Saturday, August 18, 2012

AUG'2012

                                         மற்றும் ஒரு விடுதலையை நோக்கி...!


அன்புத்தோழர்களே!

A.NARAYANAN
மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து விட்டு, இப்பொழுது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இவ்விதழ். இதழில் பல குறைகள் இருக்கலாம். சில நிறைகளும் இருக்கலாம். குறைகளை சுட்டிக் காட்டி, சீர் செய்வதற்கு வாய்ப்பளியுங்கள். நிறைகளை வரவேற்று, அவற்றின் நன்மை பலருக்கும் சென்று அடைய பங்காற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் பள்ளிச் சிறுமி, பள்ளிப்பேருந்து ஓட்டை வழியாக விழுந்து உடல் நசுங்கி இறந்த நிகழ்வு, உயர்நீதிமன்றம் முதல் தமிழக முதல்வர் வரை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. உடனடியாக மாவட்டங்கள் தோறும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பள்ளித் தாளாளர், போக்குவரத்து அலுவலர், ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் பல குழந்தைகள் உடல் கருகி இறந்த பின்னர், அரசு நிர்வாகம் அவசர கதியில் மாநிலம் முழுவதும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.


அப்பொழுதும் அப்பள்ளியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஓர் எழுச்சியை ஏற்படுத்திவிட்டு அடங்கியது அந்நிகழ்வு. இவையெல்லாம் விபத்துக்கள் அல்ல, கொலை என்று பலர் உணர்ச்சி வசப்பட்டு கூவுகின்றனர். பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது சிறுமிக்கு ஏற்பட்ட மோசமான முடிவு.


கும்பகோணத்தில், ஒரு குறுகலான நெருக்கடியான கட்டிடத்தில் அங்கீகாரம் பெறாமல் நடந்த தனியார் பள்ளியில் நடந்த விபத்தானாலும், இப்பொழுது சிறுமிக்கு நேர்ந்த விபத்தானாலும், இவை ஏதோ அரசு ஊழியர்களின் ஊழலாலும், தனியார் பள்ளி நிர்வாகிகளின் அலட்சியத்தாலும் நடந்த சம்பவங்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது. அதனை எல்லோரும் நம்பி ஏற்றுக் கொள்கிறோம். ஊழலுக்கு இதில் பங்குண்டு. நிர்வாகிகளின் கவனக்குறைவும் காரணம்.


ஆயினும் அதையும் தாண்டி, கடந்த பல ஆண்டுகளாக சீரழிந்து, சிதைந்து, சின்னா பின்னமாகிக்கிடக்கும், குறிக்கோளற்ற கல்விக் கொள்கையே முதன்மைக் காரணம் என்று நாம் அடையாளம் காணத் தவறி விடுகிறோம்.


நமது அரசுகள், பள்ளிக்கல்வித் தளத்தை பொதுப்பள்ளியாகவும், அருகாமைப் பள்ளியாகவும் மாற்றிவிட்டால், குழந்தைகள் ஏன் வேன்களிலும், பஸ்களிலும், ஆட்டோக்களிலும் நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளியை அடைய வேண்டும்?


கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்ளையாக நடைமுறையில் ஆக்கப்பட்டுவிட்டது. பள்ளிப் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது போதாதென்று, ஷீ, டை, யூனிஃபார்ம், சிறப்பு வகுப்புகள், மாலை டீயூஷன் வகுப்புகள் மட்டுமல்லாது பள்ளிப் போக்குவரத்துச் செலவுக்கும், கணிசமான நேரமும், பணமும் பெற்றோரால் செலவு செய்யப்படும் மூடத்தனமான சூழல், நகரமானாலும், குக்கிராமமானாலும், ஏற்படுத்தப்பட்டு விட்டது.


கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தும், அச்சட்டம் எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தவில்லையோ என்று சந்தேகம் எழுகிறது. இந்த ஆண்டு கூட, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து அதிக மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது.


ஒன்றாம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு ஆகியவற்றில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடை நிறுத்தம் ஆகியிருக்கிறார்கள் அல்லது அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அவர்களது பெற்றோரால் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவின மாணவருக்கான 25% ஒதுக்கீடு என்பதும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. “கல்வி உரிமை” என்ற கோணத்தில் புரிந்து கொள்ள மக்கள் இன்னும் தயாராக இல்லை. தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர் காலம் கிடைக்கும் என்ற நப்பாசையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பெரும்பாலும் சமரசம் செய்து கொள்ளவே பெற்றோர் விரும்புகிறார்கள்.


அரசும், அதன் அமைப்புகளும், மக்களிடம், தரமான கட்டாயக்கல்வி என்பது குடிமக்களாகிய உங்களது குழந்தைகளின் உரிமை, அதனைத் தருவது எங்கள் கடமை என்று பரப்புரை செய்யப் போவதில்லை.


சர்வ சிக்ஷா அபயன் (SSA) மூலம் கொட்டப்படும் கோடிகள், ஊழலில் கொள்ளை போவதாகச் செய்திகள் வருகின்றன. அரசு வேலை என்பது மக்களுக்கு சேவை அளிப்பதற்கு அல்ல, மாறாக, கை நிறைய சம்பளம், வேலைப் பாதுகாப்பு, முடிந்த வரையில் குறுக்கு வழியில் மேலும் ஆதாயம் என்பதாக நடைமுறையாகிவிட்டது- அதனால்தான், அரசு வேலைக்கு விண்ணப்பங்கள், கோடிகளில் விற்பனையாகின்றன.


அரசு வேலை கிடைக்குமென்றால் லட்சங்களை லஞ்சமாக அளிக்க யாரும் அஞ்சுவதில்லை. இதைவிடக் கேவலமாக ஒரு சமூகம் மாற்றம் காண முடியாது. அதல பாதாளத்தில் ஒட்டு மொத்தமாக வீழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு இயந்திரத்தில் காணப்படும் பலதரப்பட்ட ஊழல்களையும், சுணக்கத்தையும் களையெடுத்து, சாதாரண மக்கள் அதிகாரப்படுத்தப்படும் போது, படிப்படியாக, நம் சமூகத்தை மீட்டெடுக்க இயலும்.


இன்று இந்தியாவின் சில மாநிலங்களில் இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இப்படி கரைபுரண்டு ஓடும் ஊழலைத் தடுப்பதற்கும், மக்களை முதன் மைப்படுத்தி அரசு நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்வதற்கும் பல தளங்களில் செயல்பட வேண்டியுள்ளது, வலியுறுத்த வேண்டியுள்ளது, அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. எவையெல்லாம் முதலில் அவசியம் என்று சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அந்த விதத்தில் இம்மாத பாடம் இதழ், ஊழல் ஒழிப்பு இதழாக அமைந்துள்ளது. படித்துப்பாருங்கள்.


கருத்து உருவாக்க முன் வாருங்கள். சிந்திப்போம். சீரிய செயலாற்றுவோம். எல்லோரும் இணைந்து மற்றொரு ஆகஸ்ட் பதினைந்தைத் தாண்டி பயணிப்போம்.


மற்றுமொரு விடுதலையை நோக்கி, விடிவெள்ளியைத்தேடி.


