக் கேட்டறிந்து தீர்க்கும் அமைப்புகள் ஒவ்வொரு நிறுவனத்திலும்
ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இந்த மசோதா.
இந்த குறை தீர்க்கும் அமைப்புகள் இல்லாத நிறுவனங்கள் மீது ரூ50,000ற்கும் மேற்பட்ட அபராதம் விதிக்கப்படுவதோடு, அந்நிறு வனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்கிறது இம்மசோதா. ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்படுத்தப்படும் குறைதீர் அமைப்புகளில் 5 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். ஒரு பெண் ஊழியரிடமிருந்து முறையீடு வந்தால், 90 நாட்களுக்குள் விசாரித்து குறை தீர்க்கப்பட வேண்டும்.

இந்த
அமைப்புகள் செயல்பட, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கும். பாலியல் தொந்தரவு எனும் குற்றம்
நிரூபிக்கப்பட்டால், பாதிப்பிற்கு உள்ளான பெண் ஊழியருக்கு,
குற்றம் இழைத்தவரிடமிருந்து, அபராதம் பெற்று இழப்பீடு அளிக்க முடியும். இழப்பீடு என்பதை,
பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட உடல்,
மன ரீதியான பாதிப்பு, வேலையிழப்பு, மருத்துவச் செலவு,
தவறு செய்தவரின் பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து,
இழப்பீடு நிர்ணயிக்கப்படும். குற்றச்சாட்டை எழுத்து மூலமாக இல்லாமல்,
வாய்மொழி மூலமாகவும் அளிக்கலாம்.
இம்மசோதாவின்படி,
விருப்பமில்லாமல் உடலைத் தொடுவது, நெருக்கமாக வருவது,
பாலியல் செய்கைகளுக்கு வற்புறுத்துவது,
பாலியல் ரீதியாகப் பேசுவது, இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சு,
நீலப்படங்களைக் காட்டுவது போன்றவை, பாலியல் தொந்தரவுகளில்
அடங்கும்.
பெண்
தொழிலாளரின் வேலையில் குறுக்கிடு தல்,
மிரட்டுதல், மோசமான பணியிடச் சூழல்,
அவரின் உடல் நலம், பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்படும்
வகையில் தரக்குறைவாக நடத்துதல், அவரது பணி தொடர்பாக
உள்நோக்கம் கொண்ட அல்லது வெளிப்படையான மிரட்டல் அல்லது தூண்டுதல் போன்றவற்றை,
பாலியல் தொந்தரவுக்கான சூழலாக இம்மசோதா கருது கிறது.
அமைப்பு
சார்ந்த அரசு, தனியார், அரசு சாரா நிறுவனங்கள்,
மருத்துவமனைகள், விளையாட்டுக் கூடங்கள்,
அமைப்புகள், அமைப்பு சாரா துறைகள்,
வீடுகளில் பணிபுரிவது, வேலை தொடர்பாக ஒரு பெண் ஊழியர் வரும் இடங்கள்
ஆகியவை, இம்மசோதாவின் கீழ் பணியிடங்களாகக் கருதப்படுகிறது.
இம்மசோதாவின் பெரும் ஓட்டைகளாகக் கருதப்படுபவை யாவை?
1.
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு எழுந்தால்,
நிறுவனத்தின் குறைதீர்க்கும் குழு மூலமாகவோ,
மாவட்ட அரசின் குறைதீர் குழு மூலமாகவோ,
குற்றம் சாட்டியவர், குற்றவாளி இருவரும் சமரச முயற்சியை முதற்கட்டமாக மேற்கொள்ளலாம்
என்கிறது இம் மசோதாவின் பிரிவு 10. சமரசம் என்றால் என்ன என்று தெளிவாக்க வில்லை
இப்பிரிவு. சமரசம் என்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்க முடியுமா?
அது, பார்ப்பவர் கண்ணுக்கும்,
சமுதாயச் சூழலுக்கும், ஆணாதிக்கத்தின் அளவு கோலுக்கும்,
முறையீடு செய்தவரின் சமூக நிலைக்கும் ஏற்ப வேறுபடும் என்பது
‘காமன் சென்ஸ்’ இல்லையா?
