Friday, June 14, 2013

ஜூன் 2013தலைதூக்கும் ஜனநாயக சர்வாதிகாரம்!

அன்புத் தோழர்களே!

அ.நாராயணன்
ஒவ்வொரு ஆண்டும், ஜுன் 23ம் தேதி, உலக “பொதுச்சேவை தினமாக”க் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது, ஐக்கிய நாடுகள் சபை, சிறந்த பொதுச்சேவை வழங்கிய ஒரு நாட்டின் நிர்வாகிக்கோ, அரசுத் துறைக்கோ, அந்த ஆண்டிற்கான “சிறந்த பொதுச் சேவை அளித்தவர்” எனும் விருதை வழங்குகிறது.

கடந்த 2012ம் ஆண்டு, உலகளவில் சிறந்த பொதுச்சேவை அளித்ததற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விருது, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசுக்கு அளிக்கப்பட்டது.

பொதுச்சேவை உத்திரவாத சட்டம் 2010 எனும் புரட்சிகரமான சட்டத்தை இயற்றி, 336 பொதுச் சேவை மையங்களை மாநிலம் முழுவதும் அமைத்து, 1.25 கோடி விண்ணப்பங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து, மக்களை உண்மையாகவே மாநிலத்தின் மன்னர்களாக்கிய சாதனைக்காக, உலகளாவிய இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில்,  “பொதுச்சேவையில் ஊழலைக் கட்டுப்படுத்தி தடுத்தது” எனும் பிரிவில், கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி அவர்களுக்கு இந்த விருது, ஐக்கிய நாடுகள் சபையால் அளிக்கப்படுகிறது.

2011ம் ஆண்டு பதவிக்கு வந்த கேரள முதல்வர், ஆயிரக்கணக்கான பொது மக்களை (தனித் தனியாக), எந்த அதிகாரிகளின் குறுக்கீடுகளும் இல்லாமல், நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வருகிறார்.

அவரது குறைகேட்கும் முகாம்களில், பலமுறை விடிகாலையில் மக்களை சந்திக்கத் துவங்கி, இரவு வரை கூட நிகழ்வு நீடிக்கிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் திறமையாகவும், எளிமையாகவும், அன்றாட அலுவலகளைச் செய்வதும், திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதுமாக, கேரள அரசு நிர்வாகத்தில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் காண முடிகிறது.

இதே போன்ற செயல்பாடுகளை, ராஜஸ்தான், பிகார், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.

கேரள முதலமைச்சருக்கும், கேரள அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துச் சொல்லும் வேளையில், அவர்களையெல்லாம் கண்டு வெகுவாக பொறாமையும் கொள்ளத் தோன்றுகிறது.

இன்றைக்கு மக்களாலும், குறிப்பாக ஊடகங்களாலும் விரிவாகப் பேசப்படும் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு, ஒரு ரூபாய்க்கு இட்டிலியும், மிக மானிய விலையில் மற்ற சில பதார்த்தங்களையும் வழங்கும் தமிழக முதல்வரின் மூளையில் திடீரென்று உதித்த “அம்மா உணவகம்” திட்டத்தை இப்படிப்பட்ட பொதுச்சேவைக்கான அடையாளமாகப் பார்க்க முடியுமா?

கோவில்களில் இலவசமாக பொங்கல் பிரசாதம் அளிக்கும்போது கூட, அதை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். கலைஞர் தொடங்கி வைத்த இலவச தொலைக்காட்சிகளை வாங்க மேட்டுக்குடி மக்கள் கூட கால்கடுக்க வரிசையில் முண்டினார்கள்.

ஜனநாயக நாட்டில் மக்களை அதிகாரப்படுத்துவதன் மூலம் ஊழலைக் களைந்து, நிர்வாகத்தை செம்மையாக நடத்தி, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த உதவுவதுதான் ஆள்பவர்களின் ஆரோக்கியமான செயல்பாடாக இருக்க முடியும்.