 புதிய நம்பிக்கையுடன்
 


அ.நாராயணன்

Thursday, July 19, 2012

JULY'2012

A.NARAYANAN
                                             ‘‘தமிழ்நாடு விஷன்-2023’’ என்பதா?
                                                                     அல்லது,
                                             ‘‘தமிழ்நாடு விஷம்-2023’’ என்பதா?

அன்புத்தோழர்களே!
கனவுலகில் மிதக்கிறாரா முதல்வர் என்ற தலைப்பில், தமிழ்நாடு விஷன்-2023 பற்றி விமர்சனக் கட்டுரையை ஏப்ரல் மாத இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன, இந்தக் கனவை நனவாக்க வேண்டுமென்றால் எப்படி ஒரு போர்கால அடிப்படையில் அரசும், அதிகாரிகளும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பேசியிருந்தோம்.


இந்த விஷன்-2023ற்கான செயல்திட்டம் ஏதாவது, தமிழக அரசால் மக்களின் பொது விவாதத்திற்காக வெளியிடப்படுமா என்று ஆவலுடன் காத்திருந்ததுதான் மிச்சம். மே மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரிலாவது, இது தொடர்பாக ஆரோக்கிய விவாதங்கள் நடைபெற்றதா என்றால் ஏமாற்றம்தான். 

பின்னர் வந்தது, தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளுக்கான விளம்பரங்கள். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள முக்கிய நாளிதழ்களில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு, மிகப் பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட விளம்பரங்களுக்காக மட்டும், 50 முதல் 75 கோடி ரூபாய் வரை மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக யூகிக்கப்படுகிறது. 


ஜம்மு கஷ்மீர், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களிலுள்ள மக்கள்கூட, 15 நாட்களுக்கு ஜெயலலிதாவை தினமும் நாளிதழ் கள் மூலம் வீட்டு வாசற்படியில் சந்தித்தனர். ஏதோ, பிரதமர் தேர்தலில் ஜெயலலிதா நிற்கப்போகிறாரோ எனும் பிரமையையும், வடமாநில வாசகர்களின் பரிகாசத்தையும் வாங்கியதுதான் மிச்சம். எதற்காக இந்த பிரம்மாண்ட விளம்பரங்கள்? வானளாவிய ‘‘ஈகோ’’வை திருப்திப்படுத்திக் கொள்வதற்கா? எல்லா ஊடகங்களையும் விளம்பரங்கள் மூலம் விலைக்கு வாங்கி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவா?

திமுக ஆட்சியின் தவறுகளை நியாயமான முறையில் சுட்டிக்காட்டத் தவறாத நாளிதழ்கள், இன்றைய தமிழக அரசை தப்பித்தவறி கூட விமர்சிப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட பிரம்மாண்ட விளம்பரங்களைத் தாண்டி, அரசு என்ன செய்கிறது என்பது எதுவும் புரியவில்லை. அரசு செயல்படுகிறதா? நிர்வாகம் நடக்கிறதா? எதுவும் வெளியில் தெரியாது. முதல்வர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் தான் மக்கள் தெரிந்துகொள்ள ஒரேவழி. தப்பித் தவறி கூட, எந்த அமைச்சரும் எதைப் பற்றியும் கருத்தோ, தெளிவுபடுத்தலோ, ‘‘அம்மா’’வை மீறி, பொதுவாக சொல்லிவிட முடியாது. எந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், துறைச்செயலரும் கருத்துக்கூறுவது கிடையாது. அவர்களது வாய் பசைபோட்டு ஒட்டப்பட்டுள்ளது. நன்கு செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றப்படும் வகையில்தான் நிர்வாக மேலாண்மை இருக்கிறது.

அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும், தகவல் பரிமாற்றமும் இல்லாத ஒரு இருட்டறையாகத் தான் தமிழகம் உள்ளது என்றால் மிகையில்லை. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியேற்ற அன்று, ஒவ்வொரு வாரமும், ஊடகங்களை சந்திப்பேன் என்று கூறிய பின்னர், ஒரே ஒரு முறை தான், முதல்வர் ஊடகங்களை சந்தித்துள்ளார்.


மின்சார கட்டணம் முதல் பல அத்தியாவசியங்களின் விலையேற்றத்தால், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை அவலமாகி வருகிறது. அதுவும் வாடகை வீடுகளில் உள்ள குடும்பங்களின் கதி அதோகதிதான். மின் கட்டணத்தை மட்டும் ஏற்றிய தமிழக அரசு, மின்விரையத்தைத் தடுக்கவும், மின்வாரியத்தை சீரமைக்கவும் போதிய நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியவில்லை.


புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தவும், போதிய ஆசிரியர்களை பணியமர்த்தவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? தெரியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தெரிந்து, புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆவதற்குள் இக்கல்வியாண்டே முடிவுக்கு வந்துவிடும்.

இதே போன்ற நிலைதான், அரசுக்கல்லூரிகளிலும். அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் எப்பொழுது நிரப்பப்படும்? பதிவாளர்கள் இல்லாமல், தேர்வுகள் எப்படி நடத்தப்படும்?  அரசுப்பள்ளிகளைப் போன்றே, அரசுக்கல்லூரிகளும் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறதே?

மழை தாமதமாகி, இயற்கை இந்தியாவைப் பழிவாங்கிக்கொண்டிருக்க, அதன் தாக்கம், தமிழகத்தில்தான் அதிகமாகத் தெரியும். விவசாயம் ஏமாற்றிவிட்டால், தமிழகம் நெருக்கடியை சந்திக்கும் நிலை உண்டாகும். பொருளாதார மந்த நிலையாலும், மின்வெட்டினாலும், தமிழக குறுந்தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிவருவதால்,  வேலை வாய்ப்புகளும் சுருங்கிப்போகும் அபாயம் உள்ளது. அதனால், சமூக அமைதி கெட்டு, குற்றங்கள் அதிகரிக்கலாம். பொருளாதார மந்த நிலையோடு, வேளாண்மையும் பாதிப்புக்கு உள்ளாகி, இந்தியாவும், அதில் ஒரு அங்கமான தமிழகமும் நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறது என்றால் மிகையில்லை.

தமிழக அரசு மருத்துவமனைகள், ஏழை மக்களுக்கு உதவும் வகையில், அப்படியொன்றும் ஆரோக்கியமாக இல்லை என்பது தான் தற் போதைய செய்தி. எக்ஸ்ரே எடுப்பதுகூட அங்கு பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது. அதனால், எல்லா மக்களும், தனியார் மருத்துவ மனைகளின் தயவில்தான் உயிர்வாழ்கின்றனர்.

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், மாநகராட்சிகளும், நகராட்சிகளும் எடுக்கும் நடவடிக்கைகள், நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறும் வகையில் இல்லை. சென்னை மாநகரத்தையே எடுத்துக் கொண்டாலும், மாநகர மேயர் ஆர்வமுடன் செயல்பட்டாலும், திடக்கழிவு மேலாண்மையில் குழப்பமான நிலையே நீடிக்கிறது.

சென்னையைத் தாண்டி, மற்ற மாநகராட்சிகளைப் பற்றி பேசவே ஒன்றுமில்லை. பிளாஸ்டிக் உற்பத்தியையும், பயன்பாட்டையும் கட்டுப்படுத் தும் விதத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற அரசின் அறிவிப்பு அப்படியே நின்று போனது. நகரங்களில் உருவாகும் குப்பைகளின் உற்பத்தியைக் குறைப்பதற்கும், அந்தந்த பகுதிகளில் மேலாண்மை செய்வதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லாமல், தமிழகமே ஒரு குப்பைத் தொட்டியாக காட்சியளிக்கிறது.

அன்றைக்கு திமுக என்றால், இன்றைக்கு, அதிமுக அரசியல்வாதிகளின் ராஜ்யம் எல்லா வகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். மணல் கொள்ளையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று இவர்கள் சூளுரைத்தாலும், மணல் கொள்ளையர்கள், எல்லோருடைய ஆசியுடன் செயல்பட்டு வருவது திறந்த ரகசியம். கட்டுமானத் தொழிலுக்கு, மணலுக்கான மாற்று கண்டுபிடித்தாலொழிய இச்சுரண்டல் நின்று விடும் என்று தோன்றவில்லை.

100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அதிக நிதி தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதை, நேர்மையற்ற ஊராட்சி உறுப்பினர்களும், அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு ஜாக்பாட் என்று கருதும் அவலம். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் ரூ132 எனும் கூலி உயர்வு என்பது, வேலை செய்யாமலே அதிக பலன் அடைவதற்கான வாய்ப்பை அளித்திருப்பதாக எளிமையான மக்கள் கூட மகிழும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி, அரசின் நல்ல திட்டங்களைக் கூட தவறாகப் பயன்படுத்தும் மனநிலை ஏன் சாதாரண மக்களுக்குத் தோன்றி விட்டது? ஏனென்றால், மக்கள் படிப்படியாக ஜனநாயக அரசியலைக் கற்றறியாமல், அதிலிருந்து விலகும் சூழல் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. அது தான் இலவச அரசியல். 

இலவசங்கள் வினியோகம் மட்டும்தான் தமிழகத்தில் மும்முரமாக நடப்பது தெரிகிறது. இலவங்களை விலையில்லாப்பொருட்கள் என்று கூறத் தொடங்கியிருக்கிறார்கள். விலையில்லா சேலை வேட்டி, டிவி, கிரைண்டர், லேப்டாப், வீடு, அரிசி, மின்சாரம், சமையல் பொட்டலம், தாலி, ஆடு, மாடு என்று படிப்படியாகத் தொடங்கி, விலையில்லாத் திருமணம் எனும் விபரீதத்தில் கொண்டு வந்து, தமிழக மக்களை, குறிப்பாக எளிமையான மக்களை நிறுத்தியிருக்கிறது இன்றைய மலிவான ஆரோக்கியமற்ற அரசியல்.  

குடும்பமும், சுற்றமும் ஆசி வழங்க இரு மனங்கள் ஒரு புதிய பந்தத்திற்காக ஒன்றிணையும் ஒரு குடும்ப நிகழ்வு, திருமணம் என்பது. அதனை, தாலி, புடவை,வேட்டி, சீர்வரிசை உட்பட இலவசமாகக் கொடுத்து, வானளாவிய கட்டவுட்கள் நிறுவி, 1008 இலவசத்திருமணம் எனும் மோசமான நாடகம் அரசாலேயே சமீபத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 

இதன்  நீட்சியாக, இனி மாவட்டங்கள் தோறும் இப்படிப்பட்ட விலையில்லாத் திருமணங்கள் நடத்தப்படலாம். அல்லது, அது அடுத்த தேர்தல் வாக்குறுதி யாகலாம். 

இப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட மக்கள், விலையில்லா மிக்சியையும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதுதான் கவலைக்குரியது. யாரோ நோட்டடிக்கிறார்கள், யாரோ வினியோகிக்கிறார்கள் எனும் விபரீத மனமாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. எது நமது அடிப்படை உரிமை, எது நமது முதன்மைக் கடமை என்பதையும் மறந்து, மக்கள், தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்த விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், உண்மையான வளர்ச்சியும், சமூக மாற்றமும் கை நழுவிப்போய்,  ‘‘தமிழ்நாடு விஷன்-2023’’ என்பது, ‘‘தமிழ்நாடு விஷம்-2023’’ ஆக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

இதில் இருந்து சமூகத்தை விடுவிப்பது எப்படி?. சமூகத்தின் காதலர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தோழமையுடன்
 

                                                                                                 
                                                                            அ.நாராயணன்                                                           

JUNE'2012

                            ஆய்வு மனப்பான்மையை நம்மில் வளர்த்தெடுப்போம்!

அன்புத்தோழர்களே!
“மதம், அடிமைப்பட்டவர்களின் இயலாமைச் சத்தம், இரக்கமில்லாத உலகின் இதயம், ஆன்மா வற்ற நிலையின் ஆன்மா. மதம், மக்கள் கூட்டத்திற்கு போதை தரும் கஞ்சா” - இப்படி, 1843ம் ஆண்டு எழுதினார், கார்ல் மார்க்ஸ்.  இந்த நாத்திக வாதத்தை, நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஆத்திகவாதிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், இந்தியா ஒரு மதச் சார்பற்ற (செக் யூலர்) நாடு என்பதும்,  மக்களின் மத நம்பிக்கைகளில் இந்திய அரசு தலையிடக்கூடாது என்பதும், எந்த ஒரு மத நம்பிக்கையையும் வளர்த்தெடுப்பது ஒரு அரசின் வேலையல்ல என்பதும், பள்ளிச் சிறுவர்கள் முதல் பழுத்த அறிஞர்கள் வரை எல்லோரும் அறிந்த, ஒத்துக்கொள்ளக் கூடிய நிலைப்பாடு.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அறிவியல் அணுகுமுறை, மனிதாபிமானம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது என்று அறைகூவல் விடுக்கிறது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 51 அ(ட)ஷரத்து. அது மட்டுமல்ல,  மதச்சார்பின்மை எனும் நிலைப்பாடு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில், 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மதச்சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அரசு, மதம் தொடர்பான எந்தெந்த விஷயங்களில் மட்டும் மூக்கை நுழைக்கலாம், எவற்றில் எல்லாம் எந்த வகையிலும் ஈடுபடக்கூடாது என்பது இன்னும் தெள்ளெத் தெளிவாக விளக்கப்படவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது.

இதனால், மத்திய மாநில அரசுகள், அதிலும், அரசியல் கட்சிகள், மதச்சார்பின்மை நிலையிலிருந்து பிறழ்ந்து, வாக்கு வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவோ, வாக்கு வங்கியைக் கவர்வதற்காகவோ, தனிமனித மத நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் தவறான முடிவுகள் எடுப்பது அதிகரித்து வருகிறது.  இது நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

1992 டிசம்பரில், பாஜக தலைவர் அத்வானியின் கண்டனத்துக்குரிய ரதயாத்திரையைத் தொடர்ந்து, கரசேவர்ககள், பிரச்சனைக்குரிய பாபர் மசூதி வளாகத்தை இடித்துத் தள்ளினர். இந்த மோசமான நிகழ்வை தடுக்கத்தவறிய அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், கடுங் கோபத்தில் இருந்த இஸ்லாமிய மக்களைச் சமாளிக்க ஒரு உத்தியைக் கையாண்டார்.