(பெண்கள்
மீதான பாலியல் தாக்குதல் பற்றி சமீபத்தில் ஆய்வறிக்கை அளித்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா
கமிட்டி, மேற்கூறிய மசோதாவின் இந்தப் பிரிவை வன்மையாகக் கண்டிக்கிறது. பாலியல்
தொந்தரவிற்கு சமரச தீர்வு என்பது,
பெண்ணின் தன்மானத்திற்கு இழுக்கு என்று சாடுகிறது வர்மா கமிட்டி.)
வடிகட்டிய
ஆணாதிக்க இந்திய சமுதாயத்தில், சமரசப்போக்கு என்று
சட்டமே அங்கீகாரம் அளித்தால், பெண் அடங்கிப்போக
வேண்டும், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு சமாதானம் செய்து கொள்வது நல்லது
என்று கூறும் கட்டப்பஞ்சாயத்து அணுகுமுறைக்கு அரசின் சட்டமே வழிசெய்து தருவதாகக்
கருதுகின்றனர் பல சமுக ஆர்வலர்கள்.
2.
அடுத்த அபாயகரமான பிரிவு.14 ஆகும். இதன்படி,
குற்றம் சாட்டியவர் வேண்டுமென்றே அவதூறாகக் குற்றம் சாட்டினார் அல்லது பொய் என்று
தெரிந்தே முறையீடு செய்தார் என்று தீர விசாரித்து குழு முடிவுக்கு வருமானால்,
குற்றம் சாட்டிய பெண் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம்.
அதுமட்டுமல்ல, பொய் சாட்சி சொன்னார் என்று ஒரு குழு முடிவுக்கு வருமானால்,
சாட்சி சொன்னவர் மீதும் துறை ரீதி நடவடிக்கைக்கு
பரிந்துரைக்கலாம். (அதாவது, பாதிக்கப்பட்ட உங்கள் தோழிக்காக சாட்சி சொன்னீர்கள் என்றால்,
குழுவின் முடிவைப்பொறுத்து, தோழி மீது மட்டுமல்ல,
உங்கள் மீதும் அவதூறு நடவடிக்கை பாயும் வாய்ப்பு உண்டு. உங்கள் சக ஊழியருக்காக
சாட்சி சொல்ல வேண்டுமா கூடாதா என்றுநீங்களே யோசித்து முடிவுக்கு வாருங்கள்.)
இப்பிரிவைப்
பற்றியும் வர்மா குழு குறை கூறியுள்ளது. இம்மசோதா எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ,
அந்த நோக்கத்தையே சிதறடிக்கும் பிரிவு இது என்கிறது வர்மா அறிக்கை. என்னதான்
சட்டப் பாதுகாப்பு இருந்தாலும், பெண்கள் எளிதாக
முறையீடு செய்ய முன்வருவது இல்லை. ஆக,
இம்மசோதா இன்னும் ஓரிரு மாதங்களில் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு
சட்டமாகியவுடன், அது பெண்களுக்கு நல்லதொரு ஆயுதமாகும். என்ன,
அது இரு முனை கொண்ட கூர்மையான வாளாக இருக்கும்.
தொடுப்பவரையே குத்தி விடலாம்.
3.
பணியிடம் என்று விவரிக்கும்போது, கல்வி நிலையங்கள் உட்பட
எல்லாவிதமான நிறுவனங்களையும் விவரிக்கிறது. ஆனால்,
பணியாளர்கள் எனும்போது, மாணவிகளை விட்டு விட்டது. அதாவது,
ஒரு கல்லூரியில், சக ஊழியர்களால் பாதிக்கப்படும் பெண் ஊழியரோ,
சக ஆசிரியர்களால் பாதிக்கப்படும் பெண் ஆசிரியரோ முறையீடு செய்யலாம்,
ஆனால், பேராசிரியரால் ஏற்படும் பாலியல் தொந்தரவுக்கு,
ஒரு மாணவி இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற முடியாது.
ஆண்-பெண் சமத்துவத்திற்கு வழிவகுக்குமா?
