Thursday, July 19, 2012

JULY'2012

A.NARAYANAN
                                             ‘‘தமிழ்நாடு விஷன்-2023’’ என்பதா?
                                                                     அல்லது,
                                             ‘‘தமிழ்நாடு விஷம்-2023’’ என்பதா?

அன்புத்தோழர்களே!
கனவுலகில் மிதக்கிறாரா முதல்வர் என்ற தலைப்பில், தமிழ்நாடு விஷன்-2023 பற்றி விமர்சனக் கட்டுரையை ஏப்ரல் மாத இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன, இந்தக் கனவை நனவாக்க வேண்டுமென்றால் எப்படி ஒரு போர்கால அடிப்படையில் அரசும், அதிகாரிகளும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பேசியிருந்தோம்.


இந்த விஷன்-2023ற்கான செயல்திட்டம் ஏதாவது, தமிழக அரசால் மக்களின் பொது விவாதத்திற்காக வெளியிடப்படுமா என்று ஆவலுடன் காத்திருந்ததுதான் மிச்சம். மே மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரிலாவது, இது தொடர்பாக ஆரோக்கிய விவாதங்கள் நடைபெற்றதா என்றால் ஏமாற்றம்தான். 

பின்னர் வந்தது, தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளுக்கான விளம்பரங்கள். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள முக்கிய நாளிதழ்களில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு, மிகப் பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட விளம்பரங்களுக்காக மட்டும், 50 முதல் 75 கோடி ரூபாய் வரை மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக யூகிக்கப்படுகிறது. 


ஜம்மு கஷ்மீர், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களிலுள்ள மக்கள்கூட, 15 நாட்களுக்கு ஜெயலலிதாவை தினமும் நாளிதழ் கள் மூலம் வீட்டு வாசற்படியில் சந்தித்தனர். ஏதோ, பிரதமர் தேர்தலில் ஜெயலலிதா நிற்கப்போகிறாரோ எனும் பிரமையையும், வடமாநில வாசகர்களின் பரிகாசத்தையும் வாங்கியதுதான் மிச்சம். எதற்காக இந்த பிரம்மாண்ட விளம்பரங்கள்? வானளாவிய ‘‘ஈகோ’’வை திருப்திப்படுத்திக் கொள்வதற்கா? எல்லா ஊடகங்களையும் விளம்பரங்கள் மூலம் விலைக்கு வாங்கி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவா?

திமுக ஆட்சியின் தவறுகளை நியாயமான முறையில் சுட்டிக்காட்டத் தவறாத நாளிதழ்கள், இன்றைய தமிழக அரசை தப்பித்தவறி கூட விமர்சிப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட பிரம்மாண்ட விளம்பரங்களைத் தாண்டி, அரசு என்ன செய்கிறது என்பது எதுவும் புரியவில்லை. அரசு செயல்படுகிறதா? நிர்வாகம் நடக்கிறதா? எதுவும் வெளியில் தெரியாது. முதல்வர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் தான் மக்கள் தெரிந்துகொள்ள ஒரேவழி. தப்பித் தவறி கூட, எந்த அமைச்சரும் எதைப் பற்றியும் கருத்தோ, தெளிவுபடுத்தலோ, ‘‘அம்மா’’வை மீறி, பொதுவாக சொல்லிவிட முடியாது. எந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், துறைச்செயலரும் கருத்துக்கூறுவது கிடையாது. அவர்களது வாய் பசைபோட்டு ஒட்டப்பட்டுள்ளது. நன்கு செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றப்படும் வகையில்தான் நிர்வாக மேலாண்மை இருக்கிறது.

அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும், தகவல் பரிமாற்றமும் இல்லாத ஒரு இருட்டறையாகத் தான் தமிழகம் உள்ளது என்றால் மிகையில்லை. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியேற்ற அன்று, ஒவ்வொரு வாரமும், ஊடகங்களை சந்திப்பேன் என்று கூறிய பின்னர், ஒரே ஒரு முறை தான், முதல்வர் ஊடகங்களை சந்தித்துள்ளார்.


