Tuesday, April 9, 2013

ஏப்ரல் 2013



கல்வித்தளத்தில் உள்ள ஊழலுக்கு 
எதிராகத் திரள வேண்டும் இளைய சமுதாயம்.
 
 அன்புத் தோழர்களே!
அ.நாராயணன்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரும் நிகழ்வை ஒட்டி, இங்கிலாந்தின் சேனல்-4 தொலைக்காட்சி, இலங்கை போர் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டது. தமிழகத்தின் மாணவர்களிடமும், உலகத் தமிழர்களிடமும், இன உணர்வு ஜுரம் போல் பற்றிக் கொண்டது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல பலரும் முயற்சித்தனர்.

இதற்கு தமிழகக்கல்லூரி மாணவர் போராட்டங்கள் பெரிய அளவில் உதவின. சென்னை லயோலா கல்லூரியின் 8 மாணவர்கள், மார்ச் மாதம் முதல் வாரம் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். படிப்படியாக, தமிழகத்தின் மற்ற அரசு கலைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளின் மாணவர்களும் களத்தில் இறங்கினர். அது ஒரு சில பொறியியல் மருத்துவ மாணவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசு, பாதுகாப்புக் கருதி, எல்லா கல்லூரிகளையும் மூடுமாறு உத்தரவிட்டது. மார்ச் 15 முதல், கடந்த இரு வாரங்களாக எல்லா கல்லூரிகளும் முடங்கின.

பல ஆண்டுகளாக எந்த ஒரு பொதுப்பிரச்சனையிலும் ஆர்வம் காட்டாத மாணவர்கள், இப்பொழுது இலங்கைத் தமிழர்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியது, அதுவும், அரசியல் கட்சிகளின் கலப்பு இல்லாமல் போராடியது, பாராட்டத்தக்க ஒன்று என்று பலரும் கருதுகின்றனர்.

ஆந்திராவின் தனிதெலுங்கானா போராட்டமாக இருக்கட்டும், அன்றைய தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருக்கட்டும், பொதுவாகவே உணர்ச்சி கொந்தளிக்கும் இளவயதினர், இன உணர்வினால் தூண்டப்பட்டு,  ஈர்க்கப்பட்டு, போராட்டத்தை முன்னெடுப்பது இயல்பானதே.

தனி தெலுங்கானா, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றில் அரசியல் கட்சிகளினால் உணர்வூட்டப்பட்டார்கள் என்றால், இலங்கைப் பிரச்சனையில், வலைத்தள தகவல் தொழில் நுட்பம், தொலைக் காட்சி ஆகியவை முதன்மைப் பங்காற்றின. அதனால், குறைந்த அளவே, தமிழக அரசியல் கட்சிகளின் தேவை வேண்டியிருந்தது. மாணவர்களின் கோரிக்கைகள், இன்றைய உலக அரசியல் நடைமுறைச் சூழலில் நிறைவேற்றப்படக் கூடியவை அல்ல. ஆயினும், இலங்கைப் பிரச்சனையை எல்லோரும் தொடர்ந்து கவனத்தில் கொள்ள இளைஞர்களின் போராட்டம் வழிவகுக்கும்.

15 நாட்களுக்கும் மேலாக, கல்லூரிகள் முடங்கிவிட்டதால், இவ்வாண்டு மாணவர்களின் கல்வியில் கவலை அளிக்கும் விதமாக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஏற்கனவே, கல்லூரிகளின் கல்வி அளிக்கும் திறன் கவலையளிக்கும் விதத்தில் இருப்பது தெரிந்ததே. பொருளாதார மந்த நிலை, கடுமையான மின்சாரப்பற்றாக்குறை, விவசாயம் தோல்வி, மழையில்லா வறட்சி நிலை, மிக மோசமான அரசு நிர்வாகம் ஆகிய காரணங்களால் தமிழகம் இக்கட்டில் சிக்கியுள்ளது என்றால் மிகையில்லை. இவை எல்லாவற்றின் காரணமாக, அதிக அளவில் வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியன ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இப்படிப்பட்ட நிலையில் இருந்து, அதிகபட்ச இளைஞர்கள் எப்படி சமாளித்து, தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கப் போகின்றனர் என்பது சவாலான விஷயம் என்றால் மிகையில்லை. இந்த மாணவர்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசியல்கட்சிகள் மோசமான அரசியல் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது என்பது எதிர்பார்க்கப்பட்டாலும், கவலைக்குரிய ஒன்று.

அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வருவதால், தாங்கள் மக்களிடம் இருந்து, குறிப்பாக இளைஞர்களிடமிருந்து அன்னியப்பட்டு, தங்கள் வாக்குவங்கி சிதறிவிடக் கூடாது என்பதற்காக, சில மலிவான, ஆபத்தான செயல்பாடுகளில் இறங்கிவிட்டன.