அதன்படி, 1994ம் ஆண்டு முதல், சவுதி அரேபியாவிற்கு ‘ஹஜ்’ புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு, மத்திய அரசின் மானியத்தை விரிவுபடுத்தி, செயல்படுத்தத் தொடங்கினார். அதனால், 1994 ஆண்டு, ரூ.25 கோடியாக இருந்த மானியம், 2011ம் ஆண்டு, ரூ.685 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 1,25,000 யாத்திரீகர்கள். “ஏர் இந்தியா” விமானங்கள் மூலம், அரசு மானிய உதவியுடன் சென்று வந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது, அரசு நல்லிணக்கப் பயணம் என்ற போர்வையில், நூற்றுக்கணக்கானவர்கள் அதிகார பூர்வமாக இந்த யாத்திரை செல்வபவர்களுடன் ஆண்டுதோறும் சென்று வந்தனர். மிக மோசமான நிர்வாகச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டு கிடக்கும் “ஏர் இந்தியா” அரசு விமான சேவை, இன்றைக்கு நோயாளிப்படுக் கையில் விழ, இவ்வகை மானியங்களும் ஒரு வகையில் காரணம். மத்திய அரசு மட்டுமல்லாது, எல்லா மாநில அரசுகளும் கூட ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் அளிக்கத் துவங்கின.

இது தொடர்பான பொதுநல வழக்கில், இப்பொழுது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை படிப்படியாகக் குறைத்து, 10 ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால், இதற்கு ஒரு விநோத விளக்கத்தை அளித்துள்ளனர் நீதிபதிகள். சுய சம்பாத்தியத்தில் ஹஜ் பயணம் செல்லாமல் மானிய உதவியுடன் புனிதப் பயணம் மேற்கொள்வது குரானின் அறிவுரைக்கு எதிரானது என்று மேற்கோள் காட்டியுள்ளனர் நீதிபதிகள்.

நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தைத்தான் புனித நூலாகக் கருத வேண்டுமே தவிர, மதங்களின் புனித நூல்களை வரையறையாகக் கொண்டு தீர்ப்பு அளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. மேலும், படிப்படியாக என்று 10 ஆண்டுகள் அவகாசம் ஏன் அளிக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.

ஒரு பக்கம், நீதிமன்றம் இவ்விஷயத்தில் மூக்கணாங்கயிறு போட முயலும்போது, மாநில அரசுகள், இவ்வகை மத நம்பிக்கை தொடர்பான யாத்திரைகளுக்கு இஷ்டம் போல மானியங்களை அள்ளி வீசி வருகின்றன.

எல்லா மாநில அரசுகளும் ஏற்கனவே ஹஜ் யாத்திரை மட்டுமல்லாது, இந்துக்கள், கைலாச மானசரோவர் செல்ல மானியங்கள் கொடுத்து வந்தன. இப்பொழுது, மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநில அரசுகளோ பாகிஸ்தான், கம்போடியா ஆகிய அயல்நாடுகளில் உள்ள இந்து புனித இடங்களுக்கு மட்டுமல்லாது,  இலங்கையில் உள்ள இந்துக் கோவில்களுக்கு செல்லவும் மானியம் அளிக்கத் தொடங்கியுள்ளன.

ஆந்திர மாநில அரசு, முதன்முறையாக, யேசுநாதர் பிறந்ததாக நம்பப்படும் இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசெலம் நகருக்கு கிருத்துவர்கள் புனித யாத்திரை செல்ல மானியம் அளிக்கத் தொடங்கியது. இப்பொழுது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆண்டு தோறும் 500 கிருத்துவர்கள் ஜெருசெலம் சென்று வரவும், 250 இந்து யாத்திரிகர்கள், கைலாச மானசரோவர் சென்று வரவும், இன்னொரு 250 யாத்திரகர்கள், நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு சென்று வரவும் மானியங்களை அறிவித்துள்ளார்.

யாருக்குத் தெரியும், அடுத்த ஆண்டு, போப் ஆண்டவரைப் பார்க்க ரோம் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மானியம் அளிக்க அரசு முன்வரலாம்.

மதம், அந்தரங்கமான தனிப்பட்ட நம்பிக்கை. ஒருவருக்கு கைலாசம் சென்று வருவது முக்கிய மாக இருக்கலாம்.  இன்னொருவருக்கு, சபரிமலை சென்று வருவது. மற்ற ஒருவருக்கோ காசி யாத்திரை. யாத்திரை வருபவர்களுக்கு, சாலை வசதிகள், பேருந்து வசதிகள், தங்கும் வசதிகள் செய்து கொடுப்பது அரசின் கடமை.

ஆனால், இப்படி போட்டி போட்டுக் கொண்டு மத யாத்திரைகளுக்கு மானியம் அளிப்பது, நாகரீகமான, முதிர்ந்த, மதச்சார்பற்ற நாட்டு அரசு செய்யக் கூடாத ஒன்று. அரசியல் காரணங்களுக்காக தனிப்பட்ட மத நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக அரசுகளே நடந்து கொள்வது, எதிர்காலத்தில் பல தவறுகள் நடைபெறுவதற்கு தூண்டுதலாக அமைந்து விடும் எனும் அச்சம் எழுகிறது. இது, அரசியலமைப்பு சட்டத்திற்கே வேட்டு வைக்கும் செயல்.  தீர்க்க தரிசனம் கொண்ட ஜனநாயகத் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.

கழிப்பிடம் முதல் பள்ளிக்கூடம் வரை, தன்னிறைவு பெறாத நாட்டில், மூட நம்பிக்கைகளுக்கும், மதச்சடங்குகளுக்கும் சிறிதும் பஞ்சமில்லாத நாட்டில், மதப்பயணங்களுக்கு பொது நிதியில் இருந்து மானியம் அளிப்பது,  வேதனைக்குரிய, ஆரோக்கியமற்ற அணுகுமுறை.

எனினும், சமூக அக்கறை கொண்ட நாம், நமது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துவது போன்றே, அறிவியல் அணுகுமுறை, மனிதாபிமானம், எதையும் கேள்விக்கு உட்படுத்தும் ஆய்வு மனப்பான்மை ஆகியவற்றை, நம்மிடமும், நம் சந்ததியினரிடமும் வளர்த்தெடுத்து மேன்மை அடைவோம்.

முதுவேனில் பருவத்தின் கடுமையை சமாளித்த நாம், அடுத்து வருகிற கார்காலத்துப் பெருங்காற்றில் உற்சாகம் அடைவோம்.

நட்புடன்

அ.நாராயணன்.