இலவச அரிசி, பலசரக்கு, இலவச எரிவாயு, மிக்சி போன்றவற்றை அளித்தது போதாதென்று, 1 ரூபாய்க்கு இட்டிலி விற்கும் அவலம் வேறு எங்கும் காண முடியாது. இலவசம் என்று எதுவும் கிடையாது என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. எல்லாம் உழைக்கும் மக்கள் அளிக்கும் வரிப்பணம்.

கடந்த ஆண்டு, ரூ.25,000 கோடி இலக்கு வைத்தாலும் ரூ.22,000 கோடி வரைதான் டாஸ்மாக் சாராய வருமானம் கிட்டியது. இதுவேகூட மாநில அரசின் சொந்த வருவாயில் 25 விழுக்காடுக்கும் அதிகம். நீதிமன்றங்கள் வலியுறுத்தியும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் போராட்டங்களையும், மாற்று அரசியல் கட்சித்தலைவர்களின் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளையோ, பள்ளி கல்லூரிகளுக்கு மிக அருகில் உள்ள சாராயக் கடைகளையோ கூட அப்புறப்படுத்த அரசு தயாரில்லை.

இந்த சாராய வருவாயில் இருந்து ஒரு சிறு தொகைதான், “அம்மா உணவகம்” எனும் வாய்க்கரிசி. நம் மாநிலத்தில், மக்களுக்கு உண்மையாக நன்மை பயக்கும் நிர்வாகத்தையும், திட்டங்களையும் பற்றி யாருக்கும் கருத்து இல்லை, நம்பிக்கை இல்லை.

மானிய விலை இட்டிலிக்கடை, முடிந்தால் இலவச இட்டிலிக்கடை போன்ற ஜிகினாத் திட்டங்களுக்கே காது கூசும் அளவிற்கு கரவொலி.

தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் மிகக்குறைவு, சிறு தூரங்களுக்குக்கூட அதிகக் கட்டணம். பராமரிப்போ மிக மோசம். எங்கும் வரலாறு காணாத தொடர் மின்வெட்டு. எல்லா துறையினருமே மிக அதிருப்தியில். சாதாரண மக்கள், காய்கறிகளை முகர்ந்து பார்க்கக்கூட அச்சப்படும் அளவுக்கு விண்ணை முட்டும் விலைவாசி, குடிதண்ணீருக்காக அலைக்கழிக்கப்படும் அவலம். எல்லா மட்டத்திலும் ஊழல் குறைந்ததாகத் தெரியவில்லை.

மாவட்டங்களில் இளைஞர்களிடம் அதிக வேலையில்லாத் திண்டாட்டம், சமூகத்தில் அமைதியின்மை, இருட்டறை நிர்வாகம், ஆரோக்கியமான விவாதங்களுக்கு வாய்ப்பில்லாத வகையில் மன்னராட்சி போன்று செயல்படும் சட்ட (ஜால்ரா) மன்றம், அடிமைகளைப் போல செயல்படும் அமைச்சர்கள், வாக்குகள் அளித்து அதிகாரத்தைக் கொடுத்த மக்களை சந்திக்காமல், உளவுத் துறையை மட்டுமே முழுக்க நம்பி எடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்கள் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் கூட அணுகிவிட முடியாத இரும்புக் கோட்டை போன்ற இறுக்கம். இதுதான் கடந்த இரு ஆண்டுகளாக, முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் லட்சணம்.

மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டதால், மிக அதிருப்தியில் இருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை சேகரித்து வெற்றி பெற வேண்டிய நிலையில், “அம்மா உணவகம்” போன்ற திட்டங்கள் கை கொடுக்கும் என்று நம்புகிறார். அவர் வெற்றி பெறக்கூடும். தமிழக அரசியலில் அப்படிப்பட்ட வெற்றிடம் மட்டுமே உள்ளது என்பதுதான் உண்மை. அதிகாரங்களை குவித்து வைத்துள்ள முதல்வரும் அவரது ஆளும் கட்சியும் தன்னிடத்தே வைத்துள்ளது அரசு நிர்வாக அமைப்பு எனும் ராட்சச இயந்திரம்.