விசாகா
தீர்ப்பு வந்தபின்பு, 17 ஆண்டுகளுக்குப் பின் புதிய சட்டம் வந்தாலும், 1997
ஆண்டின் விசாகா தீர்ப்பின் சாராம்சத்தை முழுவதுமாக உள்வாங்கவில்லை என்பது உண்மை.
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால்,
இம்மசோதா, கடந்த ஆண்டு மக்களவையில் (லோக்சபாவில்),
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக நடந்த கூச்சல் குழப்பத்திற்கு நடுவே,
எந்தவித விவாதமும் இன்றி ஒப்புதல் பெறப்பட்டது.
இப்பொழுது,
ராஜ்யசபாவிலும் ஆழமான விவாதங்கள் எதுவுமின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெண்களின்
உரிமை, சமத்துவம் தொடர்பாக சட்டம் இயற்றுபவர்களின் மன நிலையையே இது
பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. அதனால்தான்,
பெண்களுக்கு அரசியல் அவைகளில் 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்னும்
அந்தரத்தில் தொங்குகிறது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
உச்சநீதிமன்றம்,
பணியிடங்களில் பெண்கள் வேலை செய்ய வரும்போது,
அவர்களுக்கு ஆண்கள் அளவிற்கு சமத்துவம் அளிக்கும் விதத்தில் நடத்தப் படுவதற்கும்,
பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவேண்டும் என்கிறது. குற்றம்,
விசாரணை, தண்டனை, இழப்பீடு என்பது தாண்டி,
குற்றம், சுரண்டல்,
தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கும் விதத்தில் பணியிடச் சூழல் இருக்கவேண்டும் என்கிறது.
இச்சட்டம்,
அதற்கு வழிவகுக்குமா என்பது விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்தும் போதுதான்
தெரியவரும். பாதுகாப்பான சூழல் தொடர்பாக இச்சட்டம் தெளிவை அளிக்கவில்லை என்பதை
ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது. வீடுகளில் பணிபுரிய வருவோர்,
விவசாயக் கூலி தலித் பெண்கள் ஆகியோர் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு
ஆளாகின்றனர்.
அதுபோலவே,
ஆயத்த ஆடை நிறுவனங்கள், மாநகராட்சிகளின் துப்புரவுப்பணி,
செங்கல் சூளை போன்று கொத்தடிமைகளாகப் பணி புரிவோர் ஆகியோருக்கும் விடிவுகாலம்
ஏற்பட வேண்டும். இதற்கு, சமூக மாற்றம், சட்டம், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகிய பலரது உளப்பூர்வமான,
தொடர் பங்கு தேவைப்படுகிறது.
தாமதமாகவந்தாலும்,
கேட்பதற்காவது நன்றாக இருக்கும் இம்மசோதா சட்டமாக்கப்பட்ட பின்னர்,
முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,
சட்டம் கெசெட் மூலம் வெளியான பின்பு,
உடனடியாக அதற்கான விதிகளை, மத்திய மாநில அரசுகள் இயற்ற வேண்டும். இதற்கான போதிய அழுத்தத்தை சமூக
ஆர்வலர்களும் ஊடக வியலாளர்களும், பெண்ணியவாதிகளும்
கொடுக்க வேண்டும்.
தமிழகத்தை
எடுத்துக் கொண்டால், ஏற்கனவே இப்படிப்பட்ட சட்டங்கள் மூலம் அமைக்கப்பட்ட மாநில குழந்தை
உரிமைப் பாதுகாப்பு ஆணையமும், மகளிர் ஆணையமும்,
அரசியல்படுத்தப்பட்டு அரசு வாரியங்கள் போன்று
குறிக்கோளற்றும், செயல்படாமலும் முடங்கிக் கிடக்கின்றன. மாநில
மனித உரிமை ஆணையமும் முடங்கிக் கிடக்கிறது. பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களின்
பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட அமைப் புகளை எல்லாம்,
தூசிதட்டி, முடுக்கிவிட்டு, செயல்படச்
செய்யவேண்டியது நம் கடமையாகிறது.
No comments:
Post a Comment