Saturday, May 5, 2012

MAY'12


                                     படித்தவன், சூதும் வாதும் செய்தால்,
                                     அய்யோன்னு கவிழ்த்துவிடுவான்...
தோழர்களே,


கடந்த இதழில் வெளிவந்த தமிழக முதல்வரின் விஷன்-2023 பற்றிய விமர்சனக் கட்டுரையில், தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது பற்றி எழுதியிருந்தேன். எழுதிய நேரமோ என்னவோ, அடுத்த வாரமே மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது. கிட்டத்தட்ட ஓராண்டாக காலியாக இருந்த பதவிக்கு, சென்னை எதிராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்த கல்யாணி மதிவாணன் என்பவரை நியமித்து, வெற்றிடத்தை நிரப்பியுள்ளார் தமிழக கவர்னர்.
கல்யாணி மதிவாணன்

புதிய துணைவேந்தர், திறமையாக நிர்வகித்து, பல்கலைக்கழகத்தை சிறப்பான நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடும். லஞ்சம், ஊழலை ஓரளவிற் காவது ஒழித்து, நல்ல பெயரெடுக்கக் கூடும். மறுப்பதற்கில்லை. ஆயினும், அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, மொக்கையான, அப்பட்டமான அரசியல் தலையீடு தவிர வேறெதுவும் இல்லை என்பது உச்சி வெயில் சூரியன் போன்று கண்களைக் கூச வைக்கிறது.
 
கடந்த திமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவிகள் என்பது, அதிக விலை கொடுத்துவாங்கக் கூடிய ஒன்றாக இருந்தது என்பது எல்லோருமே அறிந்த ஒன்று. வாரியங்களுக்கான சேர்மன் பதவிகளில், அரசியலும், பணமும் எப்படி விளையாடினவோ, அவை போன்றே, துணைவேந்தர் பதவிகள் எல்லாம் கிட்டத்தட்ட ஏலம் விடப் பட்டன. அதிக ஏலம் கொடுத்து வாங் கியவர்கள், பதவியைப் பயன்படுத்தி நல்ல அறுவடை செய்தார்கள். பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் பதவிகள் எல்லாவற்றுக்கும், துணைவேந்தர்களால்,10 லட்சம் முதல் 25 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக வெளிப்படை யாகவே பேசப்பட்டது.

இப்பொழுது, மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களில் ஊழல்புகார்கள் எழுந்துள்ளன. காவல்துறையின் ஊழல்தடுப்புப் பிரிவினர், சில பல்கலைக்கழகங்களில், ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவ்விசாரணைகள் எல்லாம், பின்னர் சமரசமாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின், முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் என்பவர் மீது தொடரப்பட்ட வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. நீர்த்துப் போகச் செய்யப்பட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது.

முன்பே பல முறை எடுத்துரைத்தது போல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, மனிதவள மேம்பாடும், மனித மேம்பாடும் மட்டுமே உண்மையான அளவுகோளாக இருக்கமுடியும். இவற்றை அளிப்பதில், பல்கலைக் கழகங்கள்தான் முதன்மையாக இருக்க முடியும். உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம், தங்கள் பல்கலைக்கழகங்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்து, போற்றிப் பாதுகாக்கின்றன.

அமெரிக்காவிலும், ஐரோப்பா கண்டத்திலும், நாட்டின் அதிபரை விட, பல்கலைக்கழக பேராசிரியருக்குத் தான் அதிக மதிப்பு, மரியாதை எல்லாம். மிகச்சிறிய நாடான சிங்கப்பூர், உலகளவிற்கு வளர்ந்ததற்கு அந்நாட்டின் சிறந்த பள்ளிக்கல்வியும், அதற்கு ஏற்ற பல்கலைக் கழகங்களுமே காரணம். இங்கு எல்லாம், திறமைக்கு, ஆய்வுக்கு, அறிவுக்கு, துணிவுக்கு, பகுத்தறிவுக்கு, நூதனத்திற்கு, நேர்மைக்கு மட்டுமே இடம் உண்டு. அது மட்டுமல்லாது, அரசியல் தலையீடு அறவே இல்லாத, தன்னிச்சையாக செயல்படும், அதே சமயம், மிகத் தெளிவான சட்டதிட்டங்களும், வரையரைகளும் கொண்ட அமைப்புகளாக அவை உள்ளன. அதனால், அங்கு வரும் பேராசிரியர்களும், அவர்கள் உருவாக்கும் மாணவர்களும் மிகச்சிறந்து விளங்குகிறார்கள் என்பதில் வியப்பில்லை.


இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், உலக அளவில் அல்ல, ஆசிய அளவில் கூட, மற்ற நாடுகளுக்கு அருகில் வர முடியாத நிலை உள்ளது. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களோ, இந்திய அளவில் நாளுக்கு நாள் பின்தங்கி வருகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் கூட, ஒரு பெரிய பாலிடெக்னிக் போலத்தான் செயல்படுகிறது. தமிழகத்தின் எல்லாப் பல்கலைக் கழகங்களும், கழுதை தேய்ந்து கரப்பான் பூச்சியான கதையாகி வருகின்றன. அதிக சம்பளம், அதிக ஊழல், அதிக மாணவர்கள், அவர்களுக்காக அச்சடிக்கப்படும் அதிக சான்றிதழ்கள் என்று எதோ காலத்தை ஓட்டி வருகின்றன.

பல்கலைக்கழக மானியக்குழு (UGC), துணை வேந்தர் பதவிகளுக்கான அளவீடுகளை அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை இன்று வரை சட்டை செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். தமிழக பல்கலைக்கழகங்களில் ஊழல் மலிந்த தற்கு, இன்றைய துணைவேந்தர்களே காரணம் என்று கூறியுள்ளார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இன்றைய தமிழ் மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினருமான முனைவர் பாலகுருசாமி. 

அதுமட்டுமல்லாது, இப்பொழுது, தேடும் குழுவிடம் (Search Committee), துணைவேந்தர் பதவிகளுக்கான எந்த ஒரு அளவீடும் இல்லை என்று கூறியுள்ள பாலகுருசாமி, ஏப்ரல் முதல் வாரத்தில், தமிழக கவர்னருக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில், இனி துணைவேந்தர் பதவிக்கு வரும் விண்ணப்பங்களைத் தெரிவு செய்வதற்கு, அதற்கான தேடும் குழுவிற்கு, சில வழிமுறைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

“துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முனைவர், குறைந்தது 15 ஆண்டுகளாவது, பேராசிரியராகவும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்க வேண்டும், மதிப்பு மிக்க கல்லூரியின் முதல்வராகவோ, டீனாகவோ பணி புரிந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலும், உலக அளவிலும் செமினார்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும், உயர் கல்வியில் சிறந்த தலைமைத்துவத்தை செய்து காட்டியிருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது, முனைவர் பட்டத்திற்கான மாணவர்களை வழி நடத்தியிருக்க வேண்டும், கல்விக்குழுக்கள், பெண்கள் மேம்பாடு, பாடத்திட்டம் வடிவமைப்பு, மாணவர் திறனாய்வு, ஆலோசனை ஆகியவற்றில் பங்கு கொண்டிருக்க வேண்டும்.

தொழில் நுட்பம், நிர்வாகம், தலைமைப் பண்பு ஆகியவற்றில் சிறப்பானவராக மட்டுமல்லாது, தொழில் நுட்பத்தை வரவேற்பவராகவும், நிதியை சரியாகப் பயன்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, மற்றோருக்கு முன் மாதிரியாகவும், செயல்களில் ஒழுக்க சீலராகவும் இருக்க வேண்டும்.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் முரண்பாடுகள் கொண்ட எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு செலுத்துபவராகவும் இருக்க வேண்டும், தேடும் குழு, மேற்கூறிய வரையறைக்குள் வருபவர்களைத் தெரிவு செய்து, அவர்களிடம் பயோ டேட்டா வாங்குவதோடு, அவர்கள் துணை வேந்தர்களானால், பல்கலைக்கழகத்தை மேம்படுத்த எவ்வகை செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் எனும் அறிக்கையையும் பெற வேண்டும். இவற்றின் அடிப்படையில், மூன்று பெயர்களை கவர்னரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த வரையறைகளை ஒரு அரசாணையாக கெசட் மூலம் அரசு வெளியிட வேண்டும்”.

இவ்வாறு பால குருசாமி சமர்ப்பித்த அறிக்கைக்கு அடுத்த வாரமே, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, திருமதி கல்யாணி மதிவாணன் தேர்வு செய்யப்பட்டார். மேலே கூறிய வழிமுறைகளை வைத்துப் பார்த்தால், அவருக்கு அடிப்படைத் தகுதி கூட இல்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் நிதியமைச்சரின், அதிமுக பிரமுகரின் மருமகள், முன்னாள் துணைவேந்தரின் மகள் ஆகிய தகுதிகள்தான் இன்றைக்கு அவருக்கு உண்டு. இப்படிப் பதவிக்கு வரும் துணைவேந்தர்கள் மீது மற்ற அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எந்தவித மரியாதை இருந்து விடப்போகிறது?

இப்பொழுது, தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களைத் தெரிவு செய்வதற்காக தேடும் குழுக்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் துணைவேந்தர்கள் எப்படியோ?

தமிழக பல்கலைக் கழகங்களுக்கும், உடனடி சமூகத்திற்கும் சிறிதும் தொடர்பில்லாமல் போய் விட்டது கண்கூடாகத் தெரிகிற ஒன்று. தங்களை நம்பி வரும் அடுத்த தலைமுறைக்கு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் துரோகம் செய்கின்றன நமது பல்கலைக்கழகங்கள் என்று கூறினால், அக்கூற்றை மிகைப்படுத்தியதாக கருதமுடியாது.

அது மட்டுமல்லாது, ஏமாற்றும் துணை வேந்தர்களிடமும், ஏமாற்றும் ஆசிரியர்களிடமும் இருந்து, ஏமாற்றுவதைக் கற்றுக்கொள்ளும் இளைய சமுதாயம், சமூகத்தை வேகமான சீரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அது, இந்த சமூகத்தை ஒரு வன்முறை சமூகமாக, ஒழுக்கமற்ற சமூகமாக, உழைப்பின் மீது நம்பிக்கையற்ற சமூகமாக, அறிவற்ற சமூகமாக மாற்றவில்லையென்றாலும், எவ்வெப்போதும், சிந்தனைத் தெளிவற்ற, ஒரு சுமாரான சராசரி சமூகமாக மட்டுமே வைத்திருக்கும். அப்படிப்பட்ட நிலைக்குத்தான் இன்றைய தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யத்தான் வேண்டியுள்ளது.

பள்ளிகளே பிட் கொடுத்து மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதச் செய்வது, துணைவேந்தர் பதவிகள் ஏலம் போவது, ஆசிரியர் பணி முதல் அரசுப்பணியாளர் பணி வரை, பணம் கொடுத்து வாங்க முயல்வது என்று தமிழகம் நாறுகிறது.

படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான், போவான், அய்யோன்னு போவான் என்றார் கவி பாரதி. நம் படித்தவர்கள் மட்டும் அய்யோன்னு போக மாட்டார்கள். அவர்களது மோசமான செயல்பாடுகளால், ஒட்டுமொத்த சமூகத்தையும் அய்யோன்னு கவிழ்த்து விடுவார்கள்.

அதனால், அவசரமாக நல்ல மாற்றம் தேவைப்படுகிறது. ஒட்டு மொத்த படித்த சமூகத்தின் அணுகுமுறையிலும்.


அதற்கு விரைந்து செயல்படுவோம்.
நட்புடன்

 



அ.நாராயணன்

                                     *******************    *************     *******************

                                       எளிமை, இனிமை, நன்மை! -  புத்துணர்ச்சி தொடர்-2

இம்மாத யோசனை

வீட்டில் உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளை உரமாக்கி வீட்டிலேயே பயிர்களை வளர்க்க இதோ ஒரு எளிய வழி. இனிய வழி. கிராமங்களில் இருப்போரானாலும், நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவரானாலும், ஒரு சிறிய பால்கனி இருந்தால் கூடப் போதும்... நம் வீட்டில் உற்பத்தியாகும் காய்கனிக் குப்பைகளை நாமே உரமாக்கிக் கொள்ளலாம். அதனைக் கொண்டு காய்கறிகளைப் பயிரிடலாம்.
முதலில், சுட்ட மண்ணால் ஆன ஏழு பூந்தொட்டிகளை வாங்கிக் கொள் ளுங்கள். அவற்றிற்கு முறையே, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று சனி வரை எழுதி பெயிரிடுங்கள். ஒவ்வொரு தொட்டியிலும் அடியில் சிறிது மணல், தேங்காய் நார் இட்டு விடுங்கள். எல்லாவற்றையும் வரிசை யாக பால்கனியில் ஓராமாக வைத்து விடுங்கள். பின்னர், ஞாயிறு அன்று வீட்டில் உற்பத்தியாகும் காய்கனிக் குப்பை, பழத்தோல்கள் ஆகியவற்றை ஞாயிறு என்று எழுதியுள்ள தொட்டியில் போட்டு விடுங்கள்.


திங்கள் உற்பத்தியாகும் காய்கனிக்கழிவுகள், திங்கள் பெயரிடப்பட்ட தொட்டியில், இவ்வாறே வாரம் முழுவதும் காய்கனிக் கழிவுகளைப் போட்டுவிட்டு, ஒரு பிடி மண்ணைத் தூவிவிடவும். முடிந்தால் அவ்வப்போது, ஒரு தேக்கரண்டி புளித்த மோர் விடவும். காய்கனிக்கழிவுகள் பெரிய தூண்டுகளாக இருந்தால், அவற்றை நறுக்கி சிறிதாக்கி இடவும்.


சமைத்த உணவு, மாமிசக் கழிவு ஆகியவற்றை இவற்றில் போட்டு விட வேண்டாம். இவ்வாறு செய்யும் போது, கொசு, ஈ போன்றவற்றின் தொல்லை இருக்காது. துர்நாற்றம் வீசாது. உங்கள் வீட்டில், நீங்கள் காய்கனிகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்து, இவ்வாறு காய்கனிக் கழிவும், மண்ணும் கலந்து நிரம்ப 4 முதல் 6 மாதங்கள் பிடிக்கலாம். முடிந்தால் அவ்வப்போது கம்பி அல்லது குச்சியைக் கொண்டு கிளறிவிடலாம். 

 தொட்டிகள் நிரம்பிய பின்னர், ஒரு தொட்டியில் கத்தரிவிதை, மற்றொரு தொட்டியில் வெண்டை, மூன்றாவதில் தக்காளி என்று உங்களுக்கு விருப்பமான காய்கனிகள், பூக்களை வளர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து நல்ல மகசூல் கொடுப்பதுடன் இயற்கையாக நீங்களே விளைவித்த காய்கனிகளை உண்டு மகிழலாம்.
அடுத்ததாக இன்னும் 7 தொட்டிகளை வாங்கி உங்கள் இனிமையான ஆரோக்கியமான பொழுதுபோக்கைத் தொடரலாம்.

என்ன, ஐடியா பிடித்திருக்கிறதா? சுலபமானதுதானே? உடனே ஏழு பூந்தொட்டிகளை வாங்கி வந்து விடுங்கள்.

Friday, April 6, 2012

APRIL'12


மரண தண்டனையை நிரந்தரமாகத் தூக்கிலிடுவோம்!

மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் மீண்டும் உலகம் முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனும் போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரும் வழக்கு ஒன்று, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
முன்னாள் பஞ்சாப் முதல்வரின் கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தீவிரவாதி  பல்வந்த் சிங் ராஜோனாவிற்கு இப்பொழுது சண்டிகர் நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. பல்வந்த் சிங் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தனது மரண தண்டனையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று இசைவு தெரிவித்துள்ளார். எனக்கு சரி என்று பட்டதைத்தான் நான் செய்தேன், எனக்காக யாரும் கருணை மனு கொடுப்பதை நான் வெறுக்கிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இவரது துக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் வாழும் சீக்கியர்களும்அவர்கள் குடியிருக்கும் நாடுகளில் போராடி வருகிறார்கள். எல்லா ஊடகங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.

மரண தண்டனை என்பது சட்டத்தால் அனு மதிக்கப்பட்டுள்ள வரை, அதனைப் பயன்படுத்து வதில் தவறில்லை என்கிறது உச்சநீதி மன்றம். அரசியல் கட்சிகள்இதனை அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்த்து போராட்டத்தைத்  தூண்டுவது ஒரு நாடகம் என்றும், தவறான செயல் என்றும், உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இதே மார்ச் மாதம் 13ம் தேதி, ஹரியானாவில் உள்ள நீதிமன்றம் 22 வயது நிக்கா சிங் என்பவருக்கு மரண தண்டனை அளித்துள்ளது. இவர், 75 வயது மூதாட்டியை பாலியல் வன்முறை செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்தவர். இவர் ஒரு இரக்கமற்ற காட்டுமிராண்டி, இவர் உயிருடன் இருப்பது சமூகத்திற்கு ஆபத்தானதுஎன்று கூறியிருக்கிறது ஹரியானா நீதிமன்றம். கடந்த ஆண்டு நவம்பரில், இதே போன்றதொரு வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்டது. 22 வயது கேரள இளம் பெண்ணை, பாலக்காடு அருகில் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு, தானும் குதித்து, படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது தமிழன் கோவிந்தசாமிக்கும் இதே காரணங்களைக் கூறித்தான் கேரள விரைவு நீதிமன்றம் மரண தண்டனை அளித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் யாரும் போராட்டம் செய்யவில்லை.

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள், ‘மற்ற நாடுகளைப் போலில்லாமல், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே, இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை அளிக்கின்றன, மக்கள் தொகையும், குற்றச்செயல்களும் மிக அதிகம் உள்ள நம் நாட்டில், மரண தண்டனையை முற்றிலும் தவிர்த்து விட்டால், மிக பயங்கரமான குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும், மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், சில பல ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்களை விடுவிப்பது மிக ஆபத்தானது, அதனால், இன்னும் அதிகமாக  சிறைச் சாலைகள் கட்ட வேண்டும், இது முற்றிலும் தேவையற்றது, அரசியல் காரணங்களுக்காக ஒரு சில மரண தண்டனைகளை எதிர்ப்பதும், மற்ற சமயங்களில் மௌனமாகி விடுவதும் சந்தர்ப்பவாதம்தான்என்கிறார்கள். இவர்களின் வாதங்களில் ஓரளவு உண்மை இருப்பதாகப்படலாம்.

ஆனால், கடந்த ஆண்டு மட்டுமே, இந்திய குற்றவியல் நீதிமன்றங்கள், 105 வழக்குகளில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளன, இது எப்படி அரிதிலும் அரிதான அணுகுமுறையாக இருக்க முடியும்?, மேலும் அரிதிலும் அரிதானஎன்பதனை எப்படி முடிவெடுக்க முடியும்?, அதற்கான எல்லைகள், வரைமுறைகள் என்ன? - இவை தான் மனித உரிமைப் போராளிகள் எழுப்பும் நியாயமான கேள்விகள்.

எல்லா மரணதண்டனைகளையும் பொத்தாம் பொதுவாக எதிர்ப்பது முட்டாள் தனம்நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உதவியதாகக்  குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள அப்சல் குரு, மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் போது பிடிபட்ட கேசாப் ஆகியோரின் தண்டனையைக் கூட எதிர்ப்பது தேச துரோகம். இவர்களது மரண தண்டனையை நாம் நிறைவேற்றாவிட்டால், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத்  திராணியற்ற ஒரு மென்மையான நாடு என்று மற்ற நாடுகள் நினைக்கும், பயங்கரவாதிகளுக்கு இது உற்சாகம் அளிக்கும் கொள்கையே தவிர வேறொன்றும் இல்லை’ - இது மற்ற தரப்பினரின் எதிர்வாதம்.

இதை மறுத்து வாதிடும் மனித உரிமை ஆர்வலர்களோ, ‘மரண தண்டனையை முற்றிலு மாக சட்டத்திலிருந்து எடுத்துவிட்டோம் என்றால், அது உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அங்கீகாரமும், அதிக மதிப்பும் ஏற்படுத்தும் கொள்கையாக இருக்கும், மற்ற நாடுகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம், தனிமனிதர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு கொலைகள் செய்கிறார்கள் என்பதற்காகஜனநாயகத்திலும் மனிதாபிமானத்திலும் நம்பிக்கை உள்ள ஒரு முதிர்ச்சியடைந்த நாட்டின் அரசு, தனி மனிதர்களின் உயிரைப் பறிப்பது நாகரீகமான பண்பாக இருக்காது, மேலும் மரண தண்டனை என்பது, ஆங்கிலேயர் காலத்திலும் மன்னராட்சி காலத்திலும் இருந்த நடைமுறை, அதனை, மாற்றமில்லாமல் அப்படியே நமது அரசியல் அமைப்பில் உள்வாங்கிக் கொண்டது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தவறு, இது ஒரு குறைபாடு, அதனை நாடாளுமன்றம் மூலமாக திருத்திக் கொள்ள வேண்டும்என்கிறார்கள்.

நீதிமன்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கி, ஏகப்பட்ட தண்டனைகள் நிலுவையில் இருக்கின்றன. மரண தண்டனை அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் உள்ள தனி அறைகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்கள் உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. ஆயினும், கடந்த 17 ஆண்டுகளில் ஒரே ஒரு தூக்கு தண்டனை மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு ஆறுதல்.  ஏப்ரல் 1995 ம் ஆண்டு, ஆட்டோ சங்கர் எனும் ஒரு பயங்கரமான குற்றவாளி தூக்கில் இடப்பட்டார். பின்னர், 2004ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் மற்றொரு குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில்அவர் தூக்கிலிடப்பட்டார்.
 
