Thursday, July 19, 2012

JUNE'2012

                            ஆய்வு மனப்பான்மையை நம்மில் வளர்த்தெடுப்போம்!

அன்புத்தோழர்களே!
“மதம், அடிமைப்பட்டவர்களின் இயலாமைச் சத்தம், இரக்கமில்லாத உலகின் இதயம், ஆன்மா வற்ற நிலையின் ஆன்மா. மதம், மக்கள் கூட்டத்திற்கு போதை தரும் கஞ்சா” - இப்படி, 1843ம் ஆண்டு எழுதினார், கார்ல் மார்க்ஸ்.  இந்த நாத்திக வாதத்தை, நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஆத்திகவாதிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், இந்தியா ஒரு மதச் சார்பற்ற (செக் யூலர்) நாடு என்பதும்,  மக்களின் மத நம்பிக்கைகளில் இந்திய அரசு தலையிடக்கூடாது என்பதும், எந்த ஒரு மத நம்பிக்கையையும் வளர்த்தெடுப்பது ஒரு அரசின் வேலையல்ல என்பதும், பள்ளிச் சிறுவர்கள் முதல் பழுத்த அறிஞர்கள் வரை எல்லோரும் அறிந்த, ஒத்துக்கொள்ளக் கூடிய நிலைப்பாடு.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அறிவியல் அணுகுமுறை, மனிதாபிமானம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது என்று அறைகூவல் விடுக்கிறது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 51 அ(ட)ஷரத்து. அது மட்டுமல்ல,  மதச்சார்பின்மை எனும் நிலைப்பாடு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில், 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மதச்சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அரசு, மதம் தொடர்பான எந்தெந்த விஷயங்களில் மட்டும் மூக்கை நுழைக்கலாம், எவற்றில் எல்லாம் எந்த வகையிலும் ஈடுபடக்கூடாது என்பது இன்னும் தெள்ளெத் தெளிவாக விளக்கப்படவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது.

இதனால், மத்திய மாநில அரசுகள், அதிலும், அரசியல் கட்சிகள், மதச்சார்பின்மை நிலையிலிருந்து பிறழ்ந்து, வாக்கு வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவோ, வாக்கு வங்கியைக் கவர்வதற்காகவோ, தனிமனித மத நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் தவறான முடிவுகள் எடுப்பது அதிகரித்து வருகிறது.  இது நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

1992 டிசம்பரில், பாஜக தலைவர் அத்வானியின் கண்டனத்துக்குரிய ரதயாத்திரையைத் தொடர்ந்து, கரசேவர்ககள், பிரச்சனைக்குரிய பாபர் மசூதி வளாகத்தை இடித்துத் தள்ளினர். இந்த மோசமான நிகழ்வை தடுக்கத்தவறிய அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், கடுங் கோபத்தில் இருந்த இஸ்லாமிய மக்களைச் சமாளிக்க ஒரு உத்தியைக் கையாண்டார்.

அதன்படி, 1994ம் ஆண்டு முதல், சவுதி அரேபியாவிற்கு ‘ஹஜ்’ புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு, மத்திய அரசின் மானியத்தை விரிவுபடுத்தி, செயல்படுத்தத் தொடங்கினார். அதனால், 1994 ஆண்டு, ரூ.25 கோடியாக இருந்த மானியம், 2011ம் ஆண்டு, ரூ.685 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 1,25,000 யாத்திரீகர்கள். “ஏர் இந்தியா” விமானங்கள் மூலம், அரசு மானிய உதவியுடன் சென்று வந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது, அரசு நல்லிணக்கப் பயணம் என்ற போர்வையில், நூற்றுக்கணக்கானவர்கள் அதிகார பூர்வமாக இந்த யாத்திரை செல்வபவர்களுடன் ஆண்டுதோறும் சென்று வந்தனர். மிக மோசமான நிர்வாகச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டு கிடக்கும் “ஏர் இந்தியா” அரசு விமான சேவை, இன்றைக்கு நோயாளிப்படுக் கையில் விழ, இவ்வகை மானியங்களும் ஒரு வகையில் காரணம். மத்திய அரசு மட்டுமல்லாது, எல்லா மாநில அரசுகளும் கூட ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் அளிக்கத் துவங்கின.

இது தொடர்பான பொதுநல வழக்கில், இப்பொழுது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை படிப்படியாகக் குறைத்து, 10 ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால், இதற்கு ஒரு விநோத விளக்கத்தை அளித்துள்ளனர் நீதிபதிகள். சுய சம்பாத்தியத்தில் ஹஜ் பயணம் செல்லாமல் மானிய உதவியுடன் புனிதப் பயணம் மேற்கொள்வது குரானின் அறிவுரைக்கு எதிரானது என்று மேற்கோள் காட்டியுள்ளனர் நீதிபதிகள்.

நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தைத்தான் புனித நூலாகக் கருத வேண்டுமே தவிர, மதங்களின் புனித நூல்களை வரையறையாகக் கொண்டு தீர்ப்பு அளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. மேலும், படிப்படியாக என்று 10 ஆண்டுகள் அவகாசம் ஏன் அளிக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.

ஒரு பக்கம், நீதிமன்றம் இவ்விஷயத்தில் மூக்கணாங்கயிறு போட முயலும்போது, மாநில அரசுகள், இவ்வகை மத நம்பிக்கை தொடர்பான யாத்திரைகளுக்கு இஷ்டம் போல மானியங்களை அள்ளி வீசி வருகின்றன.

எல்லா மாநில அரசுகளும் ஏற்கனவே ஹஜ் யாத்திரை மட்டுமல்லாது, இந்துக்கள், கைலாச மானசரோவர் செல்ல மானியங்கள் கொடுத்து வந்தன. இப்பொழுது, மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநில அரசுகளோ பாகிஸ்தான், கம்போடியா ஆகிய அயல்நாடுகளில் உள்ள இந்து புனித இடங்களுக்கு மட்டுமல்லாது,  இலங்கையில் உள்ள இந்துக் கோவில்களுக்கு செல்லவும் மானியம் அளிக்கத் தொடங்கியுள்ளன.

ஆந்திர மாநில அரசு, முதன்முறையாக, யேசுநாதர் பிறந்ததாக நம்பப்படும் இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசெலம் நகருக்கு கிருத்துவர்கள் புனித யாத்திரை செல்ல மானியம் அளிக்கத் தொடங்கியது. இப்பொழுது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆண்டு தோறும் 500 கிருத்துவர்கள் ஜெருசெலம் சென்று வரவும், 250 இந்து யாத்திரிகர்கள், கைலாச மானசரோவர் சென்று வரவும், இன்னொரு 250 யாத்திரகர்கள், நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு சென்று வரவும் மானியங்களை அறிவித்துள்ளார்.

யாருக்குத் தெரியும், அடுத்த ஆண்டு, போப் ஆண்டவரைப் பார்க்க ரோம் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மானியம் அளிக்க அரசு முன்வரலாம்.

மதம், அந்தரங்கமான தனிப்பட்ட நம்பிக்கை. ஒருவருக்கு கைலாசம் சென்று வருவது முக்கிய மாக இருக்கலாம்.  இன்னொருவருக்கு, சபரிமலை சென்று வருவது. மற்ற ஒருவருக்கோ காசி யாத்திரை. யாத்திரை வருபவர்களுக்கு, சாலை வசதிகள், பேருந்து வசதிகள், தங்கும் வசதிகள் செய்து கொடுப்பது அரசின் கடமை.

ஆனால், இப்படி போட்டி போட்டுக் கொண்டு மத யாத்திரைகளுக்கு மானியம் அளிப்பது, நாகரீகமான, முதிர்ந்த, மதச்சார்பற்ற நாட்டு அரசு செய்யக் கூடாத ஒன்று. அரசியல் காரணங்களுக்காக தனிப்பட்ட மத நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக அரசுகளே நடந்து கொள்வது, எதிர்காலத்தில் பல தவறுகள் நடைபெறுவதற்கு தூண்டுதலாக அமைந்து விடும் எனும் அச்சம் எழுகிறது. இது, அரசியலமைப்பு சட்டத்திற்கே வேட்டு வைக்கும் செயல்.  தீர்க்க தரிசனம் கொண்ட ஜனநாயகத் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.

கழிப்பிடம் முதல் பள்ளிக்கூடம் வரை, தன்னிறைவு பெறாத நாட்டில், மூட நம்பிக்கைகளுக்கும், மதச்சடங்குகளுக்கும் சிறிதும் பஞ்சமில்லாத நாட்டில், மதப்பயணங்களுக்கு பொது நிதியில் இருந்து மானியம் அளிப்பது,  வேதனைக்குரிய, ஆரோக்கியமற்ற அணுகுமுறை.

எனினும், சமூக அக்கறை கொண்ட நாம், நமது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துவது போன்றே, அறிவியல் அணுகுமுறை, மனிதாபிமானம், எதையும் கேள்விக்கு உட்படுத்தும் ஆய்வு மனப்பான்மை ஆகியவற்றை, நம்மிடமும், நம் சந்ததியினரிடமும் வளர்த்தெடுத்து மேன்மை அடைவோம்.

முதுவேனில் பருவத்தின் கடுமையை சமாளித்த நாம், அடுத்து வருகிற கார்காலத்துப் பெருங்காற்றில் உற்சாகம் அடைவோம்.

நட்புடன்

அ.நாராயணன்.

No comments:

Post a Comment