அது நினைத்தால், ஒரு சில மாதங்களிலேயே மக்கள் பயன்பாட்டிற்காக ஆயிரம் தரமான பொதுக் கழிப்பிடங்களைக் கட்டி அதனை செம்மையாக நடத்தும் அமைப்புகளை ஏற்படுத்த முடியும்.

அதே ராட்சச இயந்திரத்தைக் கொண்டு ஒரு சில நாட்களிலேயே, இருநூறு இலவச சாப்பாட்டுக் கடைகளைத் திறந்து, ரேசன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி, இட்டிலிகளையும், சம்பாத்திகளையும் பொங்கலையும் ஒரு ரூபாய்க்கு என்ன இலவசமாகவே வாரி வழங்க முடியும்.

இட்டிலியாக இருக்கட்டும், நாளிதழ்களில் அதற்கான முழுப்பக்க விளம்பரங்களாக இருக்கட்டும் எல்லாமே, மக்கள் தலையில்தான் விடிகிறது.

கலைஞர் ஆட்சியில் அவர் முடிவெடுத்து, இயந்திரத்தனமான வேகத்தில், சென்னையின் மையப்பகுதியில் 500 கோடிக்கும் மேல் மக்களின் வரிப்பணத்தை செலவழித்து, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் உழைப்பை இரவும் பகலும் பிழிந்து கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தின் இன்றைய கதி என்ன?

இவைவெல்லாம், ஜனநாயக அமைப்பில் தலைமைப் பதவிக்கு வருபவர்களின் மனதில் சர்வாதிகார எண்ணம் தலை தூக்குவதால் வரும் திட்டங்கள், இந்தப்போக்கு உத்திரப்பிரதேசம் குஜராத் போன்ற சில மாநிலங்களின் தலைவர்களிடையேயும் காண முடிகிறது.

இப்படிப்பட்ட ஜனநாயக சர்வாதிகாரம் துளிர்விட்டு பின்னர் நச்சு மரமாக விழுதுவிட்டு வளர்வதற்கு உரம் சேர்ப்பது சந்தர்ப்பவாத ஊடகங்கள்தான்.

மக்களாட்சியின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை, இன்று, தங்களது தார்மீக ஆடைகளைக் களைந்துவிட்டு, வெட்கமில்லாமல் காட்சியளிக்கின்றன என்றால் மிகையில்லை.

தமிழகத்தின் நாளிதழ்கள், அதிமுக அரசு அளிக்கும் தொடர் விளம்பர வருமானத்திற்காகவோ, அல்லது அவமதிப்பு வழக்குகளுக்கு பயந்தோ, முதல்வரின் ஆளுகையைப் பற்றி குறைந்தபட்ச விமர்சனம் செய்யக்கூட தயாரில்லை.

தமிழக ஊடகங்களின் நம்பகத் தன்மை கேலிக்கு ஆளாகிவிட்டது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. தமிழகத்தின் நீண்ட கால மேம்பாட்டிற்காக யாரும் சிந்திக்கத் தயாரில்லை. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் முயற்சிதான் தமிழக அரசியல் சமூகச் சூழலில் நிலவும் அவலம்.

இந்த அவலம் மாற வேண்டும். இல்லை யென்றால், எல்லோரும் ஜனநாயகப் பார்வையற்றவர்களாகி, தமிழக ஜனநாயக எதிர்காலம் சூனியமாகிவிடும். திமுக, அதிமுக கட்சிகளையும், பிற்போக்கு சாதி அமைப்புகளையும் தவிர்த்து புதிய ஜனநாயகத்திற்கான தலைமைகள் உருவாக வேண்டும். காலம் உருவாக்குமா?

உண்மை நிலையை விளக்கி மக்கள் இயக்கம் கட்டுவது எப்பொழுதையும் விட இப்பொழுது மிகக் கடினமாக உள்ளது.


பாடம் இதழின் மற்ற கட்டுரைகளுக்கு
 நட்புடன்
 அ.நாராயணன்

1 comment:

  1. Chavukaan Extented wholehearted support to Mahindha:Spread RED CARPET to Racist srilankan administrators:SO UNO has GIFTED him with such UGLY HONOUR
    r.k.seethapathi naidu
    pathiplans@sify.com

    ReplyDelete