பின்னர் இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் தூக்கிலிடப்படவில்லை. சமீப காலங்களில் அரசியல் காரணங்களுக்காக சில தூக்கு தண்டனைகளில் அரசு முடிவெடுக்க முடியாத நிலை இருப்பதால், மரண தண்டனை வழங்கப்பட்ட மற்ற குற்றவாளிகளும் துக்குக் கயிற்றில் இருந்து தப்பித்து விட்டனர் என்பதுதான் உண்மை நிலை.

உலகின் 96 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக தங்கள் நாட்டுச் சட்டங்களில் இருந்து ஒழித்துவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையில்மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப் பாட்டையேஇந்தியா எப்பொழுதும்  எடுத்து வருகிறது. மரண தண்டனையை சட்டத்தில் இருந்து எடுப்பது தொடர்பாககட்சிகளிடையே நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து வருவது கடினம் என்றே தோன்றுகிறது.

உலக அரங்கில், சீனாதான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரண தண்டனைகளை கடந்த ஆண்டு கூட நிறைவேற்றியிருக்கும் என்று அம்நெஸ்ட்டி இன்டர்நேஷனல் எனும் மனித உரிமைக்காக வாதாடும் அமைப்பு  கூறுகிறது, ஆயினும் முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை. இரான், சவூதி அரேபியா, வடகொரியா, யெமென் உட்பட 20 நாடுகள், கடந்த ஆண்டு  மட்டும், கிட்டத்தட்ட 676 மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கின்றன. மிக மோசமான கொடுங்கோல் நாடுகளுக்கு இடையில், இந்தியாவிற்கு அடுத்த பெரிய ஜனநாயக நாடான அமெரிக்கா, 41 மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது என்பது மிக உறுத்தலான செய்தி.

இந்தியாவில் மரண தண்டனைகள் கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கடந்த இதழ் வரவேற்பறையில் குறிப்பிட்டது போல, என்கவுண்டர்கள் மூலம் காவல்துறையே சட்டவிரோதமாக மரண தண்டனை அளிப்பதும், அதற்கு பொதுமக்களின் அங்கீகாரம் இருப்பதும் கவலையளிக்கும் விஷயம். எது எப்படியிருந்தாலும், மரண தண்டனை வழங்கப்பட்ட எந்த நாடுகளிலும், கொடூரமான குற்றங்கள் குறைந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. மரண தண்டனையைத் தவிர்த்து, ஆனால் விரைவாக வழக்குகளை நடத்தி முடித்து தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. விரைவாக வழங்கப்படும் தண்டனைகளே, குற்றம் செய்ய நினைப்போருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மைக்கு இணங்க, 19 ம் நூற்றாண்டில் ஜனநாயகம் இல்லாத நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட மரண தண்டனை எனும் முறைமையை, 21ம் நூற்றாண்டில், இன்றைய நாகரிகச்  சூழலுக்கு சற்றும் பொருந்தாத வகையில் சட்டத்தில் வைத்திருப்பது தேவையற்றது. நேர்மையான விரைவான நீதி விசாரணை, தாமதமில்லாமல் தவறுக்கு ஏற்ற தண்டனை, மரண தண்டனை முற்றிலும் ஒழிப்புஎன்பதுதான் நமது இன்றைய நிலைப்பாடாக இருக்கவேண்டும். மிகக் கொடும் குற்றவாளிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில், வாழ்நாள் முழுவதும் சிறைச் சாலைகளில் அமர்த்தி பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமா என்றால், இது ஜனநாயகத்தை, நாகரிகத்தைக் காப்பாற்றுவதற்காக நாம் கொடுக்கும் விலை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, அல்லதுபல அர்த்தமற்ற இடைத் தேர்தல்களுக்கோ, நாம் மிகுந்த நிதியையும், மனிதவளத்தையும், நேரத்தையும் செலவிடுவதில்லையா? இவையெல்லாம் செலவல்ல, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான முதலீடுகள். எத்தனையோ பெருங்குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவி, பொதுச்சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்,  20 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் எந்த ஒரு குற்றவாளியும், விடுதலை ஆன பின்னர், மீண்டும் குற்றம் செய்வார் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.

எந்த ஒரு குற்றவாளிக்கும் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக் கூடாது, தண்டனை காலத்தின் போதே, முறையான பயிற்சிகள் அளித்து, அவர்கள் மீண்டும் சமுதாயத்திற்கு பிராயச்சித்தம் அளித்து, நன்றியுடனும், கவுரவத்துடனும், பயனுடனும் வாழ வழிவகை செய்தல் வேண்டும் என்பதுதான் எனது கனவு. இந்தக் கனவு நிறைவேறும் நாள் எந்நாளோ?
ஏப்ரல் நட்புடன் 



  

அ.நாராயணன்.
  
            



      
      ************************************************************
      ************************************************************

 

எளிமை, இனிமை, நன்மை - புத்துணர்ச்சி தொடர்- 1.  

இம்மாத யோசனை: 
வைட்டமின்-டி உண்ணுங்கள் , ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள்

 இன்றைய காலகட்டத்தில், முறையாக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியில்  ஈடுபடுவதற்கு  கூட நேரம் ஒதுக்க  முடியாமல்  பெரும்பாலானவர்கள் தவிக்கிறார்கள். இட நெருக்கடிநடைப்பயிற்சிக்கு ஏதுவான சாலைகள் அல்லது பூங்காக்கள் போன்றவை இல்லாத சுழல். இவைதான் நம் நகரங்களில் நடைமுறை உண்மை. இப்படிப்பட்ட நிலையில், நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும், பேணிக்காக்கும் செலவில்லாத எளிய முறை ஒன்று உண்டென்றால் அது சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய ஒளியில் தேகப்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். சூரிய நமஸ்காரம் எனும் நமது பாரம்பரிய, எளிய முறையினால் நாங்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள், இந்தப் பயிற்சியில் வெகுநாட்களாக ஈடுபட்டு வருபவர்கள்.

'சூரிய நமஸ்காரம் என்பது மிக எளியது, செலவில்லாதது, இந்த  தேகப்பயிர்ச்சியை மதவழிபாடாகக் கருத வேண்டியது இல்லை, காலை வேளைகளில், மொட்டை மாடிக்குச் சென்று, கிழக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும்கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 எளிமையான முறைகளை மட்டும்,  15 முதல் 30 நிமிடங்களுக்கு வாரம் 5 நாட்களாவது  செய்து  வந்தால் போதும், கை  மேல்  பலன் கிட்டும், நிமிர்ந்த  நடையும்  நேர்கொண்ட பார்வையும்  நமதாகி விடும்'  என்கிறார்கள் நிபுணர்கள். டாக்டரைப் பார்க்க, க்ளினிக்குகள் முன் டோக்கன் வாங்கிவிட்டு கால்கடுக்க தவம் கிடக்கிறோம் நம்மில் பலர். நமது ஆரோக்கியத்திற்காக நாம் தினமும் காலை வேளைகளில் பகலவன் கொடையாகக் கொடுக்கும் 'வைட்டமின்-டி'யை வாங்கி உண்ண மறுப்பதேன்?