மின்சார கட்டணம் முதல் பல அத்தியாவசியங்களின் விலையேற்றத்தால், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை அவலமாகி வருகிறது. அதுவும் வாடகை வீடுகளில் உள்ள குடும்பங்களின் கதி அதோகதிதான். மின் கட்டணத்தை மட்டும் ஏற்றிய தமிழக அரசு, மின்விரையத்தைத் தடுக்கவும், மின்வாரியத்தை சீரமைக்கவும் போதிய நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியவில்லை.


புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தவும், போதிய ஆசிரியர்களை பணியமர்த்தவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? தெரியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தெரிந்து, புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆவதற்குள் இக்கல்வியாண்டே முடிவுக்கு வந்துவிடும்.

இதே போன்ற நிலைதான், அரசுக்கல்லூரிகளிலும். அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் எப்பொழுது நிரப்பப்படும்? பதிவாளர்கள் இல்லாமல், தேர்வுகள் எப்படி நடத்தப்படும்?  அரசுப்பள்ளிகளைப் போன்றே, அரசுக்கல்லூரிகளும் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறதே?

மழை தாமதமாகி, இயற்கை இந்தியாவைப் பழிவாங்கிக்கொண்டிருக்க, அதன் தாக்கம், தமிழகத்தில்தான் அதிகமாகத் தெரியும். விவசாயம் ஏமாற்றிவிட்டால், தமிழகம் நெருக்கடியை சந்திக்கும் நிலை உண்டாகும். பொருளாதார மந்த நிலையாலும், மின்வெட்டினாலும், தமிழக குறுந்தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிவருவதால்,  வேலை வாய்ப்புகளும் சுருங்கிப்போகும் அபாயம் உள்ளது. அதனால், சமூக அமைதி கெட்டு, குற்றங்கள் அதிகரிக்கலாம். பொருளாதார மந்த நிலையோடு, வேளாண்மையும் பாதிப்புக்கு உள்ளாகி, இந்தியாவும், அதில் ஒரு அங்கமான தமிழகமும் நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறது என்றால் மிகையில்லை.

தமிழக அரசு மருத்துவமனைகள், ஏழை மக்களுக்கு உதவும் வகையில், அப்படியொன்றும் ஆரோக்கியமாக இல்லை என்பது தான் தற் போதைய செய்தி. எக்ஸ்ரே எடுப்பதுகூட அங்கு பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது. அதனால், எல்லா மக்களும், தனியார் மருத்துவ மனைகளின் தயவில்தான் உயிர்வாழ்கின்றனர்.

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகள், நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறும் வகையில் இல்லை. சென்னை மாநகரத்தையே எடுத்துக் கொண்டாலும், மாநகர மேயர் ஆர்வமுடன் செயல்பட்டாலும், திடக்கழிவு மேலாண்மையில் குழப்பமான நிலையே நீடிக்கிறது.

சென்னையைத் தாண்டி, மற்ற மாநகராட்சிகளைப் பற்றி பேசவே ஒன்றுமில்லை. பிளாஸ்டிக் உற்பத்தியையும், பயன்பாட்டையும் கட்டுப்படுத் தும் விதத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசின் அறிவிப்பு அப்படியே நின்று போனது. நகரங்களில் உருவாகும் குப்பைகளின் உற்பத்தியைக் குறைப்பதற்கும், அந்தந்த பகுதிகளில் மேலாண்மை செய்வதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லாமல், தமிழகமே ஒரு குப்பைத் தொட்டியாக காட்சியளிக்கிறது.