திமுக சார்ந்த கட்சிகள், டெசோ தீர்மானம், மத்திய அரசிலிருந்து விலகல் என்று சூழ்நிலை அழுத்தத்திற்கு ஏற்ப காய் நகர்த்தினால், அவற்றை முறியடித்து, தாங்கள்தான் இலங்கைத் தமிழர்களின் முழுமையான காவலர்கள் என்று காட்டிக் கொள்ளும் சதியில் இறங்கியுள்ளது அதிமுக. அதனால், சட்டசபையில் இருந்து திமுக, தேமுதிக போன்ற கட்சிகளை வெளிநடப்பு செய்யச் செய்துவிட்டு, கச்சத்தீவு மீட்பு, தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு, காமன்வெல்த் மாநாடு நிறுத்தம் என்று அடுத்தடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றி, அறிக்கை அரசியலில் இறங்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

மதிமுக, பாமக, நாம் தமிழர் உட்பட தமிழ் தேசியம் பேசும் எல்லா அரசியல் அமைப்புகளின் கோஷங்களை, அதிமுக தலைமை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு விட்டதால், இந்த அமைப்புகள், ‘அஜென்டாஒன்றுமின்றி, காற்றுப் பிடுங்கிய வண்டி போன்று திகைப்பில் உள்ளன. மதிமுக கட்சியாவது, மதுவிலக்கு, கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலை என்று அடுத்தடுத்து போராட்ட அரசியல்செய்ய முடிகிறது.

மற்ற அமைப்புகள், திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளெல்லாம், திடீரென்று மாண்புமிகு அம்மாவின் ஈழக் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயல்படத் தொடங்கி விட்டனர் என்பதுதான் நகைச்சுவை.

தமிழகம், இன்றைக்கு சிக்கியுள்ள, நாளை எதிர்நோக்கியுள்ள பல்வேறு வளர்ச்சி பிரச்சனைகளை, இன்றைய அதிமுக அரசின் நிர்வாகக்குளறுபடிகள் இன்னும் தீவிரமாக்கியுள்ளன. எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர், யார் செயலர் என்பதுகூட நிச்சயமற்ற நிலை. தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.

அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது. டாஸ்மாக் சாராயத்தின் பிடி தளரவில்லை. ஏற்கனவே கூறியபடி, கடுமையான மின் தட்டுப்பாடு, அதிக மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் கிடக்கும் அவலம், அதிகரித்துவரும் சாலை விபத்துச் சாவுகள், தொழில்கள் முடக்கம், அதிக வேலையிழப்பு, புதிய வேலை வாய்ப்புகளுக்கு உத்திரவாதமில்லாத நிலை, எல்லா மட்டத்திலும் ஊழல், வெளிப்படைத் தன்மையற்ற, தெளிவற்ற நிர்வாக முறை, வளர்ச்சித் திட்டங்களில் சுணக்கம், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், சாதி மோதல்கள், காவல் துறையின் அத்துமீறல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாப் பிரிவு மக்களின் அதிருப்தியை ம்பாதித்துள்ளது அதிமுக.

இவற்றில் எல்லாம் இருந்து, மக்களின் கோபத்தைத் திசை திருப்பி, பாராளுமன்றத் தேர்தலில் வாகை சூட, தமிழக ஆளும் கட்சிக்கு உள்ள ஆயுதங்கள்தாம், ஈழம் தொடர்பான தீர்மானங்களும், இலவசப் பொருட்கள் வினியோகங்களும், ஒரு ரூபாய் இட்லிக் கடைக்காக, கோடி ரூபாய் செலவு செய்து ஊடக விளம்பரங்கள்.

இப்படிப்பட்ட பின்னணியில், இலங்கைப் பிரச்சனை மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற முக்கியப் பிரச்சனைகளிலும், தமிழக இளைஞர்கள் புரிதலை ஏற்படுத்திக் கொண்டால், வருங்காலத் தமிழகத்தைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

குறைந்தபட்சம், தனியார் கல்லூரிகளின் கொள்ளை, பெரும்பாலான கல்லூரிகளிலும் உள்ள தரமற்ற ஆசிரியர்கள், விரிவுரையாளர் பற்றாக் குறை, அடிப்படை வசதிகள் அற்ற அரசுக் கல்லூரிகள், துணைவேந்தர் தேர்வில் தொடங்கி, உயர்கல்வித்துறையின் எல்லா மட்டத்திலும் நச்சுவிருட்சமாக வேரூன்றி விட்ட ஊழல், முறைகேடுகள், இவையெல்லாம் சேர்ந்து, தங்கள் எதிர்காலத்தை எப்படி அழித்து வருகின்றன என்ற புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, தங்கள் நலன் சார்ந்து குரல் கொடுக்கவாவது மாணவர்கள் முன்வர வேண்டும்.

தங்கள் கல்வியறிவு ஆற்றலுக்கான வாய்ப்புகளை அழித்தொழிக்க முற்படும் ஊழல் தடைகளைக் களைந்து, தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்ள முயலும் இளைய சமுதாயம் மட்டுமே, எதிர்கால ஒட்டுமொத்த சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.

இல்லையென்றால், இன்றைய மாணவர் எழுச்சி, ஏதோ, உணர்வு பொங்கி அணைந்த மற்றொரு மறக்கப்பட்ட நிகழ்வாக சரித்திரத்தின் ஒரு மூலையில் ஒளிந்து கொள்ளும்.
                  
இணைந்து சிந்திப்போம்.  பாடம் இதழின் மற்ற கட்டுரைகளுக்கு  


நட்புடன்

அ.நாராயணன்

No comments:

Post a Comment