அன்றைக்கு திமுக என்றால், இன்றைக்கு, அதிமுக அரசியல்வாதிகளின் ராஜ்யம் எல்லா வகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். மணல் கொள்ளையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று இவர்கள் சூளுரைத்தாலும், மணல் கொள்ளையர்கள், எல்லோருடைய ஆசியுடன் செயல்பட்டு வருவது திறந்த ரகசியம். கட்டுமானத் தொழிலுக்கு, மணலுக்கான மாற்று கண்டுபிடித்தாலொழிய இச்சுரண்டல் நின்று விடும் என்று தோன்றவில்லை.

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அதிக நிதி தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதை, நேர்மையற்ற ஊராட்சி உறுப்பினர்களும், அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு ஜாக்பாட் என்று கருதும் அவலம். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் ரூ132 எனும் கூலி உயர்வு என்பது, வேலை செய்யாமலே அதிக பலன் அடைவதற்கான வாய்ப்பை அளித்திருப்பதாக எளிமையான மக்கள் கூட மகிழும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி, அரசின் நல்ல திட்டங்களைக் கூட தவறாகப் பயன்படுத்தும் மனநிலை ஏன் சாதாரண மக்களுக்குத் தோன்றி விட்டது? ஏனென்றால், மக்கள் படிப்படியாக ஜனநாயக அரசியலைக் கற்றறியாமல், அதிலிருந்து விலகும் சூழல் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. அது தான் இலவச அரசியல். 

இலவசங்கள் வினியோகம் மட்டும்தான் தமிழகத்தில் மும்முரமாக நடப்பது தெரிகிறது. இலவங்களை விலையில்லாப்பொருட்கள் என்று கூறத் தொடங்கியிருக்கிறார்கள். விலையில்லா சேலை வேட்டி, டிவி, கிரைண்டர், லேப்டாப், வீடு, அரிசி, மின்சாரம், சமையல் பொட்டலம், தாலி, ஆடு, மாடு என்று படிப்படியாகத் தொடங்கி, விலையில்லாத் திருமணம் எனும் விபரீதத்தில் கொண்டு வந்து, தமிழக மக்களை, குறிப்பாக எளிமையான மக்களை நிறுத்தியிருக்கிறது இன்றைய மலிவான ஆரோக்கியமற்ற அரசியல்.  

குடும்பமும், சுற்றமும் ஆசி வழங்க இரு மனங்கள் ஒரு புதிய பந்தத்திற்காக ஒன்றிணையும் ஒரு குடும்ப நிகழ்வு, திருமணம் என்பது. அதனை, தாலி, புடவை,வேட்டி, சீர்வரிசை உட்பட இலவசமாகக் கொடுத்து, வானளாவிய கட்டவுட்கள் நிறுவி, 1008 இலவசத்திருமணம் எனும் மோசமான நாடகம் அரசாலேயே சமீபத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 

இதன்  நீட்சியாக, இனி மாவட்டங்கள் தோறும் இப்படிப்பட்ட விலையில்லாத் திருமணங்கள் நடத்தப்படலாம். அல்லது, அது அடுத்த தேர்தல் வாக்குறுதி யாகலாம். 

இப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட மக்கள், விலையில்லா மிக்சியையும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதுதான் கவலைக்குரியது. யாரோ நோட்டடிக்கிறார்கள், யாரோ வினியோகிக்கிறார்கள் எனும் விபரீத மனமாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. எது நமது அடிப்படை உரிமை, எது நமது முதன்மைக் கடமை என்பதையும் மறந்து, மக்கள், தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்த விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், உண்மையான வளர்ச்சியும், சமூக மாற்றமும் கை நழுவிப்போய்,  ‘‘தமிழ்நாடு விஷன்-2023’’ என்பது, ‘‘தமிழ்நாடு விஷம்-2023’’ ஆக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

இதில் இருந்து சமூகத்தை விடுவிப்பது எப்படி?. சமூகத்தின் காதலர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தோழமையுடன்
 

                                                                                                 
                                                                            அ.நாராயணன்                                                           

1 comment:

 1. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete